என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    13 ஆண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள விஜயசாந்தி, குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்தி அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தெலுங்கு படமொன்றில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-  “என்னை நடிக்க சொல்லி தொடர்ந்து அழைப்புகள் வந்தன. ஆனால் நல்ல கதைகள் அமையாததால் விலகி இருந்தேன். இப்போது மகேஷ் பாபு படத்தில் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

    அரசியல்தான் எனக்கு முக்கியம். பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பேன். குழந்தைகள் எனக்கு பிடிக்கும். ஆனாலும் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்து விடும். அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்தை விட்டால்தான் பொது தொண்டு செய்ய முடியும். எனவே குழந்தைகள் நமக்கு வேண்டாம் என்று கணவரிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார்.

    விஜயசாந்தி

    அவர் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. எங்கள் காலத்தில் காருக்குள் இருந்தே மேக்கப் போட்டு உடை மாற்றிக்கொள்வோம். குளிர்சாதன கார் தருவது இல்லை. படப்பிடிப்பில் காற்று வரவில்லை என்றால் ஓலையில் செய்த விசிறி கொடுப்பார்கள். சரியாக தூக்கம் இருக்காது. அது மாதிரி கஷ்டம் இப்போதைய நடிகைகளுக்கு இல்லை. கேரவன் உள்ளிட்ட நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.”

    இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தனது முன்னாள் கணவர் திலீப்புடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
    அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மஞ்சுவாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரும் நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

    நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார். ஒரு மலையாள நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு தற்போது ஜாமீனில் வந்து இருக்கிறார். இந்த நிலையில் திலீப் சமீபத்தில் அளித்த பேட்டியில் “என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சு வாரியர் மீது கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் தயக்கம் இல்லை. பொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன்” என்றார்.

    மஞ்சு வாரியர், திலீப்

    இதற்கு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம். நிஜத்தில் அது நடக்கவே நடக்காது. திலீப்புடன் இணைந்து நான் நடிக்க மாட்டேன் என்றார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சு வாரியர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் திலீப் படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன.
    மக்கள் அச்சமின்றி போராடுவது பெருமை அளிக்கிறது என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் முகமூடி அணிந்த மர்ம கும்பல் புகுந்து மாணவர்கள், பேராசிரியர்களை கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்தி நடிகை தீபிகா படுகோனே, தான் நடித்துள்ள ‘சபாக்’ படம் தொடர்பாக நடந்த விழாவில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் திடீரென்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு சென்றார். பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தும் மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். 

    மேலும் மாணவர் சங்க தலைவியும், தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருமான அய்ஷி கோஷை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோனே உரை எதுவும் நிகழ்த்தாமல் புறப்பட்டு சென்றார். 

    இந்த நிலையில் மாணவர்கள் போராட்டம் குறித்து இன்று தீபிகா படுகோனே கூறும்போது, “மக்கள் அச்சமின்றி வெளியே வந்து குரல் எழுப்புவதை பார்த்து மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் வெளியே வருகிறார்கள் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தெருக்கள் அல்லது எங்கிருந்தாலும் சரி அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். 

    தீபிகா படுகோனே

    இதில் முக்கியம் என்னவென்றால் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். நாம் மாற்றத்தை காண விரும்பினால் இது முக்கியமானதாக இருக்கும். நாம் பயப்படவில்லை என்று பெருமைப்படுகிறேன். போராட்டத்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். நாட்டின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்கிறோம்”.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தீபிகா படுகோனே நடித்த ‘சபாக்’ படத்தை புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. அதுபோல் தீபிகாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் ஹேஷ்டேக் இந்திய அளிவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் நாளை சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘தர்பார்’.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள இந்த படத்தை, லைகா புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் பாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், ஒரு வாரம் முன்கூட்டியே, ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. அதற்குமுன் ஜனவரி 8-ந் தேதி அமெரிக்காவில் பிரீமியர் ஷோ திரையிடப்படுகிறது. ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பதால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    நாளை தர்பார் ரிலீசாவதால் வேறு எந்த படமும் இதுவரை ரிலீஸ் அறிவிப்பை வெளியிடவில்லை. தர்பார் தனியாக வெளியாவதால் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. தர்பார் படம் உலகம் முழுக்க 7 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. 

