என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஹீரோ படமும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது. தற்போது கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகின்றன.

    எஸ்.கே.18 படக்குழுவினருடன் கவின்

    இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள கவின், ’நட்புனா என்னன்னு தெரியுமா’ எனும் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    கைதி படம் வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில், அதனை இணையத்தில் வெளியிட்டது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
    கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது. இருப்பினும் விறுவிறுப்பான திரைக்கதையால் இப்படம் வெற்றி பெற்றது. கார்த்தி நடித்த திரைப்படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் கைதி ஆகும். இப்படம் வெளியாகி ஒருமாதம் ஆன நிலையில், தற்போது இணையத்தில் கைதி படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

    எஸ்.ஆர்.பிரபு, கார்த்தி

    இந்நிலையில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இணையத்தில் படத்தை வெளியிடுவது தொடர்ந்தால், திரையரங்குகளில் சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று கேட்கிறீர்கள்? ஆம்! ஆனால், மூன்றாவது வாரத்திலிருந்து பைரசி மற்றும் குறைவான வசூல் ஆகிய பிரச்சனைகளும் உள்ளன, ஆகையால் தயாரிப்பாளர்கள் இதன் மூலம் மட்டுமே அவற்றை ஈடுசெய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
    பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது என பட விழாவில் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் பேசினார்.
    ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. நாயகனாக எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன், நாயகியாக உபாசனா நடித்துள்ளனர். பி.எம்.சினிமாஸ் தயாரித்துள்ளது. ராகுல் பரமகம்சா இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகரும், டைரக்டருமான பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ‘‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’’ என்று ஒரு பட்டிமன்றத்தில் பேசி இருக்கிறேன். எனவே, பெண்கள் கவனமாக இருந்தால் தப்பு நடக்காது. பசங்களை மட்டுமே தப்பு சொல்லக்கூடாது. வள்ளுவர் கற்பை பற்றி பெண்களுக்குத்தான் அதிகாரம் எழுதி இருக்கிறார். ஆண் தவறு செய்தால் போகிற போக்கில் வந்து விடுவான். பெண்கள் தவறு செய்தால் அது மிகப்பெரிய பாதிப்பு ஆகிவிடும். ஒருவன் சின்ன வீடு வைத்துக்கொண்டால் காசு பணம் எதுவென்றாலும் கொடுத்து விடுவான். பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.

    ஆனால் பத்திரிகைகளில் கள்ளக்காதலுக்காக புரு‌‌ஷனை, குழந்தையை கொன்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. அதனால்தான் பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்கள். இன்று செல்போன் வந்துள்ளதால் தாண்டி எங்கெங்கே போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதனால் எளிதாக தவறு நடப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுகின்றன. பொள்ளாச்சியில் தவறு நடக்க பசங்க மட்டும் காரணம் இல்லை. உங்கள் பலகீனத்தை அவன் சரியாக பயன்படுத்திக்கொண்டான். 

    பட விழாவில் பாக்யராஜ்

    அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டீர்கள், அதுதான் பெரிய தவறு. என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துகளை சினிமாவில் பயம் இல்லாமல் பதிவு செய்ததுதான். இயக்குனரிடம் இந்த காட்சி நன்றாக இல்லை என்று வெளிப்படையாக சொல்லிவிடுவேன். அவர் கோபப்படமாட்டார். இந்த விழாவில் பெண்களை கவுரவித்தது சந்தோ‌‌ஷமாக இருந்தது.

    எல்லா தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே, சிறிய படங்களும் ஓடவேண்டும். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்குத்தான் போன் வாங்கி கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்த படத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் கே.ராஜன், இசையமைப்பாளர் தினா, நடிகர் நட்டி, போஸ் வெங்கட், ஜே.எஸ்.கே. கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்த அனுஷ்கா, தற்போது மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
    'பாகமதி' படத்தில் நடித்த பிறகு உடல் எடை காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அனுஷ்கா, தற்போது 'சைலன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். வாய்பேசாத மாற்றுத்திறனாளியாக அவர் நடித்துள்ள இப்படம் முடிந்து வெளியீட்டு பணிகள் நடக்கின்றன. நான்கு மொழியில் வெளியிட உள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் மஞ்சுவாரியர் வேடத்தில் அனுஷ்கா நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. 

    அனுஷ்கா, கவுதம் மேனன்

    ஆனால் பின்னர் அந்த செய்தியை அவர் மறுத்தார். அதையடுத்து தற்போது ஒரு இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கவுதம் மேனன் இயக்க இருக்கிறார். இது பெண்களை மையப்படுத்திய படம் என்பதால் அனுஷ்காவும் சம்மதம் சொல்லி இருக்கிறார். அனுஷ்கா ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட நடிகர் பாலாசிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
    நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின. மளையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். அந்த வகையில் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

    பாலாசிங்

    இவருக்கு சில தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, இவரை குடும்பத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலாசிங்கின் மரணம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்த நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
    அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடியவர் நடிகை அக்‌ஷரா கவுடா. ஜெயம் ரவியின் போகன் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், இதனைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார்.

