என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    உங்கள் உடல்நலன் குறித்து நெருக்கமானவர்களிடம் பகிருங்கள். எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசவுகரியம் நேர்ந்தால் தொய்வின்றி சிகிச்சையை தொடர்வதற்கு அது உதவும்.
    20 வயதில் :

    * சரும பாரமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கும் வயது இது.
    * அழகு சாதன பொருட்கள் உடலுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    * உடலில் சன்ஸ்கிரீன் பூசுவது அவசியமானது. அது சரும அழகை காப்பதோடு தோல் புற்றுநோயில் இருந்து தற்காத்துகொள்ளவும் உதவும்.

    30 வயதில் :

    * எலும்பு ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டிய வயது இது.
    * கால்சியம் அதிக அளவு உட்கொள்வதும், உடற்பயிற்சி மீது கவனம் செலுத்துவதும் அவசியமானது.
    * 30 வயது வரைக்கும் தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பிறகு வலுவை இழக்க தொடங்கி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    * எலும்புகளை போலவே மூளை செல்களில் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

    40 வயதில் :

    உணவுபழக்கம்

    * சர்க்கரையை தவிர்க்க தொடங்க வேண்டியகாலகட்டம் இது.
    * காபி, ஜூஸ், பலகாரங்களில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்து கொள்ளுங்கள்.
    * ஆரஞ்சு ஜூஸில் அறவே சர்க்கரையை தவிர்த்து விடுங்கள்.
    * மூன்று வேளை உணவிலும் கூடுமானவரை பச்சை காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்.
    * உடல் எடையை குறைப்பதற்கு பட்டினியாக இருக்க வேண்டியதில்லை.

    உடற்பயிற்சி

    * 40 வயதில் வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியமானது.
    * உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    * நடைப்பயிற்சி, ஜூம்பா, ஜாக்கிங் இவற்றுள் ஏதாவதொரு பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

    50 வயதில் :

    * உடலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற தொடங்கும் காலகட்டம் இது. நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது.
    * உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
    * 30, 40 வயதுகளில் பின்பற்றிய நல்ல பழக்கவழக்கங்கள் தான் உங்களின் தகுதியை உயர்த்தும். அவற்றை அப்படியே தொடருங்கள்
    * உங்களுக்கு நீங்களே ஆலோசகராக மாறிவிடுங்கள். அதே வேளையில் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் தொழில் ரீதியாக ஆலோசனையோ, உதவியோ கேட்பதற்கு தயங்காதீர்கள்.
    * இந்த வயதில் தனிமைக்கு இடம் கொடுக்காதீர்கள். நான் தனிமையில் இல்லை என்பதை உறுதிபடுத்திகொண்டே இருங்கள். நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பில் இருங்கள்.

    60 வயதில் :

    * உங்கள் வாழ்க்கையின் அடுத்த 20 ஆண்டுகள் அமைய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு செயல்வடிவம் கொடுக்க தயாராகுங்கள்.
    * உங்கள் செயல்பாடுகள் மெதுவாக இருந்தாலும் அதில் சுறுசுறுப்புக்கு குறை இருக்கக்கூடாது. அத்தகைய வாழ்க்கை முறைக்கு திரும்புங்கள். அதுவே உடலையும், மனதையும் புத்துணர்வுடன் செயல் பட வைக்கும். ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படியுங்கள்.

    70 வயதில் :

    * நீங்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய வயது இது.
    * இந்த வயதில் எலும்புகள் பலவீனமடைந்த நிலையில் இருக்கும். லேசாக ஏற்படும் காயம் கூட எலும்பு முறிவு பிரச்சனைக்கு வழிவகுத்து விடும். அதனால் நிதானமாக செயல் பட வேண்டும்.

    பொதுவான டிப்ஸ் :

    * வருடம் ஒருமுறையாவது உடல் பரிசோதனை மேற்கொள்வது சிறப்பானது.
    * உங்கள் உடல்நலன் குறித்து நெருக்கமானவர்களிடம் பகிருங்கள். எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசவுகரியம் நேர்ந்தால் தொய்வின்றி சிகிச்சையை தொடர்வதற்கு அது உதவும்.
    காய்கறிகள், பழம், தயிர் சேர்த்து செய்யும் இந்த சாலட் காலையில் சாப்பிட மிகவும் நல்லது. இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீன்ஸ் - 11
    கேரட் - ஒன்று பெரியது
    உருளைக்கிழங்கு - ஒன்று
    ஆப்பிள் - ஒன்று
    தயிர் - ஒரு கப்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப     

    செய்முறை:

    கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும்.

    தயிரை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும்.

    பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி வேகவைத்து நன்றாக ஆற வைத்து கொள்ளவும்.

    ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய ஆப்பிளை போட்டு அதனுடன் வடிகட்டிய தயிர், உப்பு, மிளகுத்தூள் கடுகு பேஸ்ட் (அ) பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் ஆறவைத்த காய்கறிகளையும் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான சாலட் ரெடி.

