என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு களப அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    பேராவூரணி ஆதனூர் பாதுகாவலர் புனித அன்னாள் ஆலய தேர்பவனி கொரோனா ஊரடங்கு காரணமாக ஆலய வளாகத்திற்குள் எளிமையான முறையில் நடைபெற்றது.
    பேராவூரணி அருகே ஆதனூர் பாதுகாவலர் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 17-ந்தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் தினமும் திருப்பலி நடைபெற்றது. ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்பவனி ஆலய வளாகத்திற்குள் எளிமையான முறையில் நடைபெற்றது.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழா நிறைவு பெற்றது.
    மதுக்கூரில் பெரமையா கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிமாதம் திங்கட்கிழமை திருவிழா கொரோனா ஊரடங்கால் எளிமையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
    மதுக்கூர் பகுதியில் மதுக்கூர், மதுக்கூர் வடக்கு, சிராங்குடி, விக்ரமம், மூத்தாக்குறிச்சி ஆகிய பகுதியில் பெரமையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் திங்கட்கிழமை தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று இந்த ஆண்டுக்கான ஆடிமாதம் திங்கட்கிழமை திருவிழா கொரோனா ஊரடங்கால் எளிமையாக நடந்தது.

    இதையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அதனை தொடர்ந்து தங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் கால்நடைகள் நலமுடன் இருக்க வேண்டி மதலை எனப்படும் மண்ணால் செய்த உருவங்களை வாங்கி பாதயாத்திரையாக பெரமையா தோன்றிய இடமான மதுக்கூரில் உள்ள தளியகுளத்தில் வைத்து வழிபட்டனர்.
    ஜூலை மாதம் 27-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    27-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சங்கடஹர சதுர்த்தி
    * வாஸ்து நாள்(காலை 7..44 முதல் 8.20 மணி வரை வாஸ்து நேரம்)
    * வடமதுரை சவுந்திரராஜர் பவனி
    * சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

    28-ம் தேதி புதன் கிழமை :
     
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பவனி
    * திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்
    * பஞ்சமி திதி
    * சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
     
    29-ம் தேதி வியாழக்கிழமை :

    * திருப்பதி ஏழுமலையான் எழுந்தருளல்
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பவனி
    * சந்திராஷ்டமம்- மகம், பூரம்

    30-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பவனி
    * சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்

    31-ம் தேதி சனிக்கிழமை :

    * திருவள்ளூர் வீரராகவர் திருமஞ்சனம்
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்

    1-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * திருத்தணி முருகப்பெருமான் பரணி விழா
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் விழா தொடக்கம்
    * சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை

    2-ம் தேதி திங்கள் கிழமை  :

    * திருத்தணி முருகப்பெருமான் தெப்பத்திருவிழா
    * சென்னை கந்தகோட்டம் முருகன் வெள்ளி தேரோட்டம்
    * சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
    கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் 30-வது ஆண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் 30-வது ஆண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.

    இதையொட்டி தினமும் கோவிலில் வேத பாராயணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, பஞ்ச சூக்த ஹோமம், திருமஞ்சனம் மற்றும் பெருமாள் ஏகாந்த சேவையாக உள்பிரகார புறப்பாடு நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி மாவட்டத்தில் உள்ளது, ஊட்டத்தூர் திருத்தலம். 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்தக் கோவில், பிரம்மதேவனால் வழிபாடு செய்யப்பட்டது என்று ஆலய வரலாறு சொல்கிறது.
    திருச்சி மாவட்டத்தில் உள்ளது, ஊட்டத்தூர் திருத்தலம். இங்கு அகிலாண்டேஸ்வரி உடனாய சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்தக் கோவில், பிரம்மதேவனால் வழிபாடு செய்யப்பட்டது என்று ஆலய வரலாறு சொல்கிறது. திருச்சியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாடலூர். இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால், ஊட்டத்தூரை அடையலாம். இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

    பிரம்மன் வழிபட்ட தலம்

    ஒரு முறை பிரம்மனுக்கு சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க, பிரம்மதேவன் இந்தத் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவபெருமானை வழிபாடு செய்து, சாபம் நீங்கப் பெற்றார். பிரம்மனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம், ‘பிரம்ம தீ்ர்த்தம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் பல்வேறு வியாதிகள் நீங்குவதாக நம்பப்படுகிறது. மூலவர் முன்பாக உள்ள மகா மண்டபத்தின் எதிரில் இருக்கும் பிரம்ம தீர்த்தம், கோடை காலத்திலும், மழை இல்லாத காலத்திலும் வற்றாமல் இருப்பது இறைவனின் திருவருளால் நடக்கும் அற்புதமாகும். இந்த தீர்த்தமே இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது.

