என் மலர்
சமையல்
- சீடைக்கு மாவு பிசைந்ததும், அதை சிறிது நேரம் ஊற விடவும்.
- தேன்குழலுக்கு தேங்காய்ப் பால் சேர்த்துப்பிசைந்து சுடுங்கள்.
* இனிப்பு பட்சணங்களுக்கு பாகு வைக்கும்போது நான்ஸ்டிக் பாத் திரத்தை பயன்படுத்துவதை விட அடி கனமான பாத்திரத்தை உபயோகிக்கலாம். பாகு பதம் சரியாக இருக்கும். சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போதுதான் பாகு நன்றாக வரும்.
* எந்தவிதமான காரமாக இருந்தாலும், பிசையும் மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை கலந்து செய்யவும். பட்சணம் உள்ளே மிருதுவாகவும், வெளியே கரகரப்பாகவும் வரும். வாயில் போட்டால் கரையும்படி மென்மையாக இருக்கும்.
* முறுக்கு, சீடை, தேன்குழல் செய்யும்போது அரிசி, உளுந்து மாவுடன் சிறிது ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். மொறுமொறுவென ருசி கூடுதலாக இருக்கும். ஏலக்காய் விதைகளை மாவில் சேர்த்து அரைத்து செய்தால், சுவையும் வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
* தேன்குழல், ரிப்பன், ஓமப்பொடி பிழியும்போது மாவு வைக்கும் முறுக்குக் குழாயின் உட்புறத்திலும், அழுத்திப் பிழியும் மேல் குழாயின் வெளிப்புறத்திலும் எண்ணெய் தடவிய பிறகு மாவைப் போட்டுப் பிழிந்தால் குழாயில் மாவு அதிகம் ஒட்டிக்கொள்ளாது.
* தேன்குழலுக்கு மாவு பிசையும்போது தண்ணீர் விட்டுப் பிசையாமல், தேங்காய்ப் பால் சேர்த்துப்பிசைந்து சுடுங்கள். தேன்குழல் வெள்ளை வெளேர் நிறத்தில் காட்சி அளிக்கும். சுவையாகவும் இருக்கும்.
* ரிப்பன் பக்கோடா செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவோடு இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவும் கலந்து பிசைந்து பிழிந்து பாருங்கள். பக்கோடா கூடு கூடாக வருவதுடன் சுவையும் பிரமாதமாக இருக்கும்.
* மிக்சருக்கு மாவு கரைக்கும்போது மிளகாய்த் தூளுடன் சிறிது மிளகுத்தூளும் சேர்த்தால் சுவையும், மணமும் வித்தியாசமாக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது.
* பொரித்த மிக்சரை வடிதட்டில் கொட்டி ஆற விட்டதும், டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்ப் பசை போனவுடன் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் மிக்சரில் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கமறல் வராமல் இருக்கும்.
* லட்டு பிடிக்கப் பொரித்து வைத்த பூந்தி அதிகமாக இருந்தால் மிளகுப்பொடி, உப்பு தூவி, கடுகு, கறிவேப்பிலையைப் போட்டுத் தாளித்தால் காரசார காராபூந்தி ரெடி!
* சீடைக்கு மாவு பிசைந்ததும், அதை சிறிது நேரம் ஊற விடவும். அதன்பிறகு சிறிது சிறிதாக உருட்டி ஒரு துணியில் பரப்பவும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்தால், மாவில் இருக்கும் ஈரத்தைத் துணி உறிஞ்சிக்கொள்ளும். அதன்பிறகு சீடையைப் பொரித்தால் வெடிக்காமல் இருக்கும்.
* தீபாவளி லேகியம் செய்ய நேரமில்லையா? ஒரு கைப்பிடி டைமண்ட் கற்கண்டுடன் மூன்று சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், இரண்டு ஏலக்காயைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இந்த பவுடரை டீயில் போட்டுக் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
* கார வகைகளுக்கு மாவு கரைக்கும்போது மாவுடன் நேரடியாக உப்பை கலப்பதை விட, உப்பைத் தண்ணீரில் கரைத்துக் கலந்தால், எண்ணெய்யில் போட்டதும் வெடிக்காமல் இருக்கும். உப்பும் திட்டுத் திட்டாக இல்லாமல், நன்றாகக் கலந்திருக்கும்.
