என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தவையெல்லாம் போதும், இனியாவது உங்கள் உடல் நலத்திலும், மன நலத்திலும் கவனம் செலுத்தி, சமநிலையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்..
    பெண்களின் வாழ்க்கை, முதலில் அப்பா, அம்மா, சகாக்களின் படை சூழ அமைந்திருக்கும்; அவர்களே அவளது உலகமாய் இருந்திருப்பர். பின் திருமணம், புது உறவு, புது சொந்தங்கள் என அவளின் வாழ்வு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகும்; இச்சமயம், கணவனே அவளின் முக்கிய முன்னுரிமையாய் இருப்பார். பின் தாயாகையில், அவளது, குழந்தை தான், அவளது உலகம், அவளது உயிர் என்றாகிறது.   

    குழந்தையை, கவனிப்பதில், வீட்டு சூழல், கணவர் என அனைத்தையும் மறக்கிறாள்; இது பரவாயில்லை, குழந்தை கவனிப்பில், தான் யார் என்பதையே மறந்து, தன் உடல் நலம், மன நலம் இவற்றை முற்றிலுமாக மறந்து விடுகிறாள்.

    சிறந்த அன்னையாக முயற்சிக்கையில், அனைத்து அன்னையரும், அனைத்து பெண்களும் மறக்கும் அந்த ஒரு விஷயம், அவர்கள் தான்; அவர்களின் உடல் நலம் தான். குழந்தையை வளர்க்கும் சமயத்தில், நீங்கள் உங்களது வேலை, நண்பர்கள், உங்களது தொழில் ரீதியான முன்னேற்றம் என அனைத்தையும் மறந்து, உங்கள் உடல் நலம் இழந்து வாழ்கிறீர் பெண்களே!

    இதுவரை தியாகம் செய்தவையெல்லாம் போதும், இனியாவது உங்கள் உடல் நலத்திலும், மன நலத்திலும் கவனம் செலுத்தி, சமநிலையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்..! நீங்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்..!

    1. மற்றவர்களையும், பெற்றவர்களையும் கவனிப்பதில், நீங்கள் பசியுடன் வாழாதீர்கள். நீங்களும் நன்றாக, சத்தான காய்கறிகள், பழங்களை உட்கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், அனைவரையும் கவனித்துக் கொள்ள இயலும் என்பதை மறக்காதீர்.!

    2. எக்காரணம் கொண்டும் உங்களது நேரத்தை, உங்களது இலக்கினை இழக்காதீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப வாழ்வில் வெற்றி பெறுவதோடு, தொழில் ரீதியான வாழ்விலும் உங்கள் கொடியை உயரப் பறக்கச் செய்ய வேண்டும். உங்கள் இலக்கினை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள், உங்கள் குடும்பத்தின் துணையுடன்..!

    3. உடல் நலம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மன நலமும் அவசியம். ஆகையால், உடலை சீராக வைக்க உடற்பயிற்சிகள் மற்றும் மனதை சீராக்க யோகப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்; இதனால், நீங்கள் செய்யும் செயல்களில், உங்களால் ஒருமுகத் தன்மையுடன் ஈடுபட முடியும்..!

    4. உங்கள் அழகு மற்றும் உடல் தோற்றத்தில் அக்கறை கொள்ளுங்கள்; நீங்கள் அழகிய தோற்றம் கொண்டிருந்தால் தான், உங்கள் தொழில் முறை வாழ்வில், உங்களால் வெற்றியை ஈட்ட இயலும்; சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உங்கள் தோற்றத்தைக் கண்டே, இந்த கால கட்டங்களில் கொடுக்கப்படுகின்றன என்பதை மறவாதீர்…!!

    உங்களை வருத்திக் கொண்டு, குடும்பத்தை உயர்த்துவதில் எப்பயனும் இல்லை; நீங்கள் இல்லாமல் உங்கள் குடும்பம் முழுமை அடையாது என்ற உண்மையை உணர்ந்து செயல்படுங்கள்..!!
    கர்ப்பகாலத்தில் குழந்தை கருவில் வளரும் போது, பெருமூளை வாதம் ஏற்படலாம்.. அதற்கு காரணமாக விளங்குபவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    Cerebral palsy எனப்படும் பெருமூளை வாதம் குழந்தைகளுக்கு மூளையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிரச்சனை தோன்றினால் ஏற்படக் கூடியதாக உள்ளது. இந்த வாதம் ஏற்பட்டால், உடற்செயல்கள் பாதிக்கப்படும்; மேலும் பேசுவது, அன்றாட செயல்கள் செய்வது என அனைத்தும் பாதிக்கப்படும். இந்த நோய் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    பெருமூளை வாதம் ஏற்பட்டால், அது மூளை பிரச்சனைகளை பக்கவாதமாக மாற்றி விடுகிறது. இது தசைகளின் பலத்தை குறைத்து, அதன் இயக்கத்தை முடக்கிவிடுகிறது. இவை மூளையின் எந்த பாகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைகிறது. உதாரணமாக, செரிப்பல்லம் பாதிக்கப்பட்டிருந்தால், நோயாளியின் எழுதும் திறன் பாதிக்கப்பட்டு, முடக்கப்பட்டு விடும். பெருமூளை வாதம் என்பது அனைத்து வகை அறிகுறிகளையும் கொண்டு, ஏற்படும்.

