என் மலர்tooltip icon

    சமையல்

    • எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும்.
    • உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது.

    நம் பாரம்பரியத்தில் கற்றாழையின் பயன்பாடு என்பது நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. கிராமங்களில் எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும். வயல்களில் தானாக வளர்ந்து இருக்கும். இதில் உள்ள பல்வேறு சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது. இன்றைய சந்தையில், அழகுசாதன பொருட்கள், உணவு சார்ந்த பொருட்கள், உடல் எடை குறைக்க என பல்வேறு துறைகளில் சோற்றுக்கற்றாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    கற்றாழையில் இருந்து உணவு தயாரிப்பதும் எளிமையானது தான் பொதுவாக கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதில் ஜூஸ் தயாரித்து பருகலாம். இதுவரை நீங்கள் கற்றாழையை சரும பராமரிப்பு இதுவரை மருந்து வடிவில் பயன்படுத்துவோம். ஆனால் காய்கறிகளை போல காற்றாழையை குழம்பு, கறி, பொரியலாகவும் சமைக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கற்றாழை -7 வில்லைகள் (தோல் நீக்கியது)

    நல்லெண்ணெய் -4 டேபிள் ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    வெந்தயம்- கால் டீஸ்பூன்

    சீரகம்- கால் டீஸ்பூன்

    கறிவேப்பிலை சிறிதளவு

    புளி- எலுமிச்சை அளவு

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    பூண்டு- அரை கப்

    தக்காளி- 2 (நறுக்கியது)

    மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி இலை சிறிதளவு

    செய்முறை:

    முதலில் சோற்றுக்கற்றாலையை எடுத்து தோலை நீக்கிவிட்டு அதனை இரண்டு மூன்று தடவை கழுவி எடுத்து வெட்டிக்கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு நன்றாக வதங்கிய பிறகு சின்னவெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

    அதன்பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள சோற்றுக்கற்றாலைகளை சேர்க்க வேண்டும். இதில் நீர்ச்சத்து அதிகம் என்பதாள் வாணலியில் போட்டதும் தெறிக்கும். பாதுகாப்பாக செய்ய வேண்டும். பின்னர் தக்காளி சேர்க்க வேண்டும்.

    பின்னர் மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் கற்றாலை குழம்பு தயார்.

    • கருப்பு உளுந்தில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
    • மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

    கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கருப்பு உளுந்து- 1 கப்

    சிகப்பு அரிசி- 1/2 கப்

    தேங்காய் துருவியது- 1 கப்

    ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்

    நாட்டுச்சர்க்கரை- 3/4 கப்

    நெய்- 3 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் சிகப்பு அரிசியை நன்றாக கழுவி அரைமணிநேரம் உறவைத்து அதனை ஒரு மெல்லிய துணியில் கொட்டி நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலில் கருப்பு உளுந்தை போட்டு பொன்னிறமாக மணம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்த உளுந்தையும், சிகப்பு அரிசியையும் சேர்த்து அதனுடன் ஏலக்காய் போட்டு மெஷினில் கொடுத்து புட்டு மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வேண்டும் என்றால் மிக்சியில் பொடித்துக்கொள்ளலாம்.

    பின்னர் மாவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மாவை கொட்டி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு போல் உதிரி உதிரியாக பிணைந்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, இட்லி தட்டில் துணி போட்டு புட்டு மாவு மற்றும் 1/4 கப் தேங்காய் சேர்த்து 15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

    வேகவைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் நெய், நாட்டுச்சர்க்கரை, 1/4 கப் தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி பரிமாறினால் ஆரோக்கியமான கருப்பு உளுந்து புட்டு தயார்.

    • குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும்.
    • வீட்டிலேயே அசத்தலான சுவையில் கேக் செய்ய முடியும்.

    கேக் என்றாலே நாம் ஏதாவது ஒரு பேக்கரியில் வாங்குவது தான் வழக்கம். ஆனால், சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்காமல் பேரீச்சம்பழத்தை வைத்து நம்மால் வீட்டிலேயே அசத்தலான சுவையில் கேக் செய்ய முடியும். உங்களுக்கு குட்டீஸ் இருந்தால், நீங்கள் இந்த கேக்கை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இது கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது ஆரோக்கியமானதும் கூட. வீட்டிலேயே எளிமையான முறையில் சூப்பரான சுவையில் பேரீச்சம்பழ கேக் செய்முறை உங்களுக்காக...

