என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட், தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கி வரும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் அறிவுரையை ஏற்றிருக்கிறார்.
    உடலை பிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நடிகைகளிடம் அதிகரித்திருக்கிறது. சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த பட்டியலில் நடிகை அலியாபட் இணைந்திருக்கிறார். 

    பாகுபலி படத்தையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் சரித்திர படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியா பட் அறிமுகமாக உள்ளார். 

    பாகுபலியில் பிரபாஸ், ராணா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடற்கட்டை சிக்ஸ்பேக் தோற்றத்துடன் கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டனர். அதற்காக கடுமையான பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தற்போது நடிக்கும் ராம் சரண், ஜூனியர் என்டிஆரும் கடுமையான பயிற்சிகள் மூலம் உடற்கட்டை கட்டுமஸ்தாக்கியிருக்கின்றனர். 

    ஆலியா பட் - ராஜமவுலி

    இவர்களுடன் நடிக்கும் அலியாபட்டும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதால் அவரையும் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள சொல்லி இயக்குனர் அறிவுரை கொடுத்திருந்தார். அதை ஏற்று கடந்த சில மாதங்களாக கடுமையான பயிற்சிகளில் அலியா பட் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் 70 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்த வீடியோவை அவர் வெளியிட்டார்.
    சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். 

    அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

    சைரா படத்தில் சிரஞ்சீவி

    அக்டோபர் 2ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. சரித்திர பின்னணி மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், தாஜ் மகாலின் அழகில் மயங்கி இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்து முடித்துள்ள பாரிஸ் பாரிஸ் திரைப்படம் திரைக்கு வர தயாராகியிருக்கிறது. 

    அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருகிறார். தற்போது தாஜ்மகாலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    காஜல் அகர்வால்

    அந்த புகைப்படத்துடன், ‘தாஜ்மகாலின் அழகு குறித்து பலர் என்னிடம் சொல்லி கேட்டிருக்கிறேன், ஆனால் நான் நேரில் சென்று பார்த்ததில்லை. இப்போது தான் முதன் முறையாக தாஜ்மகாலை பார்க்கிறேன். தாஜ்மகாலின் அழகில் மயங்கினேன். இந்த நாளை என்னால் மறக்க முடியாது’ என்று பதிவிட்டுள்ளார்.
    தமிழ், தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், ஐதராபாத்தில் வீடு வாங்க இருக்கிறார்.
    தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், தெலுங்கில் தனக்கு நல்ல மார்க்கெட் உருவானதால், அங்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். மதுரையை சேர்ந்த அவர், துபாயில் பிறந்து வளர்ந்தவர். 

    தமிழ் படங்களில் நடிக்கும்போது சென்னையில் உறவினர் வீடு அல்லது நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், தெலுங்கில் நடிக்கும்போது ஐதராபாத்தில் வாடகை வீட்டில் தங்குகிறார். 

    நிவேதா பெத்துராஜ்

    இந்நிலையில், தெலுங்கில் பட வாய்ப்புகள் அதிகரிப்பதால் ஐதராபாத்தில் தனி பங்களா வாங்கி குடியேறுகிறார். ஐதராபாத்திலேயே தன் உதவியாளர்கள் மூலம் புது வீடு தேடும் பணிகளை தொடங்கியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், விரைவில் அவர் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
    தனி ஒருவன் படம் மூலம் அழுத்தமான முத்திரை பதித்த இயக்குனர் மோகன் ராஜா விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ’அசின் முதல் நயன்தாரா வரையில் என் நாயகிகள் இல்லாமல் என் வெற்றி சாத்தியமாகி இருக்காது. சினிமாவில் பெரும் அனுபவம் நிறைந்த நடிகையாகவே நயன்தாரா உள்ளார். 

    அவரது தேர்வுகளிலும் முடிவுகளிலும் அவ்வளவு நேர்த்தி வெளிப்படுகிறது. நடிப்பில் மட்டுமல்லாது சினிமா சார்ந்த அத்தனை தொழில்நுட்பங்களிலும் மிகந்த தேர்ச்சியோடு நயன்தாரா இருக்கிறார். இதனால் அவர் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்றே நினைக்கிறேன். அதற்கான அத்தனைத் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நாயகியாக உள்ளார்” எனப் பேசினார். 

    நயன்தாரா

    நடிகை நயன்தாரா தற்போது தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். தீபாவளியன்று விஜய் உடனான பிகில், அதைத்தொடர்ந்து தெலுங்கில் சயிரா நரசிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
    ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
    ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அதன் இயக்குனர் எஸ் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  

    விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் வசந்த் பேசுகையில், “இந்த பிரசித்தி பெற்ற ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.

    விருதுடன் இயக்குனர் வசந்த்

    ஆத்மார்த்தமாக விழா குழுவை பாராட்டும் இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த திரு அசோகமித்திரன், மறைந்த திரு ஆதவன், புகழ்மிக்க திரு ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களை பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன்.” என கூறினார்.

