search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாயுமானசுவாமி திருக்கோவில்
    X
    தாயுமானசுவாமி திருக்கோவில்

    இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்த தாயுமானசுவாமி திருக்கோவில்

    இறப்பவருக்கு முக்திதரும் காசியை விடவும், பிறப்பவருக்கு முக்தி நல்கும் திருவாரூரை விடவும் பெருமை மிகுந்த சிராமலைபோல அருமை வாய்ந்த திருத்தலம்,
    திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் தாயுமானசுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. பழமையான சிவாலயமான இத்திருத்தலம், 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலம். தென் கயிலாயம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இறப்பவருக்கு முக்திதரும் காசியை விடவும், பிறப்பவருக்கு முக்தி நல்கும் திருவாரூரை விடவும் பெருமை மிகுந்த சிராமலைபோல அருமை வாய்ந்த திருத்தலம் அவனியில் வேறு எங்கும் இல்லை என்னும் சிறப்பினைக் கொண்டது இத்திருத்தலம். பெண்களுக்கு சுகப் பிரசவம் அருளும் சிறப்புவாய்ந்த கோயிலாகத் திகழ்கிறது.

    இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை. இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது.

    இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால், இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரகத் தோஷங்கள் நீங்கும். மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது, மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். மலைப்பாறையாகத் தோற்றமளிக்கும் இத்தலத்தில் மலையை குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும், மேல்நிலையில் ஒரு குடைவரைக்கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்கப்பெற்றுள்ளன. அவைகளில் காணப்பெறும் கல்லெழுத்துக்கள், தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது.

    இம்மலையில், மூன்று தலைகளுடைய “திரிசிரன்’ என்னும் அசுரன், சிவனை வேண்டி தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். அசுரனின் பெயராலேயே, “திரிசிரநாதர்’ என்று பெயர் பெற்றார். இத்தலம் “திரிச்சிராமலை’ என்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது.

    கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது.

    சிவன் சன்னதி பிரகாரத்தில் மகாலட்சுமி, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது சிலை மரத்தில் செய்யப்பட்டதாகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவளுக்கு பால், தேன், குங்குமப்பூ சேர்ந்த கலவையை படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். வெள்ளி தோறும் இவளுக்கு “ஸ்ரீவேத சூக்த மந்திர ஹோமம்’ நடத்தப்படுகிறது. மற்றோர் சன்னதியில் மரத்தில் செய்யப்பெற்ற, துர்க்கையும் காட்சி தருகிறாள்.

    பிரகாரத்தில் அருகில் சாரமா முனிவர் வணங்கியபடி இருக்க விஷ்ணு துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு ராகு காலத்தில் செவ்வரளி மாலை அணிவித்து, பாயசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். சித்திரை பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது. அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பிணிப்பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர். அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்துவிடுவர். இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபராதனை காட்டுவர். இந்த வைபவத்தின் போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும், மருந்து மற்றும் தைலமே பிரசாதமாக தரப்படும். இதைச் சாப்பிடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

    கோயில் கொடிமரத்திற்கும், பலி பீடத்திற்கும் இடையில் கையில் சங்கு வைத்து ஊதியபடி சிவகணம் ஒன்று இருக்கிறது. இதை, “சங்குச்சாமி’ என்று அழைக்கிறார்கள். இவர் எப்போதும் சிவனின் பெருமைகளை சங்கு ஊதியபடி சொல்லிக் கொண்டிருப்பாராம். எனவே இவர், கையில் சங்குடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவருக்கு, “சங்கநாதர்’ என்றும் பெயருண்டு. சிவன் இக்கோயிலில் இருந்து புறப்பாடாகும் வேளையில், இவர் சங்கு ஊதி அறிவிப்பார் என்றும் சொல்வதுண்டு.

    இத்தலத்தில் மலையே சிவனாகக் கருதி வழிபடப்படுவதால், மலைக்கு நேரே அடிவாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பெரிய நந்தி சிலை அமைத்து, தனிக்கோயில் எழுப்பியுள்ளனர். நந்திக்கோயில் என்றழைக்கப்படும் இங்கு, பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நந்திக்கு பின்புறத்தில், மலையின் அளவிற்கேற்ப சுமார் 35 அடி உயரத்தில் கல் தீபஸ்தம்பம் ஒன்று இருக்கிறது.

    திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. சுகப் பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்தில் அமைந்துள்ள சிவன் மற்றும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்தும், வஸ்திரம் அணிவித்தும், வாழைத்தார் படைத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
    Next Story
    ×