    இந்த நோய் ஏற்பட்டால் அனைத்து விளைவுகளும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஏற்படும். பெருமூளை வாதம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் விஷயங்கள் குறித்து படித்தறிவோம்..

    கர்ப்பகாலம்...

    கர்ப்பகாலத்தில் குழந்தை கருவில் வளரும் போது, பெருமூளை வாதம் ஏற்படலாம்.. அதற்கு காரணமாக விளங்குபவை குறித்து அறியலாம்..

    * கதிரியக்கத்திற்கு கரு உள்ளாவது
    * கர்ப்பகாலத்தில் நோய்த் தொற்று ஏற்படுவது
    * ஹைபோக்சியா

    பிரசவத்திற்கு பின்..

    குழந்தை பிறக்கையில் பெருமூளை வாதம் ஏற்படலாம். இதற்கு காரணமாகும் விஷயங்கள்..

    * குழந்தை பிறக்கையில் மூளையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவது
    * குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுவது
    * ஹைபோக்சியா

    மாற்றங்கள்..

    சில நேரங்களில் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களும் பெருமூளை வாதத்தை ஏற்படுத்துகின்றன.

    * பெருமூளை வாதம் மிக தீவிரமடையாது; ஏற்பட்ட நிலையிலேயே இருக்கும்.

    * பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் அடிவயிற்று பிரச்சனைகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அறிகுறிகள்:

    * தசைகளில் வலி

    * மெல்லுதல், விழுங்குதலின் போது வலித்தல்

    * தூக்கமின்மை

    * பார்த்தல், கேட்டலில் பிரச்சனை

    இந்த நோயை குணப்படுத்த இயலாது; சரியான சிகிச்சை, ஊக்கம் மூலம் குழந்தைகளை இந்த நோயை எதிர்த்து போராடி வாழச் செய்யலாம்..!
    பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும். ஆணுறை பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய சில குறிப்புகளை பார்க்கலாம்.
    'காண்டம்' என்று அழைக்கப்படும் ஆணுறை, அத்தியாவசியான ஒரு பயன்பாட்டு பொருளாகும். வேண்டாத கர்ப்பத்தை தடுப்பதுடன், எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள் தொற்றிவிடாமல் காத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

    ஆணுறை இவ்வளவு பயன்மிக்கதாய் இருந்தும், அதை சரியான இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாக்காவிட்டால் பயனிழந்து விடும். பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும். ஆணுறை பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:

    ஆணுறையை பயன்படுத்த எடுக்கும்போது நெகிழும் தன்மை குறைவாக இருப்பதாக அல்லது வறண்டு இருப்பதாக அல்லது கையில் ஒட்டிக் கொள்வதுபோல் உணர்ந்தால் பயன்படுத்த வேண்டாம். புதிய ஒன்றை வாங்குவது நன்று. நிறம் வெளிறி அல்லது பூஞ்சை பிடித்தது போன்ற மணம் இருந்தாலும் அந்த ஆணுறையை தவிர்க்கவும்.

    தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக ஆணுறையை வாங்கி பாதுகாப்பான இடத்தில் வைப்பது முக்கியம். சரியான இடத்தில் வைக்காவிட்டால் ஆணுறையில் கீறல் விழலாம் அல்லது வறண்டு போகலாம். குளிரான ஆனால் ஈரமில்லாத இடங்களில் ஆணுறையை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

    ஆணுறையை பயன்படுத்தும் முன்னர் காலாவதி தேதியை (எக்ஸ்பயரேஷன் டேட்) கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். காலாவதி தேதி நெருங்கும்போது தங்கள் மீட்சித்தன்மையை அவை இழந்து விடும். பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக தோன்றினாலும், பயன்படுத்தும்போது கிழிந்துபோய் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே, வைத்திருக்கும் ஆணுறையின் காலாவதி தேதி நெருங்கினால் அதை தவிர்த்துவிடுவது நல்லது.

    ஆணுறையை கவனிப்பதுபோன்று, தாம்பத்திய உறவின்போது என்ன உயவுப் பொருள் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். எண்ணெய் பசை மிக்க உயவுப் பொருளை பயன்படுத்தவேண்டாம். அது ஆணுறையை சேதப்படுத்திவிட வாய்ப்புண்டு. ஆணுறை போன்ற முக்கியமான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது பிற்கால கவலைகளை தடுக்கும்.
    தாய்க்கு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தையிடமும் மாற்றத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளை பாதிக்கும் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.
    கர்ப்பகாலத்தில் பெண்கள் எடுத்து கொள்ளும் உணவே குழந்தைக்கும் உணவாக அமையும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிலிருந்து கிடைக்கின்றன. இதனால் குழந்தை கருவில் ஆரோக்கியமாக வளரும். அதே போல் தான் தாய்க்கு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தையிடமும் மாற்றத்தை ஏற்படுத்தும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் உடனடியாக ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும். கர்ப்பிணிகளை பாதிக்கும் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.