    இவ்விழாவில் கலந்து கொள்வதற்கென இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இப்படத்தில் பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 
    விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ’பிகில்’ படத்தின் பாடல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.
    விஜய்  - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

    கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

    அட்லீயின் டுவிட்டர் பதிவு

    தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முழுக்க படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘உனக்காக’ எனும் ரொமாண்டிக் பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குனர் அட்லீ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்ததாக இயக்குனர் மீது பாலிவுட் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    நடிகை ஜரீன் கான் 2010-ம் ஆண்டு வெளியான சல்மான் கானின் வீர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நகுல் நடிப்பில் வெளியான, நான் ராஜாவாகப் போகிறேன் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது பஞ்சாபி மொழியில் உருவாகியிருக்கும் டாக்கா படத்தின் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் ஜரீன் கான் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சினிமா துறைக்கு வந்த புதிதில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததாக கூறிய ஜரீன் கான், அதற்காக அந்த படத்தின் இயக்குனர், தன்னுடன் முத்தக்காட்சியை ஒத்திகை பார்க்க வேண்டும் என அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

    ஜரீன் கான்

    முத்தக் காட்சியை தன்னுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டால்தான் காட்சியின் போது தயக்கம் இருக்காது என்று அந்த இயக்குநர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு தான் உடன்படவில்லை என்றும், தான் எந்த முத்தக்காட்சியையும் ரிகர்சல் செய்வதில்லை என்று கூறிவிட்டதாகவும் ஜரீன்கான் தனது பேட்டியில் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி இந்தி சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிட்டிசன் மணி இயக்கத்தில் ஜெயன், மதுனிகா, சிசர் மனோகர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பெருநாளி படத்தின் விமர்சனம்.
    பெருநாளி கிராமத்தை சேர்ந்த சிவா, பால் வியாபாரம் செய்கிறார். அவரது அக்காவின் மூன்று மகள்களை தனது பிள்ளைகளாக நினைத்து வளர்க்கிறார். சிவாவை அவரது அத்தை மகள் மதுனிகா காதலிக்கிறார். ஆனால் மதுனிகாவின் தந்தை அந்தோணி பழைய பகையால் காதலை எதிர்க்கிறார்.

    தொழில் போட்டியால் அதே ஊரை சேர்ந்த கார்த்திக்கும், சிவாவும் அடிக்கடி மோதுகிறார்கள். சிவாவின் அக்காள் மகள் அரசியல்வாதியின் மகனை காதலிக்கிறார். அதேபோல் சிவாவின் தம்பி அரசியல்வாதி மகளை காதலிக்கிறார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் சிவா, அரசியல்வாதி வீட்டில் சம்பந்தம் பேசுகிறார்.

    பெருநாளி விமர்சனம்

    வில்லன் கார்த்திக்கும், அவரது தந்தையும் சிவாவை பழிவாங்க திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து சிவா தனது அக்காள் மகளின் திருமணத்தை முடித்தாரா? முறைப் பெண்ணை கரம் பிடித்தாரா? என்பது மீதிக்கதை.

    அறிமுக நாயகனான ஜெயன், சிவா என்கிற கதாபாத்திரத்தில் காதல், குடும்ப உறவு, அதிரடி என கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். கதாநாயகி மதுனிகா பக்கத்து வீட்டு பெண் போல நடிப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார். நடன காட்சிகள் எடுபடவில்லை. கார்த்திக் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார். கிரேன் மனோகர், குணச்சித்திர கதாபாத்திரத்தில் கச்சிதம். அந்தோணி கதாநாயகி தந்தையாக சில காட்சிகளில் வந்தாலும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.

    பெருநாளி விமர்சனம்

    சிசர் மனோகர் சிரிக்க வைக்கிறார். தஷி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஆர்.குமாரின் கேமரா காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். காமெடி, காதல், குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதையை நேர்த்தியாக படமாக்கி உள்ளார். இயக்குனர் சிட்டிசன் மணி.

    மொத்தத்தில் ‘பெருநாளி’ விறுவிறுப்பு குறைவு.
    இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
    இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர், அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அனிருத், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா போன்ற பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

    இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், தரண்குமார் மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது.
    பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படம் ஏற்கனவே வெளியானது. இதில் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்து இருந்தார். மேரி கோம், சர்பஜித் ஆகிய வாழ்க்கை கதைகளை இயக்கி பிரபலமான ஓமங்க் குமார் டைரக்டு செய்து இருந்தார். 

    நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தாமதமாக மே 24–ந்தேதி வெளியானது. இந்த நிலையில் நரேந்திர மோடி வாழ்க்கையை பற்றி இன்னொரு படம் தயாராக உள்ளது. இந்த படத்துக்கு ‘மன் பைராகி’ என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் ‘கர்மயோகி’ என பெயரிடப்பட்டுள்ளது.

    கர்மயோகி பட போஸ்டர்

    இந்த படத்துக்கு சஞ்சய் திரிபாதி திரைக்கதை எழுதி இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். நரேந்திர மோடியின் வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். 

    ‘‘இந்த படத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருந்தக்கூடிய வி‌ஷயங்கள் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் இளமை கால வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை தொகுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படமாக்குகிறேன்’’ என்று சஞ்சய் லீலா பன்சாலி கூறினார்.
    ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரங்களில் எல்லை மீறிவிடுகிறது என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.
    தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிங்க் படம் அஜித்குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக்கானது.

    சினிமா வாழ்க்கை குறித்து டாப்சி கூறியதாவது:- ‘‘நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். நான் பிரபலமாக இருப்பது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. நட்சத்திர அந்தஸ்து என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளுக்கு தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. நான் நடிகையாவதற்கு முன்னர் தோழிகளுடன் சாலைகளில் நடந்து சென்று இருக்கிறேன். 

    டாப்சி

    வணிக வளாகங்களுக்கும் சேர்ந்து செல்வோம். ஓட்டல்களை தேடி சென்று சாப்பிடுவோம். ஆனால் இப்போது அப்படி போக முடியவில்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்து இருக்கிறார்கள். சில நேரம் அந்த அன்பு எல்லை மீறி விடுகிறது. பொது இடங்களில் அவர்கள் காட்டும் அன்பினால் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எனது உடைகளை கூட வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன்.’’

    இவ்வாறு டாப்சி கூறினார்.
    ×