என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
    • அரிசியில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன.

    இந்திய உணவு வகைகளில் பல நூற்றாண்டுகளாக அரிசி முக்கிய அங்கம் வகிக்கிறது. அரிசியில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அவற்றுள் வெள்ளை, பழுப்பு நிற அரிசிதான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. அதிலும் வெள்ளை நிற அரிசிதான் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. பாரம்பரிய அரிசி ரகங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் அவற்றின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. இப்போது பாரம்பரிய அரிசி வகைகளின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து பலரும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

    அவற்றுள் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சிறந்த அரிசிகளில் ஒன்றாக `நவரா' அரிசி விளங்குகிறது. இது கேரளாவை பூர்வீகமாக கொண்டது. பாலீஷ் செய்யப்படாத அரிசியான இது, சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.

    உணவாக மட்டுமல்லாமல் ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிசி உடலுக்கு உடனடி ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் அளிக்கக்கூடியது. அதனால் நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இது அமைகிறது. ரத்தம், எலும்புகள், தசைகள் என உடலின் அனைத்து திசு அமைப்புகளுக்கும் வலு சேர்க்கக்கூடியது.

    மெலிந்த தேகம் கொண்டவர்கள், பலவீனமான, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், காய்ச்சலில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு ஏற்றது.

    நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த அரிசி பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதம் இந்த அரிசியை தினமும் சாப்பிடுமாறு வலியுறுத்துகிறது. ஏனெனில் இந்த அரிசி பசியைத் தூண்டும், உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். ஆயுர்வேதத்தில் மூட்டுவலி, வாத நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

    நீரிழிவு நோயாளிகள் இந்த அரிசியை குறைவாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணித்து அதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.

    இந்த அரிசியுடன் தண்ணீர் அல்லது பால் சேர்த்து சமைத்து ஊட்டமளிக்கும் கஞ்சியாகவும் உட்கொள்ளலாம். வெல்லம் அல்லது தேனுடன் லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்தும் சுவைக்கலாம். பிரியாணி, புலாவ் செய்வதற்கு பயன்படுத்தும் அரிசிக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.

    இந்த அரிசியில் தயாராகும் கூழ் பல்வேறு நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவாகவும் கருதப்படுகிறது. நரம்பு கோளாறுகளை குணப்படுத்துவதற்கான கேரள பாரம்பரிய மருத்துவத்தில் இந்த அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.

    நவரா அரிசியின் நன்மைகள்:

    * உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    * செரிமானத்திற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

    * உடல் மெலிவதை தடுக்கும்.

    * முடக்கு வாதத்தை குணப்படுத்த பயன்படுகிறது.

    * ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும்.

    * எலும்புகளை பலப்படுத்தும். ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் ஒரு முட்டையாவது சாப்பிடுவது நல்லது.
    • இதயநோய், பக்கவாதம் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு

    தினமும் முட்டை உட்கொள்பவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகுறைவு என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வை சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். 30 முதல் 79 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    ஆய்வின் முடிவில் தினமும் உணவில் முட்டை சேர்த்துக்கொண்டால் இதய நோயால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் பக்கவாதத்தால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் குறையும் என்பதும் தெரியவந்துள்ளது.

    முட்டையில் கொழுப்பு அதிகம் இருப்பதால் அதனை அதிக அளவு உட்கொள்வது உடல் நலனுக்கு கேடானது. அதேவேளையில் முட்டையில் வைட்டமின்களும், புரதங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிடுவது நல்லது.

    பெரும்பாலான ஆய்வு முடிவுகளும் முட்டையை அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்பதையே தெளிவுபடுத்தியுள்ளன. இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள தினமும் ஒரு முட்டை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது

    • கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
    • செரிமானம் சிக்கலின்றி சீராக நடைபெறுவதற்கு உதவும்.

    கொய்யாப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடெண்டுகள் என பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். குறைந்த கலோரிகளை கொண்ட பழமாக இருப்பதால் இதனை தாராளமாக சாப்பிடலாம். தினமும் கொய்யாப்பழம் உண்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் உங்கள் கவனத்திற்கு...

