என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சூர்யா, மாணவியின் பேச்சை கேட்டு மேடையிலேயே கண் கலங்கினார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதையும் தாண்டி சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கும் வகையில் அகரம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.  

    இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    சூர்யா

    நிகழ்ச்சியில் பேசிய மாணவி ஒருவர், தனது குடும்ப சூழ்நிலைகளையும் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசினார். இதை கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண் கலங்கினார். பின்னர் மாணவிக்கு தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் வந்திருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வருகிற 9-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் தர்பார் படத்தை மட்டுமே திரையிட திட்டமிட்டுள்ளதால் வேறு புதிய படங்களின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.

    ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னட படங்களை தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில் வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தையும் கர்நாடகாவில் திரையிட கூடாது என்று கன்னட அமைப்பு போராட்டம் நடத்தி உள்ளது.

    தர்பார் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியிட உள்ளனர். தர்பார் படத்தை கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.

    எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர்

    கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு அதிக தியேட்டர்களையும் ஒதுக்கி உள்ளனர். இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டம் நடப்பதால் வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என கூறினார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் சினிமா விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோ‌ஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோ‌ஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோ‌ஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.

    உங்கள் பெற்றோர், வாழ்க்கை துணை, துணையாக போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம். புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும். நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி.

    நயன்தாரா

    வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஹீரோயின் படங்கள் வருவது பெருமையாக இருக்கிறது. சமூகவலைதளங்களில் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? எனக்கு கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை’.

    இவ்வாறு அவர் பேசினார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மனைவி ஆலோசனையால் மீசையை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலம், சிமோகாவில் படப்பிடிப்பு நடந்தது. இங்கு, சிறைச்சாலை அரங்கு அமைத்து படமாக்கப்பட்டபோது, மீசையின்றி விஜய் நடித்த தகவல் வெளியாகி உள்ளது. 

    மனைவியுடன் விஜய்

    விஜய்க்கு நெருக்கமானவர்கள் இதுபற்றி கூறியதாவது, 'ஆரம்பத்தில், மீசையை எடுக்க விஜய் தயங்கினார். அவரது மனைவி சங்கீதா, 'பரவாயில்லை... நன்றாகத் தான் இருக்கும்' எனக் கூறவே, மீசையை எடுக்க சம்மதித்தார்' என்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு, சென்னை அடுத்த, பனையூரில் நடக்கிறது. 
    பார்த்திபன் மட்டுமே நடித்து இயக்கிய ’ஒத்த செருப்பு’ திரைப்படம் தமிழில் வெற்றியடைந்த நிலையில், தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
    வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. புது முயற்சியாக இப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்தை கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டினர்.

    பார்த்திபன், நவாசுதீன் சித்திக்

    இந்நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இது குறித்த அறிவிப்பை பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: "ஒத்த செருப்பு படத்தை இந்தியில் நவாசுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். நவாசுதீன் சித்திக் ஏற்கனவே ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, அடுத்ததாக மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    மலையாள திரையுலகில் கடந்த வருடம் 'ஹே ஜூடு' என்கிற படத்தில் முதன்முதலாக நடித்தார் திரிஷா. தற்போது மீண்டும் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்கிற படத்தில் நடிக்கிறார். திரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

    திரிஷா

    த்ரிஷ்யம், தம்பி படம் போல இந்த படமும் திரில்லர் பாணியிலேயே அதே சமயம் மாறுபட்ட கதை அம்சத்துடன் உருவாகிறதாம். இந்த படத்தில் திரிஷா, டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எகிப்து, லண்டன் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லி, நிச்சயம் அவரை நடிக்க வைப்பேன் என தெரிவித்துள்ளார்.
    2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லி. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ , ‘பிகில்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார் அட்லி. 

    அட்லி, பிரியா

    இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் பங்கேற்ற அட்லி, தன் மனைவியும் நடிகையுமான பிரியா குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: என் மனைவியின் திறமை என்ன என்பது எனக்கு தெரியும். கண்டிப்பாக அவர் விரைவில் திரும்ப நடிக்க வருவார். அவள் மிகவும் திறமைசாலி, அவளுடைய திறமையை வெளியில் கொண்டு வருவேன். அது கூடிய விரைவில் நடக்கும் ” என்று கூறியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், பிரபல இயக்குனருடன் நான்காவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
    விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய மூன்று படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். விஜய் இப்போது அவருடைய 64-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். 

    ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடித்துள்ள `தர்பார்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று பேச்சு அடிபடுகிறது. `துப்பாக்கி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கலாமா? என்று ஏ.ஆர்.முருகதாஸ் யோசித்து வருகிறார். `துப்பாக்கி' படத்தின் கதை மும்பையில் நடப்பது போல் இருக்கும். 

    விஜய், ஏ.ஆர்.முருகதாஸ்

    அதே கதைக்களத்தை புதிய படத்துக்கும் வைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு ஒரு கதைக்களத்தை பயன்படுத்தலாமா? என்று உதவி டைரக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்தால், அது அவர்கள் இணையும் நான்காவது படமாக அமையும்.
    ரக்‌ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார் நடிப்பில் சச்சின் இயக்கத்தில் வெளியாகியுள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் விமர்சனம்.
    அமராவதி நகரில் ராமாயண நாடகம் போடுபவர்கள் ஒரு பெரிய புதையலை கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடித்ததை அறிந்த பிரபல தாதா அவர்களை கொன்று விடுகிறார். அவரது இறப்புக்கு பிறகு மகன்கள் இருவரும் அரியணைக்கு அடித்துக் கொள்கிறார்கள். புதையல் ரகசியமும் நீடிக்கிறது. 

    அமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வரும் ரக்‌ஷித் ஷெட்டி புதையலை பற்றி அறிய முயற்சிக்கிறார். அண்ணன், தம்பி இணைந்தார்களா? ரக்‌ஷித் ஷெட்டி ஏன் புதையலை தேடி வந்தார்? ராமாயண குழுவின் நாடகம் மூலம் புதையலின் ரகசியம் எப்படி வெளிப்படுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அவனே ஸ்ரீமன் நாராயணா

    ரக்‌ஷித் ஷெட்டி தான் படத்தின் ஒரே தூண். அதை உணர்ந்து சிறப்பாக நடித்து நம் மனங்களை கவர்கிறார். முக்கால்வாசி காமெடி, கால்வாசி ஆக்‌ஷன் என கலந்துகட்டி அடிக்கிறார். அவர் பல்பு வாங்கும் இடங்கள் வயிறை பதம் பார்க்கிறது என்றால் ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் தெறிக்கிறது. 3 மணி நேர படத்தில் எந்த இடமும் போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார். வழக்கமான கதாநாயகி போல அறிமுகமாகும் ஷான்வி இரண்டாம் பாதியில் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாகிறார். 

    அவனே ஸ்ரீமன் நாராயணா

    பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரும் நடிப்பில் கம்பீரம் காட்டுகிறார்கள். படத்துக்கு சுவாரசியம் கூட்டும் இன்னொரு அம்சம் அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜின் பின்னணி இசை. பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. உல்லாஹ் ஹைதூரின் கலை இயக்கம் பிரம்மிக்க வைக்கிறது. கரம் சாவ்லாவின் ஒளிப்பதிவு அமராவதி என்னும் கற்பனை நகரை கண்முன் கொண்டு வருகிறது. 

    அவனே ஸ்ரீமன் நாராயணா

    ரக்‌ஷித் ஷெட்டியும் அவரது குழுவும் திரைக்கதை எழுதி இருக்கிறது. ரசிகனின் நாடித்துடிப்பை அறிந்து அமைத்து இருக்கிறார்கள். வசனங்களை தமிழ்படுத்தி இருக்கும் விஜயகுமாரும் பாராட்டப்பட வேண்டியவர். கன்னட வசனங்களின் சுவாரசியத்தை குறையாமல் கொடுத்து இருக்கிறார். லாஜிக்கை மறந்து குழந்தைகள், குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படைப்பாக அவனே ஸ்ரீமன் நாராயணா அமைந்துள்ளது.

    மொத்தத்தில் ”அவனே ஸ்ரீமன் நாராயணா” காமெடி தர்பார்.
    பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன் என மலையாள பட நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
    ஒரு அடார் லவ் மலையாள படத்தில் அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் அப்படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்த காட்சி ஒரே நாளில் பிரபலம் ஆனது. அவரை போலவே பலரும் கண்ணடித்து வீடியோக்கள் பதிவிட்டனர். இந்தி நடிகர் ரிஷிகபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் பிரியா வாரியர் கண்ணடித்து நடித்ததை புகழ்ந்து தள்ளினர். இந்த காட்சி வெளியாகி 2 வருடம் ஆகியும் இன்னமும் அதன் பரபரப்பு ஓயவில்லை. 

    நடிகை தீபிகா படுகோனே ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக 'சாபாக்' இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்போல் முகத்தில் மேக் அப் அணிந்து படப்பிடிப்பில் இருந்த தீபிகா அருகிலிருந்த இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று ஒற்றை கண்ணடித்து பிரியா வாரியருக்கு சவால் விடுவதுபோல் சிரித்தார் தீபிகா. 

    தீபிகா படுகோனே, பிரியா வாரியர்

    இக்காட்சி நெட்டில் வீடியோவாக வைரலானது. அதை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பிரியா வாரியர், 'உண்மையிலேயே அந்த தேவதை (தீபிகா) தான் இப்படி கண்ணடித் தாரா? 2019ம் ஆண்டு முடிவதற்கு இதைவிட வேறு நல்ல வழி இல்லை. தீபிகாவின் கண்ணடிப்பில் நான் கவிழ்ந்துவிட்டேன்' என குறிப்பிட்டிருக்கிறார். 
    தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜனவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. 

    இந்நிலையில், ரஜினி, அனிருத்துக்கு எதிராக திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தர்பார் படத்திற்கு 450க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு தராததால் அனிருத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    அனிருத் - ரஜினி

    இது குறித்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கூறும்போது, பேட்ட படத்தின் போதே இசையமைப்பாளர் அனிருத்திடம் சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினேன். அவர் சம்மதம் தெரிவித்துவிட்டு, அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். ஆனால், தர்பார் படத்தின் போது சங்க கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தரவில்லை. மேலும் இந்த விஷயம் ரஜினி அவர்களுக்கும் தெரியும். இதனால், ரஜினி மற்றும் அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிறோம்’ என்றார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை, அந்த படத்துக்காக மற்ற பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம்.
    பல நடிகர்களுக்கு ஜோடி போட்டு வந்த பால் நடிகை, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இதனால், மற்ற ஹீரோக்களுக்கு ஜோடி சேர மறுத்து வருகிறாராம். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். ஆனால், நடிகையோ அந்த படங்களையும் மறுத்து வருகிறாராம்.

    காரணம், நடிகை தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறாராம். இந்தி படங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் பட வாய்ப்பை தவிர்த்து வருகிறாராம்.
    ×