என் மலர்
சினிமா செய்திகள்
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா, எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஏ 1’ படத்தின் விமர்சனம்.
நாயகி தாரா அலிசா ‘தளபதி’ படத்தில் வரும் ரஜினியை போல வீரமிக்க ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். அப்போது ஐயங்கார் தோற்றத்தில் வரும் சந்தானம், ரிட்டேரான ரவுடிகளை அடித்து நொறுக்குகிறார். இதைப்பார்க்கும் தாரா, அங்கேயே சந்தானத்திற்கு முத்தம் கொடுத்து தனது காதலை சொல்லுகிறார்.
மறுநாள் சந்தானம் ஒரு லோக்கல் ஏரியா பையன் என்று தெரிந்ததும், தன்னுடைய காதலை முறித்துக் கொள்கிறார் தாரா. இந்நிலையில், சமூக சேவகரும், ஊரில் மிகவும் மரியாதையும் கொண்ட தாராவின் தந்தை, நெஞ்சுவலியால் மயங்கி விழுகிறார். அவரை சந்தானம் மருத்துவமனையில் சேர்க்கிறார். இதையறியும், தாராவிற்கு மீண்டும் சந்தானம் மீது காதல் ஏற்படுகிறது.

தாராவை திருமணம் செய்வதற்காக, சந்தானம் தனது தந்தை எம்.எஸ்.பாஸ்கர், தாய் மீரா கிருஷ்ணன், லொள்ளு சபா மனோகர் ஆகியோரை அழைத்துக் கொண்டு தாரா வீட்டுக்கு செல்கிறார்.
அங்கு தாராவின் அப்பா, சந்தானம் மற்றும் குடும்பத்தினரை அவமானப்படுத்தி அனுப்புகிறார். இதனால், தாரா மீண்டும் சந்தானம் மீதான காதலை முறித்துக் கொள்கிறார். கடுப்பாகும் சந்தானம், தனது நண்பர்களிடம் தாரா அப்பாவை பற்றி கோபமாக பேச, அவர்கள் சந்தானத்திற்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தாரா அப்பாவை கடத்தி கொலை செய்து விடுகிறார்கள்.
இதன்பின் என்ன ஆனது? சந்தானம் நாயகியை எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சந்தானம், வழக்கம் போல் தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். உடனிருக்கும் நண்பர்களுக்கும் அதிகப்படியாக நடிக்க வாய்ப்பு கொடுத்து காமெடியில் ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார்.
நாயகி தாரா அலிசா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன் பங்குக்கு வந்து செல்லாமல், கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக வரும் மூன்று பேரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

எளிமையான கதையை காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களை அழகாக கையாண்டிருக்கிறார். காமெடியை மட்டுமே முன்னிருத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் ஜான்சன்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஏ 1’ காமெடி கலாட்டா.
நடிகர் விக்ரம் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் ஷங்கரும் விஜய்யும் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறியிருக்கிறார்.
கடாரம் கொண்டான் படம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. விக்ரம் மலையாளத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியளித்தார். பல கேள்விகளுக்கு மலையாளத்தில் பதிலளித்த அவர், தனக்கு விருப்பமான இயக்குநர்களாக மணிரத்னம், ஷங்கர் பெயர்களைக் குறிப்பிட்டார்.
மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்து பொன்னியின் செல்வனில் நடிக்கவுள்ள அவர், ஷங்கரோடு எப்போது இணைந்து பணியாற்றுவார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இரண்டு, மூன்று வருடங்களில் நான் அவரது இயக்கத்தில் நடிப்பேன். அதற்கு முன் விஜய்யை கதாநாயகனாகக் கொண்டு ஷங்கர் படம் இயக்கவுள்ளார்” என்று கூறியுள்ளார்.

இதனால் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் செய்தி உறுதியாகி உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது சவாலானது என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தற்போது, தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு, முத்தையா முரளிதரன் பயோபிக்கில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப் பட்டு, 2020ம் ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என இப்போதைக்கு முடிவு செய்துள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவுள்ளது தொடர்பாக விஜய் சேதுபதி கூறுகையில் “தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குச் சவாலாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
முரளியே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி, கிரிக்கெட் குறித்து என்னை வழிநடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு, முரளிதரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2020ம் ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என இப் போதைக்கு முடிவு செய் துள்ளார்கள்.
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜாக்பாட்’ படத்தின் முன்னோட்டம்.
சூர்யா ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது மூன்றாவது முறையாக சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் தான் “ஜாக்பாட்”. இப்படத்தை இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே 'குலேபகாவலி' படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இந்தப்படமும் காமெடியை அடித்தளமாக கொண்டது தான்.

படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த ' ஜாக்பாட் ' டிற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். படத்தின் எடிட்டர் விஜய். இத்திரைப்படம் 2டி எண்டெர்டெயின்மெண்ட்டின் 11-வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் காஜல் அகர்வால் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
வெப் தொடர்களுக்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பிரசன்னா, பாபி சின்ஹா, பிரியாமணி, நித்யாமேனன், நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும் வெப் தொடருக்கு மாறி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள நான் சவாலான புதிய விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன். அந்த வகையில் இப்போது புதிய பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறேன்.

ரசிகர்களுக்கு வித்தியாசங்கள் கொடுக்க எல்லோரும் புதிய பிளாட் பாரங்களுக்குள் வர ஆரம்பித்து உள்ளனர். சமீபகாலமாக வெப் தொடர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளனர். அதுபோல் நானும் வெப் உலகத்துக்குள் நுழைய இருக்கிறேன். வெங்கட் பிரபு புதிதாக வெப் தொடர் ஒன்றை எடுக்கிறார். அந்த தொடரில் நான் நடிக்கிறேன்.
10 தொடர்களாக இது வெளிவரும். படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். அது தவிர நான் தமிழில் நடித்துள்ள கோமாளி, தெலுங்கில் நடித்துள்ள ரணரங்கம் ஆகிய படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
சந்தோஷ் இயக்கத்தில் புதுமுகங்கள் தீபிகா, விஜயராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆறடி’ படத்தின் விமர்சனம்.
நாயகி தீபிகாவின் தந்தை கிராமத்தில் வெட்டியான் வேலை செய்கிறார். இவருக்கு இரண்டு பெண் ஒரு மகன். அம்மா இல்லாததால் நாயகி தீபிகா தன் தம்பியையும் தங்கையையும் தாயைப்போல பார்த்துக் கொள்கிறார். திருமணம் வயதாகியும் தனது தங்கை தம்பிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்பது உறுதியாக உள்ளார்.

ஒருகட்டத்தில் நாயகியின் தம்பி பெரியவனாகி தனது தந்தைக்கு உதவியாக வெட்டியான் வேலை செய்து தன் அக்காவை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் மின்சாரம் தாக்கி தீபிகாவின் தம்பி இறந்துவிடுகிறான். மகனை காப்பாற்ற சென்ற தீபிகாவின் தந்தைக்கும் மின்சாரம் தாக்கி ஒரு கை செயலிழந்து போகிறது. அவர் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.
இதனால் வேறு வழியின்றி தனது தங்கையின் உதவியுடன் வெட்டியாள் வேலையை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார் நாயகி தீபிகா. இதனிடயே அப்பகுதியில் வசிக்கும் நாயகன் விஜயராஜ் நாயகியின் மீது காதல் கொள்கிறார். நாயகியையே சுற்றி வரும் நாயகன் சின்சியராக காதலித்து வருகிறார். இறுதியில் நாயகிக்கு அவர் மீது காதல் வந்ததா? தனது குடும்ப சூழ்நிலையை மீறி நாயகனுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சேலத்தில் வெட்டியாள் வேலை பார்க்கும் பெண்ணின் வாழ்க்கை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் தீபிகா. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சுடுகாட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஹீரோவாக நடித்துள்ள விஜயராஜ் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் நேர்த்தியாக நடித்துள்ளார்.

இதுவரை யாரும் தேர்ந்தெடுக்காத ஒரு கதையை தேர்ந்தெடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் வசனங்கள் படத்திற்கு வலுவூட்டி இருக்கிறது. நாயகியின் தங்கை, தந்தை, தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கதையின் மூலக்கரு நன்றாக இருந்தாலும், அதை கொண்டு சென்ற விதத்தில் சற்று சறுகியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ். மிக மெதுவாக நகரும் கதையால், கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. வசனங்கள் படத்திற்கு வலுவூட்டி இருக்கிறது. கேமரா ஒர்க் மியூசிக் பரவாயில்லை.
மொத்தத்தில் ‘ஆறடி’ பெண்ணின் போராட்டம்.
’பவர் பாண்டி’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் ’மாரி’ 2-ம் பாகம் படம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் ’அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தை அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ’பவர் பாண்டி’ 2-ம் பாகத்தை எடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’பவர் பாண்டி’ படம் 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தை தனுஷ் இயக்கியதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். ராஜ்கிரண், ரேவதி ஆகியோரும் நடித்து இருந்தனர்.

தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தையும் தனுசே இயக்குவார் என்று தெரிகிறது. இதில் ராஜ்கிரணும் ரேவதியும் நடிப்பார்களா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே தனுசின் ’வேலை இல்லா பட்டதாரி’ 2-ம் பாகம் வெளியானது. இதன் முதல் பாகத்தை வேல்ராஜும் 2-ம் பாகத்தை சவுந்தர்யாவும் இயக்கி இருந்தனர்.
’வடசென்னை’ படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் வெற்றிமாறன் ஈடுபட்டு உள்ளார். ’அசுரன்’ படம் முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ 2-ம் பாகம் எடுக்கவும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஓ பேபி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்ததையடுத்து நடிகை சமந்தா சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் கங்கனா ரணாவத் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.14 கோடி வாங்குகிறார். தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார். தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.5 கோடி கேட்பதாக தகவல்.
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் தொடர்ந்து நயன்தாராவே நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிப்பதோடு தன்னை மட்டுமே முன்னிறுத்தும் கதைகளிலும் நடிக்கிறார். அவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள கொலையுதிர் காலம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாகவும் பிகில் படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமந்தாவும் தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். சமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ தெலுங்கு படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் ரூ.2 கோடி வாங்கி வந்த அவர் இப்போது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்துக்கு பிறகும் அவருக்கு மார்க்கெட் குறையவில்லை.
சமுத்திரகனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார், கிருபாகரன், நசாத் நடிப்பில் தனராம் சரவணன் இயக்கத்தில் வெளியாகி உள்ள கொளஞ்சி படத்தின் விமர்சனம்.
சமுத்திரகனி, சங்கவி தம்பதியின் மகன் கிருபாகரன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனங்கள் அதிகமாக இருக்கிறது. சமுத்திரகனி அவனை கண்டிக்கிறார். இதனால் அப்பா மீது கோபமும் வெறுப்பும் உண்டாகிறது.
அந்த வெறுப்பு ஒரு பக்கம் அதிகமாகிக்கொண்டே போக இன்னொரு பக்கம் ஒரு எதிர்பாராத சம்பவத்தின் மூலம் சமுத்திரகனி, சங்கவிக்கு இடையே மோதல் ஏற்பட்டு பிரிகின்றனர். அம்மாவுடன் கிருபாகரன் வந்துவிடுகிறார். சமுத்திரகனியின் பாசத்தை கிருபாகரன் புரிந்துகொண்டாரா? தாய், தந்தை இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

மிக எளிமையான கதையை அழகான கிராமத்து பின்னணியில் காதல், காமெடி கலந்து உணர்வுபூர்வமாக தனராம் சரவணன் இயக்கி இருக்கிறார். அவருக்கு தயாரிப்பிலும் வசனத்திலும் மூடர் கூடம் எம்.நவீன் துணை நின்று இருக்கிறார். சமுத்திரகனி மூலம் சமூகத்துக்கு தேவையான அதிரடி வசனங்களை பேச வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள்.
சமுத்திரகனிக்காகவே தயார் செய்த கதாபாத்திரம் போல பாத்திரத்துடன் ஒன்றி போகிறார். மகனை கண்டிக்கும்போதும் ஊரில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளை சாட்டையடி வசனங்கள் மூலம் எதிர்க்கும்போதும் பொறுப்புள்ள மனிதராக மனதில் பதிகிறார். சமுத்திரகனியின் மகனாக வரும் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அவர் செய்யும் சேட்டைத்தனங்களும் ரசிக்க வைக்கின்றன.

சங்கவி தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். இனி அவருக்கு அம்மா, அக்கா வேடங்கள் நிறைய வரும். படத்தின் இளம் ஜோடியான ராஜாஜி, சைனா நர்வார் இருவரும் இளமை, குறும்புக்கு பொறுப்பு எடுத்துள்ளனர். இவர்களின் காதலை வைத்து நசாத் அடிக்கும் ஒருவரி காமெடிகளால் தியேட்டர் கலகலக்கிறது.
’பிச்சைக்காரன்’ மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, ரஜின், நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா என மற்றவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவில் கிராமத்து வீடுகளும் ஆறும் அந்த ஒற்றைப்பாறையும் கதையோடு ஒன்ற வைக்கிறது. பாடல்களில் கமர்சியல் தூக்கலாக இருந்தாலும் பின்னணி இசையில் நம்மை நடராஜன் சங்கரன் கவர்கிறார். அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பு படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறது.