    1 எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் குடிப்பது நல்லது. அதிக நீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

    2 மழையில் நனையக் கூடாது. சூழ்நிலை காரணமாக நனைய நேரிட்டால், வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். தலையும் நன்கு உலர்த்தி காய வைத்து கொள்ள வேண்டும். ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்க கூடாது.

    3 கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.. குளிர்ந்த காற்று, மழை பொழிவதற்கு முன் வீசும் காற்று மற்றும் பனிக்காற்று வீசும் இடங்களில் இருக்க கூடாது.

    4 கர்ப்பிணி பெண்கள் சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால், அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

    5 கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சத்து மாத்திரைகளை உபயோகித்தால், சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க துவங்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்தாலும், சிறிது காலத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.

    6 சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிப்பதை தவிர்த்து கீரைகள், பழங்கள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். அவற்றை சாப்பிடுவது சிறந்தது.

    7 அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் செரிக்க கூடிய உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.

    8 மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் கீரைகளை தவிர்க்க வேண்டும்.

    9 அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து, மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களாக சாப்பிட பிடிக்காதவர்கள் பழச்சாறுகளை அருந்தலாம்.

    10 கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் ஓய்வெடுக்கலாம், ஆனால், தூங்கக் கூடாது.

    11 அதிக சத்தமாக பேசும் போது குழந்தையிடம் அதிர்வுகள் ஏற்படும். மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும்.

    12 மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது.

    கர்ப்பிணிகளுக்கு காணப்படும் பிரச்சனைகளுள் ஒன்று நஞ்சுக்கொடி கருப்பை சுவர் நோக்கி வளர்வதாகும். இந்த பிரச்சனையை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    பெண்கள் பிரசவ நிலையை எட்டும் வரை பல விசித்திரமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அப்படி கர்ப்பிணிகளுக்கு காணப்படும் பிரச்சனைகளுள் ஒன்று தான் இந்த நஞ்சுக்கொடி கருப்பை சுவர் நோக்கி வளர்வதாகும். இது மிகவும் ஆபத்தான ஒரு பிரச்சனையும் கூட... இதை பற்றிய ஒரு சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

    பொதுவாக கருப்பை சுவருடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை குழந்தை பிறந்தவுடனே நம்மால் காண முடியும். இதனால் அதிகம் இரத்தம் வெளிப்படுவதையும் நீங்கள் கண்டிருக்கக்கூடும். ஒருவேளை நஞ்சுக்கொடி வளர்ந்து காணப்பட்டால் அப்போது மருத்துவர்கள் சிசேரியனுக்கு பரிந்துரை செய்வர். காரணம், இதனால் சுகப்பிரசவம் என்பது அவ்வளவு எளிதாக அமைவதல்ல என்பதாலே ஆகும்.

    இந்த பிரச்சனையை எந்த ஒரு அறிகுறிகளும் உணர்த்துவதில்லை என்றாலும், கர்ப்பிணிகளின் 3ஆவது மூன்று மாதத்தில் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் இரத்தம் கொண்டு தெரிந்துக்கொள்ள முடிகிறது. அதுபோல் அடிக்கடி எழுப்பப்படும் அல்ட்ரா சவுண்ட் மூலமும் இந்த பிரச்சனையை நாம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

    உங்களுடைய மூன்றாவது 3 மாதத்தில் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வடிய, நீங்கள் கண்டிப்பாக ஆரோக்கிய வல்லுனரை அணுகி அறிவுரை பெற வேண்டியது கட்டாயமாகும்.

    நீங்கள் ஏற்கனவே செய்துக்கொண்ட சிசேரியன் வடு அல்லது மற்ற பிற கருப்பை அறுவை சிகிச்சை காரணமாக இந்த பிரச்சனை என்பது ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்படுகிறது. அதாவது கருப்பை சுவர் நோக்கி நஞ்சுக்கொடியானது நீண்ட தூரத்துக்கு வளர்ந்திருக்கும்.

    1. சிசேரியன் ஏற்கனவே செய்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும்.

    2. உங்களுடைய நஞ்சுக்கொடி கருப்பையை முழுவதுமாகவோ அல்லது அரை நிலையிலோ சூழ்ந்திருக்கும் போது இந்த பிரச்சனை உருவாகலாம்.

    3. முப்பத்தைந்து வயது கடந்த பெண்களுக்கு இப்பிரச்சனை வரும்.

    4. இதற்கு முன்னாள் பிறப்பை நீங்கள் தந்திருந்தால் இப்பிரச்சனை வரலாம்.

    என்ன ஆபத்து?

