என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    வெளியில் விளையாடக் கூடாது, மண்ணில் கால்படக் கூடாது என குழந்தைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள்தான், அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’ என்ற பிரச்சினை உண்டாக காரணமாகிறார்கள்.
    வெளியில் விளையாடக் கூடாது, மண்ணில் கால்படக் கூடாது என குழந்தைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள்தான், அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’ என்ற பிரச்சினை உண்டாக காரணமாகிறார்கள்.

    சுத்தமும் சுகாதாரமும் அவசியம். ஆனால், அதீத சுத்த உணர்வு தேவையற்றது. குறிப்பாக, வெளியில் விளையாடக் கூடாது, மண்ணில் கால்படக் கூடாது என குழந்தைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள்தான், அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’ என்ற பிரச்சினை உண்டாக காரணமாகிறார்கள். பிறந்தது முதல் ஒரு வயது வரை குழந்தைகளை கவனத்துடன் சுகாதாரம் பேணி வளர்க்க வேண்டும்.

    1 முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ‘குப்பையை தொடாதே, மழையில் நனையாதே, தரையில் விழுந்த உணவை சாப்பிடாதே’ என அவர்களின் புரிந்துகொள்ளும் தன்மைக்கேற்ற விஷயங்களை சொல்லிக்கொடுத்து வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக விளையாட அனுமதிக்கலாம். 3 வயதுக்குப் பிறகு குழந்தைகள் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவேண்டிய காலகட்டம். அப்போது, ‘விளையாட வெளியே போகக் கூடாது’, ‘மற்ற குழந்தைகளை தொட்டு விளையாடக் கூடாது’, ‘செடி, மரம் பக்கம் செல்லக் கூடாது’ என கட்டுப்பாடுகளை அடுக்கக் கூடாது.

    அதீத சுகாதார உணர்வின் ஓர் அங்கமாக சிலர் குழந்தைகளை அடிக்கடி கைகழுவ வைப்பது, குளிக்க வைப்பது என்றிருப்பார்கள். இதனால் அவர்கள் உடலில் இருக்கும் ப்ரோபயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பலவீனமடைந்துவிடும். தேவைக்கும் அதிகமான சுகாதார பேணலால் குழந்தைகளின் சுதந்திரமும் பல நேரங்களில் பாதிக்கப்படுவது உண்டு. அவர்களின் சுய நோய் எதிர்ப்புத் திறன் குறையும். இதுதான் ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்‘.

    இதன் விளைவாக எளிதில் வயிற்றுப்போக்கு, மூச்சு வாங்குதல், காய்ச்சல், சளி, தும்மல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதேசமயம் அவர்களின் உடலில் சுய நோய் எதிர்ப்புத் திறனும் குறையக்கூடாது. இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. அதற்கு, தினமும் காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்குவது, மலம், சிறுநீர் கழித்ததும் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவுவது, இருவேளை குளிப்பது, சாப்பிடும் முன் நன்றாகக் கை கழுவுவது, ஆசன வாயை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது, கை மற்றும் கால்களில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது, 20, 30 நாட்களுக்கு ஒருமுறை முடிவெட்டிவிடுவது, வாரத்துக்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வைப்பது, வாரம் ஒருமுறை நகங்களை வெட்டிவிடுவது, விரல்களை வாயில் வைக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட இந்த அடிப்படை சுகாதார பழக்கங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
    குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற அவர்களுடன் பெற்றோர் நேரத்தை செலவு செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மாணவர்களின் சிந்தனை

    பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அதுபோல் குழந்தைகள் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.

    ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.

    பெற்றோரின் பெரிய கடமை

    அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வுகள் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும்.

    அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

    தொடக்க கல்வி முக்கியம்


    பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கிவிடக்கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    அதற்கு புதிய சமூகசூழலில் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத்தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்த நாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

    நல்ல வார்த்தைகள்


    குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக்கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன.

    எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும். 
    குழந்தைக்கு தூளி, மெத்தை, பாய், நவீன தொட்டில் ஆகியவற்றில் எது சிறந்தது, எது குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    தன் தாயின் வயிற்றில் 9 மாதத்துக்கும் மேல் இருந்த குழந்தை, பிறந்த பின் படுக்கையிலோ தாயின் மடியிலோ தூளியிலோ சரியாக தூங்குமா? தன் படுக்கை நிலையைக் குழந்தை எப்படி பழகி கொள்ளும்? குழந்தைக்கு தூளி, மெத்தை, பாய், நவீன தொட்டில் ஆகியவற்றில் எது சிறந்தது. எது குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    பொதுவாக, குழந்தை தன் தாயின் வயிற்றை விட்டு வெளியே வந்ததும், தன் படுக்கை நிலையை மாற்றிக் கொள்ளவும் பழகிக்கொள்ளவும் சிரமப்படும். நம் முதுகு எலும்புகள் லேசான வளைவுத்தன்மையுடன் இருக்கும். தாயின் வயிற்றில் பனிக்குட நீரில் இருந்த குழந்தை, பந்து போல சுருண்டிக்கொண்டு 9 மாதங்கள் இருந்து பழகி இருக்கும். திடீரென்று தன் படுக்கை நிலை மாறவே குழந்தைக்கு புதிதாகவும் இயல்பற்றதாகவும் இருக்கும். பிறந்த குழந்தைகளை சமதளமான தொட்டிலில் படுக்க வைக்கும் போது, குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    நமது பாரம்பர்ய தொட்டில் (தூளி) தான் குழந்தைக்கு ஏற்றது. ஏன் என்றால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இருக்கும் நிலையில் நம் பாரம்பர்ய தொட்டிலான தூளியே அதைக் கொடுக்கும். கட்டில் போன்ற சமதளமான தொட்டில் குழந்தைக்கு அவ்வளவாகப் பொருந்தாது. நம் பாரம்பர்ய தொட்டில் முறையான தூளியில் குழந்தையை போட்டால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். தூளியில் போட்டு வளர வைக்க கூடிய குழந்தைகளுக்கு முதுகில் வலி குறைவாக காணப்படும்.

    தொட்டிலில் குழந்தை

    தூளி, படுக்கும் குழந்தைகளுக்கு தாயின் மார்ப்போடு ஒட்டி இருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஒருவித கதகதப்பான உணர்வு அவர்களுக்கு கிடைக்கும். குழந்தையின் முதுகு எலும்பு வளைவுகள், சரியாகத் தூளியில் பதிவதால் குழந்தைக்கு சௌகரியமாக இருக்கும். தூளியில் படுத்திருந்தால் நெருக்கமான ஒரு உணர்வு குழந்தைக்கு கிடைக்க, குழந்தை நன்கு தூங்கும்.

    தூளி முன்னும் பின்னும் ஆடுவதால் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும். குழந்தை தூளியில் சிறுநீர் கழித்துவிட்டால், தூளியிலிருந்து சிறுநீர் வடிந்து, தரைக்கு வந்துவிடுவதால் குழந்தையின் உடலில் ஈரம் தங்காமல் தடுக்கப்படுகிறது. புரண்டாலும் குழந்தை கீழே விழ வாய்ப்பில்லை. குழந்தைக்கு தூளி பெஸ்ட். குழந்தையை தூளியில் படுப்பதால் காலும் தலையும் சற்று உயர்ந்தும் வயிறும் முதுகும் பள்ளமான இடத்தில் இருப்பதால் குழந்தை உண்ட உணவை வாந்தி எடுக்காமல், குழந்தையால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. தாயோ, தூளியை ஆட்டுபவரோ தூளியை ஆட்ட குழந்தையால் தன் நேர் கண்ணால் பார்க்க முடியும். இதனால் மாறு கண் பிரச்னை வராமல் தடுக்கப்படுகிறது.

