என் மலர்
சினிமா செய்திகள்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் மூன்றாவது முறையாக இணையும் படம் “ஆக்ஷன்”.
இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி கூறியதாவது:- விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். விஷால்- நான் இருவரும் “ஆக்ஷன்” படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது.

70 சதவிகிதம் வெளிநாடுகளிலும், ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னை என பல்வேறு பகுதிகளில் ஆக்ஷன் படம் படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.
தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை. இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்ஷன்” என்றே பெயர் வைத்துவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் ரஜினியின் 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் தற்போது வெளியான படம் சாஹோ. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதாலும் 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட்டார்கள்.
சாஹோ படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், ரசிகர்களிடம் ஏற்பட்டு இருந்த எதிர்பார்ப்பால் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த படம் ரூ.24 கோடி வசூலித்துள்ளது. இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட தென்னிந்திய படங்களை பொறுத்தவரை, பாகுபலி 2வது பாகம் தான் அதிக வசூல் செய்த முதல் படம்.

அதற்கு அடுத்து ரஜினியின் 2.0 படம் தான் இருந்தது. தற்போது சாஹோ திரைப்படம் ரஜினியின் 2.0 படத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் முதல் இரண்டு இடங்களில் பிரபாஸ் படங்கள் தான் இருக்கின்றன.படத்துக்கு எதிர்மறையான விமர்சனங் கள் வருவதால் அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் குறையலாம் என்கிறார்கள்.
சாம் இம்மானுவேல் இயக்கத்தில் மோகன் நடிப்பில் உருவாகும் நெஞ்சம் நிமிர்த்து படத்தின் முன்னோட்டம்.
ஜெ.ஆர். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நெஞ்சம் நிமிர்த்து. இப்படத்தின் மூலம் மோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி, மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாம் இம்மானுவேல் இயக்குகிறார்.
படம் குறித்து பேசும் போது ’தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. நான் சந்தித்த சில மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் புனைவு, நாம் ஒவ்வொரு வரும் அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கைமுழுக்க நமக்கே தெரியாமல் போராடித்தவிக்கிறோம்.
வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக்கொள்கிற விந்தையும் நடக்கும். நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக்கதை’ என்றார்.
அஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலின் மூலம், பாடலாசிரியர் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் பாரட்டியுள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் எத்திராஜ் கல்லூரியில் தமிழ் அகராதி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “அஜித் கதாநாயகனாக நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலின் மூலம், பாடலாசிரியர் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்துள்ளதாக” கூறி பாராட்டு தெரிவித்தார்.
அவர் பேசும்போது, ’பாடலாசிரியர் தாமரை ஒவ்வொரு பாட்டிலும் ஏதாவது ஒரு வழக்கொழிந்த தமிழ் வார்த்தைக்கு உயிர் கொடுக்கிறார். கண்ணான கண்ணே பாடல் கேட்டிருப்பீர்கள். அந்த பாடலின் இரண்டாவது வரியில் ‘புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவவா’ என்று வரிகள் அமைத்து வழக்கொழிந்த சொற்களை மீட்டெடுத்துள்ளார். தாமரை, வசீகரன், கலாபக்காதலன் போன்ற வழக்கொழிந்த நல்ல தமிழ்ச் சொற்களை ஒரு பிரபலமான ஊடகம் மூலமாக மீண்டும் மீட்டெடுத்து பிரபலப்படுத்தியுள்ளார்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘கெத்து’ என்னும் வார்த்தை சுத்தமான தமிழ் சொல். கெத்து என்ற சொல் ‘போலித் தனமான பெருமை’ என்பதை குறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வார்த்தை இதே அர்த்தத்தில் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ‘வச்சி செய்வதாக’ கூறுவதும் தமிழ் சொல் தான்’.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் டைட்டிலில் தற்போது வித்தார்த் மற்றும் உதயா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.
1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை.
இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா - விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.
வரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.
நடிகர் கவினின் குடும்பத்தினர் பிரச்சனையில் இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்ஷி அகர்வால் அந்த வீட்டில் கவினுடன் பழகினார். பின்னர் இருவருக்கும் இடையே மோதல் வர வெளியேறினார்.
வெளியேறியவர் கவின் மீது குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்நிலையில் கவினின் குடும்பம் மோசடி புகாரில் சிக்கி சிறைத்தண்டனை பெற்றுள்ளது. இந்த செய்தி வெளியானபின் சமூக வலைதளங்களில் கவினும் அவரது குடும்பத்தினரும் விமர்சிக்கப்பட்டனர். சாக்ஷி, கவின் குடும்பத்தினரை விமர்சிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

'இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரை கிண்டலடிக்க வேண்டாம் என என் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களை கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி” என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வருகிறது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான சாய் பல்லவியை, பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பாராட்டி பேசியிருக்கிறார்.
பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தவர் தமிழில் தியா படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் சரியாக போகவில்லை. தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே படங்களில் நடித்தார்.
தற்போது தெலுங்கில் ராணா, நந்திதா தாசுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அமெரிக்காவில் நடிகர் ராணா டகுபதி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், இயக்குனர் சமீபத்தில் நந்திதா தாஸ் மற்றும் சாய் பல்லவி தொடர்பான காட்சிகளை முதலில் படம் எடுத்து முடித்தார்.