    குறிப்பு: பொதுவாக ரஷ்யன் சாலட்டில் மயோனைஸ் கலப்பது வழக்கம். அதைவிட தயிர் ஆரோக்கியமானது என்பதால் இங்கு தயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
    உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா? என்பதை பொருத்து இது அமையும்.
    திருமண நாளில் தலையில் அணிவது முதல் கால் பாதத்தில் அணிவது வரை எல்லாம் நேர்த்தியாக இருக்க வேண்டும். நீங்கள் ஆடை மற்றும் நகை அலங்காரம் செய்து கொள்வதில் கவனம் செலுத்தும்போது, உங்கள் கூந்தல் அலங்காரத்தை மேம்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
    உங்கள் திருமண நாளுக்கான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வது என்று வரும் போது, உங்கள் மண நாள் தோற்றத்தை பாதிக்காத வகையில் சரியான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வதற்கு வழி காட்டுகிறோம். உங்கள் கூந்தலை டை செய்து கொள்வதற்கு முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களை பார்க்கலாம்...

    · உங்கள் ஸ்கின்டோன்
    · உங்களுக்கான மணப்பெண் தோற்றம்
    · உங்கள் கூந்தலின் தன்மை

    ஒரு சில கூந்தல் வண்ணங்கள் கண்களை எடுப்பாக்கி, உங்கள் தோற்றத்தை மேலும் பொலிவாக்க கூடியவை என்றாலும், ஒரு சில வண்ணங்கள் அவற்றை பாதித்துவிடக்கூடும். இது நிச்சயம் நீங்கள் விரும்பக்கூடியதல்ல. சிவந்த அல்லது நல்ல நிறம் கொண்ட சருமம் எனில், பர்கண்டி அல்லது உட் அல்லது ஹனி ஹைலைட்ஸ் ஷேடை நாடலாம். மாநிறம் அல்லது கோதுமை நிறம் கொண்ட சருமம் எனில், அடர் சிவப்பு அல்லது கோல்டன் ஹைலைட்ஸ், டீப் பிரவுனை நீங்கள் நாடலாம்.

    உங்கள் ஆடைகளும், தோற்றமும் உங்கள் ஆளுமைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். ஏனெனில் உங்கள் கூந்தலின் வண்ணம் அதை பாதிக்கலாம். பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா? என்பதை பொருத்து இது அமையும். குளிர்ந்த ஷேட் கொண்ட நுட்பமான தோற்றம் நேர்த்தியான மணப்பெண் தோற்றத்திற்கு வலு சேர்க்கும். தேவதை போன்ற மணப்பெண் தோற்றம் எனில், காரமெல் பிரவுன் அல்லது ஹாஸ்லேநெட் ஷேட் பொருத்தமாக இருக்கும்.

    உங்கள் கூந்தல்... அலை போன்றதா? சுருளானதா? நேரானதா? என்பதும் முக்கியம். உங்கள் இயற்கையான கூந்தல் வண்ணத்தை விட சற்று மங்கலான ஓம்ப்ரே ஹைலைட்ஸ் அலை போன்ற மற்றும் சுருளான கூந்தலுக்கு பொருத்தமாக இருக்கு. நீளமான, நேரான தலைமுடி எனில், டீப் ரெட் அல்லது டீப் பிரவுன் அல்லது நீலம் போன்ற குளிர்ந்த ஷேடை நாடலாம். சிடுக்கான முடி எனில், ஹைலைட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை கூந்தலின் தன்மை மீது அதிக கவனத்தை குவிக்கும். அதற்கு மாறாக, டீப் டை அல்லது முழு ஹேர் கலரில் நுட்பமான ஷேடை நாடவும்.
    ‘லவ் லெட்டர்’ என்ற பெயரில் ஆயிரம் அப்ளிகேஷன்கள் உலவினாலும் இந்த அப்ளிகேஷன் கொஞ்சம் ஸ்பெஷல் என்பது, நீங்கள் காதல் கடிதம் தீட்ட ஆரம்பிக்கும்போதே புரியும்.
    காதல்... என்று சொன்னதுமே மனசு குஷியாகிவிடுகிற விஷயம்தான். காதல் கடிதம் எழுதிக் காதலிக்க ஆசைப்படும் இளசுகளுக்காகவே இருக்கிறது ‘பெஸ்ட் லவ் லெட்டர் ரைட்டர்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். பெயருக்குத்தான் ‘லவ் லெட்டர் ரைட்டர்’ அப்ளிகேஷனே தவிர, இதில் நாம் விரல் வலிக்க டைப் பண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய பெயரைப் பதிவுசெய்து, அதில் கேட்கும் சில விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும். நம்முடைய ரசனைக்குத் தகுந்த மாதிரி, ‘மானே தேனே’ மாடல்களிலோ, ‘மாலினி இத நான் உங்கிட்ட சொல்லியே ஆகணும்’ வகை வாக்கியங்களிலோ, ‘முத்தழகு, இப்போ நீ முழுசா எனக்குள்ள வந்துட்ட’ வகை எழுத்துகளுமாகவோ அலங்கரிக்கும்.