* அரிசி மாவை மெல்லிய துணியில் சிறு மூட்டையாகக்கட்டி ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும் உதிர்த்து உப்பு, ஓமம் அல்லது சீரகம் சேர்த்துப் பிசைந்து சீடை செய்தால் வாயில் போட்டதும் கரையும்.
- உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு.
- உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.
சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துவார்கள் நம் முன்னோர்கள்.
நம் மொன்னோரின் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு. அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சேர்த்து வாருங்கள். உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.
இன்றைய வாழ்க்கை முறையில், கொஞ்சம் வேலை செய்தாலே நம்முடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறது. காரணம், நாம் சாப்பிடும் உணவு தான். வெறும் சாதம், இட்லி, தோசையிலும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து முழுவதாகக் கிடைப்பது இல்லை. ஆகவே, நம் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், மாற்றிக்கொள்ள உளுந்துப்பால் பருகலாம். இதனை உளுந்தங்கஞ்சி என்றும் கூறலாம். இதனை எப்படி காய்ச்சுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்து- 100 கிராம்
வெல்லம்- 100 கிராம்
ஏலக்காய்பொடி- ஒரு ஸ்பூன்
சுக்குப்பொடி- ஒரு ஸ்பூன்
பால்- ஒரு டம்ளர்
செய்முறை:
உளுந்தை முதலில் நன்றாக கழுவிவிட்டு அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு ஊறவைத்த நீருடன் உளுந்தை குக்கரில் சேர்த்து ஒரு பங்கு உளுந்துக்கு 6 பங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்த பிறகு குக்கரில் இருந்து இறக்கி வேகவைத்த உளுந்தை தனியாகவும், தண்ணீரை தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.
வேகவைத்தை உளுந்தை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். அதனுடன் உளுந்து வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கெட்டி இல்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். வெல்லம் கரைந்தவுடன் அதனை வடிகட்டி, வேகவைத்து அரைத்து வைத்துள்ள உளுந்துப்பாலில் சேர்க்க வேண்டும். அதன்பிறகு அதில் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, பால் சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் காய்ச்சி இறக்கினால் சுவையான உளுந்துப்பால் தயார்.
- பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள்.
பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள். பண்டிகை நாட்களை தித்திக்க வைக்கும்படி, பரவலாக ருசிக்கப்படும் இனிப்பு பலகாரங்கள் உங்கள் பார்வைக்கு...
குலாப் ஜாமூன்:
சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு பலகாரம் இது. பாலை மிதமான சூட்டில் நீண்ட நேரம் கொதிக்கவிட்டு, அதனை சுண்ட வைத்து அதில் மைதா மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும். பின்பு அதனை சர்க்கரை பாகில் ஊற வைத்து ருசிப்பர். இப்போது குலாப் ஜாமூன் மாவு கடைகளில் கிடைக்கிறது. அதனை கொண்டு சுலபமாக தயாரித்து ருசிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பால் பேடா:
பால், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இது பண்டிகை காலங்களில் ருசிக்கப்படும் பலகாரங்களில் தனித்துவமானது. வட்ட வடிவில் இருக்கும் இதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பால் பேடா செய்வதற்கு சுமார் 2 மணி நேரமாகும். ஒரு லிட்டர் பாலை பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிப்பிடிக்க வாய்ப்புள்ளது.
பால் பாதியாக குறைந்ததும் 100 கிராம் சர்க்கரை, அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் சேர்க்கவும். பால் நன்றாக சுண்டி, பாத்திரத்திலேயே தனியாக திரண்டு வரும். அப்போது மிக குறைந்த தீயில் வைத்து இறக்கவும். கோவா கையில் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும். அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவத்தில் அலங்கரித்து ருசிக்கலாம்.
காஜு கத்லி:
முந்திரி பர்பி என்றும் அழைக்கப்படும் இது முகலாய காலத்தை சேர்ந்தது. காஜு என்றால் முந்திரி என்றும், பர்பி என்பது பாலுடன் சர்க்கரை, குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்கள் கலந்து கொதிக்கவைத்து கெட்டி பதத்துக்கு மாற்றுவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது வைரத்தை போன்று வெட்டி பரிமாறப்படுவதால் வைர வடிவ இனிப்பு பலகாரமாகவும் காட்சி அளிக்கிறது.
