என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களிலும் அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள்.
    வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டால், நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தருள்வாள் தேவி.
    தேவி வழிபாடு, பக்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பொதுவாகவே, தேவியானவள், நம் அன்னையைப் போல் கனிவும் கருணையும் கொண்டவள். அன்பே உருவானள். அருள் மழை பொழியக்கூடியவள். சாந்த சொரூபினி.

    சாந்தத்துடன் தன்னை நாடி வரும் பக்தர்களை அரவணைத்துக் காத்தருள்பவள் அம்பாள் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். மயிலை கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரி, திருமீயச்சூர் லலிதாம்பாள், சங்கரன்கோவில் கோமதி அன்னை, திருநெல்வேலி காந்திமதி அன்னை, புன்னைநல்லூர் மாரியம்மன், உறையூர் வெக்காளி அம்மன், இருக்கன்குடி மாரியம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், மாங்காடு காமாட்சி அன்னை எல்லாவற்றுக்கும் மேலாக உலகச் சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழும் காஞ்சி காமாட்சி என மகாசக்தி ஒவ்வொரு வடிவமாக, ரூபமாக, ஒவ்வொரு குணத்துடன் நமக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    அதேபோல், காளி, காளீஸ்வரி, முண்டகக்கண்ணி, செல்லியம்மன், தீப்பாய்ச்சிஅம்மன், சமயபுரம் மாரியம்மன், வல்லம் ஏகெளரியம்மன், கொல்லங்குடி மாரியம்மன், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி என இன்னும் பல தெய்வங்கள், உக்கிரமாகவும் கடும் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றனர்.

    இதில் பிரத்தியங்கிரா தேவி மிகவும் விசேஷமானவள். சிங்கமுக நாயகி. கடும் உக்கிரத்துடன் இருப்பாள். ஆனால் பக்தர்களிடம் ஒருபோதும் தன் கோபத்தைக் காட்டமாட்டாள். தன் பக்தர்களைச் சோதிப்பவர்களைப் பொறுத்துக்கொண்டு பார்த்திருக்கமாட்டாள்.

    சக்தி வழிபாட்டில், வராஹியும் காளியும் பிரத்தியங்கிராவும் ஒருவகை. பொதுவாக, காளி உக்கிர தெய்வம்தான். ஆனால், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள், சாந்த சொரூபினி. அந்தக் கோயிலிலேயே பிரத்தியங்கிராவும் கோயில் கொண்டிருக்கிறாள்.

    கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை போல், அம்மன்குடி துர்கை போல், கும்பகோணம் அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவியும் மகோன்னதம் மிக்கவள். உக்கிரம் நிறைந்தவள். அவளை மனதார வழிபடுவது ரொம்பவே சக்தி வாய்ந்தது. வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள் பிரத்தியங்கிரா தேவி.

    செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களிலும் அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தடைகளையும் உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சினைகளையும் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். உங்கள் பிரார்த்தனையில் குளிர்ந்து, உங்களை ஆசீர்வதித்து அருள்வாள் தேவி.

    விரைவில், உங்கள் பிரச்சினைகளையெல்லாம் காணடித்து அருள்வாள். சிக்கல்களையெல்லாம் போக்குவாள். எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்வாள். எதிரிகளே இல்லாது செய்வாள்.

    பிரச்சினைகள் தீர்க்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவோம்; வளம் பெறுவோம்!
    தேவையின்றி வருபவர்களை கண்காணிக்க சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 230-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது
    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் அம்மனை அருகிலிருந்தே தரிசனம் செய்யலாம் என்று சிலர் ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக அழைத்துச் செல்வதாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

    இதனை தடுக்கும் வகையில் கோவில் இணை ஆணையர் கல்யாணி ஏற்பாட்டின்படி டிக்கெட் கொடுக்குமிடம், மூலஸ்தானம், கோவில் பின்வாசல் ஆகிய இடங்களில் அடிக்கடி கோவிலுக்கு வரும் நபர்கள் மற்றும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களின் முகங்களை கண்டறியும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இக்கோவிலில் 230-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    இயேசு கிறிஸ்து இறைமகனே என்பதை நிரூபிக்கும் இரண்டு அற்புத நிகழ்வுகளை நற்செய்திகள் எடுத்துரைக்கின்றன. முதலில் இயேசுவின் திருமுழுக்கு வேளையிலும், இரண்டாவதாக அவரது உருமாற்றத்திலும் இதைக் காண்கிறோம்.
    திருமுழுக்கு

    அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 1:9-11)

    உருமாற்றம்

    இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.

    அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 17:1-9)
    வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்பநிலை மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் மழையினால் நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சதுரகிரிக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காலையில் மழை பெய்யாததால் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர்
    சதுரகிரி மலை ஏற முடியும் என்பதால், அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்பநிலை மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    மலைப்பாதை வழியாக
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மதியம் 1 மணிக்கு வனத்துறை கேட் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள
    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ள பகுதியிலும் நேற்று இரவு திடீர் மழை பெய்தது. இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தவிப்புக்குள்ளான நிலையில், பாதுகாப்பாக மலையில் தங்க வைக்கப்பட்டனர்.

    மலையில் தங்க வைக்கப்பட்டுள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆனி அமாவாசைைய முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயலாளர் விஸ்வநாத் ஆகியோர் தெரிவித்தனர்.
    பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ஆதிஅமரநாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவிலில் சந்தனம், பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    பொள்ளாச்சி அருகே கோட்டூரில் ஆதிஅமரநாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தையொட்டி சந்தனம், பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஆதிசங்கரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் விடுவது முக்கியம், அவர்களை நினைத்து நான்குபேருக்கேனும் உணவிடுதல் மிக மிக முக்கியம்.
    ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசைக்கு பித்ரு வழிபாட்டைச் செய்யாமல் விட்டால், நாமும் நம் வம்சமும் பித்ரு சாபத்துக்கும் பித்ரு தோஷத்துக்கும் ஆளாவோம் என்று எச்சரிக்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, புரட்டாசி மகாளயபட்ச காலங்கள், கிரகண காலம், திதி உள்ளிட்டவை என 96 தர்ப்பணங்கள் உள்ளன என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மாதப் பிறப்பு நாளில், தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோரை நினைத்து, அவர்களின் பெயரைச் சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடுங்கள். அவர்களின் படங்களுக்கு பூ போட்டு வழிபாடு செய்யுங்க. காகத்துக்கு அவர்களை நினைத்து உணவிடுங்கள். ஆச்சார்யர்களுக்கு அரிசியும் வாழைக்காயும் வெற்றிலை பாக்கு தட்சணையுடன் வழங்குங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் விடுவது முக்கியம்.

    முடிந்தால், நம் முன்னோர்களுக்குப் பிடித்த உணவைப் படையலிடுங்கள். அவர்களை நினைத்து நான்குபேருக்கேனும் உணவிடுதல் மிக மிக முக்கியம். தயிர்சாதப் பொட்டலமாவது வழங்குங்கள். வீட்டில், முன்னோரை நினைத்து பூஜையறையில் விளக்கேற்றுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். குடும்பமாக சேர்ந்து முன்னோர் படங்களுக்கு நமஸ்கரியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார்கள். ஆசீர்வதிப்பார்கள்.

    இன்று மறக்காமல் பித்ருக்களை வணங்குவோம். நாமும் நம் சந்ததியினரும் குறைவின்றி நிறைவுற வாழ்வோம்.
    சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், நேற்று முன் தினம் மாலை வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, சதுரகிரி வனப்பகுதியில் கன மழை பெய்தது.

    இதையடுத்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் திரண்டனர்.

