என் மலர்
சினிமா செய்திகள்
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, எனக்கும் ரசிகர்கள் கோவில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ராஷ்மிகா. தமிழில் தற்போது கார்த்தி படத்திலும் அதை தொடர்ந்து விஜய் படத்திலும் நடிக்க உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘நடிக்க தொடங்கியபோது மக்களுக்கு என் முகம் நினைவில் நிற்குமா என்பதுகூட தெரியாது. முயற்சி செய்யலாம் என்றுதான் சினிமா வாழ்க்கையை தொடங்கினேன். முதல் பட வெற்றிக்கு பிறகு வரிசையாக வாய்ப்புகள் குவிகின்றன.

விறுவிறுவென்று மேலே சென்று பின் உடனே வீழக் கூடாது. ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து கற்க முயல்கிறேன். ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காக கோவில் கட்டும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். என் அப்பா குஷ்புவுக்குக் கோயில் கட்டியதைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பார். என்னால் இப்போதுவரை நம்ப முடியவில்லை. எனக்கும் கோவில் கட்டினால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன்’.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அசாம் மாநில மக்களுக்கு நடிகர் அபி சரவணன் உதவி செய்திருக்கிறார்.
பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அபி சரவணன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராக இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் மொழி மாநிலம் பாராமல் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் அபி சரவணன்.

மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில், தனது நண்பர்களுடனும் மற்றும் அசாம் மாநில அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு உதவியுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி மற்றும் உணவுப் பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை தனது சொந்த செலவில் அபி சரவணன் வழங்கி இருக்கிறார்.
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பலமுறை நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியும், அவர் தரப்பில் இருந்து எந்தவித சரியான பதிலும் வரவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும், இதுவரை அவர் ஆஜராகவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது.

இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கை நீதிமன்றம் வரும் 28 ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிகை அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது சங்கத் தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும், துக்ளக் தர்பார் படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதில் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் பார்த்திபன் இணைந்து நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தன் மனைவியுடன் விசிட் அடித்திருக்கிறார்.
விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடிக்கும் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார்.
ஏற்கெனவே இவரது இயக்கத்தில் படைவீரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர். புதிய தோற்றத்தில் அவர்கள் வருகிறார்கள். ஜூலை 19-ந்தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் மணிரத்னம் படப்பிடிப்பு தளத்துக்கு ஒரு விசிட் அடித்துள்ளார்.

பெரும்பாலும் தான் தயாரிப்பில் பங்குபெறும் படங்களின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று பார்ப்பதை விரும்பாதவர் மணிரத்னம். அப்படியிருக்க அவர் கதை, திரைக்கதை எழுதியிருப்பதால் படம் எப்படி உருவாகிறது என்பதைக் காண தன் மனைவி சுகாசினியுடன் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழில் ’என் சுவாச காற்றே’ படத்தில் நடித்த நடிகை தியா மிர்சா, தனது கணவரை பிரிவதாக டுவிட்டரில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த்சாமி நடித்த ’என் சுவாச காற்றே’ படத்தில் டான்சராக திரையுலக பயணத்தை துவங்கியவர் தியா மிர்சா. பின்னர் இந்தி சினிமாவுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தியாவுக்கும், தொழிலதிபர் சாகிலுக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. அவர்கள் 5 ஆண்டுகள் காதலித்தனர். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டு இருந்தது.
இந்நிலையில் தியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை பார்த்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தியா மிர்சா தனது டுவிட்டில் ‘11 ஆண்டுகள் கழித்து தானும், கணவரும், பிசினஸ் பார்ட்னருமான சாகில் சங்காவும் பிரிவது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
பிரிந்துவிட்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம். இது குறித்து நாங்கள் மேலும் எதுவும் தெரிவிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். தியாமிர்சா இந்தியில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் பேசாத தியா கணவரை பிரிவதாக அறிவித்தது திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இயக்கத்தில் பார்வதி நடிப்பில் உருவாகி வரும் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் முன்னோட்டம்.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு உருவாகி வரும் படம் ‘ சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயக்குநர் ஒருவர் விழா நடத்தியுள்ளார்.
இயற்கை விவசாயத்தை பற்றி குத்தூசி என்ற திரைப்படத்தை எடுத்தவர் இயக்குநர் சிவசக்தி. இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழா நடத்தினார். இவ்விழாவில் நம்மாழ்வார் படத்தை திறந்துவைத்து இயற்கை விவசாயத்தின் சிறப்பு பற்றியும் சான்றோர்கள் பேசினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதைபந்தும், பள்ளிமாணவர்களுக்கு மரகன்றும் தந்தனர்.

இந்நிகழ்ச்சியில் 465 வகையான பாரம்பரிய நெல் கண்காட்சி வைத்தனர். பங்கேற்ற அனைவருக்கும் உணவாக பாரம்பரிய அரிசியான காட்டுயாணம் கஞ்சி, மாப்பிள்ளை சம்பா சாதம் வழங்கப்பட்டது. விழாவை குத்தூசி இயற்கை போற்றும் நண்பர்கள் மற்றும் பசுமை சிகரம் அறக்கட்டளையும், எழில் இயற்கை வேளாண் பண்ணையும் சேர்ந்து இவ்விழாவை நடத்தினார்கள் .
பிகில் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் தன்னை நெகிழ வைத்ததாக நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
வில்லன் கதாபாத்திரத்திற்கு பெயர்போனவர் நடிகர் ஆனந்த்ராஜ். ஆனால் இவர் சமீபத்திய படங்களில் காமெடியனாகவே நடிக்கிறார். இவர் தற்போது விஜய்யின் பிகில் படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜாக்பாட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து ஆனந்த்ராஜ் கூறியதாவது:- “ஜாக்பாட் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, எனக்கு பிகில் பட சூட்டிங் இருந்தது. நானும், விஜய்யும் நடிக்க வேண்டிய காட்சி அன்று படமாக்கப்பட இருந்தது. ஆனால் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதால், விஜயிடம் இதுகுறித்து சொன்னேன்.

