என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் அசோக் செல்வன், தெகிடி பட இயக்குனர் ரமேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழில் சூதுகவ்வும், பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில்  கடந்த மாதம் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

    அந்த வகையில் இவர் தற்போது மலையாளத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் அரபிக்கடலிண்டே சிம்ஹம் எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் மலையாளப்படம் இதுவாகும். அதேபோல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

    அசோக் செல்வன்

    இந்நிலையில், அவர் தமிழில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தெகிடி பட இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படமும் தெகிடி பட பாணியில் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும்  இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பண்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் 3 பாகங்களும் நல்ல வசூல் பார்த்தன. இவர் தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  

    ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர்

    மலையாளத்தில் வெளியாகி  வெற்றி பெற்ற, ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமையை சமீபத்தில் பைவ் ஸ்டார் கதிரேசன் கைப்பற்றினார். ஆகையால் அந்த படத்தின் ரீமேக்கில் தான் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    கொரோனாவை கொன்று விரட்ட சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதனை ஏற்று மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியுள்ளதாவது:  “என் இனிய தமிழ் மக்களே, இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் நடக்கும், போராட்ட யுத்தத்தில்,  பல சூழ்நிலை காலக்கட்டங்களில் மிகக் கொடிய அபாய தொற்று நோய்களை கண்டது, நம் பாரத பூமி. நிபா வைரஸ், சிக்கன்குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், ப்ளேக்நோய், ஆந்த்ராக்ஸ், எச்.ஐ.வி. என பல ஒட்டுண்ணிகள் நம் தேசத்தை அச்சுறுத்தியை நாம் அறிந்தோம் , கடந்து வந்தோம்.

    பாரதிராஜா

    அதுபோலவே வளரும், விஞ்ஞானத்தில் கொரோனா போன்ற வைரஸ்கள் ஆச்சிரியமானவை தனிமனித, சுகாதாரமே, தேச நலன் என
    நம் பாரதபிரதமர் மோடி அவர்களின் ஊரடங்கு உத்தரவிற்கும், விழிப்புணர்வு ஏற்பாட்டிற்கும், கைகொடுப்போம். நம் தமிழக அரசின் முயற்சியின் ,வேகங்களும், பாரட்டுக்குறியவை.

    இன்று ஓர் நாள் சூரிய ஒளி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். எதிர்ப்பு சக்தியால், பலபோராட்டங்களை வென்றவர்கள் நாம். உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவை கொன்று , விரட்டுவோம். சுகாதாரம் ஒன்றே,  தற்போதைய மருந்து”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    காசுக்கு ஆசைப்பட்டு என்னோட படத்த இப்படி பண்ணிட்டாங்க என இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி என்ற தரமான படங்களை இயக்கியவர் சேரன். அவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே ’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் சேரன் கதாநாயகனாக நடித்த ‘ராஜாவுக்கு செக்’ படம் கடந்த ஜனவரியில் வெளியானது. 

    இதில் சிருஷ்டி டாங்கே, சாரயு, நர்மதா வர்மா ஆகியோர் நடித்து இருந்தனர். சாய் ராஜ்குமார் இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த வசூல் இல்லை. ராஜாவுக்கு செக் படம் தற்போது இணைய தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகை ஒருவர் ராஜாவுக்கு செக் படத்தை பார்த்தேன். நல்ல திகில் படமாக இருந்தது என்று பாராட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார்.

    சேரன்

    இதற்கு சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “அநியாயமாக கொன்னுட்டாங்கம்மா படத்தை. எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன் படத்தில் வசனம் இருக்கும். அப்படி கஷ்டப்பட்டு உழைத்ததை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா. அவர்கள் நல்லா இருப்பாங்கன்றீங்க. வயிறு எறியுதும்மா. சும்மா விடாது எங்களோட உழைப்பு” என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
    கொரோனா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி நடிகர் ரஜினிகாந்த், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது, அது மூன்றாம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது. இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது  மக்கள் உதாசீனப்படுத்தியதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ரஜினிகாந்த்

    கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும். சுய ஊரடங்கின் போது மக்கள்  ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் நடமாடும் பகுதிகளில் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். என பேசியிருந்தார்.