    1. செரிமானம்:

    கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது செரிமானம் சிக்கலின்றி சீராக நடைபெறுவதற்கு உதவும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளை குறைக்கும் தன்மையும் கொண்டது.

    வயிற்றுப்போக்கு சமயத்தில் கொய்யா இலை சாறு பருகுவதன் மூலம் நிவாரணம் பெறலாம். குடலில் எரிச்சல் போன்ற செரிமான பிரச்சினை கொண்டவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

    2.வலி நிவாரணம்:

    கொய்யா இலை சாற்றில் ஸ்பாஸ்மோலிடிக் பண்புகள் உள்ளன. இவை கருப்பையின் மென்மையான தசைகளில் ஏற்படும் பிடிப்பு, வலியை போக்கும் தன்மை கொண்டவை. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பிடிப்புகளுக்கு நிவாரணமாக அமையும். அதனால் பெண்கள் மாதவிடாய் சமயங்களில் கொய்யா இலை சாறு பருகுவது நல்லது.

    3. நோய்எதிர்ப்பு சக்தி:

    கொய்யாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஜலதோஷத்தை குறைக்கவும் உதவும். உடலில் பாக்டீரியாவை எதிர்த்து போராடி செல்கள் சேதம் அடைவதை தடுக்கும்.

    புற்றுநோய், இதயநோய், கீல்வாதம் போன்ற கடுமையான நோய்கள் நெருங்க விடாமல் காக்கும். பழுத்த கொய்யாப்பழத்தில்தான் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பழுத்த கொய்யாப்பழம் சாப்பிடுவது சிறந்தது.

    4. இதய ஆரோக்கியம்:

    கொய்யா இலைகளில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பாலி சாக்கரைடுகள் உள்ளன. அவை ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுபவை. அதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். கொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது.

    5. புற்றுநோய்:

    கொய்யாப்பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. புற்றுநோய்க்கு வித்திடும் செல் வளர்ச்சியை தடுக்க உதவும். மேலும் கொய்யப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் அதிகமாக இருப்பதால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    கொய்யாவில் இருக்கும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மூலநோய் அபாயத்தை குறைக்க உதவும் என்று அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

    • வெறும் வயிற்றில் சிறுகுறிஞ்சான் இலைகளை இலைகளை சாப்பிட வேண்டும்.
    • வெப்பமண்டலக் காடுகளில் அதிகம் காணப்படும்.

    சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் என்பது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில் அதிகம் காணப்படும் மூலிகைச் செடி. அதிலுள்ள ஜிம்னேமிக் அமிலம் காரணமாக கசப்புச் சுவை கொண்டதாக உள்ளது. இதன் இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாய் இலை போன்று காணப்படும்.

    இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இந்த மூலிகை உள்ள நிலையில், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தினமும் வெறும் வயிற்றில் சிறுகுறிஞ்சான் இலைகளை இலைகளை சாப்பிட வேண்டும்.

    தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயை தவிர்க்க, சில மருந்துகளுடன், வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் ரத்தில் உள்ள சர்க்கரையை இந்த மூலிகையை கொண்டு கட்டுப்படுத்தலாம்.

    சிறு குறிஞ்சான் இலைகள் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இரு வகை நீரிழிவு நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெறச்செய்து இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமாகும்.

    நீரிழிவு நோயை குணப்படுத்துவதை தவிர, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் கொழுப்பை சமநிலைப்படுத்துவதற்கும் மிகவும் உதவுகிறது.

    சிறு குறிஞ்சான் இலைகளில் பிசின்கள், அல்புமின், குளோரோபில், கார்போஹைட்ரேட், டார்டாரிக் அமிலம், ஃபார்மிக் அமிலம் மற்றும் பியூட்ரிக் அமிலம் உள்ளன. இதன் காரணமாகவே இதன் இலைகளை மென்று சாப்பிடுவதால் நாள் முழுவதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

    • கிளை பகுதிகளின் மேற்புறம் சிறு சிறு துகள்கள் காணப்படும்.
    • நம் தோலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன.