உடனே விஜய், எனக்காக அட்லீயிடம் பேசிவிட்டு, என்னை கிளம்ப சொன்னார். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதால், நான் விழாவில் பங்கேற்க முடியாமல் போனது. மறுநாள் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்ற போது, விஜய் என்னிடம் அதுகுறித்து கேட்டார். நான் நடந்ததை கூறினேன். விழாவில் பங்கேற்க முடியாததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டார். விஜய்யின் இந்த பண்பு என்னை நெகிழவைத்தது”. இவ்வாறு அவர் கூறினார்.
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஜாக்பாட்’ படத்தின் விமர்சனம்.
ஜோதிகாவும் ரேவதியும் சாதுரியமாக மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு ஆணுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் படைத்தவர்கள். போலீசிடம் சிக்காமல் சாதுரியமாக ஏமாற்றி வரும் இவர்கள், திரை அரங்கில் ஏற்பட்ட பிரச்சனையின் போது போலீஸ் ஒருவரை தாக்குகிறார்கள்.
இதனால் சிக்கலில் மாட்டி இருவரும் சிறைக்கு செல்கிறார்கள். அங்கு சச்சுவை சந்திக்கிறார்கள். சச்சு மூலம் இவர்களுக்கு ஒரு ஜாக்பாட் தொடர்பான துப்பு கிடைக்கிறது. அது செல்வந்தர் ஆனந்த்ராஜ் வீட்டில் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன? ஆனந்த்ராஜூக்கு தெரியாமல் ஜாக்பாட்டை எடுத்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படம் முழுக்க வரும் ஜோதிகாவும், ரேவதியும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டி போட்டு நடித்துள்ளனர். நடிப்பு மற்றும் டான்சிற்கு பெயர்போன ஜோதிகா, இப்படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து, அதிலும் ஸ்கோர் செய்துள்ளார். ஒபனிங் சாங், சண்டை காட்சிகள், பஞ்ச் டயலாக் என ஆக்ஷன் ஹீரோயினாக மிளிர்கிறார் ஜோதிகா. ஒரு காலத்தில் ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் காதலித்த ரேவதியை, இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன் காதலிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ரேவதிக்கு முதுமை முகத்தில் தெரிந்தாலும், நடிப்பில் தெரியவில்லை.

செல்வந்தர், பெண் போலீஸ் என இரு வேடங்களில் நடித்துள்ள ஆனந்த்ராஜ், தனது நேர்த்தியான நடிப்பால் இரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார். அவர் நடித்துள்ள மானஸ்தன், மானஸ்தி என்ற இரு கதாபாத்திரங்களிலும் காமெடிக்கு பஞ்சம் வைக்கவில்லை. யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், கோலமாவு கோகிலா பட புகழ் டோனி, மனோபாலா, தங்கதுரை என படத்தில் ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக தனது அழகை தொலைத்துவிட்டு தேடும் யோகிபாபு காமெடியில் முத்திரை பதித்துள்ளார்.

குலேபகாவலி படத்தை போன்று இப்படத்தையும் காமெடி படமாகவே எடுத்துள்ளார் கல்யாண். ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்தது சிறப்பு. காமெடி படமாக இருந்தாலும் இதில் சமூகத்திற்கு தேவையான மெசேஜும் கொடுத்துள்ளார். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு தெரிகிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்டின் பிரம்மாண்டமான தயாரிப்பும் இப்படத்திற்கு கிடைத்த ஜாக்பாட் தான்.
மொத்தத்தில் ‘ஜாக்பாட்’ காமெடி சரவெடி.
நடிகை தீபிகா படுகோனே போதை பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்தி பட உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோகர், மும்பையில் நடிகர்-நடிகைகளுக்கு விருந்து கொடுத்தார். இதில் தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஷாகித் கபூர், விக்கி கவுசல், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபல இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
தீபிகா படுகோனே கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்ததால் வரவில்லை. விருந்தில் பங்கேற்றவர்களை வீடியோ எடுத்து கரண் ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். எல்லோரும் குடிபோதையில் இருப்பதுபோல் வீடியோவில் தெரிந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி விமர்சனங்களை கிளப்பியது. விருந்தில் தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாகவும் சர்ச்சை கிளம்பின. பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா வீடியோவை பகிர்ந்து “இதை பாருங்கள் இந்தி நடிகர், நடிகைகள் குடிபோதையில் திளைக்கிறார்கள். அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இதற்கு எதிராக எனது குரலை பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிலிந்த் டியோரா, “எனது மனைவியும், நானும் அந்த விருந்தில் கலந்துகொண்டோம். யாரும் போதை பொருள் பயன்படுத்தவில்லை. எனவே பொய்யான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகர் சண்டை காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். பிரபுதேவா இயக்கத்தில் இந்தியில் தயாராகும் தபாங்-3 என்ற படத்தில் சுதீப் நடித்து வந்தார். இதில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து கன்னடத்தில் தயாராகும் ‘கோட்டிகோபா-3’ என்ற புதிய படத்துக்கு சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சுதீப் பங்கேற்று நடித்து வந்தார். சண்டை காட்சியொன்றை படமாக்கினர்.

இதில் சுதீப் நடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டது. சுதீப் வலியால் துடித்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில வாரங்கள் சுதீப் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.