ஜிலேபி:
மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.
தேங்காய் பர்பி:
தேங்காய் துருவல், முந்திரி, பாதாம், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயார் செய்யப்படும் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் இனிப்பு பலகாரமாகும். இதனை தயார் செய்வதும் எளிதானது.
தேவையானவை:
தேங்காய் துருவல் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 4 (பொடித்தது)
முந்திரி, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காய்த் துருவலை வாணலியில் கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனை இறக்கியதும் மற்றொரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். அந்த பதத்துக்கு வந்ததும் தேங்காய் துருவலைக் கொட்டி கிளறவும். இடைவிடாமல் தொடர்ச்சியாக கிளறவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும். கெட்டி பதத்துடன் வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். பின்பு நெய்யில் முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தேங்காய் கலவையில் கொட்டி லேசாக கிளறவும். ஓரளவுக்கு சூடு ஆறியதும் துண்டுகளாக வெட்டி ருசிக்கலாம்.
- தின்பண்டம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
- இனிப்பு சுவை மிகுந்த பாசிப்பருப்பு பர்பி.
பாசிப்பருப்ப்பில் புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை காணப்படுகின்றன. எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். இனிப்பான தின்பண்டம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்று நாம் இனிப்பு சுவை மிகுந்த பாசிப்பருப்பு பர்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு- 100 கிராம்
கடலைமாவு- 2 ஸ்பூன்
பால்- ஒரு டம்ளர்
சர்க்கரை- 100 கிராம்
ஏலக்காய்பவுடர்- ஒரு சிட்டிகை
முந்திரி, பாதாம், பிஸ்தா- அலங்கரிக்க
நெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
பாசிப்பருப்பை கழுவி அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு துணியில் கொட்டி நிழலில் அரைமணிநேரம் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் கொட்டி நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு அதில் முதலில் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்க்க வேண்டும். அதன்பிறகு பொடித்து வைத்துள்ள பாசிப்பருப்பு பொடியை சேர்க்க வேண்டும். இதனை பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் ஒரு டம்ளர் பால் சேர்த்து கலக்க வேண்டும். கலந்த பிறகு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கெட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் 2 ஸ்பூன் நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி, பொடித்த நட்ஸ் கலவையை சேர்க்க வேண்டும். அதன்பிறகு இதனை ஒரு பிளேட்டிற்கு மாற்றி சதுரம் சதுரமாக வெட்டி எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு பர்பி ரெடி.
- கெட்ட கொழுப்புகளை எல்லாம் கரைக்கக்கூடியது கொள்ளு.
- வாரத்தில் 3 நாள் எடுத்துக்கொள்ளலாம்.
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை எல்லாம் கரைக்கக்கூடியது கொள்ளு. வாரத்திற்கு 3 நாட்கள் இந்த கொள்ளு சூப்பை எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள தேவையில்லா கொழுப்புகளை எல்லாம் கரைத்துவிடும்.
தேவையானபொருட்கள்:
கொள்ளு- 50 கிராம்
பூண்டு- 2 பல்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மிளகு- ஒரு ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
பிளாக் சால்ட்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொள்ளுவை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பிளேட்டில் கொட்டி ஆர வைக்க வேண்டும். பின்னர் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். இதனை கொள்ளுவுடன் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது நமக்கு கொள்ளுப்பொடி ரெடி. இது 6 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. கொள்ளுசூப் தயார் செய்யலாம். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு ஒரு பல் பூண்டை துருவி இந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும். அதில் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்க வேண்டும்.
அதன்பிறகு இதனுடன் நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரக, கொள்ளுபொடியை 2 ஸ்பூன் அளவுக்கு சேர்க்க வேண்டும். இதனை கட்டி இல்லாமல் கலந்துவிட வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து வந்த பிறகு இதனை ஒரு வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி அதில் சிறிதளவு பிளாக் சால்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் வெயிட்லாஸ் நைட் ட்ரிங் தயார்.
இந்த குடிநீரை இரவு உணவு சாப்பிட்ட பிறகு இளம் சூட்டில் பருகிவர வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரண்டு அல்லது மூன்று நாள் குடிக்கலாம். கொள்ளு சூடு என்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம்.
