என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் அடுத்த படம், இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் அதிதிராவ் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.
மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக துவங்கியது. பூஜையில், விஜய்சேதுபதி, அதிதிராவ், பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் வயகாம் அனுப் விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா சதிஷ் மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆந்திரமாநிலம் சித்தூர் டிஸ்டிக் கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.
தமிழில் தற்போது அதர்வாவுடன் இணைந்து நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், அந்த நடிகையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
நானி, நிவேதா தாமஸ் நடித்த தெலுங்கு படம் நின்னு கோரி. இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இது குறித்து அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, ‘கொடி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தேன். அதன்பிறகு நல்ல வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது.

நிவேதா தாமஸ் இதன் தெலுங்கு பதிப்பில் சிறப்பாக நடித்திருந்தார். நான் எப்படி நடித்தாலும் அவரோடு ஒப்பிடுவார்கள். ஆனால், எனது நடிப்பு பாணியிலேயே நான் நடிப்பேன். எனவே ஒப்பிட வேண்டாம். படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடிக்கிறேன். கிளாசிக்கல் நடனம் கற்றதால் இந்த வேடம் எனக்கு பிளஸ்சாக அமையும். சரியான தருணத்தில் எமோஷனை வெளிப்படுத்தும் விதமான கேரக்டர் இது. அது புரிந்து நடித்து வருகிறேன்’ என்றார்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராஜேந்திர பிரசாத், நாசர் உள்ளிட்ட பலருக்கு நடிப்பு பயிற்சி அளித்தவரும், பிரபல தெலுங்கு நடிகருமான தேவதாஸ் கனகலா காலமானார்.
பிரபல தெலுங்கு நடிகர் தேவதாஸ் கனகலா நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 27-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணிக்கு உயிர் பிரிந்தது. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களை இயக்கி உள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார்.

இவர் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட் என்ற நடிப்பு பயிற்சி பள்ளியை நிறுவினார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராஜேந்திர பிரசாத், நாசர் உள்ளிட்ட பலர் பயிற்சி பெற்றுள்ளனர். இவரது மகன் ராஜீவ் கனகலாவும் பிரபல நடிகராக திகழ்கிறார். மகள் சுமா டி.வி. நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரது மறைவுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற நடிகர் அஜித், மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நடிகர் அஜித் நடிப்புத்துறை மட்டுமல்லாது கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருபவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக செயல்பட்டார்.
தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காண்பித்து வருகிறார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காலவர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் அஜித் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அஜித் தகுதி பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, தற்போது ரூ.40 கோடி சம்பளம் கொடுத்தும் ஒரு படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். நோட்டா என்ற தமிழ் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
தற்போது அவரது நடிப்பில் டியர் காம்ரேட் என்ற படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ராஷ்மிகா, சுருதி ராமச்சந்திரன், சாருஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ரூ.6 கோடி கொடுத்து இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன்ஜோகர் வாங்கி உள்ளார்.

இந்தியிலும் விஜய் தேவரகொண்டாவையே கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பி அவரை அணுகினர். ரூ.40 கோடி சம்பளம் தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் விஜய் தேவரகொண்டா மறுத்துவிட்டார். இதனால் அவருக்கு பதிலாக இஷான் கட்டாரும் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
இந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்தது குறித்து விஜய்தேவரகொண்டா கூறும்போது, “டியர் காம்ரேட் படத்தில் முழு உழைப்பை கொடுத்து நடித்து இருக்கிறேன். அதே கதாபாத்திரத்தில் மீண்டும் 6 மாதம் செலவழித்து நடிக்க விரும்பவில்லை” என்றார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் சில காரணங்களால் 7-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பட உலகில் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். ரூ.5 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல். ஏற்கனவே நயன்தாராவை முதன்மைபடுத்தி வந்த மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள் வசூல் குவித்தன.
இதுபோல் கொலையுதிர் காலம் படமும் நயன்தாராவை மையப்படுத்தி தயாரானது. நயன்தாராவின் முந்தைய படங்களைபோல் கொலையுதிர் காலம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்த படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த ஜனவரியில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியானதால் பிப்ரவரிக்கு தள்ளிவைத்தனர். அதன்பிறகு படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் ரிலீஸ் மே மாதத்துக்கு தள்ளிப்போனது.