தந்தை-மகன் உறவில் பருவ வயதில் ஏற்படும் சிக்கல்கள் தான் கதைக்களம். எளிய கதையில் ஆங்காங்கே சுவாரசியமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் கைதட்டவும் வைக்கிறார்கள். ஆனால் பலமான வில்லனோ திருப்பமோ இல்லாத திரைக்கதை என்பதால் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம். அதேபோல் காதல் காட்சிகள் திணிக்கப்பட்டு இருப்பதை போன்ற உணர்வும் ஏற்படுகிறது.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நல்ல கருத்தை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் பொழுதுபோக்காக சொன்ன விதத்தில் கொளஞ்சி பாராட்டுகளை பெறுகிறான். படம் பார்ப்பவர்கள் தங்கள் அப்பாவுடனும் மகனுடனும் படத்தின் கதாபாத்திரங்களை பிணைத்துக் கொள்வார்கள்.
மொத்தத்தில் ’கொளஞ்சி’ பாசப் பிணைப்பு.
விஜய் சேதுபதி தயாரிப்பில் பிஜு இயக்கத்தில் புதுமுகங்கள் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் விமர்சனம்.
நாயகனோட அப்பா ஒரு அறிவியல் பேராசிரியர். இவர் மார்ஸுக்கு செல்வதற்கு புது வழியை கண்டு பிடிக்கிறார். அதற்காக ஒரு மலை மேல் ஏறி நின்று முயற்சி செய்கிறார். 20 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்யும் அவருக்கு எந்த பலனும் கிடைக்காமல் இருக்கிறது.
போதைக்கு அடிமையாக இருக்கும் இவரது மகனிடம், நண்பர் ஒருவர் அப்பாவை பற்றி கிண்டல் செய்ய அவரை நாயகன் கொலை செய்து விடுகிறார். போலீஸ் இவரை கைது செய்து, போதை மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கிறார்கள். அங்கு நண்பர் ஒருவருடன் இணைந்து தப்பித்து வீட்டுக்கு செல்கிறார் நாயகன்.

பின்னர், பழனி மலையில் குறிப்பிட்ட நாளில் நின்றால் மார்ஸுக்கு செல்லலாம் என்ற புது வழியை கண்டுபிடிக்கிறார் நாயகன். அதன்படி, பழனிக்கு நண்பருடன் செல்ல, போலீஸ் இவர்களை பின் தொடர ஆரம்பிக்கிறது.
இறுதியில் நாயகன் மார்ஸ் சென்றாரா? போலீசிடம் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக பிரவீண் ராஜா நடித்திருக்கிறார். போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தெளிவாக நடித்திருக்கிறார். சென்டிமென்ட், காதல் ஏதும் இல்லாமல் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நண்பராக வருபவர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகன் அப்பாவாக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகிய புதுமுகங்களின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.

இப்படத்திற்கு வசனம் எழுதியதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. வசனங்கள் கைக்கொடுத்தாலும் திரைக்கதை பெரியதாக எடுபடவில்லை. 45 நிமிடத்தில் சொல்ல வேண்டிய கதையை நீண்ட நேரம் எடுத்து போரடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிஜு. தேவையில்லாத காட்சிகள் பார்ப்பவர்களின் பொறுமை சோதிக்கிறது.
நிரஞ்சன் பாபுவின் இசையும், பிஜுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சென்னை பழனி மார்ஸ்’ தூரம் அதிகம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் லீக்காகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் அதிக குவாலிட்டியுடன் புதிய புகைப்படங்களை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஏகோபித்த வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இடம் பெறும் ‘அகலாதே’ பாடலின் விமர்சனம்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ‘அகலாதே...’ என்ற பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியிருக்கிறார். பா.விஜய் பாடல் வரிகளை எழுத யுவனுடன் இணைந்து பிரித்வி பாடியிருக்கிறார்.

இந்த பாடல் கணவன் - மனைவிக்கு இடையேயான பாசம், காதல் மற்றும் புரிதலை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவியிடம் ஒரு நொடி கூட என்னை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும். என் வாழ்வில், நடுவில் வந்த உறவு என்றாலும், நெடுந்தூரம் வருபவள் நீதான். என் குறைகள் நூறை மறந்து, எனக்காக தன்னை அர்பணித்தவள் என்று கணவன் மனைவியை புகழும் விதத்தில் பாடல் வரிகளை அமைத்திருக்கிறார் பா.விஜய்.
இந்த பாடல் வரிகளுக்கு மனதை மயக்கும் விதத்தில் இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அவருக்கே உரிய பாணியில் இந்த பாடலை பாடியிருக்கிறார். மெலோடி பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் யுவன்.
மொத்தத்தில் ‘அகலாதே’ பாடல் கணவன், மனைவிக்கு இடையேயான காதல்.






