என் மலர்
சினிமா செய்திகள்
ஆங் லீ இயக்கத்தில் வில் ஸ்மித் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெமினி மேன்’ திரைப்படத்தின் விமர்சனம்.
டிஐஏ ஏஜெண்டாக இருக்கும் வில் ஸ்மித், தீவிரவாதிகளை அளிக்கும் நபராக இருந்து வருகிறார். மிகவும் திறமையான இவர் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற விரும்புகிறார். இந்நிலையில், இறுதியாக தான் சுட்டுக் கொன்றவர் தீவிரவாதி இல்லை என்பதை நண்பர் மூலம் அறிந்துக் கொள்கிறார்.
ஓய்வு முடிவை அறிவித்தவுடன் வில் ஸ்மித்தை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இதில் வில் ஸ்மித்துக்கு நிகராக ஒருவன் அவரை எதிர்த்து சண்டை போடுகிறான். அவர் யார் என்று பார்க்க, வில் ஸ்வித்தின் உருவம் போல் மிகவும் இளமை உள்ளவனாக இருக்கிறான்.

இறுதியில் வில் ஸ்மித்தை கொலை செய்ய வந்த அந்த நபர் யார்? எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
வயதான ஏஜெண்டாகவும் இளமையான ஜூனியராகவும் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வில் ஸ்மித். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்யும் இவர், இந்த படத்திலும் கச்சிதமாக கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவரது நடிப்பு ஒன்றே படத்திற்கு பெரிய பலம்.

லைப் ஆஃப் பை போன்ற படங்களை எடுத்த ஆங் லீ இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை, பின்னர் மெதுவாக செல்கிறது. சுவாரஸ்யமே இல்லாமல் காட்சிகள் நகர்ந்தாலும், வில் ஸ்மித் மோதிக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மிகவும் எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்படும்.
டியான் பீபேவின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளை ரசிக்க வைக்கிறது. லார்ன் பால்ஃப்பின் பின்னணி இசை சிறப்பு.
மொத்தத்தில் ‘ஜெமினி மேன்’ காமன் மேன்.
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து ரஜினி, இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்பம் மற்றும் ரசிகர்கள் கொண்டாடக் கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை தொடர்ந்து ரியோ நடிக்கும் படத்திற்கு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ், தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகையர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சாம் ஆர்.டி.எக்ஸ். படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.கே.வசனம் எழுத, ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம் 58’ படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவை புகைப்படம் எடுக்க நான்கு பேர் கொண்ட குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதற்காக தனியாக போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை பதிவிடுவார்கள்.
ஆனால், சமந்தா அதற்கு மட்டுமல்லாது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றைத் தனியாகப் படம் பிடிக்க நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறாராம். அவர்கள் எப்போதும் சமந்தாவுடன் பயணித்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரைப் படமெடுப்பார்களாம்.