    1. பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் அதிகம் வெளியேற தொடங்கும்.

    2. பிறக்கும் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கவும் வாய்ப்பிருக்கிறது. 
    சுகப் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.
    இப்போதைய காலகட்டத்தில் பெண்கள் பெரிதும் சுகபிரசவத்தை விருப்புவதில்லை. பெரும்பாலான கர்ப்பிணிகளின் தேர்வாக இருப்பது சிசேரியன் தான். சிசேரியனே வலி இல்லாத பிரசவத்துக்குச் சிறந்த வழி என, சுகப் பிரசவ வாய்ப்பு இருந்தும் தாங்களாக முன்வந்து சிசேரியன் செய்துகொள்கின்றனர். சிலர், ஜோதிடத்தை நம்பி சிசேரியன் செய்கின்றனர். சிலர் என் கணவர் பிரசவ தேதியின் போது இருக்க மாட்டார் போன்ற பல காரணங்களுக்காக சிசேரியனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். சுகப் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன்  பரிந்துரைக்கப்படும்.

    நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால், வெளியேற முடிவது இல்லை. குழந்தையின் மிருதுவான மண்டைஓடு வெளியே வரும் முயற்சியில் ஒன்றன் மேல் ஒன்று நகர்ந்து அழுத்தப்பட்டு தலையின் அளவு குறையும். இதனால் 37 வாரங்கள் முடிவதற்குள் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதைத் தவிர்க்க, சிசேரியன் செய்யப்படுகிறது.

    பனிக்குடம் உடைந்து, குழந்தை வெளியே வர முற்சிக்கும்போது, தாயின் சிறுநீர்ப்பையை குழந்தையின் தலை அழுத்த நேரிடும். திரும்பத் திரும்ப அழுத்தும்போது, சிறுநீர்ப்பை அழுகிவிட வாய்ப்பு உள்ளது. இது, `பிஸ்டுலா’ எனப்படுகிறது. இதைத் தவிர்க்க சிசேரியன் பயன்படும்.

    கர்ப்பப்பையில் உள்ள நீரில் மிதக்கும் சிசுவானது கை, கால்களைக் குறுக்கிக்கொண்டு மடங்கி இருக்கும். இந்த நிலையில் இல்லாமல் குழந்தையின் எலும்பு, உடல் தசை வளர்ச்சி அதிகமாக இருந்தால் குழந்தை செர்விக்ஸ் வழியாக வெளியேறுவது கடினம்.

    பிரசவ வலி வந்ததும் குழந்தை, தானாகத் தலைகீழாகத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பாமல் போனால், தலைகீழ் பிறப்பு நிலை எனப்படும். இந்த நிலையில், முதலில் குழந்தையின் தலை வெளிவருவதற்குப் பதிலாக, கால் மற்றும் புட்டம் வெளியே வரும். இந்த பொசிஷனில் பல குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. ஆனால், தலை கடைசியாக வெளிவருவதால், மூளைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, இந்த நிலை இருந்தால், சிசேரியன் பரிந்துரைக்கப்படும்.

    37 வாரங்கள் முடிந்ததும் குழந்தை மேலிருந்து தலைகீழாகத் திரும்புகையில், இடையே அகப்பட்டு திரும்ப முடியாமல் மாட்டிக் கொள்ளும். இந்த நிலையிலும் சிசேரியன் செய்யப்படும்.

    கரு உருவானதும் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் மேல் அல்லது கீழ் சுவரில் உருவாகும். இது வட்டு வடிவில் கருஞ்சிவப்பாக இருக்கும். இது சராசரியாக 23 செ.மீ நீளமும், 3 செ.மீ உயரமும் இருக்கும். இது, தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்தும்.

    தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகிய முக்கியப் பணிகளைச் செய்யும். ஒன்பது மாதங்களாகக் கரு முழு வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும். இது, கர்ப்பப்பையின் மேல் சுவரில் உருவாகி இருந்தால் பிரச்னை இல்லை. கீழ் சுவரில் உருவானால், அதுவே குழந்தை வெளியேறத் தடையாக இருக்கும்.

    பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி பாதையை அடைத்துக்கொண்டால், தாய்க்கு அதிகமான இரத்தப்போக்கு உண்டாகும். ஆனால், வலி இருக்காது. இந்த நிலையில் சிசேரியன்தான் குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழி. இந்தக் கோளாறு நிறைய முறை கருக்கலைப்பு செய்பவர்கள், ஏற்கெனவே சிசேரியன் செய்து கொண்டவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.

    பிறப்புறுப்புப் பாதையில் வரும் தொற்றுதான், ஜெனிடல் ஹெர்பீஸ் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் நோய்கள் தாக்கப்பட்ட தாய்க்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். சுகப்பிரசவத்தின்போது குழந்தைக்கும் இந்தத் தொற்று பரவும். எனவே, இவர்களுக்கும் சிசேரியன் அவசியம்.