    பொறுமையாகப் படித்துப்பார்த்துப் பொருத்தினால் இனிக்க, மணக்க ஒரு காதல் கடிதம் தயாராகிவிடும். ஏனெனில், இந்த அப்ளிகேஷனில் 90 சதவிகிதம் நாம் டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தவிர, காதலிக்குப் பிடித்த நிறம், எமோஜி, பூக்கள், பிடித்த வாசகங்கள்... என அலங்கரிக்கலாம். இப்படியாக, ‘லவ் லெட்டர்’ என்ற பெயரில் ஆயிரம் அப்ளிகேஷன்கள் உலவினாலும் இந்த அப்ளிகேஷன் கொஞ்சம் ஸ்பெஷல் என்பது, நீங்கள் காதல் கடிதம் தீட்ட ஆரம்பிக்கும்போதே புரியும்.

    மடமடவென தட்டிக்கொண்டிருக்காமல், நறுக்சுறுக்கென ‘ஐ லவ் யூ’ சொல்ல ஆசைப்படுபவர்களுக்கு ‘அவசர லவ் லெட்டர்’களும் இதில் உருவாக்கிக்கொள்ளலாம். காதலை நேரில் சொல்லத் தயங்குபவர்கள், உருவாக்கிய கடிதத்தை பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கலாம்.

    ஒரு காதல் கடிதத்தை ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்பி, நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ளும் வழி இருந்தாலும், மாட்டிக்கொள்ளும் சாத்தியங்கள் டெக்னாலஜியில் அதிகம் என்பதால், இந்த விஷயத்தை மட்டும் கொஞ்சம் பொறுமையாகப் பரிசீலனை செய்து முடிவெடுத்துக்கொள்ளவும்.
    கொலஜென் என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம். 70 சதவீதம் சருமம், முடி, நகம் மற்றும் 100 சதவீதம் இணைப்பு தசைகளுக்கு இந்த கொலஜென் புரதமே முக்கியமானதாகின்றது.
    வயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம் ஆகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கொலஜென் என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம். 70 சதவீதம் சருமம், முடி, நகம் மற்றும் 100 சதவீதம் இணைப்பு தசைகளுக்கு இந்த கொலஜென் புரதமே முக்கியமானதாகின்றது. தலைமுடி முதல் ஒவ்வொரு அங்குல சருமத்திலும், மூட்டு அசைவிலும், உணவு பாதை சீராய் இருப்பதிலும் இப்புரதம் பெரும் பங்கு வகிக்கின்றது.

    வயது கூடும் பொழுது இந்த கொலஜென் உருவாக்கம் நம் உடலில் குறைகின்றது. வயது 25-ஐ கடக்க ஆரம்பிக்கும் பொழுது உடலில் கொலஜென் அளவு குறையத் தொடங்குகின்றது. இதன் காரணமே உடல், சருமம் இவை முதுமைத் தோற்றத்தினை காட்ட ஆரம்பிக்கின்றன. சத்தமிடும் மூட்டுகள், மெலிந்த முடி, உடையும் நகம், வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படத் தொடங்குகின்றன.

    * ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 1.2 சதவீதம் கொலஜென் குறைய ஆரம்பிக்கின்றது.
    * அநேகமாக அது 25 வயதிற்கு மேல் ஆரம்பிக்கின்றது.
    * இது 40-50 வயதுகளில் அதிகமாகின்றது.
    * பொதுவில் ஒரு பெண் 40 வயதில் தன் உடலில் 20 சதவீதம் கொலஜென் இழந்திருப்பாள்.
    * இது 50 வயதில் கூடுதலாகத் தெரியும்.
    * 80 வயதில் 75 சதவீதம் கொலஜென் குறைந்திருக்கும்.

    இதற்கு வயது கூடுவது மட்டுமே காரணம் இல்லை. முறையான உடல் உழைப்பின்மை, எடை அதிகம் போன்றவை கூட காரணம் ஆகின்றது.
    மேலும் கொலஜென் வெகு சீக்கிரம் உடலில் குறைவதற்கான கராணங்களாக

    * போதிய நேரம் தூக்கமின்மை,
    * அதிக சர்க்கரை உள்ள உணவு சாப்பிடுதல்,
    * அடிபடுதல்,
    * பலவீன மூட்டுகள்,
    * அதிக கொலஸ்டிரால்,
    * அதிகம் வெய்யிலில் இருத்தல்,
    * நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத உணவு,
    * நாள் முழுவதும் அமர்ந்தே இருப்பது,
    * உணவுப் பாதை பாதிப்பு,
    * வைட்டமின் சி, ஸிங்க குறைபாடு ஆகியவைகளும் ஆகும்.

    வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு, பூண்டு, வெங்காயம், மஞ்சள், கிரீன் டீ போன்றவை கொலஜென் பாதுகாப்பிற்கு உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு பகுதியே அவரது உடலின் ஆரோக்கியமான திசுக்களை அழிப்பதே இந்த நோயாகும். கடுமையான சுயபாதிப்பு உடன் இணைந்த திசு குறைபாடு ஆகும். இது உடலின் எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும். மூட்டு, சருமம், சிறுநீரகம், ரத்த அணுக்கள், இருதயம், மூளை என எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும்.

    15-45 வயதிற்குட்பட்டவரை அதிகமாய் இந்நோய் பாதிக்கின்றது. குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகின்றது. இந்நோய் தாக்கத்திற்கான காரணங்கள் இன்னமும் ஆய்வு நிலையில் தொடர்ந்து இருக்கின்றது. பரம்பரை, ஹார்மோன்கள், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவைகள் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த பாதிப்பினை அடையும் 10 பேரில் 9 பேர் பெண்களாக இருக்கின்றனர். பாதிப்புடைய பெண்கள் மாதவிடாய் முன்பு, கர்ப்பகாலம் ஆகிய நேரங்களில் இந்த பாதிப்பினை அதிகம் அடைகின்றனர்.
    ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. விளையாட்டிலும் ஆர்வம் குறைகிறது.
    ஊட்டச்சத்து குறைபாடுக்கான 8 காரணங்கள்

    1. குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்காதது.
    2. ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தர தவறியது.
    3. குழந்தையை சரியாக பராமரிக்காதது.
    4. நுண்ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகளால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை.
    5. கருவுற்றபோது தாய் ஊட்டச்சத்தான உணவை உண்ணாமல் இருந்தது.
    6. தாய் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டது அல்லது தாய் குறைந்த எடையுடன் இருப்பது. இதனால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும்.
    7. சுகாதாரமற்ற தண்ணீரைப் பருகுதல், சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், தேவையானபோது கைகளை சோப் பயன்படுத்தியோ அல்லது நன்றாக கை கழுவாமலோ இருத்தல்.
    8. சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருப்பது. சுகாதாரமற்ற சூழலில் இருப்பது.

    ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பின்விளைவுகள் (Impacts of Malnutrition)

    குழந்தையின் வளர்ச்சியை முடக்கிவிடும். ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் ஆயுள் முழுமைக்கும் பிரச்சனைதான்.

    எடை குறைவான, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தொற்றுநோய்களாலும், சீதபேதி, நிமோனியா, அம்மை நோய்களால் அதிகம் உயிரிழக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. விளையாட்டிலும் ஆர்வம் குறைகிறது. எதிலும் அக்கறையற்ற போக்கு மேலோங்குகிறது.

    செய்ய வேண்டியது என்னென்ன?

    1. உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். 6 மாத குழந்தைக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் சத்தான உணவுகளைக் கூழ், கஞ்சி வடிவில் கொடுங்கள்.

    2. பற்கள் முளைத்து விட்ட குழந்தைகள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

    3. உணவு ஊட்டும் முறையை மேம்படுத்துதல், சுகாதாரமான வாழ்வுமுறையைப் பின்பற்றுதல், கர்ப்பிணிகளைப் பேணுதல் போன்றவை குறித்து தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் தீர்வு கிடைக்கும்.

    4. தமிழக குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க தாய்ப்பால் தருவது அவசியம்.

    5. ஊட்டச்சத்தின் தேவை, கர்ப்பக்கால ரத்தசோகையைத் தவிர்த்தல், குழந்தைகளை நோயிலிருந்து தற்காத்தல், தடுப்பு மருந்துகளைத் தவறாமல் செலுத்துதல், கைகளை சோப்பு போட்டுக் கழுவும் பழக்கத்தை ஊக்குவித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு அவசியம்.
    கணவன் - மனைவி இடையே ஒருமித்த புரிதல் இருந்தாலும் கூட மனைவி பின்பற்றும் சில பழக்கவழக்கங்களை கணவரால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாது.
    பெண்களின் ஒரு சில பழக்கவழக்கங்கள் ஆண்களுக்கு புரியாத புதிராகவே அமைந்திருக்கும். கணவன் - மனைவி இடையே ஒருமித்த புரிதல் இருந்தாலும் கூட மனைவி பின்பற்றும் சில பழக்கவழக்கங்களை கணவரால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை செயல்படுத்தியே தீர வேண்டும் என்பதில் விடாப்பிடியாகவும் இருப்பார்கள். அதை கூட சில ஆண்களால் யூகிக்க முடியாது. அன்றாட பழக்க வழக்கங்களிலும் அதனை நடைமுறைப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் சிலவற்றை பார்ப்போமா?