    சில தாவரங்களின் இலை, தண்டு, கிளைப் பகுதிகளின் மேற்புறம் சிறு சிறு துகள்கள் காணப்படும். இத்துகள்கள் இலைகளின் மேற்புறத்தில் அதிகம் இருக்கும். இவற்றை கூட்டு நுண்ணோக்கி மூலம் பார்த்தால் ஒவ்வொரு துகளின் நுனியிலும் தொப்பி போன்ற ஒரு பகுதியைக் காணலாம்.

    இந்த தொப்பி போன்ற பகுதியின் உள்ளே நம் தோலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அத்தாவரத்தின் பகுதி நம் உடலில் பட்டால் துகளின் நுனியிலுள்ள தொப்பி, நம் தோல் பரப்பில் புதைந்து உடைந்து விடும். அதனால் வேதிப்பொருள் வெளியேறி நம் தோலை அரிக்கும். சில நிமிடங்களில் வேதிவினை காரணமாக அப்பகுதியில் தடிப்பும் உண்டாகிவிடும்.

    சிறுகாஞ்சொறி செடியை கிராமங்களில் செந்தட்டி என அழைக்கிறார்கள். தமிழ் நாட்டில் பரவலாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. வேலி ஓரங்களில் கம்மாக்கரை, புதர்களில் ஒதுக்குப் புறங்களில் இவை காணப்படும். இவை, பயிர்களுக்கிடையே வளர்க்கூடிய தேவையற்ற களைகளாக கருதப்படுகிறது. இதன் இலைகள் மூன்று விரல்கள் போல் இருக்கும். சிறுகாஞ்சொறி செடி மூன்று வகையாக காணப்படுகிறது.

    * பெரிய இலைகளைக் கொண்டவை பெருக்காஞ்சொறி செடி

    * சிறிய இலைகளைக் கொண்டவை சிறுகாஞ்சொறி செடி.

    * கருப்பு இலைகளைக் கொரண்டவை கருப்பு காஞ்சொறி செடி.

    சிறுகாஞ்சொறி செடி விலங்குகள், மனிதர்களிடமும் தன்னை பாதுகாத்துக் கொள்ள இதன் இலைகளை தொட்டால் அதிக அரிப்பு ஏற்பட்டு சிவந்து புண் ஆகிவிடும் தன்மையை ஏற்படுத்தி தம்மை பாதுகாத்துக் கொள்கிறது. சித்தமருத்துவத்தில், இதன் வேர்களை காய வைத்து பொடி செய்து துளசி சாறோடு சேர்த்து சொரி, சிரங்கு புண்ணை ஆற்றும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

    • டயாலிசிஸ் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது.
    • இதை `பூனை மீசை துளசி’ என்றும் அழைக்கிறார்கள்.

    பூனை மீசை மூலிகையானது பல நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. இவை ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது. இதன் பூக்கள், பூனை மீசை போன்றும் இலைகள் துளசி இலை போன்றும் இருப்பதால், இதைப் `பூனை மீசை துளசி' என்னும் அழைக்கிறார்கள்.

     பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேகவெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரம் இந்த விஷநாராயணீ செடி.

    விஷநாராயணீ இலைகளை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்து எடுக்கலாம். அல்லது பூனைமீசை இலை 15 மற்றும் விஷ நாராயணி இலை 15 எடுத்து 250 மில்லி நீரில் கலந்து 150 மில்லி ஆக காய்ச்சி வடிகட்டி காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தலாம். இவ்வாறு எடுத்துவர உடலில் உள்ள அதிகப்படியான யூரியா, கிரியாட்டினைன் யூரிக் ஆசிட் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

    சிறுநீரக செயல் திறன் குறைவு மற்றும் சிறுநீர் வெளியேறும் பாதையில் உள்ள தொற்று ஆகியவற்றை சரிசெய்யும், டயாலிசிஸ் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது.