    தேவையான பொருட்கள்

    பால்- அரை லிட்டர்

    பேரிச்சம்பழம்- 100 கிராம்

    வால்நட்- 2 ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    ஆயில்- 2 ஸ்பூன்

    கோதுமை மாவு- 250 கிராம்

    செய்முறை

    முதலில் ஒரு பவுலில் பாலை ஊற்றி அதில் பேரிச்சம் பழத்தை அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு ஊற வைத்த பேரிச்சம்பழத்தை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் அதில் எண்ணெய் ஊற்றி மீண்டும் அடிக்க வேண்டும். இது ஒரு பேஸ்ட் மாதிரி இருக்கும். இதனுடன் மீண்டும் பால் ஊற்றி அடித்து எடுக்க வேண்டும்.

    இந்த கலவையை மீண்டும் அதே பவுலில் போட்டு அதில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் வால்நட் சேர்த்து நன்றாக கலந்து கேக் டிரேயில் ஊற்ற வேண்டும்.

    இப்போது ஒரு குக்கரில் அடியில் பொடி உப்பு போட்டு அடுப்பில் 15 நிமிடம் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் கேக் டிரேயை வைத்து மூடிபோட்டு வைக்க வேண்டும். (விசில் போடக்கூடாது) குறைந்தது 45 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். அதன் பிறகு திறந்து பார்த்தால் சுவையான பேரிச்சம் பழ கேக் தயார்.

    • உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கொள்ளு.
    • சூடான ஸ்வீட் கார்ன் முத்துக்கள் சாப்பிடலாம்.

    மழைக்காலங்களில், குறிப்பாக மாலை நேரங்களில் சூடான பஜ்ஜி, போண்டா போன்ற நொறுக்குத் தீனிகளைப் பார்த்ததுமே நாவில் நீர் சுரக்கும். அடிக்கடி இவற்றை சாப்பிட்டு வந்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். இவற்றுக்குப் பதிலாக சில ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளின் குறிப்புகள் இங்கே...

    * ஒரு கப் வேகவைத்த சூடான ஸ்வீட் கார்ன் முத்துக்களுடன், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், சிறிதளவு வெண்ணெய் கலந்து சாப்பிடலாம்.

    * வறுத்த கொண்டைக் கடலையுடன் தேவையான அளவு உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, சாட் மசாலாத்தூள் ஆகியவை கலந்து சாப்பிடலாம். இதை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது.

    * உங்களுக்கு பிடித்த பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கண்ணாடி பவுலில் போட்டு. அதனுடன் சிறிது உப்பு, மிளகுத்தூள் கலந்து சாப்பிடலாம்.

    * உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொள்ளு பயறை சுத்தம் செய்து எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் வறுத்து, அதனுடன் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

    • மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு ஏற்றது.
    • தேநீருடன் சேர்த்தும் சுவைக்கலாம்.

    `ஜில்' என்று மழைச்சாரல் வீசும் மாலை நேரங்களில், சிறுவர் முதல் பெரியவர் வரை சூடான தின்பண்டங்களை சாப்பிட விரும்புவார்கள். வட மாநிலங்களில் பிரபலமான 'கிரிஸ்பி பைங்கன்' மழைக்காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். இதை தேநீருடன் சேர்த்தும் சுவைக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    இளம்பச்சை நிற கத்தரிக்காய் (பெரியது) - 2

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 4 டீஸ்பூன்

    கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

    ரவை - 1 கப்

    எலுமிச்சம் பழச்சாறு- 1 டீஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- கைப்பிடி

    உப்பு - தேவைக்கு

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    கத்தரிக்காய்களை சுத்தம் செய்த பின்பு சற்றே தடிமனான வில்லைகளாக அவற்றை நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். பச்சை மிளகாய்களை பொடிதாக நறுக்க வேண்டும்.

    இப்போது இஞ்சி-பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி, உப்பு, பச்சை மிளகாய், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து பசைபோல தயாரிக்கவும். இந்த மசாலாவை கத்தரிக்காய்களின் இரண்டு புறமும் நன்றாக தடவ வேண்டும். பின்பு அவற்றை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.

    ஒரு தட்டில் ரவையைக் கொட்டி, அதனோடு 2 சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். பின்பு மசாலா பூசிய கத்தரிக்காய்களை ரவையில் போட்டு புரட்டிக் கொள்ள வேண்டும்.

    நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து. அதில் பரவலாக 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அது சூடானதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக அதன்மீது வைத்து இருபுறமும் மொறுமொறுப்பாக வருமாறு வறுக்க வேண்டும். பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை அதன் மீது தூவி சூடாக பரிமாறலாம்.

    • உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும்.
    • புரோட்டீன் பவுடரை அனைவரும் பாலில் கலந்து குடிக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச்சத்துகளை விட புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்துக்களையே விரும்புகின்றனர்.