    * வெளி இடங்களுக்கோ, சுப நிகழ்ச்சிகளுக்கோ புறப்பட தயாராகும் முன்பு ஒப்பனைக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் அலங்காரத்திற்கு செலவிடும் நேரத்தை பார்த்து ஆண்கள் சலித்துப்போவதுண்டு. அந்த அளவுக்கு அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கூட திருப்திப்பட்டுக்கொள்ள மாட்டார்கள். செல்ல வேண்டிய இடத்திற்கான தொலைவு சில நிமிட பயணமாகத்தான் இருக்கும். ஆனாலும் அங்கு சென்ற பிறகும் ஒப்பனை நேர்த்தியாக இருக்கிறதா? கலைந்துவிட்டதா? என்று சரி பார்த்துக்கொள்வார்கள். அதைப்பார்த்து ஆண்கள் குழம்பி போய்விடுவதுண்டு. ‘கொஞ்ச நேரத்திற்கு முன்புதானே வீட்டில் மேக்கப் செய்தார். அதற்குள் மீண்டும் மேக்கப் மீது கவனம் செலுத்துகிறாரே?’ என்ற கேள்வி ஆண்களிடம் எழும். ஆனால் அதற்கான பதிலை பெண்களிடம் எதிர்பார்க்க முடியாது.

    * வெளியே செல்லும்போது மேக்கப் போலவே ஆடை தேர்வுக்கும் மெனக்கெடுவார்கள். அதிலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்வதென்றால் புதிய ஆடை வாங்குவதற்கு சில பெண்கள் முடிவு செய்து விடுவார்கள். இத்தனைக்கும் அலமாரி நிறைய துணிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அவைகளை எடுத்து பார்த்துவிட்டு ‘எல்லாம் பழையதாக இருக்கிறது. எதுவுமே சரியில்லை’ என்பார்கள். மொத்தமே ஐந்து, ஆறு ஆடைகளை வைத்துக்கொண்டு அவற்றை அணிந்து திருப்திப்பட்டுக்கொள்ளும் கணவருக்கு மனைவியின் செயல் ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருக்கும்.

    * ஒப்பனை, ஆடை அலங்காரத்தை முடித்த பிறகு கணவரின் கருத்தை எதிர்பார்ப்பார்கள். எப்போதும் போல் இயல்பாக கிளம்பும் கணவருக்கு மனைவியின் எதிர்பார்ப்பு சட்டென்று புரியாது. அதனை சூட்சுமமாக கணவரிடம் வெளிப்படுத்தவும் செய்வார்கள். அப்போதும் புரிந்துகொள்ளாவிட்டால் அதிருப்தி அடைவார்கள். ‘தான் இந்த ஆடை அலங்காரத்தில் எப்படி இருக்கிறேன்’ என்று கேட்கவும் செய்வார்கள். அதுபோல் உடல் எடை குறைந் திருக்கிறேனா? என்ற கேள்வியையும் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் இந்த கேள்வி களின் அர்த்தம் கணவருக்கு புரியாது. அதனால் மனைவியின் கேள்விக்கு தக்க பதிலை சொல்வதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

    * வெளி இடங்களுக்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக கையில் பர்ஸ் வைத்திருப்பார்கள். அதில் ஒருசில அலங்கார பொருட்கள் தவறாமல் இடம் பெற்றிருக்கும். கூடவே ஒருசில பொருட்களையும் வைத்திருப்பார்கள். அவை சற்று கனமாக இருந்தால் கணவரிடம் கொடுத்துவிடுவார்கள். ஆனால் வீடு திரும்பும்வரை அந்த பொருட்களை அதிகமாக உபயோகித்து இருக்கமாட்டார்கள். பிறகு எதற்காக இவற்றையெல்லாம் எடுத்து வருகிறார் என்ற கேள்வி கணவரிடம் எழும். சில சமயங்களில் பெரிய ஹேண்ட்பேக்கை தூக்கி செல்வார்கள். ஆனால் அதில் ஒருசில பொருட்களே இடம்பெற்றிருக்கும். அதை பார்க்கும்போது பர்ஸே போதுமானது என்ற எண்ணம் ஆண்களுக்கு எழும்.

    * முகத்திற்கு பொலிவு சேர்ப்பதற்கு ‘பேஸ் பேக்' போடும் வழக்கத்தை பெண்கள் பின்பற்றுவார்கள். உடனே எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் கணவரிடம் கருத்து கேட்பார்கள். இத்தனைக்கும் அதனை பயன்படுத்துவதால் பெறப்போகும் மாற்றத்தை கணவர் சட்டென்று உணர்வதில்லை. ஆனாலும் கணவரின் பதில் சாதகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனை ஆண்களால் புரிந்துகொள்ளவே முடியாது.

    * வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு பெண்கள் மெனக்கெடுவார்கள். ஆண்களின் பார்வையில் வீடு சுத்தமாகத்தான் தெரியும். ஆனால் பெண்களுக்கு திருப்தி ஏற் படாது. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் மீண்டும் மீண்டும் சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். அதை பார்த்து சில ஆண்கள் குழம்புவதுண்டு.

