என் மலர்
சினிமா செய்திகள்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் நிகழ்ச்சிக்கு போலீஸ் திடீர் தடை விதித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஷாரூக் கான், வருண் தவான், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக விஜய் படத்தின் டிரைலர் வெளியாகும் போது, தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் ஒளிபரப்பட்டும். விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜய் நடித்த பல்வேறு படங்களிலிருந்து பாடல்கள், காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெறும்.
கோயம்பேட்டில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்று ‘பிகில்’ டிரைலருக்கும் இதே போன்ற ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. சனிக்கிழமை மாலை 5 மணி முதலே கொண்டாட்டம் இருக்கும் என்றும், இதற்காக பல்வேறு நிகழ்வுகள் விஜய் ரசிகர்களுக்காகக் காத்திருப்பதாகவும், இந்தக் கொண்டாட்டத்துக்கு காரில் வர வேண்டாம் என்றும், கார் பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை என்றும் அறிவித்தது. ஆனால் இந்த கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த திரையரங்க ட்விட்டர் பக்கத்தில் ரேவ்நாத் சரண் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “திரையரங்கத்துக்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது.
ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய செலவு பண்ணினோம். 10 நாட்களாக இதற்காக நிறையத் திட்டமிட்டோம். திட்டமிட்டபடி அனைத்துமே வந்தது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. மதியம் சாப்பிடாமல் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன். ஒரு பிரச்சினையும் பண்ணாமல் அமைதியாக கலைந்து சென்ற விஜய் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு பேர் வந்து அமைதியாகச் சென்றுள்ளீர்கள். காவல்துறையும் விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்ததற்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
’பிகில்’ டிரைலரை பார்த்த ஹாலிவுட் இயக்குனர் பில் டியூக், இயக்குனர் அட்லீயை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியது. வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த டிரைலரை யூடியூபில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

டிரைலரை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், ’பிகில்’ டிரைலரை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான பில் டியூக் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பிகில் டிரைலர் சிறப்பாக இருந்தது. படம் எப்போது அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும்?. அமெரிக்காவில் சிறப்பு காட்சி திரையிடப்படுகின்றதா? போன்ற பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த அட்லீ, சிறப்பு காட்சி குறித்த தகவலை நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்,
கண்ணன் இயக்கும் புதிய படத்தில், தனக்கு ஜோடியாக நடிக்க ஏ-1 பட நடிகையை நடிகர் சந்தானம் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' 'ஏ 1’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதேபோல், சந்தானம் நடித்துள்ள `சர்வர் சுந்தரம்', `ஓடி ஓடி உழைக்கணும்', `மன்னவன் வந்தானடி' உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.

தற்போது டகால்டி படத்தில் நடித்துவரும் சந்தானம், அடுத்ததாக ஜெயம்கொண்டான் படத்தின் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் காமெடி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 2 கதாநாயகிகள் கொண்ட இப்படத்தில் 'ஏ-1' படத்தின் நாயகி தாரா அலிசாவை நடிக்க வைப்பதற்காக இயக்குநரிடம், சந்தானம் பரிந்துரை செய்துள்ளார். இதன்மூலம் நடிகர் சந்தானத்துடன், தாரா அலிசா மற்றும் ஸ்வாதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிகை ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ், மலையாள பட உலகில் முன்னணி இயக்குனராக உள்ள பிரியதர்ஷன் மகள் கல்யாணி. இவர் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் அதன்பிறகு கல்யாணிக்கு பட வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு மலையாள படங்களிலும் கல்யாணி நடித்துள்ளார். இவருக்கும் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மலையாள பட உலகில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. பிரணவ் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

கல்யாணியும் பிரணவும் புதிய மலையாள படமொன்றில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். மோகன்லாலின் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்திலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வருகிறார்கள். இப்போது அந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது என்கின்றனர்.
இந்த காதல் வதந்தியா? உண்மையா? என்று இருவரும் விளக்கம் அளிக்கவில்லை. அவர்கள் காதலிக்கவில்லை என்று உறவினர்கள் தரப்பில் மறுக்கின்றனர். ஆனால் மலையாள பட உலகினர் காதல் இருப்பது உறுதி என்கிறார்கள். இதற்கான விளக்கத்தை இருவரும் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.3 கோடி செக் மோசடி வழக்கில் விஜய்யுடன் கீதை படத்தில் நடித்த நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்து 2003-ல் வெளியான புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அமிஷா படேல், குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கி இருந்தனர். படம் 2018-ல் திரைக்கு வரும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் அமீஷா பட்டேல் கூறியுள்ளார். ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியையும் சேர்த்து ரூ.3 கோடிக்கு அமிஷா பட்டேல் செக் கொடுத்துள்ளார்.

அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சியான அஜய்குமார் கோர்ட்டில் அமீஷா பட்டேல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அமீஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது. அவரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். ஏற்கனவே 2016-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆட ரூ.11 லட்சம் வாங்கி கொண்டு கடைசி நேரத்தில் நடனம் ஆட மறுத்து விட்டதாக அமீஷா பட்டேல் மீது மும்பை போலீசில் புகார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஷாம், அத்மையா, ஸ்ரீதேவி குமார் நடிப்பில் சாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காவியன்’ படத்தின் முன்னோட்டம்.
ஷாம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காவியன். உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத் தான். அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியாவது இந்தியர்கள் தான். இப்படி ஒரு அதிர்ச்சிகலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் காவியன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தை 2M சினிமாஸ்க்காக K.V சபரிஷ் தயாரிக்கிறார். மனம் கொத்திப் பறவை படத்தில் அறிமுகமான அத்மையா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவி குமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய நடிகர்களும் படத்தில் பங்கேற்கிறார்கள்.

விறுவிறுப்பான இக்கதையை அழகான திரைக்கதையாக்கி இயக்கி இருப்பவர் சாரதி. ஒளிப்பதிவு மூலம் படத்தில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் N.S. ராஜேஷ்குமார். அதிரடி இசையை ஸ்யாம் மோகன் MM வழங்க, எடிட்டராக அருண்தாமஸ் AKD பணியாற்றியுள்ளார். ஆர்ட் டைரக்டராக T.N.கபிலனும், ஆக்ஷன் சண்டைப்பயிற்சிப் பணியை ஸ்டண்ட் சிவாவும் கவனித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்களை எழுதி இருக்கிறார். சவுண்ட் டிசைனராக M.J.ராஜு, மேக்கப்: P.S.குப்புசாமி, காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி.
இந்தியத் தொழிநுட்பக் கலைஞர்களோடு ஹாலிவுட் கலைஞர்களும் பங்கெடுத்துள்ள இப்படம் இம்மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது. உலகெங்கும் SDC Picturez இப்படத்தை வெளியீடுகிறது.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த புதிய படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பிரபல நடிகர் பெற்றுள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல், கேரளாவில் இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தை கேரளாவில் நடிகர் பிருத்வி ராஜ் வெளியிட்டிருந்தார்.
தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். இது கேரள விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் அதிகப்படியான திரையரங்களில் பிகில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிகில் படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஜாக்கிஷெராப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளியாக இருக்கிறது.
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான், சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
பாலிவுட்டில் உச்ச நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாலிவுட் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இவர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் தற்போது ட்விட்டரில் புதிய சாதனை படைத்திருக்கிறார். இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 39 மில்லியன்களை தாண்டியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

பாலிவுட்டில் மற்றொரு உச்சநடிகரான அமிதாப்பச்சனை விட அதிகமான பாலோவர்ஸை ஷாருக்கான் தற்போது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் அசுரன் படத்தின் கதாநாயகி மஞ்சுவாரியரை நடிகர் கமல்ஹாசன் பாராடி இருக்கிறார்.
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் தற்போது தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் நடித்துள்ளார். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி 4வது முறையாக இணைந்திருக்கும் அசுரன் படம் அக்டோபர் 4ம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் தன்னுடைய நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்த மஞ்சுவாரியர், தற்போது நடிகர் கமல்ஹாசனை கவர்ந்திருக்கிறார். மஞ்சுவாரியரின் நடிப்பை பாராட்டியிருக்கிறார் கமல். அவருடன் மஞ்சுவாரியர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பசுபதி, பிரகாஷ் ராஜ், டிஜே, கென், ஆடுகள் நரேன், பவன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் அடுத்து தயாராகியுள்ள படம் பிகில். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை, அட்லீ இயக்கியுள்ளார். தெறி, மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ இணையும் 3வது படமான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
இந்த படத்தின் டிரைலர், தற்போது வரை 1.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. டிரைலர் வந்து 15 மணி நேரங்களிலேயே 15 லட்சம் லைக்குகள் பெற்றது.

இது அஜித்தின் விஸ்வாசம் பட டிரைலர் மொத்தம் பெற்றுள்ள லைக்குகளை விட அதிகம். பிகில் டிரைலர் செய்துள்ள இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தென்னிந்திய மொழி படங்களில் பிகில் படம் தான் அதிக லைக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தொகுத்து வழங்கும் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “பிக்பாஸ் சீசன் 13” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புதிய போட்டியும் உள்ளது.
இதற்கு கர்ணிசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் போட்டி இந்திய கலாசாரத்துக்கு எதிராகவும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கான் வீட்டு அருகே கர்ணிசேனா அமைப்பை சேர்ந்தவர்களும் பிற அமைப்பில் உள்ளவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் இருக்க நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