நடிகை சாய் பல்லவியுடன் நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என்றும் அவருக்கு அற்புதமான திறமையிருக்கிறது என்று நடிகை நந்திதா தாஸ் பாராட்டினார். இந்த படத்தின் கதை ஆந்திர மாநிலத்தில் இருந்த முன்னாள் நக்சலிசத்தை பற்றியது. சாய் பல்லவியின் கதாபாத்திரம் தெலுங்கானாவின் பிரபல நாட்டுப்புற பாடகரை அடிப்படையாகக் கொண்டது.
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா, கதைக்கு தேவை என்றால் எப்படியும் நடிப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய படங்களில் நடித்தவர் ரெஜினா. இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன். இப்போது சினிமாவில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அது எனது நிஜ வாழ்க்கையிலும் பயன் அளிப்பதாக உள்ளது.

படம் தோல்வி அடைந்தால் அதில் நான் என்ன தவறு செய்து இருக்கிறேன் என்று யோசிக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் என்னை பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறேன். நான் படத்தில் என்ன தவறு செய்து இருக்கிறேன். என்னால் படத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று சிந்திக்கிறேன்.
சில நேரம் நான் செய்தது சரி என்று நினைப்பேன். ஆனால் அது தவறாக முடிந்து விடும். விதிமுறைகளை மீற வேண்டியதும் இருக்கும். இப்போது சினிமா என்ன என்பது நன்றாகவே புரிகிறது. தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன். தெலுங்கு படமொன்றிலும் நடித்து இருக்கிறேன். கதைக்கு தேவை என்றால் எந்தமாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.” இவ்வாறு ரெஜினா கூறினார்.
நடிகர் சிம்புவுக்கு எதிரான புகார்கள் குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு விசாரணையில் இறங்கி உள்ளது.
சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளார். படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு சிம்பு மறுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் சிம்புவை வைத்து படம் தயாரித்து வந்தார். அந்த படம் பாதியில் நிற்பதாக அவரும் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதனும் தனது படத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்தும் பட வேலைகள் தொடங்கவில்லை என்று புகார் கூறியுள்ளார். கொரில்லா படத்தை தயாரித்த சுரேசும் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்பணம் கொடுத்ததாகவும் ஆனாலும் படப்பிடிப்பை இன்னும் தொடங்க முடியவில்லை என்று புகார் அளித்துள்ளார். இறுதியாக சிம்புவை வைத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்த மாநாடு படமும் நின்று போனது.

சிம்பு மீது 5 தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளதாகவும், அதன்மீது தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், தயாரிப்பாளர்களுக்கு சிம்பு இழப்பீடு வழங்குவது குறித்தும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகராக வலம் வரும் மொட்டை ராஜேந்திரன் ‘நானும் சிங்கள் தான்’ படத்தில் லவ் குருவாக மாறி காதலர்களுக்கு ஐடியாக்களை கொடுத்துள்ளார்.
வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியில் கலக்கி வருபவர் மொட்டை ராஜேந்திரன். இவர் தற்போது ‘நானும் சிங்கள் தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக தினேஷும், கதாநாயகியாக தீப்த்தி ஷெட்டியும் நடித்துள்ளார்கள். புதுமுக இயக்குனர் ரா.கோபி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதுவரை வில்லன், காமெடியனாக நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன் இப்படத்தில் ரொமாண்டிக் காமெடியனாக நடிக்கிறார். லண்டன் வாழ் தமிழனாக எப்.எம். ஸ்டேசனில் ஆர்.ஜே.வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். மிஸ்டர்.லவ் என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குருவாக நடித்திருக்கிறார்.

காதலை சேர்த்து வைப்பது, காதல் தோல்வியில் விரத்தி அடைந்தவர்களுக்கு, முக்கியமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.
மொட்டை ராஜேந்திரனின் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார் இயக்குனர் ரா.கோபி.
பிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படம் தியேட்டரில் வெளியான சில மணி நேரத்தில் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது.
புதிதாக திரைக்கு வரும் படங்கள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. தியேட்டர்களுக்கு கேமரா கொண்டு செல்ல தடைவிதித்தனர். கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டன.
அதையும் மீறி ஹாலிவுட் படங்களும் தமிழ், தெலுங்கு படங்களும் தியேட்டர்களில் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே இணையதளத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்த அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை, ஜெயம் ரவியின் கோமாளி ஆகிய படங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது.