    இயற்கையாக உற்பத்தியாகும் உணவை சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்டிஆக்ஸிடன்ட், போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். ஆனால், புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும் போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேராது. எனவே இனி வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள டிரிங்க் தயார் செய்து கொடுக்கலாம். இந்த புரோட்டீன் பவுடரை 5 வயது முதல் அனைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாதாம்- 50 கிராம்

    முந்திரி- 50 கிராம்

    கோகோ பவுடர்- 3 ஸ்பூன் (தேவைஎன்றால்)

    அக்ருட் (வால்நட்)- 8-10

    கேழ்வரகுமாவு- 3 ஸ்பூன்

    நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று கேழ்வரகு மாவையும் அதே வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு வறுத்த நட்ஸ் கலவைகளை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். பொடித்த கலவையுடன் வறுத்த கேழ்வரகு மாவு, கோகோ பவுடர் (கண்டாயம் இல்லை), நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த ஊட்டச்சத்து நிறைந்த பவுடரை அதன் ஈரத்தன்மை போகிற அளவுக்கு வெளியே வைத்து பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம். இந்த பவுடரை பாலில் கலந்து குழந்தைகளுக்கு பருகுவதற்கு கொடுக்கலாம்.

    • முட்டையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
    • புரதச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கும் நல்லது.

    முட்டையில் செய்யப்படும் எந்த ரெசிபியும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளால் விரும்பப்படுகிறது. முட்டையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    மேலும் இதில் ஒமேகா – 3, அமினோ ஆசிட்கள் போன்றவை உள்ளது. மேலும் இது புரதச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. குறிப்பாக மாலையில் சுவையான ரெசிபி செய்ய முட்டை லாலிபாப் செய்முறையை இன்றே செய்து பாருங்கள். `முட்டை லாலிபாப்' எப்படி செய்வது என பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    முட்டை- 4 (அவித்தது)

    வெங்காயம்- 1 (நறுக்கியது)

    பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)

    மிளகாய் தூள்

    தனியா தூள்

    கரம் மசாலா தூள்

    சீரகத்தூள்

    மிளகு தூள்

    பிரெட் தூள்

    கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி (பொடிதாக நறுக்கியது)

    செய்முறை:

    ஒரு கிண்ணத்தில் 4 அவித்த முட்டைகளையும் துருவிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாதித்திரத்தில் துருவிய முட்டைகளை போட்டு அதில் பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், உப்பு மற்றும் பிரெட் தூள் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகு தூள்சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டை கலவையில் தேய்த்து பின்னர் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு நன்றாக பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். பொறித்த உருண்டைகளில் டூத் ஸ்டிக்கை சொருகி வைத்தால் சுவையான, சூடான, ருசியான முட்டை லாலிபாப் தயார். இதை வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். மழைக்காலங்களில் மாலைநேர ஸ்டாக்சாக பரிமாற வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • சாம்பார், அவியல், மசியல் செய்யும்போது இஞ்சி சேர்த்தால் வாய்வு சேராது.
    • இஞ்சி, தேங்காய், கருவேப்பிலை கலந்து துவையல் செய்தால் அருமை.

    1. அடை மாவு, தோசை மாவு புளித்து விட்டால், இரண்டு டம்ளர் வெந்நீர் விடவும். பத்து நிமிடம் கழித்து தெளிந்த நீரை கொட்டி விட்டால் புளிப்பு குறைந்து விடும். பின்பு ஒரு பிடி ரவை அல்லது அரிசி மாவு கலந்தால் சரியாகிவிடும்.

    2. பாசிப் பயறு சுண்டல் செய்வதற்கு, முதல் நாள் இரவு தண்ணீரில் பாசி பயறை ஊற வைக்கவும். அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி விட்டு துணியில் கட்டி வைத்தால் முளைகட்டி விடும். இதை சுண்டல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கு கூடுதல் சத்தும் கிடைக்கும்.

    3. சாம்பார், அவியல், மசியல் செய்யும்போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் வாய்வு சேராது.

    4. ஓட்ஸ் உடன் ஒரு பிடி அவல், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.

    5. கத்தரிக்காய், பூசணி போன்ற புளிக்கூட்டு செய்யும்போது கடலைப் பருப்பை கொஞ்சம் குறைத்து விட்டு, மீல்மேக்கர் சேர்த்து செய்தால் சுவை கூடும்.

    6. தேங்காய் துவையல் அரைக்கும் போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

    7.பாகற்காய், குடை மிளகாய் போன்றவற்றை சிறியதாக நறுக்கி உப்பு, எலுமிச்சம் பழம் சேர்த்தால் ஊறுகாய் ரெடி.