    ரஜினி

    இதுகுறித்து லைகா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் புரடியூசர் சுந்தர்ராஜன் கூறியதாவது:- இதுவரை இந்திய படங்களிலேயே இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக படம் உருவாகி இருக்கிறது. ரஜினி சாரை 15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே உற்சாகம் நமக்கு கிடைக்கும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது. காமெடி, ஆக்‌‌ஷன், வேகம், ஸ்டைல் என்று ரஜினி கலக்கி இருக்கிறார். பெண்களுக்கும் இது முக்கியமான ஒரு படமாக இருக்கும். அந்த அளவுக்கு செண்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    ரஜினி, முருகதாஸ் இருவருக்கும் இது பெரிய பிளாக்பஸ்டராக அமையும். படத்தை விளம்பரப்படுத்த மட்டும் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்படுகிறது. இதுவும் ஒரு சாதனை தான். உலகம் முழுக்க 7 ஆயிரம் தியேட்டர்களிலும் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வெறி பிடித்தது போல் நடித்துள்ளார். அந்த காட்சிகள் பயங்கரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா தான் தனக்கு உத்வேகம் அளிப்பதாக கூறினார்.
    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்த படம் கனா. இந்த படம் பல விருதுகளை குவித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, 'கனா' படத்துக்காக இதுவரை 15 விருதுகள் வரை வாங்கியிருப்பேன் என நினைக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. 

    எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்றாலும், நம்பிக்கை வைத்து பயிற்சியளித்து நடிக்க வைத்தனர். இந்த தருணத்தில் தனுஷ் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். 'காக்கா முட்டை' படத்துக்காக நீங்கள் நிறைய விருதுகள் வாங்குவீர்கள் என்று நம்பிக்கையூட்டினார். மேலும், என்னை பற்றி பெருமையாக நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் பேசினார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    மேலும், நயன்தாரா மேடத்துக்கும் நன்றி. அவர்தான் இன்றைய நாயகிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம். நாயகியை மையப்படுத்திய படங்கள் வெறும் விமர்சன ரீதியில் வெற்றி என்ற நிலை இருந்தபோது, பணம் வசூல் பண்ணும் என்று நிரூபித்தார் நயன்தாரா. நாயகியை மையப்படுத்திய படங்களுக்கும் வியாபாரம் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவர்தான். சீனு ராமசாமி சார் கையால் விருது வாங்கியதை மறக்க முடியாது. 

    ஏனென்றால், 'தர்மதுரை' படத்தின்போது, "உனக்கு இந்திய முகம். நீ எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். அப்படியொரு முக அமைப்பு உனக்கு இருக்கிறது என்று கூறினார். அப்பா, இரண்டு அண்ணன்களை இழந்துள்ளேன். ஆகையால் அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே ஓடத் தொடங்கினேன். இப்போது என் வளர்ச்சியில் அவர் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்” என்றார். தன்னை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியபோது, இருக்கையில் இருந்தபடியே தன் நன்றியை தெரிவித்தார் நயன்தாரா.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் டைரக்டு செய்கிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது. படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் கர்ணன் பெயரை பயன்படுத்த சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனுஷ் படத்துக்கு கர்ணன் பெயரை வைத்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கர்ணன் பட பெயரை பயன்படுத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

    கர்ணன் படக்குழு

    சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் 1964-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. 48 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 2012-ல் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட்டு அப்போதும் நல்ல வசூல் பார்த்தது. சென்னையில் ஒரே தியேட்டரில் மட்டும் 150 நாட்கள் ஓடியது. எதிர்ப்பு காரணமாக தனுஷ் படத்துக்கு கர்ணனுக்கு பதில் வேறு பெயர் சூட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஏற்கனவே தனுஷ் படத்துக்கு சிவாஜியின் திருவிளையாடல் பெயரை சூட்டியபோதும் இதேபோல் சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து பெயரை திருவிளையாடல் ஆரம்பம் என்று மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சேலத்தில் ‘தர்பார்’ படம் வெளியீட்டை முன்னிட்டு ரஜினிகாந்த் கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் நாளை வெளியாகிறது. சேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படுகிறது. படம் வெளியாகும் தினத்தன்று ஹெலிகாப்டரில் இருந்து ரஜினிகாந்த் கட்-அவுட்டுக்கு மலர் தூவ, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர். 

    இதனிடையே, ரஜினி கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி கொடுத்தால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சேலம் வடக்கு மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் ராமனை சந்தித்து மனு கொடுத்தனர்.

    இந்நிலையில், சேலத்தில் ‘தர்பார்’ படம் வெளியீட்டை முன்னிட்டு ரஜினிகாந்த் கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது குறித்து சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை கூறியதாவது:- ‘தர்பார்’ படம் திரையிடப்படும் தியேட்டர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ளது. 