    • பசி எடுக்கும் போது நாலைந்து இலைகளை சாப்பிட்டால் போதும் பசி எடுக்காது.
    • பாபநாசம், பொதிகை மலையில் அதிக அளவில் காணப்படுகிறது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காடுகளில் கண்டறியப்பட்ட அரிதான தாவர வகையினங்களில் ஒன்று இந்த `சங்கு நாராயண சஞ்சீவினி' மலைப்பிரதேசங்களில் அரிதாகவே காணப்படுகிறது.

    காடுகளில் சித்தர்கள் உலா வந்த காலங்களில் பூஜைகளுக்கும், பசியை போக்குவதற்கும் சாப்பிட்டு வந்த காய்கள், பழங்கள், மூலிகை தாவரங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. ஆதிகாலத்தில் பழங்குடி மக்கள் வேட்டைக்கு செல்லும்போது களைப்பாற உதவியது இந்த சங்கு நாராயண சஞ்சீவினி இலைகள்.

    பசி எடுக்கும் போது நாலைந்து இலைகளை சாப்பிட்டால் போதும் பசி எடுக்காது. பழங்குடி இன மக்கள் தங்கள் பசியை போக்கவும், காயங்களுக்கு மருந்தாகவும் இதனை பயன்படுத்தினர். பாபநாசம், பொதிகை மலையில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சங்கு நாராயண சஞ்சீவினி மூலிகை ரத்த சோகையை குணப்படுத்தும். ரத்த சுத்திகரிப்பு, உடல்குளிச்சிக்கும் பயன்படுகிறது. தினமும் 3 இலைகளை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும்.

    • சுக்குநூறாக உடைந்த எலும்பை கூட சேர்க்கும் ஆற்றல் நிறைந்தது.
    • இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது.

    எலும்பொட்டி செடியை அனைவருமே வீட்டில் வளர்க்கலாம். சுக்குநூறாக உடைந்த எலும்பை கூட சேர்க்கும் ஆற்றல் நிறைந்தது இந்த எலும்பொட்டி இலைகள். கை, கால், இடுப்பு எலும்புகளில் வீக்கம், வலி, மூட்டுத்தேய்மானத்தால் ஏற்படும் வலி, குதிங்கால் வலி போன்றவற்றுக்கு மிகவும் நல்லது.

    இந்த எலும்பொட்டி இலைகளை எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது இந்த இலைகளை அரைத்து ஒரு சிறிய உருண்டைகளாக உருட்டி தினமும் சாப்பிட்டு வர எலும்பினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம்முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது. அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது.

    ஆனால் நம்மூரு காடுகளிலும் திபு, திபுவென வளர்ந்து விடுகிறது. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும். இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது.

    இவை வீடு, வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.

    மருத்துவ பயன்கள்:

    * இந்த இலைக்கு எழும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது அவரும் எரிச்சலைப்போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி ரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.

    * பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை சுளுக்கெடுத்து விடும். அதாவது போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.

    * இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.

    * இதேபோல் இந்த இலையை நிழலில் உலர்த்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

    * உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்து தான். இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு மையமாக அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.

    * இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.

    * பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆறவைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். ரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.

    • கால்சியம் உடலில் சேர்வதற்கு வைட்டமின் டி இன்றியமையாதது.
    • வைட்டமின் டி' உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

    எலும்பு வளர்ச்சிக்கும், உறுதிக்கும் ஏற்ற உணவுகள்:

    பால், தயிர், பாலாடைக் கட்டி, முட்டை, மீன், கோழி, காடை, ஆட்டிறைச்சி வகைகள். கீரைகளில், எலும் பொட்டிக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி கீரை, காய்கறி வகைகளில், சோயாபீன்ஸ், பட்டர் பீன்ஸ், பீன்ஸ், பிரண்டை ரண்டு, முட்டைக் கோஸ், வெண்பூசணி, அவரைக் காய், முருங்கைக்காய், காலிபிளவர், பிரக்கோலி,முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம், மாதுளம் பழம், பன்னீர் திராட்சை, மற்றும் கருப்பு உளுந்து, பாசிப்பயறு, துவரம் பருப்பு, கம்பு, வரகு, சோளம், சாமை, குதிரை வாலி, எள், கொள்ளு, பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு போன்ற உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது.