    இது தொப்புள்கொடி, குழந்தையின் கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்ட நிலை. சில குழந்தைகளின் தொப்புள்கொடி மிக நீளமாக இருக்கும். கர்ப்பப்பையில் சிசு மிதக்கும்போது, கழுத்தில் சுற்றிக்கொள்ளும். ஒரு சுற்று சுற்றி இருந்தால், சுகப் பிரசவம் செய்ய முடியும். ஐந்தாறு சுற்று சுற்றி இருந்தால், குழந்தையின் சுவாசம் தடைப்படும். இதயத் துடிப்பு சிக்கலாகும்.

    இரட்டைக்குழந்தைகளில், முதலில் வெளியே வர வேண்டிய குழந்தையின் தலை வெளியே வராமல் புட்டம் வந்தால், கண்டிப்பாக இரண்டு குழந்தைகளையும் சிசேரியன் மூலமாகவே வெளியே எடுக்க வேண்டும். பொதுவாகவே, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்க்கு நஞ்சுக்கொடி கீழ் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஓட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகளை வெளியே எடுக்க சிசேரியன்தான் ஒரே வழி. 
    சுகப்பிரசவம் நடந்த பெண்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? போன்ற முக்கியமான விஷயங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
    அறுவை சிகிச்சை என்பதை விட சுகப்பிரசவம் நடந்த பெண்ணுக்கு தான் பணிவிடைகள் என்பது மிகவும் அவசியமாகிறது. அவள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? போன்றவை முக்கியமான விஷயங்களாக அவர்கள் வாழ்வில் அமைவது வழக்கம் தான். அதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
    சுகப்பிரசவத்தினால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் எவை?

    சுகப்பிரசவம் கழித்து முதல் 6-லிருந்து 8 வாரங்கள் வரை உங்கள் உடல்நிலை மோசமாக இருக்கக்கூடும். அவை...

    1. குழந்தையை பெற்றதால் பிறப்புறுப்பு சுருக்கத்துடன் இருக்கும். சுகப்பிரசவம் கழித்து மெல்ல அது இயல்பு நிலைக்கு திரும்ப, வலியானது காணக்கூடும். உங்கள் பிறப்புறுப்பு இயல்பு நிலையை அடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகலாம்.

    2. உங்களுடைய கழுத்து, தாடை, கை தசைகள் வேதனை அடையக்கூடும். காரணம், சுகப்பிரசவத்தின் போது வலியால் துடிக்கும் நீங்கள் கழுத்து, கை மற்றும் தாடைக்கு அதிக வேலைத்தந்து அசைப்பதாலே ஆகும்.

    3. முதல் 2 லிருந்து 4 வாரங்களுக்கு, பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வழியக்கூடும்.

    4. உங்கள் பிறப்புறுப்பில் அசவுகரிய நிலையை நீங்கள் உணர்வீர்கள்.

    5. உங்கள் கால் மற்றும் பாதங்கள் வீங்கி காணப்படலாம்.

    6. முதல் சில வாரங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்திடலாம்.

    நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

    சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த உங்கள் குழந்தைக்கு பணிவிடைகளை செய்ய ஆயத்தம் ஆகும் முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்திடுங்கள். அதற்கு இதோ உங்களுக்காக சில வழிமுறைகளை நாங்கள் தருகிறோம்.

    1. உங்கள் பிறப்புறுப்பை பாதுகாக்க அட்டை பயன்படுத்தும்போது ஐஸ் பேக் இடையே பயன்படுத்தலாம்.

    2. நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி வலியை குறைக்கலாம்.

    3. பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாயுவை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    4. நீங்கள் உட்காரும்போது தலையணை வைத்து அமர்வது வலியை குறைக்கும். 
    கரு முட்டை வெளியாகி குழந்தை உருவாகுவது முதல் குழந்தை பிறப்பு வரை என எதையுமே யாராலும் யூகிக்க முடியாத அற்புத நிகழ்வாகும்.
    கரு முட்டை வெளியாகி குழந்தை உருவாகுவது முதல் குழந்தை பிறப்பு வரை என எதையுமே யாராலும் யூகிக்க முடியாத அற்புத நிகழ்வாகும். எந்த நேரத்தில் குழந்தை என்ன செய்வான் என தாய் ஏங்கினாலும், இந்த ஏக்கம் என்பது ஒரு சில சிக்கல்களை பிரசவத்தில் ஏற்படுத்தும் போது வெளிப்படையாகவே தாய்மார்கள் மற்றவர்களுக்கு கண்ணீரால் உணர்த்துகின்றனர். தொப்புள் சுற்றி குழந்தை பிறப்பது, என பல சிக்கல்கள் காணப்பட, இவற்றுள் குழந்தை பிறக்கும்போது தலைகீழாக எப்படி தன் நிலையை மாற்றிக்கொள்கிறது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

    கர்ப்பிணிகளின் 28 மற்றும் 32-வது வாரங்களில் பிறவா குழந்தையின் தலையானது கீழ் நோக்கி வருகிறது. இந்த அற்புதமானது பிரசவிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு சில குழந்தைகளுக்கு தெரியவர, தானாகவே அவர்கள் தன் தலையை கீழ் நோக்கி கொண்டு வருகின்றனர். ஒருவேளை குழந்தை தலை கீழ் நோக்கி இல்லாவிட்டாலும் சுக பிரசவத்திற்கான வாய்ப்பு இருக்கிறது.