    பஞ்சநதன நடராஜர்

    இந்த ஆலயத்தில் சுமாா் 8 அடி உயரம் கொண்ட நடராஜர் திருமேனி உள்ளது. கல்லால் ஆன மிகப்பெரிய நடராஜ உருவத்தில் இதுவும் ஒன்று. இவருக்கு தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடைபெறும். ஆலிங்க நதனம், பஞ்ச நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று ஐவகையான நதனக் கற்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் சிறப்பு வாய்ந்த பஞ்ச நதனக் கல்லால் ஆனது, இந்த நடராஜர் திருமேனி. சாபம் காரணமாக, தான் இழந்த இந்திரலோக பதவியை, இந்த நடராஜரை வழிபட்டுதான் இந்திரன் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. சிறுநீரக பாதிப்பை நீக்கும் சக்தி படைத்தவராக, இந்த பஞ்ச நதன நடராஜர் திகழ்கிறார். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், ஒரு கிலோ வெட்டி வேரை வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாக கோர்க்க வேண்டும். பின்னர் நடராஜருக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் உள்ள நீரை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தினமும் ஒரு துண்டு வெட்டி வேரை, பிரம்ம தீர்த்தத்தில் ஊறவைத்து, அதன் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) இவ்வாறு செய்வதால், சிறுநீரக நோய் பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராஜராஜனால் அமைக்கப்பட்ட ஆலயம்

    ஊட்டத்தூரின் மேற்குப் பகுதியில் சோழேசுவரர் என்ற மேட்டுக்கோவிலை, ராஜராஜ சோழன் கட்டியிருந்தார். வில்வ வனத்தின் ஒரு பகுதியில் அமைந்த இந்த ஆலயத்திற்கு ராஜராஜ சோழன் அவ்வப்போது வருவதுண்டு. அதுபோன்ற நேரங்களில், மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி, முட்புதர் மற்றும் வளர்ந்த புற்களை அகற்றும் பணி நடைபெறும். அப்படி ஒருமுறை நடந்து கொண்டிருந்த பணியின் போது, ஓாிடத்ைத பணியாளா்கள் மண்வெட்டியால் வெட்ட, அதில் இருந்து ரத்தம் பீரிட்டது. தகவல் கிடைத்து அங்கு வந்த மன்னன், ரத்தம் வந்த இடத்தை சுற்றிலும் புதர்களை நீக்கச் சொன்னார். அந்த இடத்தில் பழமையான சிவலிங்கம் ஒன்று வெட்டுத் தழும்போடு காட்சியளித்தது. அந்த இடத்திலேயே கோவில் அமைக்க மன்னன் உத்தரவிட்டார். அதுவே ஊட்டத்தூர் அகிலாண்டேசுவரி உடனாய சுத்தரத் தினேசுவரர் திருக்கோவில் ஆகும். லிங்கத்தின் தலைப்பகுதியில் உள்ள வெட்டுக் காயத்தை இன்றும் நாம் காண முடியும்.

    நந்தியாறு நந்திகேசுவரர்

    சிவாலயங்களில் இருக்கும் நந்தி, பெரும்பாலும் மூலவரைப் பார்த்து மேற்கு நோக்கித்தான் காட்சியளிப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள நந்தியாறு நந்திகேசுவரர், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். ஒரு முறை கங்கை, யமுனை, கோதாவரி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளுக்குள், ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அதனால் சிவபெருமான், நந்தியெம்பெருமானிடம் ‘அனைத்து நதிகளின் நீரையும் குடித்துப் பார்க்க வேண்டும். குடிக்க முடியாத நதிதான் பெரிய நதி’ என்று கூறினார். அதன்படி ஒவ்வொரு நதியின் நீரையும் குடித்த நந்தியெம்பெருமானால், கங்கை நதியின் நீரைக் குடிக்க முடியவில்லை. அந்த வகையில் கங்கையே பெரிய நதி என்று அறிவிக்கப்பட்டது.

