என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கி, இந்தி மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது சினிமாவில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார்.
    கமல்ஹாசனின் மகள் என்ற பின்புலத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் ஸ்ருதிஹாசன் தனது திறமையால் தன்னை நிரூபித்து காட்டியவர். பாடகர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான பின்னரே தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார்.

    தொடர்ந்து தெலுங்கு, இந்தியில் கவனம் செலுத்துவதால் தமிழில் பத்தாண்டுகளில் அதிக அளவிலான படங்களில் ஸ்ருதிஹாசனால் நடிக்க முடியவில்லை. சூர்யா, தனுஷ், விஜய், அஜித், விஷால் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள ஸ்ருதி கடந்த இரு ஆண்டுகளாக தமிழில் நடிக்காமல் தவிர்த்துவந்தார். லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்த ஸ்ருதி, காதல் முறிவுக்கு பின்னர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

    ஸ்ருதிஹாசன்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’நான் திரையுலகில் ஒரு நடிகையாக பத்தாண்டுகளை நிறைவு செய்கிறேன். நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கடினமாக உழைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் சிறப்பாகச் செயல்பட்டு என்னை ஆதரிக்கும் அனைவரையும் பெருமையடையச் செய்வேன். நான் ஒரு நடிகையாகவும், தனி நபராகவும் நிறைய மாறிவிட்டேன். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
    தனியார் நிறுவனத்தின் கிளையை தொடங்கி வைக்க சென்னை வந்த ஐஸ்வர்யா ராய், ரசிகர்களின் அன்புக்கு அஜித் தகுதியானவர்தான் என்று கூறியிருக்கிறார்.
    நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு தனியார் நிறுவனத்தின் கிளையை தொடங்கி வைக்க சென்னை வந்தார். தொடக்க விழாவுக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நானும் நடிக்க இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொள்கிறேன். அவருடைய புதிய பயணத்தில் நானும் இருக்கிறேன். மணி ரத்னம் உருவாக்கும் எந்த ஒரு படைப்பிலும் அங்கமாக இருப்பது எனக்கு பெருமையாகும்.

    படத்தை பற்றி இப்போது பேசுவது நியாயமாக இருக்காது. மணிரத்னம் எனது குரு. எனது முதல் படமான இருவர் அவருடன்தான் தொடங்கியது. எங்களது தொழில் உறவில் அவ்வளவு பரிச்சயம் இருந்தாலும், படம் பற்றிய தகவல்களை அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போது அவரே உலகத்திற்கு சொல்வார்.

    ஐஸ்வர்யா ராய், இயக்குனர் மணிரத்னம்

    அஜித் ஒரு அற்புதமான நடிகர். அவரது வெற்றியும், ரசிகர்களிடமிருந்து அவருக்கு கிடைக்கும் அன்பும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இதற்கெல்லாம் தகுதியானவர்தான்.

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இல்லாவிட்டாலும் படப்பிடிப்பின்போது அவரை சந்தித்திருக்கிறேன். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அவரது வெற்றிக்காக பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகிறேன்’.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட உள்ளது. அமிதாப், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், நாவலில் வரும் நந்தினி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
    தமிழில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாராவும், ஜோதிகாவும் தங்களுடைய படங்கள் ரிலீஸ் மூலம் மோத இருக்கிறார்கள்.
    தமிழில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் இந்தியில் தமன்னா நடிப்பில் காமோஷி என்ற பெயரில் ஜூன் 14-ந்தேதி வெளியானது. பிரபுதேவா வில்லனாக நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது இந்த படம்.

    இந்தி பதிப்பின் தோல்வியால் தமிழில் இப்படத்தை வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் அறிவித்தபடி ஜூலை 26-ந்தேதி வெளியாக வில்லை. ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். 

    ஜோதிகா, நயன்தாரா

    ஆகஸ்ட் 2ந்தேதி சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் திரைப்படம் ரிலீசாகிறது. இதனால் நயன்தாரா, ஜோதிகா படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் மோதவுள்ளன.
    நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்திலும் அஜித் வயதான தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாக இருக்கிறது. இதில் நரைத்த தாடி, மீசையுடன் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான இதில் அமிதாப் நடித்த வேடம் என்பதால் அதேபோன்ற தோற்றத்தில் நடித்துள்ளார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பே அஜித் இனி வயதுக்கு தகுந்த வேடங்களில் நடிக்க முடிவு செய்து இருந்தார். விஸ்வாசம் படத்தில் 12 வயது மகளுக்கு அப்பாவாக நடித்தார். அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் வயதான தோற்றத்தில் தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.