    பிரசவத்தின் போது குழந்தையானது இடுப்பு எலும்புகள் நோக்கி நகர்கின்றனர். சிக்கலற்ற சுகப்பிரசவத்தை முன்புற முதுகெலும்பு நிலை என அழைக்க, குழந்தையின் தலை கீழ் நோக்கியும், உடம்பு அம்மாவின் பின்புறம் பார்த்தவாறும் இருக்கும்.

    இது தான் குழந்தை பிறப்புக்கான சரியான நிலையாகும். அம்மாக்கள் பலரும் குழந்தையின் தலை பிறப்பதற்கு ஏதுவாக திரும்பி இருக்கவே விரும்புவர்.

    நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

    பொதுவாக குழந்தைகள், கர்ப்ப காலத்தின் 30ஆவது வாரத்தில் இந்த நிலைக்கு வருவார்கள். ஆனால் ஒரு சில சமயத்தில் 36ஆவது வாரம் வரை குழந்தைகள் இந்த நிலைக்கு வருவதில்லை. அவர்கள் சிரமப்பட்டாலும் நீங்கள் முயன்று அவர்களை கீழ் நோக்கி வரவைக்கலாம் அல்லவா? அது எப்படி?

    1. முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

    2. ஆனால் வெகு நேரத்துக்கு உட்கார்ந்திருப்பதை தவிர்த்திடுங்கள்.

    3. நீங்கள் உட்காரும்போது தலையணையை பின்பக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    4. பிறப்பு பந்து என்பதைக்கொண்டு நீங்கள் பயிற்சி எடுக்கலாம். (இது என்ன என உங்கள் மருத்துவரிடம் கேட்டு அதற்கு ஏற்ப பயிற்சி எடுக்கலாம்)

    ஒருவேளை குழந்தையின் தலை, தலைக்கீழ் நிலையில் காணப்படா விட்டால்., சி பிரிவின் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், சி பிரிவு என்பது உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்திலே பொருந்தும் என்பதை புரிந்து பிரசவம் பற்றிய பொதுவான விஷயங்களை அதற்கு முன்பே முழுமனதுடன் தெரிந்துக்கொள்ள பழகுங்கள்.
    கருக்கலைப்பிற்கு பின்னர் பெண்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர, தங்களது உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிது அவசியம்.
    கருக்கலைப்பிற்கு பின்னர் பெண்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர, தங்களது உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிது அவசியம். இந்த அறுவை சிகிச்சை சிறியதாக இருப்பினும், இதனால் உடலில் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அதிக இரத்தப்போக்கு, இரும்புச்சத்து, வைட்டமின் பி12, பி9, பி2 ஆகிய சத்துக்கள் உடலில் குறைந்து உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன.  

    எனவே கருக்கலைப்பினால் உண்டாகும் இரத்தசோகையை தடுக்க உடலுக்கு போதுமான அளவு சத்துக்கள் தேவைப்படுகிறது. இங்கே கருக்கலைப்பு செய்தவர்களுக்கான சத்தான உணவு பழக்க முறை கொடுக்கப்பட்டுள்ளது.  

    * உங்களது உணவில் புரோட்டின் உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். ஆர்கானிக் உப்புகளை உணவில் சேர்ப்பதன் மூலம், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கிறது. இது உங்களை இரத்தசோகை வராமல் பாதுகாக்கிறது.

    * எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். மிகவும் சூடான மற்றும் குளிந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம். முள்ளங்கி, முலாம்பழம், ஆரஞ்ச் போன்றவற்றை சாப்பிட கூடாது.

    * மீன், மென்மையான சிக்கன், முட்டை, மிருகங்களின் ஈரல், ஆட்டு இறைச்சி, தாமரை விதைகள், ஃபிரஸ்ஸான பழங்கள், காய்கறிகளை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    * கருக்கலைப்பிற்கு பிறகு, அதிகமாக வியர்வை வெளியேறுவது ஒரு பிரச்சனையாக இருக்கும். எனவே தினமும், 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இது உங்களை மன அழுத்தத்திலிருந்து காக்கும்.

    * புரோட்டின் நிறைந்த உணவுகளை கருக்கலைப்பிற்கு பிறகு சாப்பிடுவது அவசியம். புரோட்டின் உங்களது இரத்த செல்களை அதிகரிக்கும். முட்டை, மீன், வாழைப்பழம், அவோகேடோ, கேரட், வீட்டில் தயாரிக்கப்பட்ட பாலாடை, பட்டாணி, ஆரஞ்ச், பசுமையான காய்கறிகள், மற்றும் பாதாம் போன்ற புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகள்.