பிறகு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு வழக்கு விசாரணைகள் முடிந்து ஜூலை 26-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வரவில்லை. ஆகஸ்டு 1-ந் தேதி வெளியாகும் 2-ந் தேதி வெளியாகும் என்றெல்லாம் அறிவித்தனர். ஆனால் நேற்றும் படம் திரைக்கு வரவில்லை. 7-வது முறையாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஜோதிகாவின் ஜாக்பாட் படம் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர்.
இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை சென்னை, திருச்சி, சேலம் ஏரியாக்களில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார்.
#RedGiantMovies will be releasing #ThalaAjith s #NerKondaPaarvaiFromAug8 in Chennai city, Trichy and Salem areas. pic.twitter.com/BD7hnGmOAg
— Udhay (@Udhaystalin) August 2, 2019
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய்யின் பிகில் படத்தில் இடம் பெறும் சிங்கப்பெண்ணே என்ற பாடலை ரசிகர்கள் முன்னிலையில் நேரடியாக பாட இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிகில்’. விஜய் நடித்து வரும் இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தில் இடம் பெறும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பெண்களை போற்றும் விதத்தில் உருவான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில், சிங்கப்பெண்ணே என்ற பாடலை ரசிகர்கள் முன்னிலையில் நேரலையாக பாட இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருக்கிறார்.
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், சூர்யா மற்றும் தனுஷ் படத்தின் பாடல்கள் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.
பல படங்களில் பிசியாக நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது இசையமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப்போற்று’ படத்திற்கும், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
தற்போது இவ்விரு படங்களின் அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ பாடல் குறித்த அப்டேட் ஒரு வாரத்தில் வெளியாகும் என்றும், தனுஷின் ‘அசுரன்’ படத்தின் பாடல் பதிவு நடந்து வருவதாகவும், விரைவில் அனைத்து பாடல் பதிவையும் முடித்து விடுவேன் என்றும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை சுதா கொங்காராவும், தனுஷின் அசுரன் படத்தை வெற்றிமாறனும் இயக்கி வருகிறார்கள்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி 25வது படத்தில் நடித்துவரும் நிலையில், நம்பர் மீது நம்பிக்கை என்று கூறியிருக்கிறார்.
ஜெயம் ரவி தனது 25-வது படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லட்சுமணன். இவரது இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் நிதி அகர்வால் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. 25-வது படமாக உருவாவதால் ஏதேனும் சிறப்பான முக்கியத்துவம் இதில் இருக்குமா என்ற பேச்சு நிலவும் நிலையில் ஜெயம் ரவியே அதற்கு பதில் அளித்துள்ளார்.

“இது எனது 25-வது படம் என்று தெரியும். ஆனால், இந்த எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மற்ற படங்களை போலவே இந்த படமும் எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அனுபவத்தை தருகிறது. கிராமப்புறப் பின்னணியில் சமூகக் கருத்துகளை வலியுறுத்தும் படமாக இது இருக்கும்” என அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, எனக்கும் ரசிகர்கள் கோவில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ராஷ்மிகா. தமிழில் தற்போது கார்த்தி படத்திலும் அதை தொடர்ந்து விஜய் படத்திலும் நடிக்க உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘நடிக்க தொடங்கியபோது மக்களுக்கு என் முகம் நினைவில் நிற்குமா என்பதுகூட தெரியாது. முயற்சி செய்யலாம் என்றுதான் சினிமா வாழ்க்கையை தொடங்கினேன். முதல் பட வெற்றிக்கு பிறகு வரிசையாக வாய்ப்புகள் குவிகின்றன.

விறுவிறுவென்று மேலே சென்று பின் உடனே வீழக் கூடாது. ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து கற்க முயல்கிறேன். ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காக கோவில் கட்டும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். என் அப்பா குஷ்புவுக்குக் கோயில் கட்டியதைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பார். என்னால் இப்போதுவரை நம்ப முடியவில்லை. எனக்கும் கோவில் கட்டினால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன்’.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அசாம் மாநில மக்களுக்கு நடிகர் அபி சரவணன் உதவி செய்திருக்கிறார்.
பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அபி சரவணன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராக இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் மொழி மாநிலம் பாராமல் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் அபி சரவணன்.

மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில், தனது நண்பர்களுடனும் மற்றும் அசாம் மாநில அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு உதவியுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி மற்றும் உணவுப் பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை தனது சொந்த செலவில் அபி சரவணன் வழங்கி இருக்கிறார்.






