என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.
    பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

    இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது. பெருநாள் தொழுகை நடைபெற்ற பின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த பண்டிகை தியாகப்பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே அழைக்கப்படுகிறது.

    இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த அவருக்கு, இறுதியில் இவரின் 2-வது மனைவி ஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டனர்.

    இஸ்மாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராகிமுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டாா். இதைப்பற்றி இஸ்மாயிலிடம் கூறிய இப்ராகிம், அவரது அனுமதியுடன் பலியிட துணிந்த போது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தார். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராகிமிற்கு கட்டளையிட்டார்.

    இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை அவித்து படைக்க தடை விதிக்கப்பட்டது.
    தமிழகத்தில் ஆடி மாதம் வந்து விட்டாலே அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதிலும் குமரி மாவட்டத்தில் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் தான் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், நடுகாட்டு இசக்கியம்மன் கோவில், வடசேரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உள்பட அம்மன் கோவில்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்து அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும். இதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் வந்து அவ்வையார் அம்மன் கோவில் வளாகத்திலேயே கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்து அம்மனுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை அவித்து படைக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நேற்று அவ்வையார் அம்மன் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் குறைவாகவே இருந்தது. வந்த பக்தர்கள் நேராக அலங்கரிக்கப்பட்ட அவ்வையார் அம்மனை வரிசையாக தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    தக்கலை பகுதியில் இருந்து வாகனத்தில் வந்தவர்கள் அவ்வையார் அம்மனுக்கு படைப்பதற்காக கூழ் மற்றும் கொழுக்கட்டைக்கான பொருட்களை கொண்டு வந்தனர். ஆனால் கோவில் வளாகத்தில் கொழுக்கட்டை மற்றும் கூழ் செய்து படைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

    அதனால் அவர்கள் தடையை மீறி கோவில் அருகே உள்ள தோப்புகளில் கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கேயிருந்த படியே அம்மனை வழிபட்டனர்.

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அவர்கள் பஜனை பாடி ஆலயத்தின் வெளி பிரகாரத்தை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் நேற்று கோவில் வளாகம், கடற்கரை பகுதியிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இப்ராகிம் நபி அவர்கள் இறைவனின் கட்டளையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தன் அன்பு மகனையே பலியிட முற்படும்போது இறைவன் உன் மகனை பலியிட வேண்டாம் என தடுத்து அதற்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுமாறு கட்டளையிட்டான்.
    பக்ரீத் பண்டிகையையொட்டி மன்னான் பீடி பேக்டரி மேனேஜிங் பார்ட்னர் அல்ஹாஜ் எம்.நாசர்கான் என்கிற அமான் தெரிவித்துள்ளதாவது:-

    தனக்காக வாழும் மனிதன் பிறருக்காக வாழத் தொடங்கும் போது ஒளிர தொடங்குகிறான். இறைவனின் நேசத்துக்கு தகுதியானவன் ஆகிறான். அதே மனிதன் தன் முழு வாழ்வையும் இறைவனுக்காக அர்ப்பணித்து இறைவனுக்கு அடி பணிந்து துயரங்களை சகித்துக் கொண்டு இறைவனின் திருப்திக்காகவே வாழும் போது புனிதன் ஆகிறான். அப்படிப் பட்டவர்தான் இறைதூதர் இப்ராகிம் நபி (அலை) அவர்கள்.

    இப்ராகிம் நபி அவர்கள் இறைவனின் கட்டளையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தன் அன்பு மகனையே பலியிட முற்படும்போது இறைவன் உன் மகனை பலியிட வேண்டாம் என தடுத்து அதற்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுமாறு கட்டளையிட்டான். அவரும் அவ்வாறே செய்தார். இறைவன் தன் திருமறை குர்ஆனில் கூறுகிறான். பலியிடப்படும், அறுக்கப்படும் பிராணியின் இறைச்சியோ, ரத்தமோ என்னை வந்து அடைவது இல்லை. உங்களின் இறையச்சமே என்னை வந்து அடைகிறது. ஆடு ேபான்ற பிராணியை நாம் பலியிடும் போது அதாவது குர்பானி கொடுக்கும் போது நமது பொருளாசை, உலக ஆசை, பேராசை இவை அனைத்தையும் குர்பானி கொடுப்பதாகவே பொருள் கொள்ள வேண்டும். இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரத்துவம் காத்து மதநல்லிணக்கத்தின்படி வாழும் சகோதர சமுதாய மக்கள் அனைவருக்கும், எங்களின் அன்பு வியாபார பெருமக்களுக்கும் எங்களின் உளம் நிறைந்த பக்ரீத் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை கூறி கொள்வதில் ெபருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இன்ஷா அல்லா, இந்த ஆண்டும் வல்ல இறைவனின் நாட்டப்படி ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இறைவனின் விருந்தாளிகள் அனைவரும் ஹாஜிகளாக நலமுடனும் இறை அருளுடனும் வரவேண்டுமென எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக பிரார்த்தனை செய்வதோடு இந்த வாய்ப்பினை (ஹஜ் கடமை) உலக முஸ்லிம்கள் அத்துணை பேருக்கும் இறைவன் அருள்வாராக! ஆமீன்!