    தூளியில் தூங்கும் குழந்தைக்கு மன அமைதி கிடைக்கும். நவீன தொட்டில் முறை, மெத்தையைவிட தூளியே குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும். இதனுடன் பாதுகாப்பானதும்கூட. 
    குழந்தைகள் பள்ளி செல்லும் இளம் பருவத்தில் உணவு பாதுகாப்பில் அக்கறை செலுத்தினால் எதிர்காலத்தில் சிறந்த ஆரோக்கியமானவர்களாக வாழ்வீர்கள். உணவு பாதுகாப்பு பற்றிய சில வழிகளை தெரிந்து கொள்வோமா...
    குட்டீஸ், சாப்பிடும் முன்பு கைகழுவ வேண்டும் என்று அம்மா சொல்லியிருக்கிறார்களா? கழிவறையை பயன்படுத்தினாலும் கைகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுத்தந்திருக்கிறார்களா? நிஜம்தான், நாம் சுத்தமாக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஏராளமான நோய்கள், கைகள் மற்றும் உணவுகள் மூலமாக நம் உடலில் தொற்றுகின்றன. உண்ணும் உணவை பாதுகாப்பாக கையாளுவது நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் சிறந்த வழியாகும். பள்ளி செல்லும் இளம் பருவத்தில் உணவு பாதுகாப்பில் அக்கறை செலுத்தினால் எதிர்காலத்தில் சிறந்த ஆரோக்கியமானவர்களாக வாழ்வீர்கள். உணவு பாதுகாப்பு பற்றிய சில வழிகளை தெரிந்து கொள்வோமா...

    * சமைத்த உணவில் கிருமிகள் தொற்றும் வாய்ப்பு கைகளில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே கழிவறை சென்று திரும்பியதும் கை கழுவுவது, சாப்பிடும் முன்பு கை கழுவுவது போன்ற சுகாதார பழக்க வழக்கங்கள் மூலம் உணவுடன் கலந்து கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்கலாம். சாதாரண நேரத்தில் உடலில் சொறிவது, மூக்கு, காதுகளில் விரல்களால் குடைவது, அசுத்தமான இடங்களில் கைகளால் விளையாடமல் இருப்பது சுத்தத்திற்கான சிறந்த வழியாகும்.

    * இந்த பழக்க வழக்கத்தால் தொற்றும் கிருமிகளை தவிர்க்கவே கைகளை நன்கு கழுவிய பின்பு உணவருந்த பெற்றோரும், பெரியோரும் சொல்கிறார்கள். நீங்கள் பள்ளி சென்றாலும், வேறு எங்கு சென்றாலும் தவறாமல் இந்த நல்ல பழக்கங்களை பின் பற்ற வேண்டும். கைகளை கழுவும் “குழாய்” உயரமாக இருந்தால், உங்களுக்கு கைகழுவ தனியே தண்ணீர் வைக்கச் சொல்லுங்கள் அல்லது குழாய் உயரத்திற்கேற்ற ஒரு இருக்கையை அதன் அருகே போட்டு வைத்துக் கொண்டு கைகழுவி பழகுங்கள்.

    * கைகழுவ குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். 20 விநாடிகளுக்கு குறையாமல் கை கழுவுவது அவசியமாகும். “அம்மா இங்கே வா...வா” அல்லது “ஜானி ஜானி எஸ் பாப்பா” போன்ற ஏதாவது ஒரு பாடலை பாடிக்கொண்டு சுமார் 20 விநாடிகளுக்கு குறையாத நேரத்தை கைழுவ பயன்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான சோப்பை கைகழுவ பயன் படுத்தலாம்.

    * குளிர்ந்த இடத்தில் உணவுப் பொருளை பராமரிப்பது எளிதில் கிருமிகள் தொற்றுவதையும், உணவுகள் கெட்டுப்போவதையும் தடுக்கும். குளிர்வூட்டி “லஞ்ச் பாக்ஸ்”கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதை பயன்படுத்த முடியாதவர்கள் உலோக பாத்திரங்களை பயன்படுத்தலாம். அதுவும் கிருமித் தொற்றை தடுக்கும். முடிந்தவரை பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். அதிலும் சூடான உணவுகளை பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்க வேண்டாம்.

    * உணவுப்பொருட்கள் சூடாகவே இருக்க வேண்டுமென்றால் அதற்காக வெப்பத்தை வெளியிடாத உலோக பாத்திரங்களை பயன்படுத்தலாம். தெர்மாகோல் மூடி பராமரித்தாலும் உணவுகள் சூடு குறையாமல் இருக்கும்.