    வைட்டமின் டி:

    தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். இதனால் தோல் மூலம் உடம்புக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. கால்சியம் உடலில் சேர்வதற்கு வைட்டமின் டி இன்றியமையாதது. ஒரு கிராம் குங்குமப்பூவை, 100 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அதை இரண்டு துளி உள்ளுக்கு கொடுத்தும், உடம்பில் தேய்த்தும் மாலை இள வெயிலில் நடைப்பயிற்சி செய்து வந்தால் 'வைட்டமின் டி' உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

    பால் ஒவ்வாமை:

    லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் பால் ஒவ்வாமை உடையவர்கள் பாலுக்கு பதிலாக சோயா பால், தேங்காய் பால், பாதாம் பால் இவைகளில் ஒன்றை சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும்.

    கொள்ளு ரசம்:

    கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளுரசம் மிகவும் நல்லது. எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு, சதையை குறைக்கும். கொள்ளு - 10 கிராம், மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடிக்க வேண்டும்.

    கீரை:

    எலும்பொட்டிக் கீரை என்றழைக்கப்படும் ஒரு கொடி வகை தாவரம். இந்த செடியின் இலையை பாலுடன் நன்கு அரைத்து காலை, மாலை இருவேளை ஒரு நெல்லிக்காய் அளவு உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியடையும்.

    பிரண்டை:

    பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளது. பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும். இதை புளி சேர்க்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால் தொண்டைக் காறலுடன், எரிச்சல் உண்டாகும்.

    முடவாட்டுக்கால் கிழங்கு சூப்

    முடவாட்டுக்கால் என்பது மலைப்பகுதிகளில் வளருகின்ற பெரணி வகைத் தாவரத்தின் கிழங்கு ஆகும். இதை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது அரைத்து இதனுடன் தேவையான அளவு உப்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கறி மசாலா சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் எலும்பு அடர்த்தி அதிகரித்து எலும்புகள் உறுதியாகும். உடல் சோர்வு, களைப்பு, வலி நீங்கும். எலும்புகளை பலப்படுத்தும் சித்த மருந்துகள்:

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி.. சங்கு பற்பம் 200 மி.கி. அல்லது பலகரை பற்பம் 200 மி.கி. வீதம் இருவேளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

    2) எலும்புகள் சார்ந்த வலிகள் நீங்குவதற்கு விடமுட்டி தைலத்தை வெளியே பூசி வர வேண்டும்.

    எலும்பு முறிவை சீராக்கும் தைலம்

    தேவையான பொருட்கள்: பிரண்டைச் சாறு 100மி.லி., எலும்பொட்டிக் கீரைச் சாறு 100 மி.லி., மஞ்சிட்டி 20 கிராம், சுக்கு 20 கிராம், நல்லெண்ணெய் 250 மி.லி. மேற்கண்ட பொருட்களை எடுத்து நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி எண்ணெய் பதத்தில் எடுத்து கொள்ளவும். இதை தேய்த்து வந்தால் எலும்புகள் உறுதியாகும், வலிகள் நீங்கும்.

    • சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது.
    • உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் செய்யலாம்.

    விஷம் குடித்தவரை முதலில் சுத்தமான காற்றுள்ள பெரிய இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் சுற்றி நின்று அவர் சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது. விஷம் குடித்து படுத்திருப்பவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உங்களால் முடிந்தவரை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். மூச்சு விடுகிறாரா, மார்பு சுருங்கி விரிகிறதா, இருமல் எதுவும் இருக்கிறதா, கண் திறந்து மூடுகிறாரா, வாய் திறந்து மூடுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் அதை செய்யலாம்.

