என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திண்டுக்கல்லில் தர்பார் படம் ரிலீஸ் செய்யப்படாததால் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து ரஜினி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள 2 சினிமா தியேட்டர்களில் தர்பார் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதிகாலையில் சிறப்பு காட்சிக்காக டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று இரவு 9 மணிக்கு தியேட்டர் முன்பு குவிந்தனர். இரவு 12 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு திரண்டனர். அப்போது தர்பார் படம் திண்டுக்கல்லில் வெளியாகவில்லை என்ற தகவல் பரவியது.

    இதனால் டிக்கெட் எடுப்பதற்காக பனியில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தியேட்டர் முன்பு அவர்கள் சத்தமிட்டபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்

    இன்று காலை படம் ரிலீஸ் ஆகி விடும் என்று ரசிகர்கள் தியேட்டர் அருகிலேயே விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் இன்று காலையும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அவர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்ட‌னர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். 

    திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் படம் ரிலீஸ் ஆன நிலையில் திண்டுக்கல்லில் மட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.  
    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படம் இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த வருடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 16 படங்கள் அவர் கைவசம் உள்ளன.

    கூர்கா படம் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்துள்ளார். வடிவேலு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடையும் சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து இருப்பதும் சாதகமாக அமைந்துள்ளதால் யோகிபாபு நகைச்சுவை ஏரியாவில் கொடி கட்டி பறக்கிறார்.

    யோகிபாபு

    ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சித்தார்த் கதாநாயகனாக நடித்து வரும் ‘டக்கர்’ படத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் யோகிபாபு நடிக்கிறார். இதில் தந்தை, மகனாக வருகிறார். யோகிபாபுவின் இருவேட தோற்றங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா, யோகிபாபுவுக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. அதுபோல் இரு வேடங்களில் வரும் டக்கர் படமும் தனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று யோகிபாபு எதிர்பார்க்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார் படத்தின் விமர்சனம்.
    மும்பையில் காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு போலீஸ் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்துவிடுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் காவலர்களும் வேலையை விட்டு செல்லும் முனைப்பிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில், டெல்லியில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினி மூன்று கண்டிஷன்களுடன் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார். பதவியேற்றதும், போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல்வாதியின் மகளை காப்பாற்றுகிறார்.

    இதேபோல் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் ஏராளமான இளம் பெண்களையும் காப்பாற்றி, மும்பை நகரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ரஜினி. இந்த போதை மருந்து கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க தீவிரம் காட்டும் ரஜினி, ஒரு தொழிலதிபரின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அவனை கைது செய்துவிடுகிறார். அந்த தொழிலதிபர், தனக்கு இருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி தனது மகனை வெளியே கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்கிறார். 

    ரஜினி

    இதற்கெல்லாம் அசராத ரஜினி தன் சாதுர்யத்தால் அந்த தொழிலதிபரின் மகனை கொல்கிறார். இறந்தது தொழிலதிபரின் மகன் மட்டுமல்ல, உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின் மகன் என பின்னர் தெரிய வருகிறது. இதையடுத்து ரஜினி சுனில் ஷெட்டியின் மகனை எதற்காக கொன்றார்? தனது மகனை கொன்ற ரஜினியை வில்லன் சுனில் ஷெட்டி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ரஜினி, ரஜினி தான், என சொல்லும் அளவுக்கு மொத்த படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். ஆக்‌ஷன், அப்பா-மகள் சென்டிமெண்ட், நயன்தாராவுடன் காதல், யோகிபாபுவுடன் காமெடி என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். அதிரடி போலீஸ் அதிகாரியாக வந்து தனது மிடுக்கான நடிப்பால் அசர வைக்கிறார். காதல், காமெடி, ஸ்டைல், சுறுசுறுப்பு, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என 70 வயதிலும் 6 பந்துகளில் 6 சிக்சர் அடிக்க முடியும் என நிரூபித்து காட்டி நாட் அவுட் பேட்ஸ்மேனாக நிற்கிறார் ரஜினி. 

    நயன்தாரா, ரஜினி

    நாயகி நயன்தாரா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கும் யோகி பாபு, சும்மா தெறிக்கவிட்டுள்ளார், முதல் பாதியில் பல இடங்களில் வந்து செல்கிறார். வரும் போதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார். 

