search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • சீடைக்கு மாவு பிசைந்ததும், அதை சிறிது நேரம் ஊற விடவும்.
    • தேன்குழலுக்கு தேங்காய்ப் பால் சேர்த்துப்பிசைந்து சுடுங்கள்.

    * இனிப்பு பட்சணங்களுக்கு பாகு வைக்கும்போது நான்ஸ்டிக் பாத் திரத்தை பயன்படுத்துவதை விட அடி கனமான பாத்திரத்தை உபயோகிக்கலாம். பாகு பதம் சரியாக இருக்கும். சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போதுதான் பாகு நன்றாக வரும்.

    * எந்தவிதமான காரமாக இருந்தாலும், பிசையும் மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை கலந்து செய்யவும். பட்சணம் உள்ளே மிருதுவாகவும், வெளியே கரகரப்பாகவும் வரும். வாயில் போட்டால் கரையும்படி மென்மையாக இருக்கும்.

    * முறுக்கு, சீடை, தேன்குழல் செய்யும்போது அரிசி, உளுந்து மாவுடன் சிறிது ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். மொறுமொறுவென ருசி கூடுதலாக இருக்கும். ஏலக்காய் விதைகளை மாவில் சேர்த்து அரைத்து செய்தால், சுவையும் வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

    * தேன்குழல், ரிப்பன், ஓமப்பொடி பிழியும்போது மாவு வைக்கும் முறுக்குக் குழாயின் உட்புறத்திலும், அழுத்திப் பிழியும் மேல் குழாயின் வெளிப்புறத்திலும் எண்ணெய் தடவிய பிறகு மாவைப் போட்டுப் பிழிந்தால் குழாயில் மாவு அதிகம் ஒட்டிக்கொள்ளாது.

    * தேன்குழலுக்கு மாவு பிசையும்போது தண்ணீர் விட்டுப் பிசையாமல், தேங்காய்ப் பால் சேர்த்துப்பிசைந்து சுடுங்கள். தேன்குழல் வெள்ளை வெளேர் நிறத்தில் காட்சி அளிக்கும். சுவையாகவும் இருக்கும்.

    * ரிப்பன் பக்கோடா செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவோடு இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவும் கலந்து பிசைந்து பிழிந்து பாருங்கள். பக்கோடா கூடு கூடாக வருவதுடன் சுவையும் பிரமாதமாக இருக்கும்.

    * மிக்சருக்கு மாவு கரைக்கும்போது மிளகாய்த் தூளுடன் சிறிது மிளகுத்தூளும் சேர்த்தால் சுவையும், மணமும் வித்தியாசமாக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது.

    * பொரித்த மிக்சரை வடிதட்டில் கொட்டி ஆற விட்டதும், டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்ப் பசை போனவுடன் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் மிக்சரில் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கமறல் வராமல் இருக்கும்.

    * லட்டு பிடிக்கப் பொரித்து வைத்த பூந்தி அதிகமாக இருந்தால் மிளகுப்பொடி, உப்பு தூவி, கடுகு, கறிவேப்பிலையைப் போட்டுத் தாளித்தால் காரசார காராபூந்தி ரெடி!

    * சீடைக்கு மாவு பிசைந்ததும், அதை சிறிது நேரம் ஊற விடவும். அதன்பிறகு சிறிது சிறிதாக உருட்டி ஒரு துணியில் பரப்பவும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்தால், மாவில் இருக்கும் ஈரத்தைத் துணி உறிஞ்சிக்கொள்ளும். அதன்பிறகு சீடையைப் பொரித்தால் வெடிக்காமல் இருக்கும்.

    * தீபாவளி லேகியம் செய்ய நேரமில்லையா? ஒரு கைப்பிடி டைமண்ட் கற்கண்டுடன் மூன்று சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், இரண்டு ஏலக்காயைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இந்த பவுடரை டீயில் போட்டுக் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

    * கார வகைகளுக்கு மாவு கரைக்கும்போது மாவுடன் நேரடியாக உப்பை கலப்பதை விட, உப்பைத் தண்ணீரில் கரைத்துக் கலந்தால், எண்ணெய்யில் போட்டதும் வெடிக்காமல் இருக்கும். உப்பும் திட்டுத் திட்டாக இல்லாமல், நன்றாகக் கலந்திருக்கும்.

    * அரிசி மாவை மெல்லிய துணியில் சிறு மூட்டையாகக்கட்டி ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும் உதிர்த்து உப்பு, ஓமம் அல்லது சீரகம் சேர்த்துப் பிசைந்து சீடை செய்தால் வாயில் போட்டதும் கரையும்.

    Next Story
    ×