- ஃபிளாக்சீட் நமது உடம்பிற்கு மிகவும் நல்லது.
- சருமத்திற்கும், தலைமுடிக்கு மிகவும் நல்லது.
இந்த ஃபிளாக்சீட் நமது உடம்பிற்கு மிகவும் நல்லது. சருமத்திற்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லது. இதில் ஒமேகா-3 அதிகம் இருப்பதால் இடுப்பு வலி, மூட்டுவலி இதற்கெல்லாம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதேபோன்று சியா சீடிலும் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால் உடல் எடை குறைவதற்கும், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுவதற்கும் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
ஃபிளாக் சீட்- 50 கிராம்
சியா சீட்- 2 ஸ்பூன்
நிலக்கடலை- 50 கிராம்
எள்- 2 ஸ்பூன்
பாதாம்- 20
ஏலக்காய்- 5
வெல்லம்- 50 கிராம்
சுக்கு- ஒரு துண்டு
செய்முறை:
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஃபிளாக்சீடை பொரிந்து வரும், நன்றாக மணம் வரும்வரை வறுத்து எடுக்க வேண்டும். இதனை ஒரு பிளேட்டிற்கு மாற்றிவிட்டு ஆரவிட வேண்டும். அதன்பிறகு ஷியா சீடை அதே வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். மீண்டும் அதே வாணலியில் 2 ஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும்.
நிலக்கடலையையும் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். (குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் பிளாக்சீடையும், சியா சீடையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு அதே ஜாரில் நிலக்கடலையை தோல் நீக்கிவிட்டு சேர்க்க வேண்டும். அதனுடன் எள், ஏலக்காய், சுக்கு, பாதாம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பிளாக்சீட், சியாசீட் பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொடித்த வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வெல்லப்பாகு தயார் செய்துகொள்ள வேண்டும். அதனை பாகுபதத்திற்கு இல்லாமல் வெல்லம் கரைகிற அளவிற்கு காய்ச்சி அதனை வடிகடிவிட்டு இந்த வெல்லக்கரைசலை தயார் செய்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து கிளற வேண்டும். இளம்சூட்டிலேயே கலந்துகொள்ள வேண்டும்.
அதன்பிறகு இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தயார் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் அருமையான வெயிட்லாஸ் லட்டு ரெடி. இந்த மாதிரி லட்டுவை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடைகுறையும், நன்றாக முடி வளரும், கண்ணுக்கும் நல்லது.
இதில் பிளாக்சீட் இருப்பதால் கண்பார்வையும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். எலும்பு தேய்மானத்திற்கும் மிகவும் நல்லது. எலும்புகளுக்கு வலுவூட்டக்கூடியது இந்த பிளாக்சீட் லட்டு. வெயிட் லாஸ் ஃபாலோ பண்றவங்க, டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவரும் இந்த லட்டுவை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்சாக இந்த ஊட்டச்சத்து நிறைந்த லட்டுவை கொடுக்கலாம்.
- பிரவுனி எல்லா வயதினருக்கும் பிடிக்கும்.
- மக் கேக்குகள் தற்போது மிகவும் பிரபலம்.
பிரவுனி எல்லா வயதினருக்கும் எப்போதும் பிடித்தமானது. இதனை குழந்தைகள் மிகவும் சாப்பிடுவர். முட்டை சேர்க்காமல் சாக்லேட் பிரவுனி எப்படி செய்து என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்:
டார்க் சாக்லேட்- கால் கப்
வெண்ணெய்- 2 ஸ்பூன்
மைதா-5 ஸ்பூன்
சர்க்கரை- 3 ஸ்பூன்
பால்- 4 ஸ்பூன்
வெணிலா எசன்ஸ்- ஒரு சொட்டு
சாக்கோ சிப்ஸ்- 3 ஸ்பூன்
வால்நட்- 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலில் டார்க் சாக்லேட் எடுத்து அதனை டபுள் பாயிலிங் முறையில் உருகச்செய்துகொள்ள வேண்டும். அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் மற்றொரு கிண்ணத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட்டை போட்டு உருகும்படி செய்ய வேண்டும். அதன்பிறகு அதில் வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
அதன்பிறகு அந்த சாக்லேட் கலவையில் பொடித்த சர்க்கரை, மைதா சேர்த்து அதில் சிறிதளவு பால் சேர்த்து கெட்டி இல்லாமல் மென்மையாக கலக்க வேண்டும். அதில் வெணிலா எசன்ஸ், வால்நட் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு காபி கப் அல்லது கேக் மோல்டில் ஊற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் உப்பு போட்டு அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடத்திற்கு ஃப்ரிஹீட் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பிரவுனி கலவையை எடுத்து உள்ளே வைத்து ஆவி வெளியே போகாத அளவுக்கு மூடி போட்டு மூடி 30 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.சுவையான, ஹெல்த்தியான சாக்லேட் வால்நட் பிரவுனி தயார். இதனை வெணிலா ஐஸ்கிரீமுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும். டிரை பண்ணி பாருங்க...!