    வில்லன் சுனில்ஷெட்டி, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியில் அறிமுகம் ஆனாலும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒவ்வொரு காட்சியையும் ரஜினி ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். முதல் பாதியில் காமெடி, ஆக்‌ஷன், இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் ஆகியவை ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

    ரஜினி

    படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை, ஒவ்வொரு பிஜிஎம்மையும் தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக ரஜினியின் என்ட்ரி செம மாஸ். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. ரஜினியை பயங்கர ஸ்டைலிஷாக காட்டியிருக்கிறார்.

    மொத்தத்தில் “தர்பார்” பொங்கல் விருந்து.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உடைக்கப்பட்டுள்ளது.
    நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியே‌‌ஷன்ஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 

    அதில், ‘ரஜினி நடித்த 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை தயாரிக்க ரூ.12 கோடியை, ஆண்டுக்கு கடனும் கொடுத்தோம். அந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம் தரவேண்டும். இந்த தொகையை தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    ரஜினி

    வழக்கை விசாரித்த நீதிபதி, லைக்கா நிறுவனம் ரூ.4.90 கோடியை ஐகோர்ட்டு தலைமைப்பதிவாளர் பெயருக்கு ரொக்கமாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்திவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம் என்று கூறியிருந்தார். அதன்படி லைக்கா நிறுவனம், ரூ.4.90 கோடியை செலுத்தியுள்ளது. இதனால், மலேசியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்ட உத்தரவை உடைத்துள்ளது. 
    கேஜிஎப் படம் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் யஷ், பிறந்தநாளன்று தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்.
    2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

    இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    யஷ்

    இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில் கே.ஜி.எப் 2 வின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கேஜிஎப் 2வின் டீசர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை வெளியிடமுடியவில்லை. அதற்கு பதிலாக படத்தின் செக்கண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    தமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபல நடிகையும், பாடகியுமானவர் சம்பள பணத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ரம்யமான நடிகைக்கு இனிய குரல் வளமாம். அவர் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாகி விட்டதாம். இதனால், மிக குறுகிய காலத்தில் சிறந்த பாடகி என்று பெயர் வாங்கி விட்டாராம்.

    இவரை நடிக்க அழைப்பதை விட, பாடுவதற்கு நிறைய பேர் அழைக்கிறார்களாம். அதனால் பாடுவதற்கான கூலியை உயர்த்தி விட்டாராம், அந்த நடிகை!
    அன்பு இயக்கத்தில் சிபிராஜ், ஷ்ரின் கான்ஞ்வாலா, சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் வால்டர் படத்தின் முன்னோட்டம்.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடிக்கிறார். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் மேனன் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது இவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார்.

    இதுகுறித்து இயக்குனர் அன்பு கூறும்போது, ‘வால்டர் படத்தின் வெகு முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குனர் கௌதம் மேனனை அணுகினோம். அவரும் கதாப்பாத்திரம் பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் ஒப்பந்தம் செய்து படமாக்கி வருகிறோம்.

    அவரது கதாபாத்திரம் முழுக்க வில்லன் என சொல்லமுடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என இறுதி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாபாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும் என்றார்.

    இசை - தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு - ராசாமதி, படத்தொகுப்பு - S. இளையராஜா, பாடல்கள் - அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி, கலை இயக்கம் - A.R. மோகன், நடனம் - தாஸ்தா, சண்டைப்பயிற்சி இயக்கம் - விக்கி, தயாரிப்பு மேற்பார்வை - K மனோஜ் குமார்.
    முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, விருது விழாவில் கலந்துக் கொண்ட போது வெளியிட்ட புகைப்படத்தில் இருந்த டாட்டூ ரகசியத்தை ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
    சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மத்தியில் 'டாட்டூ' போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்று. விதவிதமான எழுத்துக்கள், டிசைன்களில் அந்த டாட்டூக்கள் இருக்கும். நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, அவருடைய சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம். 

    பல லட்சம் பேர் அதற்கு லைக் கொடுப்பார்கள். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சமந்தா அப்போது அணிந்த ஆடையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் அவரது வலது இடுப்பு பகுதியில் இருக்கும் டாட்டூ என்ன என்பதுதான் கடந்த சில நாட்களாக பரபரப்பானது. 