    கூட்டாக சாப்பிடும்போது சுகாதாரமான பழக்கங்களை பின்பற்ற வேண்டும்

    * குழந்தைகளிடையே எளிதில் நோய்பரவ நொறுக்குத் தீனிகளும் ஒரு காரணமாகும். நீங்கள் தின்பண்டங்களை கொடுத்தால் போட்டிபோட்டு சாப்பிடுவீர்கள்தானே. ஆனால் அனைவரது கைகளும் ஒரே மாதிரியாக சுத்தம் பராமரிக்கப்பட்டிருக்காது என்பதால் நீங்கள் நண்பர்கள் அல்லது சகோதர சகோதரிகளுடன் தின்பண்டங்களை சேர்ந்து சாப்பிடுவதாக இருந்தால் அவற்றை பகிர்ந்து தனித்தனியே சாப்பிடுங்கள். அல்லது கிருமித்தொற்றுகள் ஏற்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    * குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழு வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகலாம். எனவே உணவு சமைக்கும் இடம் மற்றும் “லஞ்ச் பாக்ஸ்” மற்றும் பைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இது பொறுப்புள்ள பெற்றோரின் கடமையாகும். குட்டீஸ் நீங்கள் குழம்புகள், உணவுப் பொருட்களை சிந்துவதை தவிர்த்தால் கிருமித் தொற்று ஏற்படுவதையும், நோய் பரவுவதையும் தடுக்கலாம்.

    * அதுபோலவே திறந்த வெளியில் வைத்து விற்கும் பண்டங்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டும். வெளியில் கிடைக்கும் அவித்த முட்டைகள், பாதுகாப்பானதல்ல. அதை வாங்கினால் குளிர்பதன பெட்டியில் 2 மணி நேரம் வைத்திருந்து பின்னர் சாப்பிடலாம்.

    * பெரிய உணவுத் துண்டுகள், கடினமான உணவுப் பொருட்களை துண்டாக்கி சாப்பிடுங்கள். நன்கு மென்று சாப்பிடுங்கள். வேர்க்கடலை, மக்காச்சோளம், மிட்டாய்கள், தக்காளி, உருளை போன்றவை பெரிய துண்டுகளாக இருந்தால் கவனமாக சாப்பிட வேண்டும்.

    * சாப்பிடும்போது அமர்ந்து நிதானமாக சாப்பிட வேண்டும். நடக்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். படுத்துக்கொண்டும் சாப்பிடக் கூடாது.

    * ஒமேகா-3 கொழுப்புச்சத்துள்ள கடல்மீன் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சுகாதாரமான பழக்க வழக்கங்களும், உணவுப் பாதுகாப்பு முறைகளும் உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கட்டும்.
    குழந்தைகளுக்கு போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.

    தடுப்பூசி போட போகும் போது எளிதில் கழற்றகூடிய லேசான ஆடைகளைக் குழந்தைக்கு அணிவிப்பது நல்லது. அரை கை சட்டை உள்ள ஆடைகள் நல்லது. 12 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தொடையில் ஊசி போடுவது நல்லது. 1 வயது + குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பின்படி இடுப்பிலோ கையிலோ ஊசி போடலாம். ஊசி போடும்போது குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள். குழந்தையை கட்டி அணைப்பது, பாடுவது, இதமாகப் பேசுவது போன்றவற்றை செய்யலாம். குழந்தை பாதுகாப்பாக உணரும்படி அரவணைத்துக் கொள்ளுங்கள் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும்போது உங்களது மடியில் வைத்திருங்கள்.

    மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும்.

    தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல். ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம். எம்.எம்.ஆர் அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்றவை ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.

    குழந்தை அமைதியாக தூங்குகிறதா எனக் கவனியுங்கள். அக்குள் பகுதியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தர்மானீட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.

    அலட்சியப்படுத்த கூடாத அறிகுறிகள்...


    தடுப்பூசி போட்ட பிறகு, இந்தப் பிரச்னைகள் வருவது மிகவும் அரிது. ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல் அதிகமான காய்ச்சல் (39°C/102.2°F அல்லது இதைவிட அதிகம்) பலவீனமாகுதல் தூக்கம் இல்லாமல் இருப்பது தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது சாப்பிடகூட எழுந்திருக்காத குழந்தை 3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல் உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல் வயிறு வீக்கம் மலத்தில் ரத்தம் வருதல் அடிக்கடி வாந்தி எடுத்தல் 48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல்.
    குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.
    குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட க்ரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.

    இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை(Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

    அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.

    அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.

    குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
    மாணவர்களை மேம்படுத்துவதன் மூலம் பள்ளியும் மேம்படும். என்றாலும் மாணவர்களை மேம்படுத்த, பள்ளியில் அனைத்து வகையான கட்டமைப்புகளும், மேம்பட்ட சூழலும் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
    பள்ளிக்கூடம், பல்வேறு இடங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் இடமாக உள்ளது. இதனால் அவர்கள் ஒவ்வொருவரின் பழக்கங்களும் வேறுபட்டதாக இருக்கிறது. ஆனாலும் மாணவர்கள் ஒன்று கூடி படித்து வருகின்றனர். இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது.

    மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களையும் வழங்கி வருகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் இன்னும் போதிய வசதிகளை செய்ய வேண்டிய நிலையே உள்ளது. எனவே தான் அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்விச்சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. அதில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று மேஜை, நாற்காலி, மின்விசிறி போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

    இது போல் அரசு பள்ளியில் படித்து நல்ல நிலையில் இருக்கும் உதவும் மனம் படைத்தவர்களும், தாங்கள் படித்த பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீர், கழிப்பிட வசதி முழு அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏழை, எளிய அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்படு கின்றனர். அவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க ஆசிரியர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், அவர்கள் உயர்கல்வி பெறவும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

    பாடங்கள் நடத்துவது தவிர சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, வன வளம், சேமிப்பு, சிக்கனம், பேரிடர் மேலாண்மை, அரசு அலுவலக நடைமுறை, விண்ணப்பம் நிரப்புதல் மற்றும் நாட்டின் ஜனநாயக முறைகளும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக உருவாகும் நிலை ஏற்படும்.

    அரசு பள்ளிகளில் மைதானம், ஆய்வகம், நூலகம் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும். அது மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவோடு இருக்க உதவும். பள்ளிக்கூடத்தின் பெருமை என்பது அங்கிருக்கும் வசதிகளை மட்டும் கொண்டது இல்லை. மாறாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் செய்யும் சாதனையில் தான் அடங்கி இருக்கிறது. எனவே பள்ளிக்கு பெருமை சேர்க்க கூடிய வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும். அது தான் அரசு பள்ளி குறித்த பொதுமக்களின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்டது.

    பள்ளியின் கருவூலமாக இருக்க கூடியவர்கள் மாணவ -மாணவிகள் தான். அவர்களின் திறமை வளர்க்கப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும். தேர்வு முறை சார்ந்து மட்டுமின்றி சமூகசூழல் சார்ந்த சிந்தனையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

    நம்மை சுற்றி உள்ள குறைகளை பற்றி கவலை கொள்ளக்கூடாது. மாறாக நம்மிடம் இருக்கும் நிறைகளை வைத்து எப்படி முன்னேறுவது என்பதை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நேர்மறை சிந்தனை மூலமே வெற்றியை ஈட்ட முடியும். எல்லா இடங்களில் நிறை, குறைகள் கலந்து தான் இருக்கின்றன. அதில் நம்முடைய தேர்வு எது என்பதில் தான் நம்முடைய வெற்றியும் அடங்கி இருக்கிறது. எனவே மாணவர்களை மேம்படுத்துவதன் மூலம் பள்ளியும் மேம்படும். என்றாலும் மாணவர்களை மேம்படுத்த, பள்ளியில் அனைத்து வகையான கட்டமைப்புகளும், மேம்பட்ட சூழலும் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

    மணிபாரதி, பி.எஸ்.சி.முதலாம் ஆண்டு, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கோவை.
    குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்து தங்களது குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.
    குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்து தங்களது குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கிறார்கள். கல்வி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் படித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதே போல தமிழகத்தை பொறுத்தவரை உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    இதையொட்டி கல்வி கற்பிக்கும் நிறுவனங்களும் அதிகமாகி வருகிறது. ஆனால் கல்வி கற்றவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு என்பது போதுமானதாக இல்லை. இதனால் படித்த மாணவ-மாணவிகள் வேலைக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது. படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்காத நிலை என்பது அதிகரித்து விட்டது.

