என் மலர்
இந்தியா

ஆந்திராவில் ரூ.13 லட்சம் வீடு வாடகை பாக்கி வைத்துள்ள எம்.பி.
- ஆந்திர மாநிலம், சத்திய சாய் மாவட்டம், அனந்தபுரம் ராம் நகரை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் ரெட்டி.
- மாதவ் எம்.பி, மல்லிகார்ஜுன் ரெட்டி 10 பேருடன் தனது வீட்டிற்கு வந்து என்னை தாக்க முயன்றதாக என போலீசில் புகார் செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சத்திய சாய் மாவட்டம், அனந்தபுரம் ராம் நகரை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் ரெட்டி. இவர் அங்குள்ள 80 அடி சாலையில் 2 அடுக்கு மாடி வீடு கட்டி குடியிருந்து வந்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இந்துபுரம் தொகுதி எம்.பியாக இருப்பவர் கோரண்ட்லா மாதவ். மல்லிகார்ஜுன் வீட்டிற்குச் சென்ற கோரண்ட்லா மாதவ் எம்.பி தன்னை சந்திக்க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தினமும் அதிக அளவில் வருவார்கள். எனவே உங்களது வீட்டை எனக்கு வாடகைக்கு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்ற மல்லிகார்ஜுன் ரெட்டி தனது வீட்டை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டு எம்.பிக்கு தனது வீட்டை வாடகைக்கு கொடுத்தார். வாடகைக்கு வந்தது முதல் கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீட்டு வாடகை, மின்சார கட்டணம் செலுத்தவில்லை. மல்லிகார்ஜுன் ரெட்டி எம்.பி.யிடம் சென்று வாடகை பாக்கி கேட்கும் போது எல்லாம் பின்னர் தருவதாக காலம் தாழ்த்தி வந்தார்.
இது குறித்து மல்லிகார்ஜுன் ரெட்டி போலீசில் புகார் செய்தார். புகாரில் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வரும் மாதவ் எம்.பி வாடகையாக ரூ.13 லட்சமும், மின்சார கட்டணமாக ரூ 2,50,413 கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக புகாரில் கூறியிருந்தார்.போலீசார் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தனக்கு வேண்டப்பட்ட 10 பேருடன் மீண்டும் மாதவ் எம்.பி.யிடம் சென்று வாடகை பாக்கி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாதவ் எம்.பி, மல்லிகார்ஜுன் ரெட்டி 10 பேருடன் தனது வீட்டிற்கு வந்து என்னை தாக்க முயன்றதாக என போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ ராமலு, ஜாகிர் உசேன் ஆகியோர் மல்லிகார்ஜுன் ரெட்டி எம்.பி.யை தாக்க முயன்றதாக மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். மாதவ் எம்.பி ஏற்கனவே ஒரு பெண்ணிற்கு வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