    சமந்தா

    அது அவருடைய கணவர் நாக சைதன்யாவில் செல்லப் பெயரான 'சாய்' என்பதின் ஆங்கில கையெழுத்து டாட்டூ என கண்டுபிடித்துவிட்டார்கள் ரசிகர்கள். இது நாள் வரை அந்த டாட்டூவை சமந்தா மறைத்து வைத்திருந்தார். கடந்த வருடம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் கூட அது சரியாகத் தெரியாமல் இருந்தது. தற்போது அந்த டாட்டூ தெளிவாகத் தெரியும்படி இருக்கிறது.
    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ், நித்யாமேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரைலர் விமர்சனம்.
    டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைக்கோ’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குனர்கள் சிங்கம்புலி, ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    மென்மையான இசையுடன் தொடங்கும் இந்த டிரைலரில் சந்தோஷம், ஆச்சரியம், தேடல், ரத்தம், கோபம், அமைதி, பரிதவிப்பு, பழிவாங்கும் வெறி, பாசம், நேரம், காத்திருப்பு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிஷ்கினின் வழக்கமான ஸ்டைலில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாம் கேட்ட இசையுடன் தொடங்கும் இந்த டிரைலர் இளையராஜாவின் பின்னணி இசையோடு வரும்போது காட்சிகளின் விறுவிறுப்பு கூடுகிறது. இந்த டிரைலரில் கொலை, ரத்தம் சிதறல்கள் இருந்தாலும், இசையால் மென்மையாக்கி, காட்சிகளால் மிரட்டி இரண்டையும் மிக்ஸிங் செய்து கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.

    மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில், வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல், பேய் மீது பரிதாபப்படும் அளவிற்கு படத்தை உருவாக்கி இருந்தார். அதுபோல், இந்த சைக்கோ திரைப்படமும் பல கொலைகள் இருந்தாலும், அந்த கொலைகள் கூட ரசிக்கும் படி கொடுத்திருக்கிறாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
    ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தில் விக்ரமும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தந்தையும் மகனும். பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள். 

    இந்நிலையில் விக்ரமும், துருவ்வும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அப்பாவையும், மகனையும் கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    விக்ரம் - துருவ் விக்ரம்

    விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் படத்தில் பிகில் பட நடிகை ஒருவர் இணைந்து நடித்துள்ளார்.
    ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதை, திரைக்கதையை தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது. 

    எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி, அதில் அவரே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பை கவனிக்கிறார். இவர்கள் இருவருமே ‘எல்.கே.ஜி.’ படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள். 

    இந்துஜா - நயன்தாரா

    ‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்துஜா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பில் நடித்த இந்துஜா தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளார்.

    நயன்தாராவும் இந்துஜாவும் ஏற்கெனவே 'பிகில்' படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 'மூக்குத்தி அம்மன்' படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
    13 ஆண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள விஜயசாந்தி, குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்தி அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தெலுங்கு படமொன்றில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-  “என்னை நடிக்க சொல்லி தொடர்ந்து அழைப்புகள் வந்தன. ஆனால் நல்ல கதைகள் அமையாததால் விலகி இருந்தேன். இப்போது மகேஷ் பாபு படத்தில் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

    அரசியல்தான் எனக்கு முக்கியம். பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பேன். குழந்தைகள் எனக்கு பிடிக்கும். ஆனாலும் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்து விடும். அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்தை விட்டால்தான் பொது தொண்டு செய்ய முடியும். எனவே குழந்தைகள் நமக்கு வேண்டாம் என்று கணவரிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார்.

    விஜயசாந்தி

    அவர் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. எங்கள் காலத்தில் காருக்குள் இருந்தே மேக்கப் போட்டு உடை மாற்றிக்கொள்வோம். குளிர்சாதன கார் தருவது இல்லை. படப்பிடிப்பில் காற்று வரவில்லை என்றால் ஓலையில் செய்த விசிறி கொடுப்பார்கள். சரியாக தூக்கம் இருக்காது. அது மாதிரி கஷ்டம் இப்போதைய நடிகைகளுக்கு இல்லை. கேரவன் உள்ளிட்ட நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.”

    இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.
    ×