    8. தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, வெல்லம் போன்றவற்றை ஒன்றாக கலந்து மாலையில் நொறுக்குத்தீனியாக சாப்பிடலாம்.

    9. கோவைக்காய், மிளகாய் இவற்றை மிகச் சிறியதாக நறுக்கி பொரியல் செய்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.

    10. இஞ்சி, தேங்காய், கருவேப்பிலை கலந்து துவையல் செய்தால் சுவையோ சுவை.

    • சூடான காபியுடன் காரசாரமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்.
    • குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    மாலை நேரத்தில் சூடான காபியுடன் காரசாரமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். அந்த வகையில் இன்று வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்ய கூடிய சுண்டல் கபாப் பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். வாங்க சுண்டல் கபாப் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கருப்பு கொண்டை கடலை – 1 கப்,

    பொட்டுக்கடலை – 1/4 கப்,

    சோம்பு – 1/4 ஸ்பூன்,

    இஞ்சி – சிறிய துண்டு,

    பூண்டு – 2 பல்,

    பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,

    கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,

    தனியா தூள்- ஒரு ஸ்பூன்

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு தேவையான அளவு,

    கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை- தேவையான அளவு

    செய்முறை:

    கருப்பு கொண்டை கடலையை முந்தின நாள் இரவே ஊறவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் ஊறவைத்த கொண்டை கடலையை எடுத்து அதனை குக்கரில் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும். வேக வைத்த கொண்டைக்கடலையை மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று பொட்டுக்கடலையையும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும்

    ஒரு பாத்திரத்தில் அரைத்த கொண்டைகடலை மாவு அதனுடன் பொட்டுக்கடலை மாவு சேர்க்க வேண்டும். அதன்பிறகு சோம்பு, இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், கரம்மசாலாதூள், மிளகாய்தூள், தனியாதூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து கிளர வேண்டும். அதனுடன் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட் பாட்டிலின் மூடிகளில் நிரப்பி வட்ட வடிவில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இந்த கபாப்களை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்தது முன்னும் பின்னுமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுண்டல் கபாப் தயார். சூடான சுண்டல் கபாப் புதினா சட்னியுடன் சாப்பிட மிகவும் ஏற்றது.

    • தக்காளியை வைத்து தக்காளி கெட்சப் செய்யலாம்.
    • வாழைப்பழ கெட்சப் என்பது சுவையான ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாகும்.

    தக்காளி கெட்சப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதென்ன வாழைப்பழ `கெட்சப்'. தக்காளியை வைத்து தக்காளி கெட்சப் செய்யலாம். நாம் வாழைப்பழத்தை வைத்து வாழைப்பழ `கெட்சப் செய்யலாம். வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றம் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதில் அதிக லாபம் பெற முடியும். வாழைப்பழ கெட்சப் என்பது சுவையான ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாகும். வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம்- 3

    பப்பாளிப்பழம்- 1

    வெங்காயம்- 1

    சீரகம்- 5 கிராம்

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    மிளகு- நான்கு பல்

    பட்டை- 10 கிராம்

    கிராம்பு- 3

    சர்க்கரை - ஒரு ஸ்பூன்

    வினிகர் - ஒரு ஸ்பூன்

    சோடியம் பென்சோயட்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    இதனை தயாரிக்க வாழைப்பழத்தை தோல் நீக்கி கூழாக்க வேண்டும். அதன் பிறகு பப்பாளி பழத்தை மிக்சி ஜாரில் போட்டு கூழாக்க வேண்டும். இப்போது வாழைப்பழ கூழுடன் பப்பாளி பழக்கூழ் 30 சதவீதம் கலந்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், 10 கிராம் அளவுக்கு பட்டை, மூன்று கிராம், நான்கு பல் மிளகு, மிளகாய் தூள், 5 கிராம் சீரகம் ஆகியவற்றை லேசாக அரைத்து மென்மையான துணியில் கட்டி நாம் ஏற்கனவே கலந்து வைக்கப்பட்ட வாழைப்பழ மற்றும் பப்பாளி பழச்சாறில் போட வேண்டும்.

    பழக்கூழ் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை வேகவைத்து பின்னர் துணி மூட்டையை அகற்றி விட வேண்டும். அதன்பிறகு உப்பு, மீதமுள்ள சர்க்கரை, வினிகர், சோடியம் பென்சோயட் (கட்டாயம் இல்லை) ஆகியவற்றை சிறிது சேர்த்து கலக்க வேண்டும். இதனை சுத்தமான கண்ணாடி பாட்டில்களில் நிரப்பி பயன்படுத்தலாம்.