    அக்‌ஷரா கவுடா

    இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது சிவப்பு நிற நீச்சல் உடையில் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். கவர்ச்சியான இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

    இவர் தற்போது கன்னடம் மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 

    நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து பாதுகாப்பு கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்.
    இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக சாடினார். ட்விட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    அதையும் ட்விட்டரில் வெளியிட்டார். தனக்கு போனில் வரும் அழைப்புகளையும் நேரலை செய்தார். வருகிற 27-ந்தேதி மெரினாவுக்கு வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை சந்தித்து விவாதிக்க தயாரா? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். திருமாவளவன் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்றும் தெரிவித்தார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. விதி முறையை மீறியது காரணமாக காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. 

    காயத்ரி ரகுராம்

    இந்நிலையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் போன் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால் தனக்கும், தன்னுடைய வீட்டிற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மனு கொடுத்துள்ளார். 
    சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படக்குழுவினரை ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.
    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். 

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    ரஜினி- ஹரிஷ் கல்யாண் - சஞ்சய் பாரதி

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலானது. தற்போது இந்த டீசரை ரஜினிகாந்த் பார்த்து படக்குழுவினரை பாராட்டி வாழ்த்தி இருக்கிறார். 
    முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி, நடிகை மீனாவின் வீட்டை தான் வாங்கியதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
    வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா காமெடியில் நடித்து பிரபலமானவர் சூரி. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். சந்தானம் கதாநாயகனாகி விட்டதால் சூரிக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

    ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிப்பதுடன் ஓட்டல் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் இந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர்.

    சூரி - மீனா

    இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் நடிகை மீனாவின் வீடு விலைக்கு வந்ததாகவும் அதை ரூ.6.5 கோடி கொடுத்து சூரி வாங்கி விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை சூரி மறுத்துள்ளார். மீனா விட்டை வாங்கியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான். சென்னையில் சமீபத்தில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.
    பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், இசை பார்த்தேன், விசை உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.
    பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்திருந்தார்.

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள். 



    மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.

    இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியிருக்கிறார். அவரை சந்தித்த மகிழ்ச்சியில் ‘இசை பார்த்தேன், விசை உணர்ந்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
    பல வெற்றி படங்களை இயக்கிய கவுதம் மேனன், சமீபத்தில் கலந்துக் கொண்ட விழாவில், நான் சிரிச்சு, ரசிச்சு ரொம்ப நாளாகுது என்று பேசியிருக்கிறார்.
    தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கடந்த 2016ல் துவங்கிய இந்த படத்தை ரிலீஸ் செய்ய பல முறை முயற்சிகள் எடுக்கப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. வரும் 29ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ்தான், படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்கிறார். 

    இந்நிலையில், பப்பி படத்தில் நடித்த வருணை வைத்து, கவுதம் மேனன், ஜோஷ்வா - இமை போல் காக்க என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் தயாரிப்பவர் ஐசரி கணேஷ் தான். அவர், தன்னுடைய படங்களின் வெற்றியை சமீபத்தில் முதல்வர் பழனிச்சாமியை அழைத்து வந்து கொண்டாடினார். 

    கவுதம் மேனன்

    அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குநர் கவுதம் மேனன் பேசும்போது, ‘சிரிச்சு, ரசிச்சு படம் பண்ணி ரொம்ப நாளாகுது. என்னுடைய கஷ்ட சூழ்நிலையை அறிந்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான் என்னை அழைத்து பேசினார். எனை நோக்கி பாயும் படத்தின் ரிலீசுக்கு ஏற்பாடு செய்தவர், ஜோஷ்வா என்ற புதுப்படத்தையும் இயக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார். இப்போதுதான், பழைய படி நான் சிரிக்கத் துவங்கி இருக்கிறேன்’ என்றார்.
    நடிகர் ஆர்யாவுடன் நான்கு படங்களில் நடித்த பூஜா, அவரது திருமணத்திற்கு வராதது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
    இலங்கையில் பிறந்து பின் தன் அப்பாவுடன் இந்தியா வந்து படிக்கும் போது சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூஜா. இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஜீவா இயக்கத்தில் உருவான 'உள்ளம் கேட்குமே' படத்தில் முதல்முறையாக நடித்தார். அந்த படம் தாமதமாக ரிலீஸானதால் அதற்கு முன்பே சரண் இயக்கத்தில் வெளிவந்த 'ஜே ஜே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி விட்டார். 

    அதன்பிறகு ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, பந்தய கோழி, ஓரம் போ, நான் கடவுள், துரோகி, விடியும் முன் ஆகிய படங்களில் பூஜா நடித்தார். 

    இதற்கு பிறகு தமிழில் நடிக்காத பூஜா தனது சொந்த நாடான இலங்கைக்கே திரும்பி சென்று அங்கு சிங்கள படங்களில் நடித்து வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் தொழிலதிபருடன் திருமணம் நடைப்பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்த பூஜா பேட்டியளித்தார். 

    ஆர்யா - பூஜா

    அதில் பல சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட 'பூஜா', தமிழில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்றும் பிடித்த நடிகை 'கீர்த்தி சுரேஷ்' என்றும் கூறினார். மேலும் தான் ஆஸ்திரேலியாவில் இருந்ததால் தான் தனது நண்பரான ஆர்யா கல்யாணத்திற்கு வர முடியவில்லை என்று தெரிவித்தார். 

    ஆர்யா மற்றும் பூஜா இணைந்து 4 படங்களில் நடித்துள்ளனர். அவை உள்ளம் கேட்குமே, பட்டியல், ஓரம் போ மற்றும் நான் கடவுள் ஆகும். இதில் அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி அடைந்தவை. மீண்டும் பூஜா தமிழில் நடிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
    ×