    இறந்தவரின் அஸ்தியை இத்திருக்கோவிலுக்கு அருகிலுள்ள ஆற்றில் கரைத்த போது, அது புஷ்பமாக மாறியது. அதன்படி கங்கையை விடவும் சக்தி வாய்ந்தது நந்தியாறு என்று ஈசன் அருளினாா். இதன் காரணமாகவே நந்தியாறு செல்லும் கிழக்கு திசை நோக்கி நந்தியம்பெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. நந்தியின் பெயரும் ‘நந்தியாறு நந்திகேஸ்வரர்’ என்றானது.
    பக்தர்கள் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் கொடிமரம் முன்பு அமர்ந்து கல்வாழைக்கு பரிகாரம் செய்தும், எமனுக்கு பூஜைகள் செய்தும் பயபக்தியுடன் சாமியை வணங்கினர்.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் எமனுக்கு என்று தனிசன்னதி உள்ளது. மேலும், திருமணமாகாதவர்களுக்கு இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக இக்கோவிலுக்கு ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் பரிகாரம் செய்வதற்கும் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காகவும் எமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    ஊரடங்கு காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், பலர் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யமுடியாமல் தவித்தனா். தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாதங்களுக்குப் பின்னர் கோவில் திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலில் பரிகாரம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கிடைத்த தகவலால் நேற்று திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் காலையிலேயே வரத்தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் கோவில் கொடிமரம் முன்பு அமர்ந்து கல்வாழைக்கு பரிகாரம் செய்தும், எமனுக்கு பூஜைகள் செய்தும் பயபக்தியுடன் சாமியை வணங்கினர்.

    கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வரும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது மக்களைக் காக்கும் வகையில் அரசாங்கம், வெளியில் பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து தான் செல்ல வேண்டும், கைகளில் சானிடைசர் தெளித்துக் கொள்ளவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது.

    இந்திநலையில் நேற்று கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் முககவசம் அணியாமலேயே வந்ததைக் காண முடிந்தது. கோவிலில் பரிகாரம் செய்வதற்கு அனுமதி அளித்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் பணியாளர்களுக்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தாதது ஏன் என்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் குமுறலோடு வேதனையை வெளிப்படுத்தினர்.

    அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மட்டுமே தினமும் 60-ம் கல்யாணம், ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்று வருகின்றன.
    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டுமே தினமும் 60-ம் கல்யாணம், ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக மேற்கண்ட அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் செய்வதற்கு அரசு தடைவிதித்தது. இதனால் கோவிலை நம்பி இருந்து வந்த கோவில் குருக்கள், புகைப்படக்காரர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பூக்கடை வியாபாரிகள், ஆட்டோ, வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் வருமானம் இன்றி தவித்து வந்தனர்.

    மேலும் இவர்கள் கோவிலில் மேற்கண்ட சிறப்பு பூஜைகளை செய்ய வேண்டி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து அனைத்து யாக பூஜைகளும் தொடங்கின. இதில் ஏராளமான பக்தர்கள் 60-ம் வயது திருமணம் உள்ளிட்ட மேற்கண்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு 60-ம் திருமணம் செய்தனர்.
    பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!
    எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ... அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.

    அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!    

    அந்த புஷ்பாஞ்சலி ஸ்லோகம் இதுதான்!

    யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
    பிரஜாவான் பசுமான் பவதி   சந்த்ரமாவா
    அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி
    கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்திருவிழா முக்கியமானது. இந்த கோவிலில் ஆடித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்திருவிழா முக்கியமானது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆடி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்தில் ஒவ்வொரு நாளும் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட ஒவ்வொரு வாகனத்திலும் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சனிக்கிழமை நடைபெற வேண்டிய தேரோட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் ஆடித்திருவிழாவையொட்டி கோட்டைவாசல் முன்பாக உள்ள மதுரை, மேலூர் சாலைகளின் இருபுறமும் கிடாய் வெட்டியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து கள்ளழகர் கோவிலிலும், பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலிலும் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதைப்போலவே சோலைமலை முருகன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து வழக்கம்போல் கோவில் உள் பிரகாரத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    தேரோட்டம் நேற்று ரத்து செய்யப்பட்ட காரணத்தால் கோவில் உள்பிரகாரத்தில் பரிகார பூஜைகளும் நடந்தது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சத்திரப்பட்டி, அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.

    மேலும் நேற்று மாலையில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பூ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி நடந்தது. இதில் பட்டர்களும், கோவில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
    அருள்மிகு கோரக்கநாதர் ஆலயம், ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
    உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் ஒருவர் ‘அத்ரி மகரிஷி’. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர்.

    தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு ‘அத்ரிமலை’ என்றும் பெயருண்டு.

    திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி தபோவனத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.

    அத்ரியின் முதன்மை சீடராக விளங்கிய கோரக்கர், பதிணென் சித்தர்களில் ஒருவராவார். இங்குள்ள மலையில் இன்றும் கோரக்கர் உலாவருவதாக நம்பப்படுகிறது. அதனால் ‘கோரக்கர் மலை’ என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது. (கோ+இரக்கன் = கோரக்கன். பசுவை போன்ற கருணை உள்ளவன் என்று பொருள்).

    அத்ரி-அனுசுயா இருவரும் தவம் இயற்றியபடி வாழ்ந்த இடம், மும்மூர்த்திகளையும் குழந்தையாக தவழச் செய்து, தத்தாத்ரேயரை பெற்ற இடம். பிருகு முனிவர், சிவனையும், சக்தியையும் வழிபட்ட இடம். பதிணென் சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் பல்வேறு காலங்களில் அத்ரி மகரிஷியிடம் ஆசிபெற்று தங்கிச் சென்ற இடம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது அத்ரி மலை. இந்த மலை ராமாயணம், மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

    தவத்தில் ஈடு இணையற்றவர் அத்ரி மகரிஷி என்றால், அவரின் துணைவியார் அனுசுயா தவத்திலும், பதிவிரதையிலும் ஒப்பில்லாதவர். இவர்களின் சிறப்புத் தன்மையை உலகுக்கு உணர்த்த இறைவன் சித்தம் கொண்டார்.

    அத்ரி கடுமையான தவம் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அனுசுயாவிடம் பிச்சை கேட்டு மும்மூர்த்திகளும், மூன்று துறவி களாக உருமாறி வந்தனர். வந்தவர்களை வரவேற்ற அனுசுயா, மூவரையும் உணவு ஏற்றிட வேண்டினாள். அதற்கு சம்மதித்த துறவிகள், நாங்கள் நிர்வாணமாக இருந்துதான் உணவு ஏற்போம் என்று நிபந்தனை விதித்தனர்.

    சரியென்று சம்மதித்த அனுசுயா, தனது பதிவிரத சக்தியால் மும்மூர்த்திகள் மீது தண்ணீரைத் தெளித்து, அவர்களை குழந்தையாக மாற்றினாள். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி மகிழ்ந்தாள்.

    அப்போது இருப்பிடம் திரும்பி வந்த அத்ரி மகரிஷி நடந்ததை அறிந்தார். மும்மூர்த்திகளும், குழந்தையாக உருமாறி இருப்பதை பார்த்தார்.

    இந்த நிலையில் கணவர்களை தேடி வந்த முப்பெரும் தேவியர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தைகளாக இருந்த மூன்று தெய்வங்களையும் மீண்டும் உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அனுசுயாவின் வேண்டுதலை ஏற்று, முப்பெருந் தேவர்களும், முப்பெரும் தேவியரும் அங்கு அமர்ந்து உணவருந்தினர். பின் அவர்களிடம் வேண்டி, முப்பெரும் தேவர்களையும் தன் மகனாகும் வரம்கேட்டுப் பெற்றாள் அனுசுயா. அதன்படி மூவரும் ஓருருவாக தத்தாத்ரேயர் வடிவில் பிறந்தனர் என்பது புராண வரலாறு.

