என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் இமயமலை சென்றுள்ளார்.
    மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகளின் பட்டியலில் மாளவிகா மோகனனும் இடம் பிடித்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் தற்போது தெலுங்கு பக்கமும் கவனத்தை திருப்பி இருக்கிறார். சமீபத்தில் இமயமலைக்கு சென்றவர், அங்கு விதவித போஸ்களில் புகைப்படம் எடுத்துள்ளார். 

    இதுபற்றி மாளவிகா மோகனன் கூறும்போது, ’இமயமலையில் நம்மை சுற்றி நிலவும் நிசப்தம் நம்முடையது அல்ல அது இமயத்தின் நிசப்தம்’ என குறிப்பிட்டிருப்பதுடன், என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் ஓணம் கொண்டாட்டத்துக்காக அணியும் பாரம்பரிய சேலையின் மீதிருக்கும் மோகம் எனக்கு என்றைக்கும் மாறாது’ எனத் தெரிவித்திருக்கிறார். 

    மாளவிகா மோகனன்

    ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சேலை அணிந்து அவர் அளித்திருக்கும் கவர்ச்சி போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளிக் குவிக்கின்றனர். விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
    நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடைகோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை படமாக எடுத்திருப்பதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக தெரிவித்து, காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை ஐகோர்ட்டு

    இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது எனக்கூறி  ஜான் சார்லசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    விஜய்யின் 65-வது படம் குறித்த செய்திகள் பரவிவரும் நிலையில், அது குறித்து இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.
    அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'.'பிகில்' தொடர்பான தனது அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இது விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். இதனைத் தொடர்ந்து 65-வது படத்தை இயக்குநர் பேரரசுவும், 66-வது படத்தை இயக்குநர் ரமணாவும் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை உடனடியாக இயக்குநர் ரமணா தனது பேஸ்புக் பக்கத்தில் மறுத்தார். ஆனால், இயக்குநர் பேரரசு தரப்பில் எந்தவொரு மறுப்பும் வெளியாகாத காரணத்தால், இருவரும் இணைவது உறுதி என்று பலரும் செய்திகளை வெளியிடத் தொடங்கினார்கள். 

    விஜய், பேரரசு

    தற்போது இந்தச் செய்தி தொடர்பாக இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’விஜய் 65 படத்தை நான் இயக்கப் போவதாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது. 

    நான் விஜய்க்காகக் கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை. நானும் என் கதையும் விஜய்க்காகக் காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இச்செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.
    பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தை விமர்சித்த விமர்சகர்களை படத்தின் நாயகி ஷ்ரத்தா கபூர் சாடியுள்ளார்.
    பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராப், மந்த்ரா பேடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சாஹோ'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப் படம் கடும் எதிர்வினைகளையே சந்தித்தது. பெரும் முதலீடு என்பதால் இந்த விமர்சனத்தால் எப்படிப் போட்ட முதலீடு திரும்ப வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் நல்ல வசூல் செய்தது. 

    'சாஹோ' படத்துக்குக் கிடைத்த விமர்சனங்கள் குறித்து நாயகி ஷ்ரத்தா கபூர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது:- ’வெள்ளிக்கிழமை அன்று படத்தின் விமர்சனங்கள் வெளியானபோது, சில விமர்சகர்கள் இந்தப் படம் தேறாது என்று சொன்னார்கள். ஆனால், ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ரசிகர்கள் படத்தை விரும்பினர். 

    பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்

    ஒரு நிமிடம் நானே என்னிடம் என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொண்டேன். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இதுவரை எனது படங்களில் அதிக வசூல் செய்த படம் இது. அதனால்தான் சொல்கிறேன், ரசிகர்களிடம் எது சேரும், சேராது என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா கபூர். 

    தமிழில் 'சாஹோ' திரைப்படம் படுதோல்வியைத் தழுவியது. இதில் முதலீடு செய்த விநியோகஸ்தர்கள் பலருக்கும் சுமார் 60 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 'சாஹோ' படக்குழுவோ தாங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, அடுத்ததாக வெப் தொடர் மூலம் ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார்.
    ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தோனி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிப்பதாக சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். 

    இவர் இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க்குடன் வெப் தொடர் ஒன்றில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகி உள்ளார். ரிச்சர்ட் ராக்ஸ்பர்க் 2000-ம் ஆண்டு டாம்குரூஸ் நடித்து திரைக்கு வந்த ‘மிஷன் இம்பாசிபிள் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிச்சர்ட் ராக்ஸ்பர்க் - ராதிகா ஆப்தே

    இந்த வெப் தொடரில் சார்லி ஹுன்னம் என்ற ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார். டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகிறது. ஆஸ்திரேலியா சிறையில் இருந்து தப்பும் நாயகன் மும்பை பகுதியில் குடியேறி அந்த பகுதி மக்களுக்கு உதவுவதே இந்த தொடரின் கதை.

    இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
    பாலா - ஆர்.கே.சுரேஷ் கூட்டணியில் வெளியான தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து, தற்போது இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.
    தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் ‘தாரை தப்பட்டை’, ‘மருது’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்.

    மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தயாரிக்க இருக்கிறார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கவிருக்கிறார்.

    இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் 2 வித்தியாசமாக தோற்றங்களில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒரு லுக்கிற்கு சுமார் 20 கிலோ உடல் எடையை கூட்டியும், பிளாஷ் பேக் காட்சிகளுக்காக 30 கிலோ உடல் எடையை குறைத்தும் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

    மலையாளத்தில் வெளியான ஜோசப் திரைப்படம்

    மலையாளத்தில் வைத்த ‘ஜோசப்’ என்ற பெயரே இந்த படத்திற்கும் வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காப்பான்’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
    சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை படமாக எடுத்திருப்பதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக தெரிவித்து, காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

    காப்பான் படத்தில் சூர்யா, மோகன்லால்

    இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு காப்பான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நீதிபதி மணிக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் கிளாமாக்ஸ் காட்சிகள் ரமணா பட பாணியில் உருவாக்க இருப்பதாக கசிந்துள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை அருகே உள்ள பூந்தமல்லியிலும் தியாகராய நகரில் ஒரு ஓட்டலிலும் படப்பிடிப்பை நடத்தினர். சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டன. தற்போது படப்பிடிப்பை ஆந்திராவுக்கு மாற்றி உள்ளனர். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. 

    படத்தின் கதை என்று ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ஒரு கதை வெளியானது. சித்தார்த்தும் அவரது மனைவி ரகுல் பிரீத் சிங்கும் யூடியூப் சேனல் நடத்துகின்றனர். அதில் அரசியல்வாதிகளின் ஊழல்களை வெளியிடுகிறார்கள். இதனால் கோபமடைந்த அரசியல்வாதிகள் இருவரையும் தீர்த்து கட்ட முயற்சிக்கிறார்கள். அப்போது வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் வயதான கமல்ஹாசன் இருவரையும் காப்பாற்றுகிறார். பின்னர் ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலை சித்தார்த்திடம் இருந்து வாங்கி அவர்களை வர்ம கலையால் தீர்த்து கட்டுகிறார். மொத்தம் 7 பேரை அவர் கொலை செய்கிறார் என்று அந்த கதையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்தியன் 2

    இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் என்ற பெயரில் தற்போது இன்னொரு கதை வைரலாகிறது. அதன்படி ஊழல் அரசியல்வாதிகளை கொலை செய்த பிறகு கமல்ஹாசன் போலீசில் சரண் அடைகிறார். கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. கமல்ஹாசனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை நிறைவேற்றுவதுபோல் படம் முடிகிறது.

    இது இந்தியன்-2 கிளைமாக்ஸ்தானா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் இந்த கதை வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுதான் கிளைமாக்ஸ் என்றால் இந்தியன் மூன்றாம் பாகம் வெளிவராது என்று கூறப்படுகிறது. விஜயகாந்தின் ரமணா படத்தில் இதுபோன்ற மரண தண்டனை கிளைமாக்ஸ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆங்கிலத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகி இருக்கும் அட்ராக்‌ஷன் படத்தின் விமர்சனம்.
    கல்லூரியில் படித்து வருகிறார் நாயகி இரினா ஸ்டார்ஷன்பாம். இவரது கல்லூரியில் ஒரு நாளில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆகாயத்தை பார்த்தால் விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை பார்க்க முடியும் கூறுகிறார்கள். இதைக் கேட்ட நாயகி தன்னுடைய தோழி, ஆண் நண்பருடன் அங்கு செல்கிறார்.

    ஆனால், அங்கு வேற்றுகிரக வாகனம் ஒன்று வருகிறது. இந்த வாகனம் கீழே இறங்கும் போது பல கட்டிடங்களை சேதப்படுத்துகிறது. இதில் பல பேர் இறக்கவும் செய்கிறார்கள். இரினாவின் தோழியும் இதில் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் இரினாவிற்கும், அவரது ஆண் நண்பருக்கும் காயங்கள் ஏற்படுகிறது.

    அட்ராக்‌ஷன் விமர்சனம்

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரினா, அந்த வாகனம் ஏன் வந்தது. அதில் இருந்தவர்கள் யார் என்று ராணுவத்தில் இருக்கும் தன்னுடைய தந்தையிடம் கேட்கிறார். அந்த வாகனத்தில் வந்தவர்கள் ஏலியன்கள் என்று அவர் கூற, அந்த ஏலியன்களை கொல்ல வேண்டும் என்று இரினா துடிக்கிறார்.