- புகழ்பெற்றது ஆற்காடு மக்கன் பேடா.
- ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தது என்பதால் ஆர்காட் ஸ்வீட்
மக்கன் பேடா தென்னிந்திய உணவு வகைகளில் இருந்து ஒரு சுவையான இனிப்பு உணவாகும். மேலும், இந்த இனிப்பு தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தது என்பதால், "ஆர்காட் ஸ்வீட்" என்ற பெயரிலும் இது அறியப்படுகிறது. ஆற்காடு பகுதியில் மிகவும் புகழ்பெற்ற பலதலைமுறைகளைக் கண்ட ஒரு இனிப்பாக `மக்கன் பேடா' என்ற பெயரிலான இனிப்பு உள்ளது. இன்றளவும் புகழ்பெற்ற ஒரு இனிப்பாக மக்கன் பேடா உள்ளது.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 2 கப்
சர்க்கரை இல்லாத கோவா - 250 கிராம்
பால்- 100 கிராம்
அனைத்து உபயோக மாவு - ½ கப்
பால் பவுடர் - ¾ கப்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
பாதாம் - 8
முந்திரி - 10
பிஸ்தா - 5 முதல் 7 வரை
திராட்சை - ¼ கப்
பூசணி விதைகள் - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - சில இழைகள்
ஏலக்காய் தூள் - ¼ தேக்கரண்டி
நெய்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும். அதற்காக ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனை கிளறி கொண்டு குறைந்த தீயில் கொதிக்க விடவும். பின்னர் சர்க்கரை பாகு பிசுபிசுப்பு தன்மைக்கு மாறியதும், தீயை அணைத்துவிட வேண்டும் அதன்பிறகு சர்க்கரை பாகில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்துவிட வேண்டும். (குறிப்பு: குங்கமப்பூ வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம்.)
இப்போது பேடா தயார் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை இல்லாத கோவா, மைதா மாவு, பால்பவுடர் போட்டு நன்றாக பிசைய வேண்டும். அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, பால் சேர்த்து மென்மையாக பிசைய வேண்டும். அதனை அரைமணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
இதற்கிடையில், பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தாவை மெல்லிய துண்டுகளாக கொரகொரப்பாக உடைத்துக்கொள்ள வேண்டும்இதனுடன் திராட்சை மற்றும் பூசணி விதைகளை சேர்த்து, ஒன்றாக கலக்க வேண்டும். இதனை பேடாவுக்குள் வைப்பதற்கு ஏற்றார்போல் பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, பிசைந்துவைத்துள்ள மாவில் இருந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளை உருட்டி எடுத்து அதை கப் வடிவில் அழுத்தி உள்ளே நட்ஸ் கலவையினை ஒரு ஸ்பூன் எடுத்து ஸ்டஃபிங்கை வைக்க வேண்டும். இதனை மீண்டும் வட்ட வடிவில் கவனமாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உருண்டைகள் எண்ணெய்யில் பொரிக்கும் போது உடைந்து வெளியே வராதபடி நன்றாக தயார் செய்ய வேண்டும்
பின்னர் வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி தாயாராக வைத்துள்ள உருண்டைகளை மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக வரும் அளவுக்கு பொரித்து எடுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து சூடான சர்க்கரை பாகில் மூழ்க வைக்கவும். சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை நன்றாக ஊற விட வேண்டும், பீடாக்கள் அனைத்து சர்க்கரை பாகையும் உறிஞ்சிவிடும்.