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நாட்களில் தினமும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
    வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து நேற்று கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.

    பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.

    பின்னர் வாணவேடிக்கையும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
    இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த இந்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர்.
    இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்ராகீம் நபிகள். இவர், இளமைக்காலம் தொட்டே பகுத்தறிவில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்கள். எந்த ஒரு நிகழ்வையும் ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பி, அதற்கு விடை காண்பதற்கு பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.

    இப்ராகீம் நபிகளின் தந்தை ஆஜர் என்பவர் களிமண்ணில் கடவுள் பொம்மைகள் செய்து அவற்றை விற்பனை செய்து வந்தார். இதனை பிடிக்காத இப்ராகீம் நபிகள், ‘கீழே விழுந்தால் உடைந்து விடக்கூடிய, தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத மண் பொம்மைகள் எப்படி உலகைக் காக்கும் கடவுளாக முடியும்’ என்று அதனை எதிர்த்தார்கள். அதனால் தந்தையை மட்டுமல்ல அந்த ஊரையே பகைத்துக் கொண்டார்கள்.

    ‘மண் பொம்மைகள் கடவுள் இல்லை என்றால், உண்மையான இறைவன் யார்?’ என்பதில் அவர்கள் கவனம் திசை திரும்பியது.

    ‘இருளிலும், வெளிச்சத்திலும் உலகை காக்கும் மகா சக்தியே இறைவனாக இருக்க முடியும். அதுவே அல்லாஹ்’ என்று தனது ஞானத்தின் மூலம் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ்வும் இப்ராகீமை நபியாக ஏற்றுக்கொண்டான்.

    அல்லாஹ்வும், இப்ராகீம் நபிகளுக்கு உள்ளுணர்வின் மூலமாகவும், கனவின் மூலமாகவும் தன்னுடைய கட்டளைகளை பிறப்பித்து வந்தான். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அந்த கட்டளைகள் அவர்களுக்கு சோதனையாக அமைந்ததாகத் தான் தெரியும். ஆனால் அல்லாஹ் அதன்மூலம் மிகச் சிறந்த கடமைகளை மனித இனத்திற்கு உணர்த்தினான்.

    ஒருமுறை தான் கண்ட கனவின் மூலமாக அருமை மனைவி ஹாஜரா அம்மையாரையும், அருந்தவச் செல்வன் இஸ்மாயிலையும் பாலைவனத்தில் விட்டுவிட்டு திரும்பி வந்து விட்டார்கள். அவர்களுக்கு அது சோதனை. ஆனால் அதன் விளைவாக மக்கா என்ற சிறப்புற்ற நகரமும், ’ஜம்ஜம்’ என்ற வற்றாத ஜீவ நீர் ஊற்றும் உருவானது.

    மற்றொரு முறை, குழந்தை இஸ்மாயிலை, அல்லாஹ்வின் கட்டளைப்படி அறுத்து பலியிடுவதாக கண்ட கனவை நிறைவேற்ற முயன்றார்கள். அப்போது அல்லாஹ் அதனைத் தடுத்து, ஒரு ஆடு அனுப்பி, அதை அறுத்து குர்பானி கொடுக்க கட்டளையிட்டான். அரேபிய மாதமான துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் இது நடந்தது.

    உலக வாழ்வில் தான் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தையும் ஏன் எதற்கு என்று கேட்டவர்கள், அல்லாஹ்வின் கட்டளை என்று வந்தபோது எந்தவித ஆட்சேபனையும் இன்றி உடனே அடிபணிந்தார்கள். எனவே தான் அல்லாஹ் இப்ராகீம் நபிகளை, ‘தன் நேசத்துக்கு உரியவர்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றான்.

    இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த இந்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

    அஸ்ரா உமர் கத்தாஃப், சென்னை.
    கூர்மநாதருக்கு தனிக்கோவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்கான ஒரே கோவிலாக இது மட்டுமே திகழ்கிறது.
    திருமாலின் தசாவதாரங்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அதில் 2-வது அவதாரமான ‘கூர்ம அவதாரம்’ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் மற்ற அவதாரங்கள் அனைத்துமே, ஏதோ ஒரு அசுர அழிவை முன்னிறுத்தியே எடுக்கப்பட்டவை. ஆனால் கூர்ம அவதாரம், மற்றவர்களின் நலனுக்காக திருமாலால் எடுக்கப்பட்டது. எனவே தான் மற்ற அவதாரங்களில் இருந்து கூர்ம அவதாரம், வேறுபட்டு நிற்கிறது.

    துர்வாச முனிவரின் சாபம் காரணமாக, இந்திரன் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து, தேவர்கள் அனைவரும் அசுரர்களிடம் தோல்வியடையும் நிலை உருவானது. இதையடுத்து தேவர்களுக்கு, மகாவிஷ்ணு ஒரு உபாயம் சொன்னார். அதன்படி திருப்பாற்கடலை, மந்தார மலையைக் கொண்டு வாசுகி பாம்பை கயிறாக வைத்து கடைந்தால், அமிர்தம் கிடைக்கும். அதைப் பருகுவதால், தேவர்களின் வெற்றி சாத்தியப்படும் என்று கூறினார்.

    ஆனால் பாற்கடலை கடைவதற்கு அசுரர்களின் உதவியும் தேவைப்பட்டது. இதையடுத்து தேவர்கள், அசுரர்கள் இணைந்து, திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது மந்தார மலை சரியத் தொடங்கியது. இதையடுத்து மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, கடலுக்கடியில் சென்று மந்தார மலையை தாங்கிக்கொண்டார். இதையடுத்து திருப்பாற்கடலில் இருந்து பல பொருட்களும், அப்ரசஸ்களும், தெய்வ சக்தி பெற்றவர்களும் வெளிப்பட்டனர். இப்படி தேவர்களுக்கும், மக்களுக்கும் நன்மை அளிப்பதற்காக எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.

    தமிழ்நாட்டில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில், தசாவதார சன்னிதியில் கூர்மநாதரை தரிசிக்கலாம். அதே போல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் உள்ள தசாவதார சன்னிதியிலும் கூர்மநாதர் அருள்கிறார். ஆனால் கூர்மநாதருக்கு தனிக்கோவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்கான ஒரே கோவிலாக இது மட்டுமே திகழ்கிறது. இந்த ஆலயத்தில் கூர்மநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். தாயாரின் திருநாமம், கூர்மநாயகி என்பதாகும்.

    தல வரலாறு

    ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதனின் மனைவி விஷ்ணு ப்ரியா. இவள் திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஸ்வேத மன்னன், மனைவியை தாம்பத்யம் வைத்துக் கொள்ள அழைத்தான். ‘தான் விரதம் இருப்பது தெரிந்தும் மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே. இவரால் விரதத்திற்கு பங்கம் வரக்கூடாதே’ என்று நினைத்தவள், மானசீகமாக திருமாலை வணங்கினாள். அப்போது திடீரென தம்பதியர் இடையே ஒரு நதி உருவாகி ஓடியது.

    அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், “மாதவா! நான் இந்த ஆற்றைக் கடக்க, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்” என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி, ‘ஸ்வேத புஷ்கரணி’யாக மாறியது.

    இத்தல இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்கிராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. இந்தத் திருத்தலம் முன்காலத்தில் ‘கூர்ம லிங்கேஸ்வரம்’, ‘பஞ்சலிங்க ஆத்மேஸ்வரம்’ என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம (ஆமை) வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க நினைத்தார். ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் அமைந்திருந்த கொடிமரம் அருகே சென்றவர், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது, கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டார். கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள், அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக எண்ணி ஆராதிக்கத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    அமைவிடம்

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீகாகுளம். இங்கிருந்து நெடுஞ்சாலையில் அம்புக் குறியிடப்பட்ட பாதையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மூன்று நாட்கள் நடக்கும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இதில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் வீதி உலா வந்தனர்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மூன்று நாட்கள் நடக்கும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று சத கலச சொப்னம் மற்றும் மகாசாந்தி ஹோமம் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம், ஸ்னபன திருமஞ்சனம் நிகழ்த்தினர்.

    பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர், சுவாமியின் கவசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கவசம் அணிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் வீதி உலா வந்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் உதவி செயல் அலுவலர் ரவிக்குமார் ரெட்டி, கண்காணிப்பாளர் வெங்கடாத்ரி மற்றும் கோவில் ஆய்வாளர் முனீந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
    இறப்பவருக்கு முக்திதரும் காசியை விடவும், பிறப்பவருக்கு முக்தி நல்கும் திருவாரூரை விடவும் பெருமை மிகுந்த சிராமலைபோல அருமை வாய்ந்த திருத்தலம்,
    திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் தாயுமானசுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. பழமையான சிவாலயமான இத்திருத்தலம், 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலம். தென் கயிலாயம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இறப்பவருக்கு முக்திதரும் காசியை விடவும், பிறப்பவருக்கு முக்தி நல்கும் திருவாரூரை விடவும் பெருமை மிகுந்த சிராமலைபோல அருமை வாய்ந்த திருத்தலம் அவனியில் வேறு எங்கும் இல்லை என்னும் சிறப்பினைக் கொண்டது இத்திருத்தலம். பெண்களுக்கு சுகப் பிரசவம் அருளும் சிறப்புவாய்ந்த கோயிலாகத் திகழ்கிறது.

    இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை. இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது.

    இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால், இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரகத் தோஷங்கள் நீங்கும். மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது, மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். மலைப்பாறையாகத் தோற்றமளிக்கும் இத்தலத்தில் மலையை குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும், மேல்நிலையில் ஒரு குடைவரைக்கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்கப்பெற்றுள்ளன. அவைகளில் காணப்பெறும் கல்லெழுத்துக்கள், தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது.

    இம்மலையில், மூன்று தலைகளுடைய “திரிசிரன்’ என்னும் அசுரன், சிவனை வேண்டி தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். அசுரனின் பெயராலேயே, “திரிசிரநாதர்’ என்று பெயர் பெற்றார். இத்தலம் “திரிச்சிராமலை’ என்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது.

    கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது.

    சிவன் சன்னதி பிரகாரத்தில் மகாலட்சுமி, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது சிலை மரத்தில் செய்யப்பட்டதாகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவளுக்கு பால், தேன், குங்குமப்பூ சேர்ந்த கலவையை படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். வெள்ளி தோறும் இவளுக்கு “ஸ்ரீவேத சூக்த மந்திர ஹோமம்’ நடத்தப்படுகிறது. மற்றோர் சன்னதியில் மரத்தில் செய்யப்பெற்ற, துர்க்கையும் காட்சி தருகிறாள்.

    பிரகாரத்தில் அருகில் சாரமா முனிவர் வணங்கியபடி இருக்க விஷ்ணு துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு ராகு காலத்தில் செவ்வரளி மாலை அணிவித்து, பாயசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். சித்திரை பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது. அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பிணிப்பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர். அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்துவிடுவர். இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபராதனை காட்டுவர். இந்த வைபவத்தின் போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும், மருந்து மற்றும் தைலமே பிரசாதமாக தரப்படும். இதைச் சாப்பிடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

    கோயில் கொடிமரத்திற்கும், பலி பீடத்திற்கும் இடையில் கையில் சங்கு வைத்து ஊதியபடி சிவகணம் ஒன்று இருக்கிறது. இதை, “சங்குச்சாமி’ என்று அழைக்கிறார்கள். இவர் எப்போதும் சிவனின் பெருமைகளை சங்கு ஊதியபடி சொல்லிக் கொண்டிருப்பாராம். எனவே இவர், கையில் சங்குடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவருக்கு, “சங்கநாதர்’ என்றும் பெயருண்டு. சிவன் இக்கோயிலில் இருந்து புறப்பாடாகும் வேளையில், இவர் சங்கு ஊதி அறிவிப்பார் என்றும் சொல்வதுண்டு.

    இத்தலத்தில் மலையே சிவனாகக் கருதி வழிபடப்படுவதால், மலைக்கு நேரே அடிவாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பெரிய நந்தி சிலை அமைத்து, தனிக்கோயில் எழுப்பியுள்ளனர். நந்திக்கோயில் என்றழைக்கப்படும் இங்கு, பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நந்திக்கு பின்புறத்தில், மலையின் அளவிற்கேற்ப சுமார் 35 அடி உயரத்தில் கல் தீபஸ்தம்பம் ஒன்று இருக்கிறது.

    திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. சுகப் பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்தில் அமைந்துள்ள சிவன் மற்றும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்தும், வஸ்திரம் அணிவித்தும், வாழைத்தார் படைத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆடிமாதம் நடைபெறும் களப பூஜையும் தொடங்கியது. இந்த களப பூஜை வருகிற 30-ந்தேதி வரை 13 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்தகோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடக்கத்தில் கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்கியதையொட்டி கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெற்றது.