    * அசைவ உணவு சாப்பிடுபவர்கள், மீன், கோழி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் பி உள்ளதால் இவற்றை உண்ணலாம்.

    * குறைந்த அளவு கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், உடலுக்கு கால்சியத்தை தருகிறது. மேலும் இவற்றில் புரோட்டின் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன.

    * காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். சிக்கன் மற்றும் முட்டை போன்றவற்றில் அதிக காரம் சேர்க்காமல் உண்பது சிறந்தது. இந்த உணவு பழக்கங்களை கையாள்வதன் மூலம் கருக்கலைபிற்கு பிறகு உண்டாகும் உடல் சோர்வு, ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
    சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
    சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பிறப்பு ஓர் மறக்க முடியாத அனுபவமாகும்.

    ஆனால், உடல் உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுமுறை பழக்கங்கள் மற்றும் பிரசவ வேதனை குறித்த அச்சம் போன்ற காரணிகள், இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன.

    கருத்தரித்த பெண்கள் ஒவ்வொருவரும் இயல்பாக சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் வலியினை நிர்வகிக்கவும், சமாளிக்கவும் இவர்களுக்கு கற்பிப்பது மிகவும் அவசியமாகும். தாய்க்கும், குழந்தைக்கும் இயற்கையான முறையில் ஏற்படும் சுகப்பிரசவம் ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கவேண்டும்.

    ‘‘தாய் மற்றும் குழந்தை இருவரும் சுகப்பிரசவத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை கொண்டுவர வேண்டும். உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும்.

    கர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும். கருத்தரித்த காலத்தின் போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற மருத்துவ பிரச்னைகள் ஏற்படாமல் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    மூன்றாவது பிரச்னை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது சிசேரியன் ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு முன்மொழிவார்கள். ‘‘சிசேரியன் பிரசவ முறைகளோடு தொடர்புடைய இடர்களை தவிர்க்கலாம். பிரசவத்திற்கு பிறகு சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். சிசேரியன் முறையால் ஏற்படும் பிற்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

    முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சிசேரியன் செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால், சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும். அத்தகைய நேர்வில் சிசேரியன் முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில் தான் உள்ளது.

    சிறுநீரகத் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மிகவும் சகஜமான பிரச்சனை. கர்ப்பகால சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்களையும் சிகிச்சைகளையும் அறிந்து கொள்ளலாம்.
    சிறுநீரகத் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மிகவும் சகஜமான பிரச்னை. ஆனாலும், கர்ப்பிணிகளுக்கு மிகுந்த தொந்தரவுகளைத் தரக்கூடியது என்பதால் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். கர்ப்பகால சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்களையும் சிகிச்சைகளையும் அறிந்து கொள்ளலாம்.

    முதல் காரணம் ஹார்மோன்கள். கர்ப்பமாக இருக்கும்போது இவை சிறுநீரகப் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், கர்ப்பிணிகள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். வளரும் குழந்தையானது சிறுநீர் பையின் மேலும் சிறுநீர் பாதையின் மேலும் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக, கர்ப்பிணிகளின் பிரசவப் பாதையில் எளிதில் தொற்று பற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

    கர்ப்பத்தின் ஆறு வாரங்களில் கர்ப்பிணிகளின் சிறுநீர் குழாய் விரிவடைவதும் ஒரு காரணம்.கர்ப்பிணிகள் சிலருக்கு சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். அதில் சர்க்கரையும் சில ஹார்மோன்களும் சேர்ந்திருக்கும். இது பாக்டீரியா தொற்றைத் தூண்டுவதோடு, கர்ப்பிணிகளின் உடலில் அதை எதிர்த்துப் போராடும் சக்தியையும் குறைக்கும்.

    எரிச்சல் மற்றும் வலியுடன் சிறுநீர் வெளியேறுதல், பழுப்பு நிறத்திலும், ரத்தம் கலந்தும் சிறுநீர் வெளியேறுவதுஅடி முதுகு வலி மற்றும் இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் அடிக்கடி கழிக்க வேண்டும் என்கிற உணர்வு, காய்ச்சல், வாந்தி மற்றும் குமட்டல், அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வித்தியாசமான வாடையுடன் சிறுநீர் பிரிதல்.கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று ஆபத்தானதா?

    கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற எந்தத் தொற்றுமே தாயையும் கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கக்கூடும்.கர்ப்பகால நோய் தொற்றானது குறைப்பிரசவத்துக்கும் காரணமாகலாம். அது மட்டுமின்றி பிரசவத்துக்குப் பிறகும்கூட அந்தத் தொற்றின் தாக்கம் தொடரக்கூடும். சரியான நேரத்தில், ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அந்தத் தொற்றானது சிறுநீரகங்களைப் பாதித்து அவற்றை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்யலாம்.