    ஏதோ ஒரு துறையில் படித்து விட்டு, மற்றொரு துறையில் வேலை பார்க்கும் நிலை உள்ளது. இதனால் படித்தவர்களின் திறன் பயன்படாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத நிலையில் படிப்பு என்பது வெறும் சான்றிதழ் என்ற அளவில் மதிப்பிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். எனவே ஒவ்வொரு மாணவரும் ஈடுபட விரும்பும் தொழில்களை பாடத்திட்டங்களாக வடிவமைக்க வேண்டும்.

    வகுப்பறை, மேஜை, நாற்காலி என்ற அளவில் இருக்கும் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட வேண்டும். அங்கு ஒவ்வொரு தொழில் சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அந்த தொழில் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் குறைந்தது ஒரு ஆண்டாவது செயல்முறையாக செய்ய வேண்டும். அவர் எந்த தொழில் சார்ந்து பயிற்சி பெறுகிறாரோ அதற்குரிய சான்றிதழை வழங்க வேண்டும். மேலும் படிக்கிற காலத்தில் மாணவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் தைரியமாக தொழில்களில் ஈடுபட முடியும். இல்லையென்றால் வேலைக்கு செல்வதற்காக கருவியாகத்தான் படிப்பு சான்றிதழ் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

    மேலும் தொழிலாளர் களை உற்பத்தி செய்வதாக தான் கல்வி பாடத்திட்டம் இருக்கும். தொழில் முனைவோர்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அரசின் கொள்கைகள், நிதி உதவி, மானியம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    அதிக வேலை வாய்ப்பும், தினசரி தேவைகளும் உள்ளதுமான விவசாய தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது தான் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதை செய்வதன் மூலம் தான் நகரங்களை நோக்கி மக்கள் குவிவதை தடுக்க முடியும். தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஊருக்கு, ஊர் வேறுபடும். அதை கண்டறிந்து புதிய, புதிய தொழில்கள் தொடங்க படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். உலகமயமாகிய பொருளாதார சூழலில் தொழில் நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

    அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் போட்டி இருந்தால் தான் வெற்றிக்கான வழி கண்டறிந்து அடைய முடியும். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள கல்வியின் பாடத் திட்டமும், தொழில்துறையின் கொள்கைகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை சாத்தியமாக்கி விட்டால் படித்த மாணவர்கள் வேலை கேட்பவர் என்ற நிலையில் இருந்து வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள். இதன் மூலம் வேலை இல்லா திண்டாட்டம் நீங்கி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வறுமை ஒழிய வாய்ப்பு ஏற்படும்.
    இயற்கை முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தூய தேங்காய் எண்ணெய் கொண்டு, குழந்தையின் கால்கள் தொடங்கி தலை வரை மசாஜ் செய்ய வேண்டும்.
    பிறந்த குழந்தைகள் சத்தான உணவு உட்கொண்டு ஆரோக்கியமாக வளர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்களுக்கு மசாஜ் செய்வது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால், சிறந்த இரத்த ஓட்டம், அவர்களின் தொடு உணர்ச்சிகள், அவர்களின் உடல் நலன், உடலின் ஈரப்பதம் என அனைத்தும் மேம்படுகின்றன. மேலும் குழந்தைகளின் உடலில் காயம் பட்டிருந்து, அது கவனத்திற்கு வராது போயிருந்தால், அப்படிப்பட்ட காயங்களை, தடுப்புகளை மசாஜ் செய்யும் போது கண்டறியலாம்.

    இயற்கை முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தூய தேங்காய் எண்ணெய் கொண்டு, குழந்தையின் கால்கள் தொடங்கி தலை வரை மசாஜ் செய்ய வேண்டும்; காலில் இருந்து தொடங்குவதால், குழந்தையின் உடலில் உள்ள சூடு எளிதில் வெளியேறும். குழந்தையை குளிப்பாட்டும் போதும் தண்ணீரை காலில் இருந்தே ஊற்றத் தொடங்குவர்; அதுவும் இந்த சூடு வெளியேறும் காரணத்திற்காகவே!

    குழந்தையின் கால்களில், மிருதுவாக உருவிவிட்டு மசாஜ் செய்யவும். தொடையிலிருந்து தொடங்கி, கீழ்வரை மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் உள்ளங்கால்களில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.

