என் மலர்
சினிமா செய்திகள்
நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி சிறகுகள்’. ஆக்ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், விஜய் ஆண்டனி சீனு எனும் கதாபாத்திரத்திலும், அக்ஷரா ஹாசன் விஜி எனும் கதாபாத்திரத்திலும், சென்ராயன் டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், அருண் விஜய்யின் கதாபாத்திரத்தையும் அவரது நியூ லுக்கையும் படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி இப்படத்தில் அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்புவின் மாநாடு படத்திற்கு பிறகு, லாரன்ஸை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 600028 திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெங்கட் பிரபு. இப்படம் வெற்றி அடைந்தது. இதை அடுத்து, கோவா, சரோஜா என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு, பின்னர் அஜித்தை வைத்து மங்காத்தா எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து முன்னணி இயக்குனரானார்.
இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோரது படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை இயக்க இருந்தார். இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால், தற்போது காஜல் அகர்வாலை வைத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் லாரன்ஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள வெங்கட் பிரபு, கடவுளின் அருளால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிம்புவின் மாநாடு படத்திற்கு பிறகு, இந்த படத்திற்கான பணியை வெங்கட் பிரபு தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, தொழில்நுட்ப வாகனத்தில் ஏற்றி தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. மலேசிய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நூலை அறிமுகம் செய்தார். முன்னாள் மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்துரை வழங்கினார். மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:- தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமன்று. மூவாயிரமாண்டு வரலாற்றுத் தொடர்ச்சியை கட்டி இணைத்திருக்கும் ஒரு தங்கக் கயிறு. உலகத்தின் மூத்த பல மொழிகளெல்லாம் முடிந்து போயின. சாக்ரடீஸ் பேசிய கிரேக்க மொழி 10-ம் நூற்றாண்டுக்கு மேல் இல்லை. ஏசு பேசிய ஹீப்ரு மொழி 2-ம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டது.
நான்காயிரம் ஆண்டு நாகரிகம்கொண்ட சுமேரிய மொழி இன்று இல்லை. சீசர் பேசிய லத்தீன் மொழியும் இன்று புழங்கப்படவில்லை. காளிதாசன் கவிதை புனைந்ததும் வேத உபநிடதங்கள் எழுதித்தந்ததுமான தொன்மையான சமஸ்கிருதம் இன்று மக்கள் மொழியாக மாண்புறவில்லை. ஆனால் ஆதி மொழிகளில் எழுத்திலும், பேச்சிலும் தொடர்ச்சி கொண்டிருப்பது தமிழ்.

இனத்தைக் கட்டிக்காப்பது மொழியின் பெருமை. மொழியைக் கட்டிக்காப்பது இனத்தின் கடமை. மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்வது தமிழர்களின் தலையாய பொறுப்பாகும். தொழில்நுட்ப வாகனத்தில் ஏற்றித் தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தமிழாற்றுப்படை என் வாழ்நாள் ஆவணமாகும். என் 50 ஆண்டு கல்வியை நான்கு ஆண்டுகள் உழைப்பில் இறக்கிவைத்த இலக்கியமாகும். இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்மாரி படத்தின் நான் ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கேப்மாரி’. ஜெய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதுல்யா ரவி, வைபவி ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் நான் ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 13ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு, தற்போது ஒரு புகைப்படத்தால் சோதனை ஏற்பட்டுள்ளது.
ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய 'ஜோக்கர்', சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது.
இந்நிலையில், மேலாடை இன்றி ஒரு புகைப்படம் ரம்யா பாண்டியன் என்ற பெயரில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலானது. இதையறிந்த ரம்யா பாண்டியன், என் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் நிறைய உருவாகி இருப்பதாகவும், வெளியான புகைப்படம் தான் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் நிஜமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பின்னணி பாடகி, சுசி லீக்ஸ் மூலம் மிகவும் பிரபலமான சுசித்ரா, யூடியூப்பில் புதிய வீடியோக்களை வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் தீயாகப் பரவின.