    ரஜினி

    எனவே எப்போது பார்த்தாலும் அந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். எனவே பொது மக்களின் பாதுகாப்பை கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ரஜினிகாந்த் கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

    ரஜினிகாந்த் கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ போலீசார் அனுமதி மறுத்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ரூ.4.90 கோடி செலுத்தினால் மலேசியாவில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்தை வெளியிடலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியே‌‌ஷன்ஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 

    அதில், ‘ரஜினி நடித்த 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை தயாரிக்க ரூ.12 கோடியை, ஆண்டுக்கு கடனும் கொடுத்தோம். அந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம் தரவேண்டும். இந்த தொகையை தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    சென்னை ஐகோர்ட்டு

    இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து லைகா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘தர்பார் படத்தை வெளியிட அனுமதித்தால், மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய பெரும் தொகை கிடைக்க காலதாமதம் ஆகலாம். ஒருவேளை திரும்ப பெறமுடியாத நிலை கூட ஏற்படலாம் என்று மனுதாரர் தரப்பு வாதத்தை நிராகரிக்க முடியாது.

    அதேநேரம், திரைப்படத்தை வெளியிட தடை விதித்தால், அது தயாரிப்பாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, லைக்கா நிறுவனம் ரூ.4.90 கோடியை ஐகோர்ட்டு தலைமைப்பதிவாளர் பெயருக்கு ரொக்கமாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்திவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம். இந்த தொகையை செலுத்தும்வரை மலேசியாவில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டுள்ளார்.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா அடுத்ததாக தொல் பொருள் ஆய்வாளராக நடிக்க இருக்கிறார்.
    திருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். இந்த புதிய படத்தில் ரெஜினா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை ஆப்பிள் டிரி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். ஜனவரி 13ம் தேதி முதல் குற்றாலத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

    ரெஜினா

    படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் பர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா கூறியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்புதானம் செய்து அசத்தி இருக்கிறார்கள்.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய பிறந்தநாள் ஜனவரி 16. விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் 202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்புதான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர்.

    விஜய் சேதுபதி

    இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினார்கள். வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தளவே இருக்கும் நிலையில், ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்தி இருக்கிறார்கள்.
    தமிழில் சுப்ரமணியபுரம், வடகறி, யாக்கை படங்களில் நடித்த சுவாதிக்கு மற்ற நடிகைகளுக்கு கிடைத்த அந்த ராசி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் நடிக்க களமிறங்கி இருக்கிறார்.
    தமிழில் 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் அறிமுகமானவர் சுவாதி. அதன்பின், "போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை" உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2018ம் ஆண்டு அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியா நாட்டில் செட்டிலானார். 

    திருமணத்திற்குப் பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் கொஞ்சம் குண்டாகிப் போன சுவாதி, படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதால் உடற்பயிற்சி செய்து தற்போது ஸ்லிம் ஆகி இருக்கிறார். 

    சுவாதி

    அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னும் தற்போது சினிமாவில் தொடர் வெற்றிகளை சிலர் குவித்து வருகிறார்கள். அந்த ராசி சுவாதிக்கும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
    பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெறுவாரா என்பது குறித்த கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளார்.
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ‘தா பியூச்சர்ஸ்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த கலை அமைப்பை அவர் உருவாக்கி உள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு கும்மிடிப்பூண்டியில் அவருக்கு சொந்தமான ஒய்.எம் ஸ்டுடியோவில் நடந்தது. 

    இதில் அவர் பேசியதாவது:- தமிழகத்தின் கலாச்சார வி‌ஷயங்களை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக ‘தா பியூச்சர்ஸ்’ கலை அமைப்பை உருவாக்கி உள்ளோம். இந்த கால குழந்தைகள் யூடியூப் வழியே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிவோடு நம் கலாச்சாரம், நற்பண்புகளையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

    அதை முன்னெடுக்கும் முயற்சியாக எம்ஐடி கல்லூரி இயக்குநர் பரத்பாலாவுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட உள்ளோம். சமூக வலைதளம் வழியாக மேலும் பலரும் இதில் ஒன்றிணையலாம். போர்க்கால சூழல் இன்றைக்கு உலக அளவில் ஒரு போர்க்கால சூழல் போல, எதிர்மறையான எண்ணங்கள் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன.

    அதை இளம் தலைமுறையினரிடம் சேர விடாமல் தடுக்கும் ஒருவிதையாக இந்த அமைப்பை நினைக்கிறோம். இசை உள்ளிட்ட கலை வடிவங்கள் வழியாக இதை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து

    பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- இப்போது பாடல் வரிகள் புரிவதில்லை என்ற கருத்து உள்ளது. நல்ல பாடல்கள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சில நேரம், நடனம் உள்ளிட்ட வி‌ஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக சில பாடல்கள் உருவாகலாம். அது போன்ற பாடல்களில் வரிகளை விட நடனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    அரசியல் நிலைப்பாடுகளில் கலைஞர்கள் எப்போதும் கருத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து இடம்பெறுகிறாரா என்பதை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம்தான் உறுதிசெய்ய வேண்டும். வைரமுத்து பணியாற்றுவது குறித்து படக்குழுவினருடன் கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ரகுமான் கூறினார்.
    ×