    ஒவ்வொரு கால் விரலையும், நன்றாக எண்ணெய் தடவி, சொடக்கு போடுவது போல், மெதுவாக இழுத்து விடவும்.

    குழந்தையின் கைகளில், மெதுவாக மேலிருந்து கீழாக உருவிவிட்டு மசாஜ் செய்யவும்.

    இரு கைகளின் மணிக்கட்டுகளிலும் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் கை விரல்கள் ஒவ்வொன்றிலும் எண்ணெய் தடவி, சொடக்கு போடுவது போல், மெதுவாக இழுத்து விடவும்.

    குழந்தையின் மார்புப் பகுதியில், உங்கள் உள்ளங்கைகளைக் கொண்டு, மெதுவாக மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் வயிற்று பகுதி முழுதும், நன்றாக எண்ணெய் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் முதுகு பரப்பு முழுவதும், நீவிவிடும் வகையில், மசாஜ் செய்யவும். முதுகெலும்பு தொடரிலும் நன்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் பின்புட்டப்பகுதியிலும் எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் முகம், அது பிறந்த புதிதில் நீங்கள் எப்படி மசாஜ் செய்துள்ளீரோ அதை பொருத்தே அமையும். ஆகையால், முகத்தில் கவனத்துடன் மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் தலையின் அமைப்பும் மசாஜினை பொருத்து மாறுபடும். அதனால், தலையில் மசாஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.

    மசாஜ் செய்வதால், குழந்தைகள் பலம் அடைவர்; அவர்களின் எலும்பு வளர்ச்சி மேம்பாடு அடையும். இது அவர்களுக்கு ஓய்வு உணர்வையும் அளிக்கும். மசாஜினை குழந்தைகள் மகிழும் வகையில் செய்துவிடவும்..!
    குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை எந்த உணவுகளை கொடுக்க வேண்டும், எந்த உணவுகளை கொடுக்கக்கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைக்கு உணவூட்ட விரும்புவோர் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை மாட்டுப்பால் கொடுக்க கூடாது. அதன் பிறகு வேண்டுமானால் உணவில் மாட்டுப்பாலை சேர்த்து கொள்ளலாம். எருமை பால் வேண்டவே வேண்டாம். முட்டை சேர்த்து கொள்ளலாம். கோதுமை பண்டங்களை தரலாம்.

    ஒன்பது முதல் 12 மாத குழந்தைக்கு பட்டாணி, பீன்ஸ், பருப்பு மற்றும் முட்டை ஆகியவற்றை நன்றாக வேகவைத்து மசித்து கொடுக்கலாம். குழந்தைக்கான உணவை மூன்று வேளையும் தரலாம்.

    குழந்தைக்கு 2 வயது ஆகும்வரை எந்தவிதமான கொட்டைகளையம் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. முழு தானியங்களை ஐந்து வயதுவரை கொடுக்கக்கூடாது. தேனை ஒரு ஆண்டு நிறையும் முன்பு தர கூடாது. வேகவைத்த முட்டை மற்றும் கோதுமை பொருட்களை ஆறு மாதம் வரை தர கூடாது. பால், சிறு தானியங்கள் போன்றவற்றை குழந்தைக்கு ஐந்து மாதம் முடியும் முன்பு தர கூடாது. குழந்தைக்கு ஆஸ்துமா, எக்சிமா போன்றவை இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரை மீன், கோதுமை, மாட்டுப்பால் போன்றவற்றை தராமல் தவிர்க்க வேண்டும்.

    குழந்தைக்கு உப்பு போட்டு தரவேண்டும், சர்க்கரைபோட்டு உணவூட்ட வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை கேட்காதீர்கள். குழந்தைக்கு சத்தான உணவுதான் தேவையே தவிர ருசியான உணவு தேவையில்லை.