அந்த வீடியோக்கள் அனைத்தும் பின்னணிப் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அவரது கணவர் கார்த்திக் தெரிவித்தார். அதே வேளையில் சுசித்ராவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து தனது சகோதரியுடன் அடையாறில் உள்ள வீட்டில் வசித்து வந்த சுசித்ரா காணாமல் போய்விட்டதாக கடந்த மாதம் அவரது சகோதரி சுசித்ரா போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணை செய்த போலீசார் சுசித்ரா நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருப்பதை கண்டறிந்தனர். அப்போது தான் காணாமல் போகவில்லை எனவும் தனது சகோதரி சுசித்ராவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டிலிருந்து வெளியேறி விட்டதாகவும் போலீசில் தெரிவித்தார் சுசித்ரா.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
4.5 லட்சம் பேர் பின் தொடரும் என் ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாக பயன்படுத்தினர். நிறைய பேருக்கு இதனால் பிரச்சினை என்பதுதான் எனக்கு மனவலியை ஏற்படுத்தியது. நான் மன அழுத்தத்துக்கு உள்ளானேன்.
எனக்கு விவாகரத்தாகி ஒரு வருட காலமாகிறது. என்னுடைய விவாகரத்தும் வீடியோ வெளியானதும் ஒரே நேரத்தில் நடந்ததால் எனக்கு அந்த காலகட்டம் கஷ்டமாக இருந்தது.
தேவையில்லாமல் தனுஷ், அனிருத் எல்லோரையும் சம்பந்தப்படுத்தி வெளியான வீடியோக்கள் ஒன்றைக் கூட நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த வீடியோக்கள் மார்ஃபிங் செய்யப்பட்டதா என்று கூட எனக்குத் தெரியாது. யார் இதை செய்தார்கள் என்பது காலப்போக்கில் எனக்குத் தெரிய வரலாம்.
அதேநேரம் நான் கல்வி கற்க ஆரம்பித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது சமையல் கலை. லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன். அதை நம் மக்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். யூடியூபில் சுசி குக் என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட இருக்கிறேன்’ என்றார்.
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் அப்படி செய்தது என் மகளுக்கு பிடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார்.
1990களில் கலக்கிய மீனா திருமணத்துக்கு பின்னர் தமிழில் அதிகம் நடிக்காமல் இருந்தார். விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் கரோலின் காமாட்சி என்ற இணைய தொடரில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். சிபிஐ ஆபிசராக நடித்துள்ள மீனா அளித்த பேட்டி:
கரோலின் காமாட்சி தோற்றம் வித்தியாசமாக இருக்கிறதே?
சினிமாவில் பிசியாக இருக்கும்போது டிவி பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் துணிந்து நடித்தேன். இப்போது இணைய தொடர்கள் பிரபலமானதும் அதற்குள்ளும் வந்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். இதுவரை பார்க்காத மீனாவாக இருக்கவேண்டும் என்று விவேக் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை எடுத்து பார்த்துக்கொண்டார். கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் என்னை படங்களில் காப்பாற்றுவார்கள். இதில் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை. எனவே சண்டையிடுகிறேன்.
உங்கள் மகள் நைனிகா இந்த தோற்றம் பற்றி என்ன சொன்னார்?
நான் முடியை குறைத்து பாப் கட் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை.

சினிமாவில் இருக்கும் உங்கள் நண்பர்கள் என்ன சொன்னார்கள்?
அவர்களுக்கு ஆச்சர்யம். இதை பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்டார்கள். எனக்கு சினிமாவுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
இணைய தொடருக்கு சென்சார் இல்லை என்பதால் பயம் இருந்ததா?
இல்லை. அதனால் தான் முன் கூட்டியே கதை, கதாபாத்திரம் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி கேட்டுக்கொண்டேன். இதில் ஆபாசம் துளிகூட இருக்காது.
தொடர்ந்து படங்களா? இணைய தொடர்களா?
கதை தான் முக்கியம். நல்ல கதையும் கதாபாத்திரமும் கிடைத்தால் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் நடிப்பேன்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ராமர், கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்கு யாரும் எதிர்பார்த்திராத தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் ராமர். இவர் தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடித்து வருகிறார்.
கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்த புதிய படத்தை ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மணி ராம் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு ‘போடா முண்டம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் 'திருவாளர் பஞ்சாங்கம்' படத்தின் முன்னோட்டம்.
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் 'திருவாளர் பஞ்சாங்கம்'. இப்படத்தில் நாயகனாக 'ஆனந்த் நாக்' நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா இசை ஜேவி மற்றும் நரேஷ் படத்தொகுப்பு நாகராஜ் ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு ஆகியோர் பணி புரிந்துள்ளனர்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் மலர்விழி நடேசன் கூறுகையில்...
ஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.
அப்படி தீடிரென ஒரு பிரச்சினை வர, ஜாதகத்தை கடை பிடித்து அந்த பிரச்சனையில் இருந்து வெளி வருகிறானா? அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா? என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன். கதாநாயகனின் ஏழு நாள்கள் பயணம் தான் இப்படம்.
இப்படம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது’ என்றார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.
தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும் சும்மா கிழி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
Big news is here! 🙌🏻😎
— Lyca Productions (@LycaProductions) December 4, 2019
The grand audio launch of #Thalaivar's #DARBAR 👑 is all set to happen on 7th Dec at Nehru Indoor Stadium, Chennai.@anirudhofficial's saravedi musical 🔥#DarbarAudioLaunch@rajinikanth#Nayanthara@ARMurugadoss@divomovies@gaanapic.twitter.com/uZPXvj2eDb
இந்நிலையில், டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். இதில் பல முன்னணி நடிகர்கள், தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ஹீரோ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை நடிக்க இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார்.
டாக்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேங்லீடர் தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படம் ஆக்ஷன் கலந்த, நகைச்சுவை படமாக உருவாக இருக்கிறது.
திருச்சி அரசு பள்ளியில் நடைமுறையில் உள்ள தண்ணீர் மணி திட்டத்தை, தமிழகம் முழுவதும் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு திவ்யா சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் திருச்சி கருங்குளம் அரசு பள்ளியில் மாணவர்கள் நீர் அருந்த தண்ணீர் மணி அடிக்கப்படுகிறது. இதனை தமிழகம் முழுவதும் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய திவ்யா, “குழந்தைகள் கோடைகாலத்தில் தண்ணீர் குடிக்கும் அளவிற்கு மழைக்காலத்தில் தண்ணீர் குடிப்பதில்லை. தண்ணீர் குடிக்காததால் பல உடல் உபாதைகள் வரும், நீர்சத்து குறைபாடு ஏற்படும். மழைக்காலத்தில் வரும் நோய் தொற்றுகளை தடுக்க குழந்தைகள் அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
திருச்சி கருங்குளம் அரசு பள்ளியில் மாணவர்கள் நீர் அருந்த தண்ணீர் மணி அடிக்கப்படுகிறது. தினமும் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க இந்த தண்ணீர் மணி அடிக்கப்படுகிறது. அப்போது அனைவரும் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். மாணவர்கள் உடல் நலத்திற்காக செய்யும் இந்த முயற்சியை எல்லா பள்ளிகளிலும் பின்பற்ற அரசாங்கம் ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கியமான வாழ்வு வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது. நம் சுகாதார அமைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டும் . நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால் என் கவனம் சுகாதார துறையின் மீது இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மற்ற துறைகளும் மேம்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த அமைப்பில் இருந்தால் தான் சாத்தியம்.
மேலும் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த திவ்யா, விரைவில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது. அதை நோக்கி கள பணிகள் செய்து வருகிறேன். எந்த ஒரு ஜாதியை சார்ந்த கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. அரசியல் பற்றி தெளிவான முடிவு எடுத்துள்ளேன். ஆனால் இப்போது அதை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன்.
ஒரு முக்கியமான விஷயம், ஒரு ஊட்டச்சத்து நிபுணராக என் வளர்ச்சிக்கு அப்பாவின் பெயரையும், புகழையும் உபயோகப்படுத்தினது இல்லை. அதேபோல் என் அரசியல் வளர்ச்சிக்காக அப்பாவின் புகழை பயன்படுத்தமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






