என் மலர்
பொது மருத்துவம்

கொய்யாப்பழத்தில் உள்ள 5 நன்மைகள்
- கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
- செரிமானம் சிக்கலின்றி சீராக நடைபெறுவதற்கு உதவும்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடெண்டுகள் என பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். குறைந்த கலோரிகளை கொண்ட பழமாக இருப்பதால் இதனை தாராளமாக சாப்பிடலாம். தினமும் கொய்யாப்பழம் உண்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் உங்கள் கவனத்திற்கு...
1. செரிமானம்:
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது செரிமானம் சிக்கலின்றி சீராக நடைபெறுவதற்கு உதவும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளை குறைக்கும் தன்மையும் கொண்டது.
வயிற்றுப்போக்கு சமயத்தில் கொய்யா இலை சாறு பருகுவதன் மூலம் நிவாரணம் பெறலாம். குடலில் எரிச்சல் போன்ற செரிமான பிரச்சினை கொண்டவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
2.வலி நிவாரணம்:
கொய்யா இலை சாற்றில் ஸ்பாஸ்மோலிடிக் பண்புகள் உள்ளன. இவை கருப்பையின் மென்மையான தசைகளில் ஏற்படும் பிடிப்பு, வலியை போக்கும் தன்மை கொண்டவை. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பிடிப்புகளுக்கு நிவாரணமாக அமையும். அதனால் பெண்கள் மாதவிடாய் சமயங்களில் கொய்யா இலை சாறு பருகுவது நல்லது.
3. நோய்எதிர்ப்பு சக்தி:
கொய்யாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஜலதோஷத்தை குறைக்கவும் உதவும். உடலில் பாக்டீரியாவை எதிர்த்து போராடி செல்கள் சேதம் அடைவதை தடுக்கும்.
புற்றுநோய், இதயநோய், கீல்வாதம் போன்ற கடுமையான நோய்கள் நெருங்க விடாமல் காக்கும். பழுத்த கொய்யாப்பழத்தில்தான் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பழுத்த கொய்யாப்பழம் சாப்பிடுவது சிறந்தது.
4. இதய ஆரோக்கியம்:
கொய்யா இலைகளில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பாலி சாக்கரைடுகள் உள்ளன. அவை ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுபவை. அதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். கொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது.
5. புற்றுநோய்:
கொய்யாப்பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. புற்றுநோய்க்கு வித்திடும் செல் வளர்ச்சியை தடுக்க உதவும். மேலும் கொய்யப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் அதிகமாக இருப்பதால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கொய்யாவில் இருக்கும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மூலநோய் அபாயத்தை குறைக்க உதவும் என்று அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.






