என் மலர்
சினிமா செய்திகள்
அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான மதுஷாலினி, தற்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.
அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் மதுஷாலினி. இவர் தற்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த ‘பஞ்சராக்ஷ்ரம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார்.
இப்படத்தில் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோம், சனா அல்தாஃப் சீமான், ராஜா மற்றும் ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நடைமுறைக்கு மாறாக மற்றும் தற்செயலாக எனத் தொடங்கும் விஷயம் விரைவில் அனைவரையும் நம்பமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு பயங்கரமான கொந்தளிப்பாக மாறுகிறது.

கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2 ரெட் டிராகன்கள், 2 ஏ.ஆர்.ஆர்.ஐ அலெக்சாஸ், 7 கோ ப்ரோஸ் மற்றும் 2 டி.ஜே.ஐ ட்ரோன்கள் போன்ற பல சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். 'பஞ்சராக்ஷ்ரம்' நேரடி கார் ஃபிளிப் ஸ்டண்ட் இடம்பெறும் முதல் இந்திய திரைப்படமாக இருக்கும்.
இப்படத்தின் இசை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் உலகளவில் டிசம்பர் 27ம்தேதி வெளியாக இருக்கிறது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படத்தில் பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிய இந்தப் படம், இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக். இதில், அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.
இந்த படத்துக்கு ‘வலிமை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 10-ந் தேதி இதன் பூஜை நடைபெற்றது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. அத்துடன், அஜித்துடன் நடிப்பவர்கள் யார், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்ற விவரமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வடிவேலு, நஸ்ரியா உள்ளிட்ட சிலர் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவழியாக நாளை படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார் போனி கபூர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அஜித் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. ‘கவுரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். அடுத்த வருடம் (2020) தீபாவளிக்கு 'வலிமை' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, இந்தி படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருபவர் அனுஷ்கா. இந்தி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். சமந்தாவும் தன்னை தேடிவந்த ஒரு இந்தி பட வாய்ப்பை மறுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் சமந்தா நடித்து வெளியான படம் யு-டர்ன். இதை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.
அதனால் இந்தி பதிப்பிலும் சமந்தாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டாராம் சமந்தா. அதனால் சமந்தாவின் வேடத்தில் நடிக்க இப்போது டாப்சியிடம் பேசி வருகிறார்கள்.
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கேப்மாரி’ படத்தின் முன்னோட்டம்.
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி”. இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இது அவரது 25-வது படமாகும். ஜெய்க்கு ஜோடியாக வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு காதல் கலந்த நகைச்சுவை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்மாரி படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய் மற்றும் அதுல்யா, மீண்டும் எண்ணித்துணிக எனும் புதிய படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள 'கேப்மாரி' படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் ’எண்ணித்துணிக’ படத்திலும் ஜெய், அதுல்யா ஜோடியாக நடிக்கின்றனர். ஆக்ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் இதில், வைபவ்வின் சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும், நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜே.பி.தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவில் படமாக்கப்பட உள்ளது.
ஒரு படத்திலாவது சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருப்பதாக நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.
வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகிலா விமல் கூறியதாவது: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறியா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன்.
இப்படத்தில் ஜோதிகாவுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்கிறது.

என்னுடைய தோழி அபர்ணா 'சூரரைப் போற்று' படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள சதீஷ், இதன்மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் காமெடி வேடத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் சதீஷ் இப்படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சதீஷுக்கு நேற்று திருமணம் ஆன நிலையில், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது 25 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சிவா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் ரூ.800 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர்.
மேலும் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்துள்ளது.

இந்த நிலையில், தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அனைவரும் பாங்காக் புறப்பட்டு செல்கிறார்கள். 40 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாட ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட தலைவர் சினோரா பி.எஸ்.அசோக் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
‘7-ல் இருந்து 70’ வரை எனும் தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சமூக சேவகர்கள் பாலம் கல்யாணசுந்தரம், ஓடந்துறை சண்முகம், 2 ரூபாய் டாக்டர் ஹரிஹரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 7 மாத கர்ப்பிணி ஒருவருக்கு சீமந்தம் செய்யப்பட்டது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு முன்கூட்டியே தங்க மோதிரம்-காப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமிய தம்பதியின் பெண் குழந்தைக்கு பரிதா என பெயர் சூட்டப்பட்டது.

செல்வா எனும் மாணவனுக்கு பள்ளி கல்விக்கான உதவித்தொகையும், ஸ்வேதா என்ற மாணவிக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவச பட்டப்படிப்புக்கான ஆணையும், பிரதீப் எனும் பட்டதாரிக்கு அதே பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆணையும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரு கிறிஸ்தவ ஜோடிக்கு நிச்சயதார்த்தம், இந்து ஜோடிக்கு திருமணம் மற்றும் இன்னொரு தம்பதியினருக்கு 60-ம் கல்யாண நிகழ்வும் நடத்தப்பட்டன. அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.
பின்னர் 70 கிலோ ‘கேக்’ வெட்டி, 5 ஆயிரம் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. அதனைத்தொடர்ந்து 200 பெண்களுக்கு 3 சக்கர தள்ளுவண்டி, சேலை, இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு காலை-மதிய உணவும் வழங்கப்பட்டது.
புதிய படங்களில் நடிக்க அழைத்த இயக்குனர்கள், தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாக நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத், ஜீனத் அமன் உள்ளிட்ட இந்தி நடிகைகள் பலர் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். தற்போது நடிகை மஞ்சரி பட்நிஸ் என்பவரும் பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் பரோட் ஹவுஸ், சினா இஜிகா நாம் ஹேய் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் சக்தி படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் தெலுங்கில் கடைசியாக சக்தி படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. எனக்கும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. என்னை புதிய படங்களில் நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர்.

ஆசைக்கு இணங்கினால் தான் வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன். என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். சினிமா பின்னணி இல்லாமல் ஜெயிப்பது கஷ்டம்.”
இவ்வாறு அவர் கூறினார். மஞ்சரியை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள் யார் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளார்.
"பியார் பிரேமா காதல்", "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்", “தனுசு ராசி நேயர்களே” போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர், தற்போது இந்தியில் வெளியாகி ஹிட்டான "விக்கி டோனர்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காதலையும், காமெடியையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன பெல்லிசூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்க உள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர் தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள காடுகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த்-சிவா கூட்டணியில் உருவாகும் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ், கால்ஷீட் பிரச்சனை காரணமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமலாபால், பார்த்திபன் ஆகியோரும் இப்படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.