    நேர்கொண்ட பார்வை

    இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித் ஸ்டைலிஷான அதே நேரத்தில் வயதான தோற்றத்தில் வருவார் என்றும் இளம் நடிகை ஒருவர் அவருக்கு மகளாக நடிக்கலாம் என்றும் தகவல் வருகிறது. ரஜினி காலா இசை வெளியீட்டு விழாவில் வயதுக்கு தகுந்த வேடங்களில் இனி நடிப்பேன் என்று சொன்னார். ஆனால் தற்போதும் இளவயது தோற்றத்தில் நயன் தாராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முந்தைய பேட்ட படத்தில் திரிஷாவுடன் ஜோடியாக நடித்தார். ரஜினியால் முடியாததை கூட அஜித் செயல்படுத்த தொடங்கிவிட்டார் என்கிறார்கள்.
    தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் பிஜூ, இயக்கத்தில் உருவாகி இருக்கும் சென்னை பழனி மார்ஸ் படத்தின் முன்னோட்டம்
    உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை  நோக்கிய கனவும்  நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை பிளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் “சென்னை பழனி மார்ஸ்”. 

    தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் பிஜூ, தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை கவனிக்க, தனக்கேயுரிய பிளாக் காமெடி உணர்வை வசனமாக கொடுத்து படத்திற்கு மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி. 

    சென்னை பழனி மார்ஸ் பட போஸ்டர்

    பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால். 
    ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ள "பார்த்த விழி பார்த்தபடி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
    "பார்த்த விழி பார்த்தபடி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது இயக்குனர் சேது இயாள், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதா ஆகியோர் உடனிருந்தனர். 

    இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சிணாமூர்த்தி சமீபத்தில் 94 வயதில் காலமானார். அவரது இசையில். பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாசின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையும் பாடியுள்ளனர். 

    இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். "பார்த்த விழி பார்த்தபடி" படம் முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மைய கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
    பிங்க் படத்தை காட்டிலும் நேர்கொண்ட பார்வை படத்தின் ரன்னிங் டைம் வேறுபடுவது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

    இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    அமிதாப் பச்சன், அஜித்

    பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் ரன்னிங் டைம் 158.11 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிங்க் படத்தின் ரன்னிங் டைம் 136 நிமிடங்கள் தான். ரீமேக்காக இருக்கும் பட்சத்தில், இரு படங்களின் ரன்னிங் டைம் வித்தியாசப்படுவது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. 

    இந்நிலையில், பிங்க் படத்தை காட்டிலும் நேர்கொண்ட பார்வை படத்தில் சண்டை காட்சிகள், பாடல்கள் அதிகம் உள்ளதால் ரன்னிங் டைமில் வித்தியாசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் குறித்த முக்கிய தகவலை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

    ஏஆர் முருகதாஸின் டுவிட்டர் பதிவு

    இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒருசில வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், தர்பார் படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார்.
    கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’கழுகு 2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. 

    மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம்  வெளியிடுகிறது. இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    கிருஷ்ணா, பிந்து மாதவி

    கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.
    விஜய்சேதுபதி என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளதாக முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
    தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.

    முத்தையா முரளிதரன், விஜய்சேதுபதி

    இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளதாகவும், தார் மோஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக முத்தையா முரளிதரன் திரைத்துறை வட்டாரத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

    முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளதால் இந்த படத்திற்கு '800' என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    அஜித்குமாரின் ஆளுமை திறன் தன்னை கவர்ந்ததாக ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ள வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.
    மறைந்த நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன். பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கணவனை கொலை செய்யும் பெண்ணாக நடித்த கஹாணி படமும் பெயர் வாங்கி கொடுத்தது. தெலுங்கில் வெளியான என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்திலும் நடித்து இருந்தார்.

    தற்போது தமிழில் தயாராகும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆகஸ்டு 8-ந்தேதி திரைக்கு வருகிறது.

    அஜித்துடன் நடிப்பது குறித்து வித்யாபாலன் கூறியதாவது:-

    “நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமாருடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷப்பட்டேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும். எனக்கு பாடல் காட்சியும் உள்ளது. படப்பிடிப்பில் அஜித்குமாரின் ஆளுமை திறன் என்னை கவர்ந்தது. பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தனக்கு பின்னால் வைத்திருக்கும் ஒருவர் என் பக்கத்தில் நிற்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை.

    அஜித், வித்யாபாலன்

    எல்லோருடனும் மிகவும் எளிமையாக பழகினார். பெண்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் அழுத்தமான கதையம்சத்தில் படம் உருவாகி உள்ளது. இந்த கதையை அஜித்குமார் போன்ற பெரிய நடிகரால்தான் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். தல இமேஜ் பற்றி அவரிடம் நான் பேசியபோது கூச்சப்பட்டார்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
    ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. 

    லீக் ஆன புகைப்படங்கள்

    ஏற்கனவே ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகளையும் வலைத்தளத்தில் வைரலாக்கினர்.

    ரஜினிகாந்த் நட்சத்திர ஓட்டல் முன்னால் ஸ்டைலாக நடந்து வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர். அதுவும் இணையத்தில் வந்தது.  இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. 

    லீக் ஆன புகைப்படங்கள்

    கடும் பாதுகாப்பையும் மீறி தற்போது மீண்டும் ரஜினிகாந்த் வடமாநில போலீஸ் உடையில் நடந்து வரும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். ரஜினியின் போலீஸ் தோற்றம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த படங்கள் எப்படி வெளியானது என்று விசாரணை நடக்கிறது.
    ×