என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்.ஜி.கே. படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    சூர்யா, சாயிஷா

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'காப்பான்' படத்தின் சிங்கிள் டிராக் 'சிறுக்கி' பாடல் சமீபத்தில் ரிலீசாகி ஹிட் ஆனது. இதனையடுத்து இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பு நாளை (ஜூலை 17) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சுப்பு இயக்கத்தில் சுமன், அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘உணர்வு’ படத்தின் முன்னோட்டம்.
    சுப்பு இயக்கத்தில் புதுமுகங்கள் அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உணர்வு’. உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவித டயலாக்கும் இல்லாமல் சமீபத்தில் வெளியான உணர்வு படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. 

    சுமன்

    பல சர்வதேச படவிழாக்களில் திரையிட்டு நிறைய விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தை நயன்த் எலிவேஷன் நிறுவனத்தின் சார்பில் ஜே.சேகர் தயாரித்துள்ளார். நகுல் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டேவிட் ஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சுமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் ஜோதிகா மீது சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
    ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராட்சசி' படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்தாமல் கதை புத்தங்கள் படிப்பது, செல்போனில் முடங்கி கிடப்பது, மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. 

    அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. இந்த வசனமும், காட்சிகளும் உண்மையாக உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியது.

    ஜோதிகா

    இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- 

    ஜோதிகா நடிப்பில் வெளி யாகி உள்ள “ராட்சசி” படத்தில் வாத்தியார்களால்தான் நாடே கெட்டு பேச்சு என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே ‘ராட்சசி’ படத்தை தடை செய்து ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் படங்களில் நடித்த இந்துஜா, சூப்பர் டூப்பர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
    இந்துஜா மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் படங்களில் நடித்தார். இந்துஜா தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்துஜா நடிப்பில் ஏ.கே இயக்கும் சூப்பர் டூப்பர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆண்மை தவறேல் படம் மூலம் அறிமுகமான துருவா இதில் நாயகனாக நடித்துள்ளார்.

    இந்துஜா அதிரடி பெண்ணாகவும், சாதாரண பெண்ணாகவும் 2 தோற்றங்களில் அசத்துகிறார். மேலும் ஷாரா, ஆதித்யா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் துருவா இணை தயாரிப்பாளராக இருக்க, ஷாலினி வாசன் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. 

    இந்துஜா

    படம் பற்றி நாயகன் துருவா கூறியதாவது-:

    ’இயக்குநர் ஏ.கே ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை. வெற்றிப்படம் தோல்விப்படம் என்று மட்டுமே பேசப்படுகிறது. இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்’ என்றார்.
    அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

    முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். முன்னதாக அழகிய தமிழ்மகன், மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய போதும் ரகுமான் இசையில் விஜய் பாடியதே இல்லை. 

    பிகில் பட போஸ்டர்

    பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர். இதில் கதாநாயகி நயன்தாராவுக்கு என்ன வேடம் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருந்த நிலையில் அவர் மருத்துவ மாணவியாக நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது.
    ’ஆடை’ படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ள அமலா பால், பெற்றோர் சம்மதத்துடன் தான் அந்த காட்சிகளில் நடித்ததாக கூறியுள்ளார்.
    அமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அமலா பால் நிர்வாண காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆடை படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்ததில் தர்மசங்கடம் இல்லை. நிறைய படங்களில் பாடல்களில் கவர்ச்சி காட்ட சொல்வார்கள். அப்போது தான் தர்மசங்கடம் ஏற்படும். இந்த காட்சியில் அப்படி எந்த கவர்ச்சியோ ஆபாசமோ இல்லை. ரசிகர்கள் இதை இப்படியே எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பெற்றோர் சம்மதத்துடன் தான் ஆடை படத்தில் நடித்தேன். அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிக்க இருப்பதை கூறினேன். அதிர்ச்சி ஆனார். நல்ல கதையா? என்று மட்டும்தான் கேட்டார். நியாயமான கதை என்றதும் சம்மதித்தார். நான் நடிக்க வரும்போதே என் அப்பா என்னிடம் ‘நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும். எனவே எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே’ என்று துணிச்சல் கொடுத்தவர். எனவே இந்த படத்தில் நடிக்க எனக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை.

    அமலாபால்

    நிர்வாண காட்சியில் நடித்த பின்னர், என்னை நானே உறுதியாகவும் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன். சவால் என்று தெரியும். அதை எப்படி செய்யப்போகிறேன் என்று தெரியாமலேயே நடித்து முடித்தேன். அதை உலகே பார்க்க போகிறார்கள் என்ற எண்ணமும் இருக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பில் பயம், பாதுகாப்பின்மை எல்லாமே இருந்தது. அது முடிந்த உடன் அவை எல்லாமே என்னை விட்டு போனது. அடுத்தடுத்த நாட்களில் நான் என்னை பவர்புல் உமனாக உணர்ந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி விமர்சனம் செய்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த சனிக்கிழமை சாலி கிராமத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ‘அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார்.

    சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நடிகர் சூர்யா பேசியது வன்முறை தூண்டும் விதமாக உள்ளது என விமர்சித்தார். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சூர்யாவிற்கு பதிலளித்தார்.

    எச்.ராஜா, தமிழிசை

    அதில் ‘அனைவருக்கும் நல்ல கல்வி, அனைவருக்கும் சமமாக கல்வி கொடுப்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதையும் எதிர்க்கிறார்கள்’ என்று குறிப்பிட்டு பேசிய அவர், கல்விக் கொள்கையைப் பற்றி தெரியாதவர்களும் பேசுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

    நெல்லையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு விடம், நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘கல்விக் கொள்கை குறித்து சூர்யா வுக்கு என்ன தெரியும்? எதை தெரிந்து கொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்லலாம். எதையுமே தெரிந்துகொள்ளாமல் அரைவேக்காட்டுதனமாகப் பேசுவோருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று கடுமையாக பதில் அளித்தார்.

    பா.ஜனதா, அ.தி.மு.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அதே சமயம் சூர்யாவுக்கு ஆதரவாகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ‘புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து நடிகர் சூர்யா பேசியதை நான் வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார்.

    சீமான், கே.எஸ்.அழகிரி

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ’சூர்யா பேசியது அவருடைய அடிப்படை உரிமை. இதில் அரசியல் எல்லாம் நாம் பார்க்கக் கூடாது. நாங்கள் பல ஆண்டுகளாகப் பேசி வந்த கருத்தைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.

    பெரிய பெரிய நடிகர்களெல்லாம் கருத்து தெரிவிக்க பயந்துகொண்டு இருக்கும்போது சூர்யா பேசுவது குறித்து பெருமையும் மகிழ்ச்சியும்தான் அடைய வேண்டும். மானுட உரிமை யான கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. சூர்யாவின் கேள்வியில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என நாம் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார்.

    சூர்யாவுக்கு நெருக்கமானவர்களிடம் சூர்யா பேசியது குறித்து கேட்டோம். அவர்கள் கூறியதாவது:- ‘சூர்யா எதையுமே பொத்தாம் பொதுவாக விமர்சிப்பவர் அல்ல. தனது அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய மாணவர்களை படிக்க வைக்கிறார். அரசு பள்ளிகளில் இருந்து உயர் கல்விக்காக வரும் மாணவர் களின் சூழ் நிலையை நன்கு உணர்ந்ததால் தான் இந்த குரலை எழுப்பினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜோதிகா இதே கேள்வியை எழுப்பினார். இதில் எந்த உள்நோக்கமோ, எதிர்கால நோக்கமோ கிடையாது. முழுக்க முழுக்க கிராமப்புற மாணவர்களின் எதிர்கால நலனுக்காக தான் அவர் பேசினார்’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    சூர்யா அரசியலுக்கு வருவாரா? என்று கேட்டதற்கு அவருக்கு அரசியல் ஆசை என்பது சுத்தமாக கிடையாது என்று பதில் அளித்தனர்.
    கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
    2 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசனின் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இந்த சூழலில் அரசியல் கட்சி தொடங்கப்பட்ட பின்னர், இந்தியன் 2 படத்திற்கு பிறகு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    இந்நிலையில் “தலைவன் இருக்கின்றான்” திரைப்படம் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் “ கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கமல்ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார்.

    ஏ.ஆர் ரஹ்மானின் டுவிட்டர் பதிவு

    2000-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் தெனாலி படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதன்பின்னர் தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏ.ஆர் ரஹ்மானும், கமலும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், படங்களை தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். 

    இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான "கனா" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

    இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 3-வது படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். ‘வாழ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    வாழ்

    அதில், 75 நாட்களாக நடைபெற்று வந்த ’வாழ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், சுமார் 100 லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர்.

    இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 8-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரித் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது.  

    அஜித்

    இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. 

    ஆனால் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்ததால், வடசென்னை படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில், தனுஷ் ஒரு டுவீட்டை பதிவிட்டு  ரசிகர்களை தெளிவுபடுத்தியுள்ளார். 

    தனுஷின் டுவிட்டர் பதிவு

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:- “என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ.” என்று பதிவிட்டுள்ளார்.

    இதன்மூலம் வடசென்னை படத்தின் 2-ம் பாகம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

    தமிழ், இந்தி திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் தமன்னா முத்த காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவிக்கிறாராம்.
    தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதிக்கிறார். அப்படியே உதட்டு முத்த காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார்.

    தேவைப்பட்டால் லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு மட்டுமல்ல நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என்று சிலர் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் தமன்னா.

    தமன்னா

    சமீபத்தில் பிரபல ஹீரோ படமொன்றில் தமன்னாவை லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டபோது எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் அதுக்கு மட்டும் நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார்.

    நீண்ட நாட்களாக போட்டோ ஷூட் நடத்தாமலிருந்த தமன்னா தற்போது அசத்தலான கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்து ரசிகர்கள் சூப்பர் என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    ×