என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், நடிகர் சூர்யாவை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சூர்யா, சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 38-வது படம். கதாநாயகியாக அபர்ணா முரளி வருகிறார். இறுதி சுற்று படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சாதாரண இளைஞன் விமான நிறுவனம் தொடங்க ஆசைப்படுவதையும், அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகளையும் கருவாக வைத்து படத்தை எடுத்துள்ளனர்.

படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர். இதில் சூர்யாவின் அசத்தலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதேபோல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லரை பார்த்த இயக்குனர் கவுதம் மேனன், சூர்யா மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி, அடுத்ததாக நடிக்கும் படத்தில் காட்டுவாசி பெண் வேடத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் வருண் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் தயாரிக்கும் இப்படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இம்மாதம் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

படம் பற்றி ரமேஷ்ஜி கூறியதாவது:- ‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும், அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வத்தை படத்தின் திருப்புமுனைக்கு பயன்படுத்தியுள்ளோம்’. இவ்வாறு அவர் கூறினார்.
சதுர்முகம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி நடிகை மஞ்சு வாரியர் காயம் அடைந்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுசுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சதுர்முகம் என்ற மலையாள படத்தில் தற்போது நடிக்கிறார். திகில் படமாக தயாராகிறது. இதில் மஞ்சுவாரியர் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் வருகிறார்.
இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. அங்கு மஞ்சுவாரியர் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளை படமாக்கினர். ஆபத்தான சண்டை காட்சிகள் என்பதால் அவருக்கு பதிலாக டூப் நடிகையை பயன்படுத்தலாம் என்று ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஆலோசனை கூறினர்.

அதை மஞ்சுவாரியர் ஏற்காமல் தானே சண்டை காட்சியில் நடித்தார். பாதுகாப்புக்கு கயிறு கட்டி இருந்தனர். அதையும் மீறி மேலே இருந்து கீழே குதித்தபோது மஞ்சுவாரியருக்கு பலமான அடிபட்டது. காலிலும் இடுப்பு பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன. வலியால் துடித்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. வருகிற 12-ந்தேதி மஞ்சுவாரியர் நடன நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மஞ்சுவாரியர் எழுதி உள்ள கடிதத்தில் டாக்டர்கள் எனது காலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளதால் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதனால் நடன நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று வெளியானது. தமிழகத்தில் சிறப்பு காட்சியைக் காண தியேட்டர்களில் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். பல தியேட்டர்களில் காலை 5 மணிக்கே ‘தர்பார்’ திரையிடப்பட்டன. ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட தடைகோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இதையடுத்து ‘தர்பார்’ படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட கோர்ட்டு தடைவிதித்து உத்தரவிட்டது. இதையும் மீறி ‘தர்பார்’ திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழு படமும் இணையதளங்களில் வெளியானது. அதனை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சமீபகாலமாகவே புதிய படங்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தது. திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார்.
சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர், அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான் எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய் சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; மறைக்கவும் வாய்ப்பில்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், சபாக் இந்தி திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் பிசியாக இருக்கும் தீபிகா படுகோனே, சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவரிடத்தில் கர்ப்பம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த தீபிகா படுகோனே கூறியதாவது:- நான் இப்போது கர்ப்பம் தரிக்கும் நிலையில் இல்லை. சினிமாவில் என்னுடைய முழு கவனமும் இருக்கிறது.

நானும், ரன்வீரும் சினிமாவில் நடிப்பதைதான் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறோம். குழந்தைகள் மீது எங்களுக்கு ஆர்வமும், பாசமும் உண்டு. எங்களுக்கும் குழந்தைகள் வேண்டும் தான். அதற்காக, நினைத்த நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. எப்போது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமோ, அப்போது, முடிவெடுத்து செயல்படுவோம். அதை உங்களிடமும் தெரிவிக்கிறேன். அடுத்த ஒன்பதாவது மாதத்தில், நான் சொல்லவில்லை என்றாலும், அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகோரி’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அகோரி'. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, 'கலக்கப்போவது யாரு' சரத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம். ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது. ஃபோர் மியூசிக் எனும் நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தர்பார் படம் இன்று வெளியானதையொட்டி தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், ‘தர்பார்‘ படம் வெளியானது. பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியான ‘தர்பார்’ படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே, தர்பார் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை கோரி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்பார் படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் மூலம் இவர் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். மேலும் பாலிவுட் நடிகை இஷா கோபிகரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில், விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். சீதக்காதியில் வயதானவராக வந்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தார். இந்த கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.
பட விழாக்களில் சூப்பர் டீலக்ஸ் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றது. தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்து இருந்தார். தற்போது கடைசி விவசாயி, லாபம் படங்களில் நடித்துள்ளார். இவை விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன. இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.

விஜய்யின் புதிய படமான மாஸ்டர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா அல்லது நண்பனாக வருகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த காட்சிகள் லீக் ஆகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல்லில் தர்பார் படம் ரிலீஸ் செய்யப்படாததால் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து ரஜினி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள 2 சினிமா தியேட்டர்களில் தர்பார் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதிகாலையில் சிறப்பு காட்சிக்காக டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று இரவு 9 மணிக்கு தியேட்டர் முன்பு குவிந்தனர். இரவு 12 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு திரண்டனர். அப்போது தர்பார் படம் திண்டுக்கல்லில் வெளியாகவில்லை என்ற தகவல் பரவியது.
இதனால் டிக்கெட் எடுப்பதற்காக பனியில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தியேட்டர் முன்பு அவர்கள் சத்தமிட்டபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இன்று காலை படம் ரிலீஸ் ஆகி விடும் என்று ரசிகர்கள் தியேட்டர் அருகிலேயே விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் இன்று காலையும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அவர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் படம் ரிலீஸ் ஆன நிலையில் திண்டுக்கல்லில் மட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படம் இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த வருடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 16 படங்கள் அவர் கைவசம் உள்ளன.
கூர்கா படம் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்துள்ளார். வடிவேலு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடையும் சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து இருப்பதும் சாதகமாக அமைந்துள்ளதால் யோகிபாபு நகைச்சுவை ஏரியாவில் கொடி கட்டி பறக்கிறார்.

ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சித்தார்த் கதாநாயகனாக நடித்து வரும் ‘டக்கர்’ படத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் யோகிபாபு நடிக்கிறார். இதில் தந்தை, மகனாக வருகிறார். யோகிபாபுவின் இருவேட தோற்றங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா, யோகிபாபுவுக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. அதுபோல் இரு வேடங்களில் வரும் டக்கர் படமும் தனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று யோகிபாபு எதிர்பார்க்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.






