என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் மாதவனின் மகன் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துக் கொண்டு 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அலைபாயுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். சமீபத்தில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களில் நடித்து இருந்தார்.
மாதவனின் மகன் வேதாந்த், தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்று, மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
இந்த தகவலை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில் வேதாந்த் வெற்றி பெற்ற தருணம், மதிப்பெண் அட்டவணை ஆகியவை அடங்கிய வீடியோவும், பதக்கங்களுடன் வேதாந்த் இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து மாதவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
’உங்கள் அனைவருடைய ஆசீர்வாதம், நல்வாழ்த்துக்கள் மற்றும் கடவுளின் அருளோடு, வேதாந்த் மீண்டும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தி உள்ளார். தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஜூனியர் பிரிவில், 3 தங்க பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இது அவர் தனித்து வென்ற முதல் தேசிய பதக்கங்கள். அடுத்ததாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார். அனைவருக்கும் நன்றி’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகரான டேனியல் பாலாஜி, புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், தனக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக பல கதைகள் எழுதி வைத்துள்ளதாகவும், அதனை நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லி பகிர்ந்து வருகிறார். விரைவில் புதிய கதை களத்துடன் திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தரகாண்டம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நந்தகோபால், தற்போது வறுமையில் இருப்பதை அறிந்து நடிகர் சவுந்தரராஜா உதவி செய்துள்ளார்.
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், 'டேய்... சண்முகமணி' என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர். தற்போது இவர் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு நடிகர் சவுந்தரராஜா உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பெரும்பாலான திரைப்பட நடிகர்கள் இன்னும் போராட்ட வாழ்க்கையில் தான் எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் நாம் எல்லா உதவிகள் செய்ய இயலாது., அது இயல்புதான் இருந்தாலும் மெடிக்கல் உதவிகள் பெறமுடியாதவர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அன்பையும், ஆதரவையும் கொடுப்போம்.

சகோ பிளாக் பாண்டியின் மூலம் நடிகர் நந்தகோபால் அவரின் நிலைமை அறிந்து நேரில் சென்று என்னால் இயன்ற பணத்தையும், பழங்களும் கொடுக்கும்போது அவர் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அப்போது அவர் சொன்ன வார்த்தை சீக்கிரம் குணமடைந்து நான் சாதிக்க வேண்டும் என்று கூறினார். அன்பால் இயன்றதை கொடுப்போம். உதவி செய்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்வோம் வாழவைத்து வாழ்வோம்’ என்றார்.
பாலிவுட்டில் மிகவும் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத், கதாநாயகர்கள் என்னை ஒதுக்குகிறார்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஜாக்கிசானுடன் ‘தி மித்’ என்ற சீன படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்து வந்த மல்லிகா ஷெராவத்துக்கு கடந்த 2 வருடங்களாக படங்கள் இல்லை.
நடிகர்களும் இயக்குனர்களும் அவரை ஒதுக்குவதால் தற்போது இணையதள தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திட்டமிட்டு தன்னை ஓரம்கட்டுவதாக அவர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மல்லிகா ஷெராவத் கூறியதாவது:-
“நான் சினிமாவை விட்டு விலகவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். ஆனால் என்னை நடிக்க வைக்க மறுக்கின்றனர். நான் அடிக்கடி பெண் உரிமைகள் பற்றி பேசிவருகிறேன். படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தால் நம்மிடமும் இப்படித்தான் பேசுவாள் என்று என்னை கதாநாயகர்கள் ஒதுக்குகிறார்கள்.