    * சமையல் அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் பெண்களுக்கு அத்துப்படி. எந்த பொருள் எந்த இடத்தில் இருக்கும் என்பதை நொடியில் கண்டுபிடித்து எடுப்பார்கள். ஆண்கள் பயன்படுத்தும் பாத்திரம் எதனையும் தவறுதலாக வேறு இடத்தில் வைத்துவிட்டால் கோபம் கொள்வார்கள். ஏதாவதொரு இடத்தில்தானே இருக்கிறது என்று ஆண்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஒரு ஆண் தான் உபயோகிக்கும் பாத்திரம், ஸ்பூன், தட்டு என அனைத்தையும் பார்த்து தெரிந்து கொள்வதற்குள்ளாகவே அவன் பசி பறந்து போய்விடும்.

    * முகம், கூந்தல், கால் விரல் நகங்கள், கைவிரல் நகங்கள் என உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான கிரீம்களை பெண்கள் உபயோகிப்பார்கள். இப்படி எதற்காக தனித்தனி கிரீம்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆண்களிடம் எழும் கேள்விக்கு எளிதில் பதில் கிடைத்து விடாது.

    * பெண்கள் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கும்போது நலம் விசாரிப்பார்கள். அன்பாக பழகுவார்கள். இத்தனைக்கும் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருக்கும். ஆனால் நேரில் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்களின் செய்கைகளை பார்க்கும்போது ஆண்கள் குழம்பிபோய்விடுவார்கள். நன்றாகத்தானே பேசுகிறார்கள். பிறகு ஏன் குறை சொல்லிக்கொள்கிறார்கள் என்று ஆண்களுள் எழும் கேள்விக்கான பதில் புரியாத புதிராகவே நீடிக்கும்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையை கிச்சடி, உப்புமா என்று சாப்பிடாமல் இப்படி காய்கறிகள் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - கால் கப்
    வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்று
    ப்ரோக்கோலி - பாதியளவு
    தக்காளி - 1
    ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
    பூண்டு - 3 பல்
    எலுமிச்சைச் சாறு -  2 டேபிள்ஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    வறுத்த பாதாம்பருப்பு - 9
    கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப     

    செய்முறை:


    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    ப்ரோக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

    கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பூண்டு, ப்ரோக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை).

    வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
    கோடை காலத்துடன் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் நமது செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளது. பண்டைய இந்திய மருத்துவ முறைபடி, சில எளிய சுய பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் குளிரை எளிதாக கையாளலாம்.
    குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது மிகவும் சவாலானது. யார் வேண்டுமானாலும் நோய்வாய்ப்படலாம். குளிர்கால மாதங்களில் நம்மால் வீட்டிற்குள் அடங்கிவிட முடியாது. பண்டைய இந்திய மருத்துவ முறைபடி, சில எளிய சுய பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் குளிரை எளிதாக கையாளலாம்.

    இந்த பருவத்தில், ஆரோக்கியமான மஞ்சள் பாலை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் மஞ்சள் பால் அல்லது கோல்டன் பால் குடிப்பது மோசமான சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் இந்த பானத்தில் லவங்கப்பட்டை தூள் மற்றும் ஏலக்காய் தூள் போன்ற சில மசாலா பொருட்களையும் சேர்த்து குடிக்கும் போது, அது மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

    நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது உடலை சூடாக வைத்திருக்கவும், குளிர் காலநிலையை எதிர்த்துப் போராடவும் உதவும். மேலும் சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். காலையில் குளிப்பதற்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் சருமத்தில் மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்வது மன அமைதியையும் தருகிறது. மன அழுத்தத்தை விடுவித்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

    வறண்ட மற்றும் பிசுபிசுப்பான கூந்தல் குளிர்காலத்தின் போது மற்றொரு பொதுவான பிரச்சினையாகும். குளிர் காற்று, கூந்தலில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் எடுத்து விடும். இந்த பருவத்தில் தலைமுடியை ஊட்டமளிக்கவும் வலுப்படுத்தவும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். விரல் நுனியில் தேங்காய் எண்ணெய் எடுத்து, அதை உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது கூந்தலை வலுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும்.

    கோடை காலத்துடன் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் நமது செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளது. எனவே, இந்த பருவத்தில் குளிர்ந்த உணவை தவிர்க்க முயற்சிக்கவும். குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் செரிமான அமைப்பு அதை செரிமானம் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இது பெரும்பாலும் அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது. பிற வயிறு பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமாக இருக்க சூடான மற்றும் செரிமானம் ஆகக்கூடிய உணவை சாப்பிடுங்கள்.

    எந்த பருவத்திலும் ஆரோக்கியமாக இருக்க, சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். குளிர்காலத்தில், காலையில் எழுந்து நடைபயிற்சி செல்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால் உடலை வலுவாக வைத்திருக்க அதை செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் வெளியே சென்று பயிற்சி செய்ய விரும்பவில்லை என்றால், வீட்டில் யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம். எந்த வகையான உடற்பயிற்சி செய்தாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
    தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை உள்ள ஏழு நாள்கள் உலகத் தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
    எத்தனை மாதங்களுக்குத் தாய்ப்பால் புகட்டப்பட வேண்டும்?