இந்த நிலையில் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மந்திரா பெடி ஆகியோர் நடித்து நேற்று திரைக்கு வந்த ‘சாஹோ’ முழு படத்தையும் தியேட்டர்களில் வெளியான சில மணிநேரத்திலேயே திருட்டுத்தனமான இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் 2.0 படத்துக்கு அடுத்தபடியாக ரூ.350 கோடி பட்ஜெட்டில் சாஹோ தயாரானதாக கூறப்பட்டது. சண்டை காட்சிகளுக்கு மட்டும் ரூ.70 கோடி செலவிட்டு இருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் தயாராகி உள்ளது. இணையதளத்தில் வெளியானதால் வசூல் பாதிக்கும் என்று படக்குழுவினர் அஞ்சுகின்றனர்.
பிரபாஸ், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் விமர்சனம்.
ராய் என்ற கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவராக டீனு ஆனந்த் இருக்கிறார். இவருடைய மகன் சன்கி பாண்டே அடுத்தாக தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கும் நிலையில், அந்த குழுவில் இருக்கும் ஜாக்கி ஷெராப் தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
தனக்கு பிறகு தன்னுடைய மகன் தான் தலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் ஜாக்கி ஷெராப், 20 ஆண்டு காலமாக பிரிந்து இருக்கும் தன் மகனை தேடி மும்பைக்கு வருகிறார். அங்கு ஜாக்கி ஷெராப் கொலை செய்யப்படுகிறார்.
அதே சமயம் நூதனமான முறையில் ஒரு திருட்டு நடக்கிறது. இந்த திருட்டை கண்டு பிடிக்க சிறப்பு போலீசாக பிரபாஸ் களமிறங்குகிறார். அப்போது, நீல் நிதின் முகேஷ் தான் இந்த திருட்டை செய்தது என்று கண்டுபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த திருட்டை செய்தது பிரபாஸ் என்று போலீசுக்கு தெரிய வருகிறது.

இந்த திருட்டு, ராய் கூட்டமைப்பு வரை செல்கிறது. ராய் நிறுவனத்துக்கு சொந்தமான பல லட்சம் கோடி அளவில் உள்ள பணத்தை கைப்பற்ற முன்னாள் தலைவர் டீனு ஆனந்தின் மகனான சன்கி பாண்டேவும், ஜாக்கி ஷெராப்பின் மகனான அருண் விஜய்யும் முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் அந்த பணத்தை யார் கைப்பற்றினார்கள்? பிரபாஸ் யார்? பிரபாஸ் திருட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பாலிவுட்டில் வெளியான ‘தூம் 1’ மற்றும் ‘தூம் 2’ பட பாணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் இறுதியில் தமிழில் வெளியான ‘ராஜாதிராஜா’ படம் போல் கதை மாறுகிறது. தூம் படங்களில் பிரம்மாண்டமான முறையில் திருட்டு நடக்கும். அதுபோல், இந்த படத்திலும் பிரம்மாண்டமாக திருடுகிறார் பிரபாஸ்.

வழக்கமான பிரபாஸை இப்படத்தில் பார்க்க முடியவில்லை. வழக்கமான பிரபாஸ் திரையில் தோன்றியிருந்தாலே அதிகமாக ரசித்திருக்கலாம். இறுதியில் மட்டுமே பிரபாஸின் நடிப்பை பார்க்க முடிகிறது. வாய்ப்பு கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் நடிகை ஸ்ரத்தா கபூர். படத்திற்கு பெரிய பலம் அருண் விஜய்யின் நடிப்பு. லுக், பாடி லான்ங்வேஜ் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.
ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுஜித் ரெட்டி. ஆனால், ஹாலிவுட், பாலிவுட் படங்களில் மொழி புரியவில்லை என்றாலும் கதை புரியும். இந்த படம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டாலும் கதை புரியவில்லை. காட்சிகள் பார்ப்பதற்கும் சுவாரஸ்யம் இல்லை. திரையில் தோன்றும் பிரம்மாண்டம் பார்ப்பவர்களை கவரவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளும் பெரியதாக எடுபடவில்லை.

தனிஷ்க் பக்ஷி, குரு ரன்துவா, பாட்ஷா, சங்கர் ஏசான் லாய் ஆகியோர் இசையில் அமைந்த பின்னணி இசை சிறப்பு. மதியின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சாஹோ’ சாதாரணம்.