    இதையொட்டி கோவிலில் நடைபெறும் நித்திய காரியபூஜைகள் முடிந்த பின் மாலை 6-30 மணிக்கு மேல் ரி‌ஷப வாகனத்தில் சிவபெருமானையும் கருட வாகனத்தில் பெருமாளையும் எழுந்தருளச்செய்து கோவிலை சுற்றிலும் 3 முறை ஸ்ரீபலி நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து ஆடிமாதம் நடைபெறும் களப பூஜையும் தொடங்கியது. இந்தகளப பூஜை வருகிற 30-ந்தேதி வரை 13 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை நடைபெறும் வழி பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் 10 மணிக்கு தாணுமாலய சாமி சன்னதியில் களப பூஜை நடை பெறுகிறது. நறுமணங்கள் கலந்த சந்த னத்தை அரைத்து தாணு மாலயசாமிக்கு அபிஷே கமும் அதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் செல்வ ராஜ் தலைமையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மேலாளர் சண்முகம் பிள்ளை செய்து வருகிறார்.
    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவிலில் இன்று(செவ்வாய்க்கிழமை) மூலவர் சாரங்கபாணிக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டு 48 நாட்களுக்கு திருமுக மண்டல தரிசன சேவை நடக்கிறது.
    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவம் 7 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு பவித்ரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.

    இதில் உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று குறையவும், விவசாயம், வணிகம் பெருகவும் வழிபாடு நடைபெற்றது. பவித்ரோத்சவத்தின் நிறைவாக நேற்று உதய கருட சேவை நடந்தது. விழாவில் உற்சவர் ஆராவமுத பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் செல்வர் மூர்த்திக்கு தீர்த்தவாரி, மாலையில் உற்சவருக்கு திருமஞ்சனும் நடந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) மூலவர் சாரங்கபாணிக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டு 48 நாட்களுக்கு திருமுக மண்டல தரிசன சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    பழமை வாய்ந்த மூவர்கண்டியம்மன் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சோமவாரப்பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த மூவர்கண்டியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் வடபுறம் உள்ள ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீபகம்பம்அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் கிழக்குபுறத்தில் திண்ணை மண்டபம் அமைந்துள்ளது. வடக்கு பிரகாரத்தில் உள்ள வாயில் நுழையும் போது கல்யாண மண்டபம் அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது. சிற்ப கட்டிட வேலைப்பாடுகள் நிறைந்த மூவர் கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தூண்களிலும் சிற்பக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையில் நடுவிலும் சிற்பங்கள் காணப்படுகிறது. கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து கருவறை மண்டபத்தில் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களில் காவல் தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகிறது.மண்டபத்தின் மீது அமைந்துள்ள கோபுரத்தின் மீது வடிவமைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் இயற்கை சீற்றங்களாலும் போதிய பராமரிப்பின்றி சிதைந்து காணப்படுகிறது. சோமவாரபட்டியில் புகழ்பெற்ற மூவர் கண்டியம்மன் கோவிலை சீரமைக்க தொல்லியல் துறை அதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்தும் இதுவரை எந்தவித பணியும் நடைபெறாமல் உள்ளது.இதனால் கோவில் சிதிலமடைந்து வருகிறது.

    கோவில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்பதற்காகவே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன . ஆனால் காலம் தாழ்த்துவதால் கோவில் சிதிலமடைந்து வருகிறது.பொதுமக்கள் தங்களது பங்களிப்போடு கோவிலை சுற்றி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.12ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கோவில் கும்பாபிஷேகத்தின் போது கோவிலைசுற்றியுள்ள பகுதிகள் பராமரிக்கப்பட்டு வர்ணம் பூசப்படுகிறது. சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோவில் நூற்றாண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் நடைபெறமல்உள்ளது. கண்டியம்மன் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இன்று ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை வழிபாட்டுக்கு தடை விதித்து, பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    குமரி மாவட்டத்தில் ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால் அம்மன் கோவில்களில் கூட்டம் அலை மோதும்.

    அதன்படி, இந்த ஆண்டு ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்து, அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து, அவ்வையார் அம்மன் கோவில் வளாகத்திலேயே கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்து அம்மனுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால், அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை அவித்து படைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவ்வையார் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனமும் பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6 மணிக்கு தீபாராதனையும், 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும், உஷ கால பூஜையும் தீபாராதனையும் நடைபெறுகிறது. 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க மூன்று முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இதே போல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    ×