அதன்பிறகு பேடாக்களை வெளியே எடுத்து அதில் துருவிய முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்புகளால் அலங்கரிக்க வேண்டும். இப்போது சுவையான, வாயில் நீர் வடியும் ஆற்காடு மக்கன் பேடா ருசிக்க தயார்...!!! நீங்களும் இந்த தீபாவளிக்கு இந்த ஆற்காடு மக்கன் பேடாவை செய்து ருசித்துப்பாருங்கள்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
- பிறந்தநாள் பார்ட்டிகளில் செய்து அசத்துங்கள்
தேவையான பொருட்கள்:
பிஸ்கெட்- 250 கிராம்
வெண்ணெய்- 100 கிராம்
சீஸ் கிரீம்- 500 கிராம்
க்ரீம்- 250 கிராம்
தேங்காய் பொடி- 100 கிராம்
ஒயிட் சாக்கலேட்- 250 கிராம்
ஜெலட்டின் 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரில் பிஸ்கெட்டுகளை போட்டு நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெண்ணெயை உருக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனை கேக் மோல்டில் பேஸ்மெண்டாக போட வேண்டும்.
அதன்பிறகு மற்றொரு பாத்திரத்தில் சீஸ் கிரீம் மற்றும் கிரீம் போட்டு நன்றாக கலக்க வேண்டும் இதனுடன் ஒயிட் சாக்லேட், தேங்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அதனையும் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பிஸ்கெட் பேஸ்மெண்டில் ஊற்ற வேண்டும்.
அதற்கு மேல் ஊற்றுவதற்காக ஒரு ஒயிட் சாக்லேட்டில் க்ரீம் சேர்த்து நன்றாக கிளறி அதனையும் டாப்பிங்கிற்காக ஊற்ற வேண்டும். பின்னர் தேங்காய் பொடியை பரவினாற்போல் தூவி விட வேண்டும். அதன்மேல் விரும்பினால் நட்ஸ் கலவையையோ அல்லது பொடித்த நட்ஸ்களையோ தூவலாம். இந்த கலவையை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம். சுவையான கோக்கனெட் சீஸ் கேக் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
- கொள்ளு வைத்து மொருமொரு முறுக்கு.
- ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரச்சினை ஒரு வாரத்துக்கு இருக்காது.
பாட்டிகளுக்கே தெரியாத ஒரு சூப்பரான முறுக்கு ரெசிப்பியைத் தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். கொள்ளு வைத்து மொருமொரு முறுக்கு. இதை செய்து வைத்து விட்டால் ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரச்சினை ஒரு வாரத்துக்கு இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விருப்பமாக சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த கொள்ளுப்பயறு முறுக்கை சுலபமாக செய்வது எப்படி என்பதை தான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு 2 கப்
பச்சரிசி மாவு - 1 கப்
கொள்ளு பயிறு (வேகவைத்து விழுதாக அரைக்கவும்) - 4 கப்
கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலைமாவு, பச்சரிசி மாவு, வேகவைத்து மசிக்கப்பட்ட கொள்ளு மற்றும் கருப்பு எள், பெருங்காத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மென்மையாக பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும். பின்பு கலந்து வைத்திருக்கும் மாவை முறுக்குகளாகப் பிழிந்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- வித்தியாசமான முருங்கை லட்டு.
- தீபாவளி என்றாலே பல வகையான பலகாரங்கள் செய்வது வழக்கம்.