    சிறுநீர் பரிசோதனையே பிரதானம். அதில் பாக்டீரியா தொற்றுள்ளதா என்பது கண்டுபிடிக்கப்படும். யூரின் கல்ச்சரும் சரிபார்க்க வேண்டுமெனப் பரிந்துரைக்கப்படும். அதில்தான் எந்த வகையான பாக்டீரியா தொற்று தாக்கியிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படும். தவிரரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் பார்க்கப்படும்.
    முதல் கட்டமாக தொற்றின் தன்மை மற்றும் தீவிரத்துக்கேற்ப ஆன்டி பயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இது பரிசோதனை முடிவுகளை அறிந்த பிறகே ஆரம்பிக்கப்படும். கர்ப்பத்துக்கு முன் ஏற்பட்ட சிறுநீரகத் தொற்றுக்கு எடுத்துக்கொண்ட அதே மருந்துகளை கர்ப்பத்தின் போது ஏற்படும் தொற்றுக்கும் தாமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்த மருந்துகள் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கலாம்.

    எனவே, கர்ப்பத்தின்போது பாதுகாப்பானது என மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பத்துக்கு முன் அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுகிறவர்கள் அதற்கு முறையாக சிகிச்சை மேற்கொண்டு முற்றிலும் அதிலிருந்து விடுபட வேண்டும்.

    * நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். (நாளொன்றுக்கு 8 டம்ளர்)
    * இயற்கை உபாதைகளைக் கழித்த பிறகு முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக உறுப்புகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.
    * சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடாமல் குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை வெளியேற்றிவிட வேண்டும்.
    * காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்க்க வேண்டும்.
    * பிறப்புறுப்பைச் சுத்தம் செய்கிற கெமிக்கல்களை உபயோகிக்கக்கூடாது.

    கர்ப்பிணிகள் எந்த காலகட்டங்களில் பயணம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பம் தரித்த பெண்களுக்கு, நின்றால் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ? நடந்தால், வேலை செய்தால், பொருட்களை தூக்கினால் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திடுமோ என ஒவ்வொரு செயல் செய்கையிலும் ஒருவித பயம் இருக்கும். இதில் கர்ப்ப காலத்தில் பயணம் என்றால், அவ்வளவு தான்; கர்ப்பிணிகள் கொள்ளும் பயத்திற்கு அளவே இல்லை. கர்ப்பிணிகளின் பயத்தை போக்கி, அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

    1. முதல் 3 மாதகாலம்..

    நீங்கள் முதல் 3 மாத காலத்திலும் பயணம் செய்யலாம். ஆனால், இச்சமயத்தில் மூக்கடைப்பு, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் உணர்வு போன்றவை ஏற்பட்டு, பயணத்தின் சுவாரசியத்தன்மையை கெடுத்துவிடும். மேலும் இந்த காலத்தில் பயணம் செய்வது கருக்கலைப்பு நிகழ்வதற்கான சாத்தியக் கூறினை அதிகரிக்கும்.

    2. இரண்டாவது 3 மாதகாலம்..

    இந்த காலகட்டம் பயணம் செய்ய உகந்ததே., ஆனால், நீங்கள் கீழே விழுந்துவிடாமல், வயிற்றின் மீது அழுத்தம் ஏற்பட்டுவிடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    3. மூன்றாவது 3 மாதகாலம்..

    இந்த சமயத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது; ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை பிறப்பின் நிலை மாறலாம். அதனால், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் வகையில், வீட்டில் இருப்பது நல்லது.

    1. மருத்துவரிடம் உங்கள் பயண விபரம் பற்றி தெரிவித்து, கலந்தாலோசித்த பின், அவர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்தால், நீங்கள் பயணத்தில் ஈடுபடலாம்.

    2. நீங்கள் பயணம் மேற்கொள்ளப்போவது காரிலோ அல்லது விமானத்திலோ என்றால், செல்லலாம்; இரயில் மற்றும் பேருந்து பயணத்தில் ஏற்படும் குலுங்கல்கள் குழந்தைக்கு நல்லதல்ல.

    3. நீங்கள் உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்தபின் பயணம் மேற்கொள்வது, அசம்பாவிதம் ஏதேனும் நடந்தாலும், உங்கள் பொருளாதார தேவைக்கு உறுதுணையாக இருக்கும்.

    4. உங்கள் கர்ப்ப நிலை குறித்த மருந்துகள், மருத்துவ அறிக்கைகள் இருந்தால், பயணம் செய்யலாம்.

    இந்நிகழ்வுகளின் போதெல்லாம் நீங்கள் பயணம் செய்யலாகாது..,

    1. உங்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் போது,

    2. தலைவலி இருக்கும் போது,

    3. வயிற்றில் வலி ஏற்படும் போது,

    4. கண் பார்வையில் குறைபாடு இருப்பதாய் தோன்றும் போது என இந்த சூழ்நிலைகள் நிகழும் போது, பயணம் செய்வதை அறவே தவிர்க்கவும்; இல்லையேல் இது குழந்தையின் அழிவிற்கு காரணமாக அமையும்..!
    ×