    குழந்தை திட உணவை சில சமயம் எடுக்காது. பொதுவாக பசியாக இருந்தால் திட உணவு அதை உடனே திருப்தி படுத்தாது. இதனால் பாலைத்தான் விரும்பும். சில உணவை விரும்பாவிட்டாலும், சரியான முறையில் குழந்தைக்கு உணவை தராவிட்டாலும், சரியான வெப்பத்தில் உணவை தராவிட்டாலும் குழந்தை திட உணவை சாப்பிட மறுக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் உணவை சரியாக முறையாக செய்திருக்கிறீர்களா என்பதை சரிபார்த்து கொண்டு குழந்தைக்கு பாலுட்ட வேண்டும்.

    பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைக்கு எப்போது உணவை ஆரம்பிக்க வேண்டும் என்பதை தாயார் தெரிந்து கொள்வது நல்லது.

    பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாது. அலர்ஜி போன்ற தொல்லைகள் வரலாம். உணவு நஞ்சாவது , பேதியாவது போன்றவை ஏற்படும். ஆகவே, உணவு கொடுக்கும் முன்பு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    குழந்தை நான்கு மாதமாக இருக்கும்போது தாய்ப்பால் , பார்முலா பால் அல்லது கதகதப்பான நீரில் தானிய உணவை நன்றாக வேக வைத்து கொடுக்கலாம் . வேகவைத்த ஆப்பிள் மற்றும் வேக வைக்காமல் வாழை மற்றும் பப்பாளி ஆகியவை கொடுக்கலாம்.

    காய்கறிகளில் காரட், காலிப்ளவர், உருளை , சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை வேக வைத்து நன்றாக மசித்து சிறிது சிறிதாக கொடுக்கலாம் . இதை சூப் மாதிரி திரவ வடிவில் கொடுப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் இந்த உணவை தர வேண்டும். முட்டை தர கூடாது.

    ஐந்து மாத குழந்தைக்கு தினமும் இருவேளை உணவு தரலாம். காலையில் குழைந்த சாதம், மாலையில் காய்கறிகள் அல்லது பழம் ஆகியவற்றை தரலாம் . திராட்சையை உரித்து தரலாம், மாம்பழம் தரலாம். முட்டை அல்லது தானியங்கள் தர கூடாது.

    ஆறு மாத குழந்தைக்கு வித்தியாசமாக உணவு தரலாம் . இறைச்சியை வேகவைத்து நன்றாக மசித்து தரலாம். உப்பு, பூண்டு, வாசனை பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . இந்த குழந்தைகளுக்கு உணவு கொஞ்சம் திடமாக இருக்கலாம். தினமும் இருவேளை உணவு தருவது நல்லது . அதன் பிறகு குழந்தை தவழ ஆரம்பிக்கும்போது விருப்பம் போல உணவூட்டலாம்.
    நற்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக உங்களின் குழந்தைக்கு கற்றுத் தரலாம்.
    தாங்கள், தங்களின் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் பண்புகளை, முதலில் பெற்றோர்கள் பயிற்சிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தை பின்பற்ற ஆரம்பிக்கும். உதாரணமாக, எதையாவது கேட்கும்போது, "ப்ளீஸ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும், எதையாவது பெறும்போது, "தாங்க்யூ" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும் உங்கள் குழந்தைக்கு சொல்லித்தர விரும்பினால், அந்தப் பண்புகளை முதலில் நீங்கள் தவறாமல் பின்பற்ற தொடங்க வேண்டும்.

    நல்ல பண்புக்கூறுகள் என்பது, நடத்தைமுறை, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் ஆகிவற்றோடு தொடர்புடையது. இப்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக உங்களின் குழந்தைக்கு கற்றுத் தரலாம்.

    ஒரு குழந்தை தனது நடத்தையில் சற்று வழுக்கினால், அதை நாம் கடுமையாக கையாளக் கூடாது. நம் குழந்தை ஒரு பொது இடத்தில் கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ நடந்துகொண்டு, அதன்மூலம் மற்றவர்கள் நம்மை கவனிக்கும் சூழல் ஏற்பட்டால், அந்த நேரத்தில், குழந்தை எதற்காக அவ்வாறு நடந்துகொண்டது என்பதை உணர்ந்து, குழந்தையை ஆறுதல் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமே தவிர, மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரி நினைத்து விடுவார்களே என்று எண்ணி, குழந்தையை தண்டிக்கக்கூடாது. குழந்தை ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டால், அதை நல்ல முறையில் பாராட்ட வேண்டும்.
    ×