நாம் நமது வீடுகளில் தீபாவளி என்றாலே பல வகையான பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், இனிப்பு, காரம் என பல வகையான பலகாரங்கள் நமது தீபாவளி கொண்டாட்டத்தில் இடம் பெரும். அந்த வகையில் நாம் இந்த தீபாவளிக்கு வித்தியாசமான முருங்கைகீரை பொடியை வைத்து லட்டு செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1/2 கப்
முருங்கைக்கீரை பொடி - 1/2 கப்
உலர்ந்த அத்திப்பழம் - 6
உலர்ந்த பேரீச்சம் பழம் (விதை நீக்கியது) -10
உலர் திராட்சை - 1/4 கப்
முந்திரி - 1/4 கப்
பாதாம் - 1/4 கப்
பிஸ்தா - 1/4 கப்
உலர்ந்த தேங்காய் துருவல் - 4 கப்
வெல்லம் (பொடித்தது) - 4 கப்
ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்
உலர்ந்த தேங்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழங்களை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை சூடுபடுத்தி, அதில் கேழ்வரகு மாவைக் கொட்டி பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வறுக்க வேண்டும். பின்னர் அதில் முருங்கைக்கீரை பொடியை சேர்த்து மீண்டும் வறுக்கவும். பச்சை வாசனை போன பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி மற்றொரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
அதே வாணலியில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை கொட்டி மிதமான தீயில் வறுக்க வேண்டும். பின்னர் அதில் உலர்ந்த தேங்காய் துருவலைக் கொட்டி கிளற வேண்டும். பச்சை வாசனை போனதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
அதன் பிறகு இவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ள வேண்டும். ஊறவைத்த அத்தி மற்றும் பேரீச்சம் பழங்களுடன், உலர் திராட்சை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் விழுதாக அரைக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்ற வேண்டும். அது சூடானதும் அரைத்து வைத்திருக்கும் உலர் பழங்களின் விழுதை அதில் போட்டு குறைவான தீயில் கிளற வேண்டும். விழுது வாணலியில் ஒட்டி வரும் சமயத்தில், பொடித்து வைத்திருக்கும் முந்திரி கலவையை அதில் போட்டு நன்றாகக் கிளறவும்.
இப்போது அதில் கேழ்வரகு மற்றும் முருங்கைக் கீரை பொடி கலவையைக் கொட்டி நன்றாகக் கலக்க வேண்டும். அதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றிக் கிளறவும். தேவையான அளவு வெல்லத்தை இந்த கலவையில் சேர்க்கவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கலவையுடன் சேர்ந்து வந்தபிறகு அடுப்பை அணைக்கவும்.
இந்த கலவை மிதமான சூட்டில் இருக்கும்போதே லட்டுகளாக பிடித்து, அவற்றை உலர்ந்த தேங்காய் பொடியில் போட்டு மென்மையாக புரட்டி எடுக்கவும். சுவையான முருங்கை லட்டு தயார்.
- சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
- வயது பேதமின்றி அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வயது பேதமின்றி சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் சாக்லேட்டும் ஒன்று. பிறந்தநாள் கொண்டாட்டம், புத்தாண்டு, திருமண விழாக்கள், போன்ற எல்லா விழாக்களுமே கேக் இல்லாமல் நிறைவு பெறுவது இல்லை. விதவிதமான கேக்குகள் பலவிதமான சுவைகளில் வாங்கி சிறப்பான நாட்களை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறோம். அப்படி சாக்லேட் மட்டுமல்லாமல் சாக்லேட் பிளேவரில் வரும் சாக்லேட் கேக், சாக்லேட் ஐஸ் க்ரீம் என்று அனைத்தும் மிக சுவையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சாக்லேட் ப்ரவுனி எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்ணெய்-200 கிராம்
சர்க்கரை- 100 கிராம்
பால்- 100 மி.லி
கோகோ பவுடர்- 50 கிராம்
200 கிராம்
மைதா- 250 கிராம்
சாக்லேட் பார்- 1
செய்முறை:
ஒரு குக்கரை எடுத்து அதில் உப்பு போட்டு 15 நிமிடத்திற்கு ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு பவுலில் வெண்ணெய் சேர்த்து அதில் சர்க்கரை, பால் சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் சலித்த மைதா மற்றும் கோகோபவுடர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் சாக்லேட் பார் சேர்த்து கிளறி அதனை ஏற்கனவே ஃப்ரீஹீட் செய்துவைத்துள்ள குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து ஒரு கேல் மோல்டின் உள்ளே பட்டர் பேப்பர் அல்லது பட்டர் தடவி அதனுள் பிரவுனி கலவையை ஊற்றி 25 நிமிடத்திற்கு மூடி போட்டு வைக்க வேண்டும். குறிப்பு: குக்கரில் விசில் போடக்கூடாது. 25 நிமிடத்திற்கு பிறகு திறந்து எடுத்து சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தோ பரிமாறலாம். குழந்தைகள் மூலம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.