எனக்கு பதிலாக கதாநாயகர்கள் தங்கள் தோழிகளை நடிக்க வைக்கின்றனர். இதன் காரணமாக அதிக பட்சம் 30 பட வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன். இதனால் வருத்தம் அடையவில்லை. இது எனது வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. நான் பெண்கள் பிரச்சினையை பற்றி பேசியபோது எனக்கு நாட்டு பற்று இல்லை என்று விமர்சித்தனர். என்னை சில நடிகைகள் தாக்கியும் பேசினார்கள். நான் இந்த நாட்டை நேசிக்கிறேன்.”
இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார்.
தமிழில் முன்னணி ஹீரோவான தனுஷ் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படம் உட்பட 4 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமா இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய வெற்றி படங்களில் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் ‘ஓ பேபி’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் வரும் ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய தோழியும் பிரபல விஜே மற்றும் நடிகை ரம்யாவுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கு முன் சீமராஜா படம் வெளியாகும் முன்பு இதே போல் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பிரபல கிரிக்கெட் வீராங்கனை புரமோட் செய்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழில் கெளசல்யா கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யாவும், வில்சன் கேரக்டரில் நடித்திருந்த சிவகார்த்திகேயனும் தெலுங்கிலும் நடித்துள்ளனர். 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.
ஏற்கனவே 'கனா' திரைப்படத்தின் இடை வெளியீட்டு விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை, இந்தி நடிகரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இந்தி, மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் ஆவார்.
மலையாளத்தில் துல்கர்சல்மானுடன் நடித்த ‘பட்டம் போல’ என்பதுதான் மாளவிகாவுக்கு முதல் படம். அந்த படத்துக்கு பிறகு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய பிஹைன்ட் தி க்ளவிட்ஸ் படம் மூலம் இந்திக்கும் போனார்.

தற்போது மாளவிகா மோகனனுக்கும் இந்தியில் சஞ்சு, மன்மர்ஜியான் படங்களில் நடித்து பிரபலமான விக்கி கவுசலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இந்தி பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது. விக்கியுடன் ஏற்கனவே சில இந்தி நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விக்கியும் அவரது சகோதரர் சன்னியும் மாளவிகா வீட்டுக்கு சென்றனர். அங்கு மாளவிகாவின் தாயாரை சந்தித்து பேசினார்கள். இதன்மூலம் மாளவிகாவுக்கும் விக்கிக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று பேச்சு கிளம்பி உள்ளது.
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா - கார்த்தி நடிக்கும் படத்தில் பழம்பெரும் நடிகை நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்தில் கார்த்தி, ஜோதிகாவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நிகிலா விமல் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் இதற்குமுன் கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் பிரபல நடிகை ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தென்னிந்திய படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது ஷங்கர்-கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும், பாரிஸ் பாரிஸ் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காஜல் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை முன்னணி ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும், அது ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தினை பிரபல தெலுங்கு ஹீரோ விஷ்ணு மஞ்சு தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாராபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும்.
ஜோதிகா நடிப்பில் கௌதம் ராஜ் இயக்கத்தில் சான் ரோல்டன் இசையில் உருவாகி இருக்கும் ராட்சசி படத்தின் முன்னோட்டம்.
ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா கீதா ராணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பேட்ரிக் வில்சனும், வேரா பார்மிகா நடிப்பில் கேரி டாபர்மேன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ படத்தின் விமர்சனம்.
அனபெல், அனபெல் கிரியேஷன்ஸ் ஆகிய பட பாகங்களை தொடர்ந்து அனபெல் கம்ஸ் ஹோம் என்ற பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது.
பேட்ரிக் வில்சனும், வேரா பார்மிகா இருவரும் பல பேய்களின் ஆன்மாக்களை தங்களுடைய வீட்டிற்குள் அடைத்து வைக்கிறார்கள். இதில் அனபெல் பொம்மையில் இருக்கும் பேயை வீட்டிற்குள் கொண்டு வந்து அடைக்கிறார்கள். அப்போது தன் மகளுடன் கூடிய மூன்று சிறுமிகளை வீட்டில் தனியாக விட்டு வெளியே செல்கிறார்கள்.

அந்த மூன்று சிறுமிகளும், பேய்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்று அனபெல் இருக்கும் கண்ணாடி அறையை திறந்து விட்டுவிடுகிறார்கள். வெளியே வரும் அனபெல் வீட்டில் இருக்கும் மற்ற பேய்களையும் எழுப்பி விட்டுவிடுகிறது.
இறுதியில் அனபெல்லை மீண்டும் கண்ணாடி அறைக்குள் அடைத்தார்களா? சிறுமிகள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பேய் படங்கள் என்றாலே ஹாலிவுட் படங்கள் தான் என்று மீண்டும் இப்படம் மூலம் நிருபித்திருக்கிறார்கள். பேய் வரும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் அப்படியே ஒரு நிமிடம் நிற்பது போல் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கேரி டாபர்மேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மெதுவாக தொடங்கும் திரைக்கதை போகப்போக வேகம் பிடிக்கிறது. பல காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பவர்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். மைக்கேல் பர்கெசின் ஒளிப்பதிவும், ஜோசப் பிஷாராவின் இசையும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ மிரட்டல்.