    • சில்லி கோபி ஃபிரை யாருக்குத்தான் பிடிக்காது.
    • நிறைய பேருக்கு ஃபேவரட் இந்த சில்லி கோபி ஃபிரை.

    மொறு மொறு சில்லி கோபி ஃபிரை யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு ஃபேவரட் இந்த சில்லி கோபி ஃபிரை. ஆனால் வீட்டில் செய்தால் மொறுமொறுப்பாக, கடையில் வாங்கியது போல் கிடைக்காது. அப்படியே மொறுமொறுப்பாக பொரித்து எடுத்தாலும் ஓரிரு நிமிடங்களில் அது நமத்து போய்விடும். நீண்ட நேரம் காலிபிளவர் சில்லி மொறு மொறுப்பாக இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ரெசிபி இதோ இந்த பதிவில் உங்களுக்காக... நீங்க சில்லி கோபி ஃபிரை பிரியர்களாக இருந்தால், இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க.

    தேவையான பொருட்கள்:

    காளிஃபிளவர்- 1 பூ

    குடைமிளகாய்- 2

    பச்சைமிளகாய்- 2

    வெங்காயம்- 2 (வெட்டியது)

    பூண்டு- 5 பல்

    இஞ்சி- ஒரு துண்டு

    வெங்காயத்தாள்- அலங்கரிக்க

    மைதா மாவு- ஒரு ஸ்பூன்

    கான்பிளவர் மாவு- 2 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    சில்லி சாஸ்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    டோமேட்டோ சாஸ்- ஒரு ஸ்பூன்

    வெள்ளை எள்- ஒரு ஸ்பூன்

    மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் காளிஃபிளவரை நடுத்தரமாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் மைதாமாவு, கான்பிளவர் மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி அதில் தண்ணீர் சேர்த்து பிரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த காளிஃபிளவரை பொரித்து எடுக்க வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட வேண்டும். அதன்பிறகு வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அதில் குடைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    பின்னர் ஒரு கிண்ணத்தில் சோயா சாஸ், சில்லி சாஸ், டோமேட்டோ சாஸ், மிளகுத்தூள், வெள்ளை எள், ஆகிவற்றை கலந்து வாணலியில் சேர்க்க வேண்டும். அதன்பிறகு நாம் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள காளிஃபிளவர்களை அதில் சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையை உப்பு போட்டு நன்றாக கிளறிவிட வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து இந்த சில்லி கோபி ஃபிரையில் சேர்க்க வேண்டும். இது தான் க்ரேவி டெக்சரை கொடுக்கும். அதன்மேலே வெங்காயத்தாளை அலங்கரித்து சூடாக பரிமாற வேண்டும்.

    • மழைக்காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உளுந்தங்கஞ்சி.
    • உடலுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம்.

    இன்றைய பரபரப்பான சூழலில் டிபன், லஞ்ச், டின்னர் என அனைத்தையும் சில நிமிடங்களில் சமைத்துவிட்டு வேலைக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் ஆரோக்கிய குறைவால் டாக்டரையும் தேடி அலைந்துகொண்டு இருக்கிறோம். இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் என வாங்கும் செலவு அதுவேற தனிகணக்கு.

    இந்த மழைக்காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உளுந்தங்கஞ்சி வாரத்திற்கு 2 முறையாவது எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. செய்வதும் மிகவும் எளிது. மழைக்காலம் என்பதால் நோய்தொற்றும் அதிகமாகி வருகிறது. நோய்தொற்றில் இருந்து காப்பாற்ற நோய் எதிர்ப்பு சக்தியும், உடலுக்கு ஊட்டச்சத்தும் மிகவும் அவசியம். அதேவேளையில் சமையலும் விரைவில் முடிந்துவிடும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இந்த உளுந்தங்கஞ்சியை தேர்வு செய்யலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது.

    தேவையான பொருட்கள்

    கருப்பு உளுந்து- 200 கிராம் (உடைத்தது)

    அரிசி- 100

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    பூண்டு- 10 பல்

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    குக்கரில் கருப்பு உளுந்து, அரிசி, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். வேகவைத்த உளுந்தங்கஞ்சியை எடுத்து நன்றாக மசித்து கிளற வேண்டும். பின்னர் கஞ்சியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அதிகளவில் இருப்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மூட்டுவலி, கை, கால் சோர்வில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பாக இருக்கலாம். கருப்பு உளுந்தில் உள்ள சத்துகள் பெண்களின் உடலுக்கு வலுசேர்க்கிறது. பிரசவத்திற்கு பின்னர் வரும் இடுப்பு வலி, எலும்புமுறிவு பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

    ×