    ஆனால், தந்தையோ அந்த ஏலியன்களை தொந்தரவு செய்யாமல் விட்டால், அவர்களே சென்றுவிடுவார்கள் என்று எண்ணுகிறார். இறுதியில் அந்த ஏலியன்கள் என்ன ஆனது? நாயகி இரினா ஏலியன்களை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அட்ராக்‌ஷன் விமர்சனம்

    2017ம் ஆண்டும் ஆங்கிலத்தில் வெளியான இப்படம் தற்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் திறம்பட நடித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஏலியன்கள் பூமிக்கு வரும் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. 

    மொத்தத்தில் ‘அட்ராக்‌ஷன்’ சிறந்த ஆக்‌ஷன்.
    ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் முன்னோட்டம்.
    ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. படத்தின் நாயகனாக துருவா நடித்துள்ளார். இவர் 'ஆண்மை தவறேல்' படத்தில் நாயகனாக நடித்தவர். 

    இந்துஜா அதிரடி பெண்ணாகவும், சாதாரண பெண்ணாகவும் 2 தோற்றங்களில் அசத்துகிறார். மேலும் ஷாரா, ஆதித்யா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர். 

    சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா

    இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு திவாகரா தியாகராஜன் இசையமைத்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
    புளூவேல், காப்பான் படத்தில் தற்போது நடித்திருக்கும் நடிகை பூர்ணா, விருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை. அதுவும் முக்கியம்தான் என்று கூறியிருக்கிறார்.
    சவரக்கத்தி படம் மூலம் தனது திறமையை காட்டிய பூர்ணா அடுத்து புளுவேல் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி:-

    புளூவேல் படம் பற்றி?
    இது குறைவான செலவில் எடுக்கப்பட்ட சின்ன படம். ஆனால் ப்ளுவேல் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு படமாக இருக்கும். போலீஸ் ஆபிசராக நடித்துள்ளேன். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளை விட எமோஷனல் காட்சிகள் தான் அதிகம். ஒரு குழந்தைக்கு அம்மாவாக வருகிறேன். 

    காப்பான் படத்தில் நடித்த அனுபவம்?
    சமுத்திரகனிக்கு ஜோடியாக வருகிறேன். சில காட்சிகள் தான் என்றாலும் திருப்தியான வேடம். என் கதாபாத்திரத்துக்கு நானே குரல் கொடுத்துள்ளேன். பெரிய படங்களில் நடிக்கும் ஆசை இதன் மூலம் நிறைவேறிவிட்டது. அந்த கதாபாத்திரம் சிறப்பான ஒன்றாக இருக்கும். 

    கேரக்டர் ரோல்களில் அதிகம் நடிப்பது ஏன்?
    நான் அறிமுகமானதும் தொடக்கத்தில் நடித்ததும் கதாநாயகியாக தான். ஆனால் சமீபகாலமாக ஹீரோயினாக மட்டும்தான் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. பதிலாக நல்ல கதாபாத்திரமாக இருந்தால் அதில் நடிக்க தயங்குவது இல்லை. ஒரு படம் என்றால் எல்லா கதாபாத்திரங்களுமே முக்கியம் தான். சில சமயங்களில் ஹீரோயினை விட ஒரு கேரக்டர் நல்ல பெயர் வாங்கி விடும். 

    புளூவேல் படத்தில் பூர்ணா

    அடுத்து?
    கன்னடம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறேன். தமிழில் வைபவ்வுடன் ஒரு படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்கிறேன். 

    விருதுக்காக தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா?
    விருதுக்காக மட்டுமே நடிக்கவில்லை. சம்பளமும் முக்கியம்தான். இப்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும்போது சில நாட்கள் தான் படப்பிடிப்பு என்பதால் நல்ல சம்பளம் கிடைக்கிறது. எனக்கு வாழ்நாள் முழுக்க சினிமாவில் இருக்க ஆசை. ஆனால் எனக்கு அமையும் குடும்ப வாழ்க்கையை பொறுத்தே அது அமையும். காப்பான் படத்துக்காக என்னை அணுகும்போதே எனது நடிப்புக்காக தான் அணுகினார்கள். இதுபோல் பெயர் எடுக்க தான் ஆசை. 

    திருமணம்?
    அவசியமான ஒன்று. தயாராக இருக்கிறேன். ஆனால் சரியான நேரத்தில் பண்ண வேண்டும். குடும்பத்தினர் சொல்லி வருகிறார்கள். கடவுள் தான் சரியான நேரத்தை காட்டவேண்டும். சென்னையில் நிச்சயம் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும். 
    தீபாவளி தினத்தில் வெளியாகும் விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களுடன் தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

    இந்நிலையில், இவ்விரு படங்களுடன் தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். `அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

    பெட்ரோமாக்ஸ் படத்தில் தமன்னா

    திகில் கலந்த நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
    ×