    போலீசார் மற்றும் வனத்துறையினர் மலைப்பகுதியில் நீர் வரத்தை நேற்று காலை ஆய்வு செய்தனர். வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சுந்தரமகாலிங்கம் சாமி கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, வனச்சரக அலுவலர் செல்லமணி ஆகியோர் பக்தர்களை கோவிலுக்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் திரண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மழை தொடர்ந்து பெய்தால், வரும் நாட்களிலும் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிக்க முடியாது என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
    கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அமாவாசை நாளில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். எனவே தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) அமாவாசை நாளில் கோவிலுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    2 மாதங்களுக்கும் மேலாக நேரடியாக பிரதோ‌ஷ வழிபாடுகளை தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் நேற்று பிரதோ‌ஷ வழிபாடுகளை நேரில் கண்டு வழிபட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ்மாதமும் 2 முறை பிரதோ‌ஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் இல்லாமல் பிரதோ‌ஷ வழிபாடுகள் நடைபெற்று வந்தன. சிறப்பு வழிபாடுகளை ஆன்லைன் மூலம் ஒளி பரப்பி வந்தனர்.

    இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதையொட்டி கடந்த 5-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று தட்சிணாய புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.

    பின்னர் மாலையில் ஆனிமாத பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய நந்திக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் நந்திக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் கோவிலில் உள்ள மற்ற நந்திகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்கும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    2 மாதங்களுக்கும் மேலாக நேரடியாக பிரதோ‌ஷ வழிபாடுகளை தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் நேற்று பிரதோ‌ஷ வழிபாடுகளை நேரில் கண்டு வழிபட்டனர்.

    அப்போது உணர்ச்சிப் பெருக்கில்” அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா” என்று விண்ணதிர கோ‌ஷம் எழுப்பினர்.

    வழிபாடுகள் நிறைவு பெற்றதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் திருவிழாவை முன்னிட்டு கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற்றதால் அதனையும் கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தஞ்சை பெரியகோவில் வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.
    தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நாளை 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கணபதி ஹோமத்துடன் இந்த விழா தொடங்குகிறது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், இனிப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.அதன் பின்னர் தினமும் வராகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். இந்த விழா 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. 10-ந் தேதி மஞ்சள் அலங்காரமும், 11-ந் தேதி குங்கும அலங்காரமும், 12-ந் தேதி சந்தன அலங்காரமும், 13-ந் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14-ந் தேதி மாதுளை அலங்காரமும், 15-ந் தேதி நவதானிய அலங்காரமும், 16-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும் நடைபெறுகிறது.17-ந் தேதி பூ அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.

    19-ந் தேதி நிறைவு நாள் அன்று அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், அதைத்தொடர்ந்து இரவு அம்மன் கோவிலுக்குள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    அனுமன் இளைப்பாற, அவருக்கு இத்தல இறைவனான முருகப்பெருமான், தன்னுடைய வேல் கொண்டு ஒரு சுனையை உண்டாக்கி, அனுமனின் தாகம் தீர்த்ததாக தல வரலாறு சொல்கிறது.
    கோயம்புத்தூர் அருகே அமைந்துள்ளது, அனுவாவி மலை. இதன் அடிவாரத்தில் முருகப்பெருமானுக்கு திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. வடக்கே குருவிருட்ச மலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட திருக்கோவில் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டதாக இந்த ஆலயம் விளங்குகிறது.

    தல வரலாறு

    ராமாயண காலத்திலேயே முருகப்பெருமான் வழிபாடு இருந்ததை, இந்த ஆலயத்தின் தல புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது. இலங்கையை அரசாண்ட ராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போய் சிறைவைத்திருந்தான். தனது மனைவியை மீட்பதற்காக, ராவணனுடன் போர் புரிந்தார், ராமபிரான். அவருக்கு பக்க பலமாக வானரப் படைகள் இருந்தன. ராவணப் படையோடு போரிட்ட வேளையில், ராவணனின் மகனால் விடப்பட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப் போனான். அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகைகள் தேவைப்பட்டது. அதைக் கொண்டு வருவதற்காக, ஜாம்பவானால் அனுப்பிவைக்கப்பட்டார், அனுமன்.

    மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால், மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார் அனுமன். வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது இங்கே அனுமன் இளைப்பாற, அவருக்கு இத்தல இறைவனான முருகப்பெருமான், தன்னுடைய வேல் கொண்டு ஒரு சுனையை உண்டாக்கி, அனுமனின் தாகம் தீர்த்ததாக தல வரலாறு சொல்கிறது. அனுமன் தாகம் தீர்க்கப்பட்ட தீர்த்தம் என்பதால், இது ‘அனுமக்குமரர் தீர்த்தம் என்றும், இந்த இடத்திற்கு ‘அனுமார்வாவி’ என்றும் பெயர் வந்தது. அனுமார்வாவி என்பதுதான், நாளடைவில் மருவி ‘அனுவாவி’ என்றானதாக சொல்கிறார்கள்.

    அந்தக் காலத்தில் இம்மலையடிவாரத்தில் இருந்த தாமரைத் தடாகம் என்ற ஊரில் இருந்த ஜமீன்தார் ஒருவர், மலைப்பாதை அமைத்து இந்தக் கோவிலுக்கு உற்சவ மூர்த்திகளை செய்து கொடுத்தார். இத்தலத்துக்கு கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரில் அமைந்த விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து, ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும், மற்றொன்றில் இருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அந்த வேரானது, அனுவாவியில் இருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர் என்பதையும் கண்டறிந்தார். ‘விண்ணாவரங் கொடி’, ‘விண்ணாடும் கொடி’ என்று பெயர் பெற்ற அக்கொடி, அனுவாவி தல விருட்சமான மாமரத்தில் படர்ந்திருப்பதை இன்றும் பார்க்க முடியும்.

    1957-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில், இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்த இறைவனும், சில மரங்களும் காணாமல் போயின. வெள்ளத்தின் உக்கிரத்தை வென்று நின்றது, தற்போதைய தலவிருட்சமான மாமரம் மட்டுமே. பின்னர் இறைவன் திருவருளால், தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின் புதிய கோவில் அமைக்கப்பட்டு 1969-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தக் கோவிலை அடைய 500 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் மலை ஏறினால் முருகன் அருள்பாலிக்கும் ஆலயத்தை அடையலாம்.

    மலைக்கோவிலுக்கு முன்பாக இடும்பன் சன்னிதி உள்ளது. கருவறையில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியும் உள்ளது. அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமானும் அருள்புரிகிறார்.

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வந்து இந்த ஆலயத்தில் உள்ள முருகனை வழிபடுகிறார்கள். இங்குள்ள தீர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக வந்து தொடர்ந்து சில நாட்கள் குளித்து வந்தால், மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.

    அமைவிடம்

    கோயம்புத்தூர் அருகே உள்ள உக்கடத்திற்கு அடுத்ததாக இந்த அனுவாவி கோவில் இருக்கிறது. ஆனைகட்டி செல்லும் வழி இதன் அருகில்தான் உள்ளது. அனுவாவி மலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் மருதமலை முருகன் கோவிலை அடையலாம்.
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. அதன்படி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று,
    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 70 நாட்களாக மூடப்பட்டு இருந்த கோவில்கள் கடந்த 5-ந்தேதி முதல் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டு, வருகின்றனர்.

    அந்த வகையில் ஊரடங்கு தளர்வில் கோவில் திறக்கப்பட்ட பின்னர் முதல் பிரதோஷ பூஜை நேற்று கோவில்களில் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. அதன்படி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் இன்றி நடந்து வந்த பிரதோஷ பூஜை நேற்று கோவிலில் உள்ள நூறுகால் மண்டத்தில் நிரம்பி இருந்த பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதேபோல், மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் சிவன் கோவில், முதனை முதுகுன்றீஸ்வரர், பாலக் கொள்ளை அழகேஸ்வரர், தேவஸ்தான கோபுராபுரம் ஆதிசக்தி ஈஸ்வரர், புலியூர் வீரசேகரர், தர்மநல்லூர் தர்மபுரீஸ்வரர், ராஜேந்திரப்பட்டினம் நீலகண்டேஸ்வரர் மற்றும் காவனூர், ஆலடி, சத்தியவாடி, கார்மாங்குடி, வடக்கு வெள்ளூர், மு.பரூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
    ×