    பிறந்த குழந்தைகளுக்குத் தரப்படும் முதல் தடுப்பு மருந்து, தாய்ப்பால். இதில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும், அதனுடன் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய அம்சங்களும் நிறைந்துள்ளன.

    ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் வழங்கப்பட வேண்டும். தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும், தண்ணீர் கூட தேவையில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை வழங்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையின்படி ஒரு குழந்தைக்குக் குறைந்தபட்சம் அதன் 2 வயது வரை அவசியம் தாய்ப்பால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் 5 வயது வரை தாய்ப்பால் புகட்டலாம். சிலர் தங்கள் குழந்தைக்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவே தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிடுகிறார்கள். இவ்வாறு நிறுத்தப்படும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பலவீனமாகக் காணப்படுவார்கள்.

    சிசேரியன் பிரசவம் எனில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்குமா?

    இல்லை. பொதுவாக பிரசவமானவுடன் வெளிப்படும் தாய்ப்பாலுக்கு `கொலஸ்ட்ரம்' என்று பெயர். இது அடர் மஞ்சள் நிறத்தில் கெட்டியாக இருக்கும். குழந்தை பிறந்ததிலிருந்து முதல் 3 நாள்களுக்கு இந்த கொலஸ்ட்ரம் சுரக்கும். இது சிறிதளவு மட்டுமே சுரக்கக்கூடியது. ஆனால், அதை அறியாத பலர், தங்களுக்குப் பால் சுரப்பு குறைவாக இருக்கிறது என்று நினைத்துவிடுகிறார்கள். குழந்தை பால் குடிக்கத் தொடங்கியவுடனேயே அதன் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாய்க்கு பால் சுரக்கத் தொடங்கிவிடும். குழந்தை பிறந்த அரை மணிநேரத்தில் அதற்கு முதல் பால் கொடுத்துவிடுவது நல்லது.

    எந்தெந்த உடல்நலக் குறைபாடு உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் புகட்டக்கூடாது?

    ஹெச்.ஐ.வி இருக்கும் பெண், மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட நம் நாட்டில் அனுமதி உண்டு. ஒரு பெண் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, போதைப்பொருள்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தாலோ அவர் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சையில் இருப்பவர்களும் தாய்ப்பால் புகட்டக்கூடாது.

    கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் வழங்கலாமா?

    ஒரு பெண்ணுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், தொற்று ஏற்பட்டு குணமாகியிருந்தாலும் அவர் தாராளமாக தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டலாம். கொரோனா தொற்றுள்ள தாயின் உடலில் அந்த வைரஸுக்கு எதிராக உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் உடலில் சென்று சேர்வதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், கொரோனா தொற்றுக்குள்ளான பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் தரும்போது கைகளைத் தூய்மையான நீரில் நன்றாகத் துடைத்துவிட்டு பால் தருவது, மாஸ்க் அணிந்திருப்பது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

    உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி பிறந்த குழந்தைக்கு அதன் 6 மாதம் வரையில் தாய்ப்பால் மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். இந்நேரத்தில் பால் சுரப்பு இல்லை என்ற காரணத்தினாலோ, குழந்தையின் தாயால் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ உடனே பசும்பால், பால் பவுடர் போன்றவற்றை மாற்று உணவாகத் தருவதற்கு பதிலாக, `தாய்ப்பால்' வங்கியிலிருந்து பாலை தானமாக வாங்கி குழந்தைக்குத் தரலாம். அல்லது உறவினர்களில் யாராவது பாலூட்டும் தாய்மார்கள் இருந்தால் அவர்களின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்யலாம்.

    6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் உணவுகளைக் கடைகளில் வாங்கும்போது அது தயாரிக்கப்பட்ட தேதி, அவற்றில் அடங்கியிருக்கும் பொருள்கள், அரசின் அங்கீகாரம் போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டியது அவசியம்.

    தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர்.
    பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர். அதிலும் காஜல் நிறைய வகையில் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன.

    மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.

    சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……

    • தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்-கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும்.

    அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்-கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் க்ரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.

    • காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.

    • வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.

    ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.
    பெண்ணோ, பையனோ... நீங்க நல்லாப் படிச்சா மட்டும் போதும். வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துகிறேன் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் பேச்சாக இருக்கும்.
    குழந்தைகளுக்குச் சூழலைக் கையாளும் திறன் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய தயக்கப்படுவார்கள். அதை உடைத்து அவர்களால் முடியும் விஷயங்களைச் செய்ய வைக்க வேண்டும்."