அதில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து சமந்தா அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவாராம். சமந்தா டுவிட்டரில் 77 லட்சம், இன்ஸ்டாகிராமில் 79 லட்சம், பேஸ்புக்கில் 87 லட்சம் தொடர்பாளர்களையும் வைத்திருக்கிறார். அவர் பதிவிடும் புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக் செய்வது வழக்கம்.
ஏ 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ திரைப்படம் உருவாகி வருகிறது.
கார்த்திக் யோகி இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கைதி’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
#Kaithi marching towards #Diwali2019#KaithiDiwalipic.twitter.com/c1Qa6bEZaV
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 14, 2019
ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் சிவா கூறியிருக்கிறார்.
விஸ்வாசம் படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் நாயகன் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க சிவா கையெழுத்திட்டார். ஆனால், 'தர்பார்' படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவும் சிவாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஏனென்றால், 'விஸ்வாசம்' படம் பார்த்துவிட்டு சிவாவை அழைத்து பாராட்டினார் ரஜினி.
ரஜினி - சிவா கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பாக இயக்குநர் சிவா அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’ரொம்ப சந்தோஷமாக நிறைவாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. வரும் வாரத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது அறிவிக்கப்படும். அதற்கான தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில்தான் படப்பிடிப்பு நடக்கும். ரொம்ப ஜனரஞ்சகமான, சந்தோஷமான குடும்ப படமாக இது இருக்கும். ரஜினி சாரை சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும். நான் அவரது தீவிரமான ரசிகன். அவரை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கண்டிப்பாக அனைவரும் சந்தோஷப்படும் படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனக்கு குடும்ப உறவுகளும், அதைச் சுற்றியிருக்கக் கூடிய சந்தோஷங்களும் ரொம்பப் பிடிக்கும். ஆகையால், கண்டிப்பாக இது குடும்பப் படம்தான். ஆக்ஷன் அதிகமாக இருக்கும். ஆக்ஷன் கலந்த குடும்பப் படம் என்று சொல்லலாம். ரசிகர்கள் கொண்டாடக் கூடிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியா, தற்போது பட வாய்ப்பில்லாமல் வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.
தரமணி, வடசென்னை என நடிப்பில் கலக்கும் ஆண்ட்ரியா இன்னொரு பக்கம் பாடல்கள் பாடுவதிலும் பிசியாக இருக்கிறார். தனியாக கச்சேரிகள் நடத்தியும் வருகிறார். நடிப்பு, பாடல் எது முக்கியம் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:

‘இரண்டும் இரண்டு கண்ணு மாதிரி. தனித்தனியாக நான் இதுதான் பிடிக்கும்னு சொல்லமுடியாது. ரெண்டுமே பிடிக்கும். என்ன ஒரு வருத்தம்னா, இந்த வருடம் நடிகை ஆண்ட்ரியாவுக்குப் பெரிய வாய்ப்பு இல்லாம போச்சு. பாடகியா மட்டும்தான் இருக்கேன். வந்த சில படங்களையும் கதை சரியில்லை என்று மறுத்துட்டேன்." என்று கூறியுள்ளார்.
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் தமன்னா, முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகைகளில் தமன்னாவும் முக்கியமானவர். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சைரா' படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் தமன்னா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பெட்ரோமாக்ஸ்' படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமன்னா சினிமாவில் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை ஒப்பந்தத்தில் சேர்த்துவிடுவார் என்று சொல்கிறார்கள்.

முத்தக் காட்சிகளில் நடிப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா தெரிவித்துள்ளதாவது, "இன்னும் சினிமாவில் நான் முத்தக் காட்சியில் நடித்தது கிடையாது. நான் நடிக்க வந்ததில் இருந்து அதைத் தொடர்கிறேன். நான் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். சில விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று 13 வயதிலேயே நினைத்துவிட்டேன். அதை மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்," என்று தெரிவித்துள்ளார்.
சாய்ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் ’ராஜாவுக்கு செக்’ படத்தின் முன்னோட்டம்.
பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராஜாவுக்கு செக். இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.

தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். எமோஷனல் த்ரில்லர் என்றாலும் படத்தில் தேவையான அளவுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு. ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார்.
சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சமீப காலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’. பெண்களின் கொடுந்துயர் ஒன்றினை அழுத்தமாக சொல்லியிருந்தார். சமூகத்துக்கு தேவையான இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள் பலர் நெகிழ்ந்து பாராட்டினர்.
இந்த படம் திரைக்கு வருவதையொட்டி ரூ.85 லட்சத்துக்கும் மேலாக விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. ஆனால் படம் வெளியாகும் முதல் நாள் இரவு 17 காட்சிகள்தான் திரையிட முடியும் என்றும் அதே நாளில் வேறு படம் வருகிறது என்றும் அதற்கு திரையரங்குகளை ஒதுக்குவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி விட்டனர். இது ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில் வயிற்றில் கட்டையால் அடிப்பதுபோன்ற கொடூர செயல். மக்கள் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல.

திரையரங்கு உரிமையாளர்கள் இந்த போக்கை தொடர்ந்தால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். திரைத்துறையினரிடம் அக்கறையும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்சினை வராமல் தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