    சதுரகிரியில் தங்கியிருந்த கோரக்கரின் மனம், அத்ரி மகரிஷியின் தரிசனம் காண விரும்பியது. இதனையடுத்து அங்கிருந்து அத்ரி மலைக்கு வந்தார். மலையில் கடனா நதிக்கு கீழ் புறம் தங்கியிருந்து தவம் செய்தார். அந்த நேரத்தில் சிவசைலநாதர் அங்கு வந்தார். அவரை அத்ரி மக ரிஷி என்று நினைத்து வணங்கினார் கோரக்கர். ஆனால் சிவசைலநாதர், கோரக்கருக்கு அத்ரி மகரிஷியை காட்டி அருளினார்.

    குருபக்தியில் சிறந்து விளங்கிய கோரக்கர், அத்ரியின் பிரதான சீடரானார். ஒரு சமயம் பூஜைக்கான மலர்களை பறிப்பதற்காக வனத்திற்குள் சென்றார் கோரக்கர். அப்போது அத்ரி தபோவனத்தில் இருந்து கிழக்கே சிவசைலத்தில் எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சிவனை தரிசித்தார். தான் கண்ட காட்சியை குருநாதர் அத்ரியிடம் கூறினார். அத்ரி மகரிஷியும், பரமேஸ்வரனை அங்கேயே வேண்டி எழுந்தருள செய்து வழிபட்டார். அத்ரியால் வந்ததால் இறைவன் ‘அத்ரி பரமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘அத்ரி பரமேஸ்வரி’ என்றும் அழைக்கப்பட்டனர். கோரக்கர் விருப்பத்தில் வந்ததால் இந்த ஆலயம் ‘கோரக்கநாதர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது.

    பிருகு முனிவர் ஒருமுறை இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்தார். அத்தருணம் சிவன் தோன்றி, தம்முடன் சக்தியையும் சேர்த்து பிரார்த்தித்து தவம் செய்யுமாறு கூறினார். அதன்படியே பிருகு முனிவர் தவம் செய்தார். 8 பட்டை வடிவ லிங்க திருமேனியுடன் சக்தி காட்சி அளித்தாள். சிவனும், சக்தியும் ஒரே சன்னிதியில் லிங்க வடிவில் காட்சி தருவது அத்ரி மலையில் மட்டுமே. சக்தி லிங்கத்தில் எட்டு பட்டை வடிவுடன் சூலம் காணப்படும். 8 பட்டைகள், அஷ்டமா சித்திகளை குறிப்பதாகும்.

    இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

    மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கடைசி வெள்ளி மற்றும் தமிழ் வருடப்பிறப்பாகிய சித்திரை முதல்நாள், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு-கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.

    சிவன் கோவிலுக்கு அருகே பாலை மரம் என்றொரு அரிய வகை மரம் உள்ளது.  இந்த மரத்தில் இருந்து வருடா வருடம் அதிசயிக்கும் வகையில் ஒரு பன்னீர் மழை பொழிகிறது.  பங்குனி மாதத்தில் கடைசி 5 நாட்கள், சித்திரையில் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் ஏதாவது 2 நாள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒரு வகையான வண்டுகள் வந்து அமர்கின்றன.  அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றது.  அதைப் பார்க்கையில் அந்த மரத்தில் இருந்து மட்டும் மழை பொழிவது போல காட்சி அளிக்கிறது. வண்டுகளால் பீய்ச்சி அடிக்கப்பட்ட அந்த திரவத்தை நுகர்ந்து பார்த்தால் அது பன்னீர் வாசனையில் உள்ளது. ஆனால் அது மிக விரைவில் காய்ந்து விடுகிறது. மரத்தின் அடியில் நின்று பார்த்தால் ஒரு வண்டு கூட கண்களுக்குத் தெரிவதில்லை.

    இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.
    பழனி ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அதுமட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதபிறப்பு, கார்த்திகை, வார விடுமுறை உள்ளிட்ட நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அதிகாலை முதலே பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நுழையும் இடமான குடமுழுக்கு நினைவரங்கம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    தற்போது பழனி ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் மலைக்கோவிலில் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
    ×