    சிறு குழந்தைகள் உள்ள வீட்டில், வீட்டு வேலைகள் நேரத்துக்கு நடக்காது. பொருள்களும் பொம்மைகளும் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறிக் கிடக்கும். பொருள்களைச் சீராக அடுக்கி வைக்க சம்பளத்துக்கு ஆள்போடலாமா என்று கூட தோன்றும். குழந்தைகள் வளர்ந்த பின்னும் பல வீடுகளில் நிலைமை இதுதான். எடுத்த பொருளை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நிறைய குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. தெரிவதில்லை என்று சொல்வதை விடப் பழக்கப்படுத்தவில்லை என்பதுதான் சரி. சிறு வயதிலேயே பழக்கப்படுத்துகிற செயல்கள்தாம் பெரியவர்களாகும்போதும் தொடரும். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்யப்பழக்குவதன் நன்மைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய அடிப்படைத் தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா.

    "பெண்ணோ, பையனோ... நீங்க நல்லாப் படிச்சா மட்டும் போதும். வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துகிறேன் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் பேச்சாக இருக்கும். ஆனால்,குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். அனைத்தையும் அறியும் வயது இது. சிறு வயதுக் குழந்தைகளாக இருந்தால் 'உனக்குத் தெரியாது, நீ கீழே கொட்டிடுவே, போட்டு உடைச்சிடுவே, உனக்கு எட்டாது, கைல குத்திப்பே... அத தொடாதனு சொல்லியிருக்கேன்ல, கிச்சன் உள்ள வராத' என்று ஏகப்பட்ட கட்டளைகளை நாமே பிறப்பிக்கிறோம். அதில் ஓரளவு நியாயம் உண்டு.

    இந்த வயதில் குழந்தைகளின் கைகள் அத்தனை பலம் வாய்ந்ததாக இருக்காது. அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்கிற பயமே நம்மை அப்படி எண்ண வைக்கிறது. குழந்தைகளுக்குச் சூழலைக் கையாளும் திறன் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய தயக்கப்படுவார்கள். அதை உடைத்து அவர்களால் முடியும் விஷயங்களைச் செய்ய வைக்க வேண்டும். குழந்தைகளின் இரண்டு வயதில் ஆரம்பித்து `உன் பொம்மையை எல்லாம் கூடையில் போடு தங்கம், டாய்ஸ் எல்லாத்தையும் உன் அலமாரியில் அடுக்கி வை' என்பது போன்ற எளிய வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்.

    வேலை செய்ய கற்றுக்கொள்ளும் போது பெரியவர்கள் போல் நேர்த்தியாகக் குழந்தைகள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்ய வேலையை மீண்டும் பெற்றோர் செய்ய வேண்டியதிருக்கும். இதை நேர வீணடிப்பாக நினைக்க வேண்டாம். பொறுமையுடன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வேலையைக் கற்றுத்தர வேண்டும்.

    வீட்டில் சாப்பாட்டு நேரத்தின் போது தட்டுகளை எடுத்து வருவது, தண்ணீர் பிடித்து வருவது ஸ்பூன் எடுத்து வருவது போன்றனவும், சாப்பிட்ட பிறகு தட்டை எடுத்துக்கொண்டு போய், சிங்கில் போடுவது என வேலைகளை அவர்களுக்கென நிர்ணயம் செய்யுங்கள். துவைத்த துணிகளை மடித்து வைக்க அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். துவைத்த துணிகளிலிருந்து `உன் துணியை மட்டும் தனியா அம்மாவுக்கு எடுத்துக்கொடு பார்ப்போம்' என்று பிரித்துக்கொடுக்க பழக்குங்கள். அப்படியே அப்பா துணி, அம்மா துணி என்று பிரித்து எடுத்துத் தந்தால் உங்களுக்கு மடித்து வைக்க எளிதாக இருக்கும்.

    3 வயதுக் குழந்தையெனில் காய்கறி கடைக்குப் போகும்போது அவர்களுக்குப் பிடித்த காய்கறியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள். வாங்கி வந்த காய்கறியை எந்த இடத்தில் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

    பள்ளிக்குப் போக ஆரம்பித்தவுடன், வீட்டுப் பாடங்களை எழுதி முடித்த பிறகு புத்தகங்களை அடுக்கி வைக்கப் பழக்கப்படுத்தலாம். உறங்கச் செல்லும் முன் பென்சில் பாக்ஸில் எல்லாம் இருக்கிறதா, நாளைக்குத் தேவையான நோட்டுப் புத்தகம் பையில் இருக்கிறதா என்பதையும் செக் செய்யச் சொல்லுங்கள்.

    8 வயதுக்குப் பிறகு, பள்ளி முடித்து வந்ததும் டிபன் பாக்ஸை கழுவி வைக்கச் சொல்லுவது, சாப்பிட்ட தட்டு, டம்ளரைக் கழுவி வைக்கச் சொல்லலாம். துவைக்க வேண்டிய அவர்களின் ஆடைகளை வாஷிங் மெஷினில் எடுத்துப் போடச் சொல்லலாம்.

    வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மாத்திரை எடுத்துத் தருவது, சாப்பிட்ட அவர்களுடைய இடத்தைச் சுத்தம் செய்வது, அவர்களைக் கவனித்து கொள்ளப் பழக்கப்படுத்தலாம்.


    ×