    விஷம் குடித்தவரின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது? அறிகுறி என்னென்ன இருக்கிறது? என்ன விஷம் குடித்தார் என்று அவரால் சொல்ல முடிகிறதா? விஷம் உடலினுள் சென்றதனால், அவர் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? விஷம் குடித்தவரின் வயது என்ன? என்ன மாதிரி விஷம் குடித்திருப்பார்? எவ்வளவு அளவு விஷம் குடித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    விஷம் குடித்தவருக்கு உள்ள அறிகுறிகள்:

    உதட்டைச் சுற்றி, வாயைச் சுற்றி சிவந்து இருக்கலாம். மூச்சு விடுவதை முகத்துக்கு கிட்டே சென்று முகர்ந்து பார்த்தால், என்ன வாசனை அடிக்கிறது என்பதை வைத்து என்ன பொருளைக் குடித்திருப்பார் என்பதை ஓரளவு கணிக்கலாம். மூச்சுத்திணறல், வலிப்பு அமைதியின்மை, ஞாபக மறதி, மயக்கம், பேச்சு உளறல், பேச்சில் தடுமாற்றம், மனநிலை குழப்பம் போன்றவற்றில் ஏதேனும் சில அறிகுறிகள் இருந்தால் விஷத்தின் பாதிப்பு உடலில் ஏறி இருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரி சூழ்நிலையில் விஷம் அருந்தியவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கொண்டு செல்வது தான் நல்லது.

    • வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
    • அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

    கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

    மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

    வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

    கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

    நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களைச் சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய தன்மைகள் நாவல்பழத்தில் உள்ளன.

    வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும்.

    பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.

    • உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
    • தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

    உலக நாடுகளை ஒப்பிடுகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் வேலை பார்ப்போர் விகிதம் 39.1 சதவீதமாகவே இருக்கிறது. பொருளாதார நிலையை சமாளிக்க தகுதியான வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு செய்யும் பலரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில் ஏதோ ஒரு வேலை கிடைத்து அங்கு பணிச்சூழல் சரியாக அமையவில்லை என்றால் அங்கே மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும், பணியாளர்களின் செயல்திறனுக்கும் இடையே காணப்படும் இடைவெளிதான் இந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால் வேலை, ஊதியம் தாண்டி மன அமைதியுடன் வேலை செய்வதற்கான ஒரு நல்ல சூழ்நிலை எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

    வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் தவிர்க்க முடியாது. ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு கீழ் வேலை செய்யும் போது நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுவதில்லை. குடும்பச்சூழல், வேலைப்பளு, கட்டமைப்பு வசதிகள், அலுவலக சூழ்நிலை, சகபணியாளர்கள் நடந்துகொள்ளும் விதம், மேல் அதிகாரியின் நடவடிக்கை, நேரமின்மை, வேலையில் தெரியாமல் செய்யும் தவறுகள் என அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட பலவித காரணங்கள் உள்ளன.

    இவை எல்லாம் எப்போதாவது ஏற்பட்டால் பெரிதாக கண்டுகொள்ளத்தேவை இல்லை. ஆனால் அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு எதிராக திரும்பும் போது உடனடியாக தீர்வுகாண வேண்டியது அவசியம்.

    கண்டிப்பாக எல்லோருக்கும் வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் இருக்கிறது. சிலபேர் மட்டும் தான் இதற்கு முக்கியத்துவம் அளித்து மனதிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களுக்கும் உடம்பும், மனதும் மிகவும் பலவீனம் அடைகிறது.

    உங்களுக்கு வேலை கடினமாக உள்ளது, அதை கையாள்வதற்கு மிகவும் சிரமப்படும்போது வேலைபார்க்கும் இடத்திலேயே உதவிசெய்வதற்கு உங்கள் நண்பரையோ அல்லது மேலதிகாரியின் உதவியையோ நாடலாம். ஏனென்றால் அவர்கள் அதை எல்லாம் கடந்துதானே வந்திருப்பார்கள். உங்களுடைய தேவைகளை அவர்களிடம் கேட்டுப்பெறலாம்.

    இங்கு வேலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த வேலை கடினமாக இருக்கிறது என்று எண்ணினால் இதைவிடுத்து வேறு இடத்திற்கு போனாலும் அங்கும் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். எனவே அதனை கையாள தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

    முதலில் உங்களது மனநிலை எதுவாக இருந்தாலும் அதனை உங்களால் கையாள முடியுமா? இல்லையா என்று பார்க்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மருத்துவ ஆலோசகரை அணுகலாம். இப்போது நிறைய தெரப்பிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போது நிறைய அட்வான்ஸ் டெக்னாலஜிகளும் வந்துவிட்டன.

    இதையும் மீறி உங்களுக்கு மன அழுத்தம் இருந்துகொண்டு இருந்தால், அதாவது மருத்துவ ஆலோசகரை அணுகியும் உங்களுக்கு சரியாகவில்லை என்றால் அப்போது அந்த வேலையை மாற்றுவதை பற்றி நீங்கள் சிந்திக்கலாம். உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ, நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அந்த வேலைக்கு உங்களை மாற்றிக்கொள்ளலாம்.

    உயர் பதவிகளில் இருப்பவர்கள் இந்த வகை மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் வேலைப்பளு என்பது அவர்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். மேலும் அவர்களால் வேலையைவிட்டு அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது. அவர்கள் மன அழுத்தம் வேலைகளால் ஏற்படுகிறதா அல்லது வீட்டு சூழ்நிலைகளால் ஏற்படுகிறதா என்பதை பிரித்து பார்க்க வேண்டும்.

    மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சினைகள் மனநல பிரச்சினைகளையும், உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் பக்கவாதம், மாரடைப்பு, உடல்பருமன், எடைகுறைவு என பல உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    மனநல பிரச்சினை உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

    வேலைப்பளுவினால் மன அழுத்தம் ஏற்பட்டால் அது உங்களது வேலையை பாதிக்கிறது, உங்களது கவனத்தை வேலைகளில் செலுத்த இயலல்லை. அதற்கு மாறாக உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகம் வருகிறது என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசகரை சந்திப்பது தான் மிகவும் நல்லது.

    மருத்துவரை பார்ப்பதற்கோ அல்லது கவுன்ஸ்லிங் போவதற்கோ முதலில் அச்சப்படக்கூடாது. நம்மை பற்றி எப்படி பேசுவது, எல்லோருக்கும் தெரிந்துவிடுமோ, நம்மை பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் எல்லா தடைகளையும் உடைத்துவிட்டு துணிந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அவர்களை சந்தித்து ஆலோசனைகளை பெற்றாலே உங்களுடைய வாழ்வியல் முறைகள் மாறிவிடும்.

    தற்கொலை எண்ணங்கள் ஏன் ஏற்படுகிறது

    தற்கொலை எண்ணங்கள் ஒரு மனிதன் கோபமாக இருக்கும்போது அல்லது சண்டையிடும் போது இந்த மாதிரி எண்ணங்கள் வருவது என்பது இயற்கை. ஆனாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த முடியாத போது தான் விபரீதமான எண்ணங்களும், தற்கொலை முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இதனால் நிறைய தற்கொலைகளும் நடந்துள்ளன.

    ஒருவருக்கு தொடர்ந்து தற்கொலை எண்ணங்கள் வருவது, தற்கொலை பற்றி அதிகமாக பேசுவது, தனிமையில் இருப்பது ஆகிய அறிகுறிகள் இருப்பவர்களை கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். தற்போது ஹெல்ப்லைன் மூலமாக கூட மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. எனவே மருத்துவமனைக்கு செல்லாமல் இந்த மாதிரி ஹெல்ப்லைன் மூலமாக மருத்துவ ஆலோசகருக்கு போன் செய்தும் கவுன்ஸ்லிங் அளிக்கலாம்.

    மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள்

    பலவருடங்களுக்கு முன்னால் இருந்தே மன அழுத்தத்திற்கு நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதிக மனக்குழப்பம் இருப்பவர்களுக்கு கூட இப்போது நல்ல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது யோகா மற்றும் தியானம். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் உதவுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த சிகிச்சை முறைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் மட்டுமே நல்ல பலனை பெறமுடியும்.

    தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வது, மருத்துவ ஆலோசகரின் வழிமுறைகளை பின்பற்றுவது. தொடர் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது என்று செய்தால் மட்டுமே சீக்கிரமாக இத்தகைய நிலையில் இருந்து வெளியே வர முடியும்.





    ×