    இந்நிலையில், ரஜினி பதிவிட்ட வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. ஏனெனில் ‘மக்கள் நடமாடும் பகுதிகளில் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது மக்கள் அதை உதாசீனப்படுத்தியதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக ரஜினி கூறிய கருத்துகள் ஆதாரமற்றதாக இருப்பதால் அந்த வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.
    படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற நடிகர் பிருத்விராஜ், இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித்தவிப்பதாக கூறியுள்ளார்.
    மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். கடந்தாண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் தமிழிலும் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தற்போது பிளஸ்ஸி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை ஜோர்டானில் உள்ள பாலைவனத்தில் நடத்த பிருத்விராஜும் படக்குழுவினரும் அங்கு சென்று இருந்தனர். பிருத்விராஜ் ஜோர்டானுக்கு சென்ற பிறகுதான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை. ஜோர்டானிலேயே படக்குழுவினருடன் தவித்து வருகிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    பிருத்விராஜ்

    அதில் கூறியிருப்பதாவது:- “நாங்கள் கடினமான சூழ்நிலையில் தற்போது ஜோர்டானில் உள்ள வாடி ரம் என்ற இடத்தில் இருக்கிறோம். இந்த சூழலில் வேறு எங்கும் எங்களால் செல்ல முடியவில்லை. ஜோர்டானில் தற்போது சர்வதேச விமான போக்குவரத்தும் இல்லை. பாலைவனத்தில்தான் எங்கள் கூடாரம் உள்ளது. நாங்கள் கூடாரத்தில் உட்காரலாம் அல்லது படப்பிடிப்பை தொடரலாம் என்ற நிலை.

    அதிகாரிகளுடன் பேசி கூடாரத்தில் இருந்து சில நிமிட தொலைவில் உள்ள தனிமையான இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். பெரிய சவாலை உலகம் சந்திக்கிறது. மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலமும் சுகாதாரமாக இருப்பதன் மூலமே இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியும்.”

    இவ்வாறு பிருத்விராஜ் கூறியுள்ளார்.
    தமிழில் பல படங்களில் நடித்து வரும் பால சரவணன், கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன் என்று ஆதங்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவவேண்டும். சானிடைசர் எனப்படும் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை ஆடிக்கடி கழுவி வைரஸ் தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதனை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் சானிடைசரை அதிக விலைக்கு விற்கின்றனர். இது தொடர்பாக காமெடி நடிகர் பால சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில் “கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன். மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் சானிடைசர் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்காக கடைக்கு சென்றேன். 60 ரூபாய் மதிப்புள்ள சானிடைசரை 135 ரூபாய் என்று விலை சொன்னார்கள். அது பற்றி கேட்டதற்கு 'நான் என்ன பண்ணமுடியும். நான் இங்க வேலை தான் பார்க்கிறேன்' என கடையில் இருந்தவர் கூறினார்.



    ஒரு காபி கடைக்கு நண்பர்களுடன் சென்றேன். அங்கு பணியுரியும் பெண்ணும் அதிக விலைக்கு சானிடைசர் விற்பதாக சொன்னார். மேலும் என்னை போன்றே பலரும் புலம்பி வருகின்றனர். அவசர சூழ்நிலையில் இலவசமாக கொடுக்க வேண்டிய பொருட்களை இப்படி அநியாய இலாபத்திற்கு விற்பது சரியில்லை” என்று வீடியோ வெளியிட்டுள்ளார். 
    பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்‌ஷி நடிப்பில் உருவாகி வரும் ‘புரவி’ படத்தின் முன்னோட்டம்.
    பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்‌ஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புரவி’. பெண்களை மையமாகக் கொண்டு அதிரடி, அரசியல், திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது.

    ‘பிக்பாஸ்’ புகழ் சாக்‌ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார். பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார். நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.
    காலா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஹூமா குரேஷி தற்போது வலிமை படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைபப்டம் உருவாகி வருகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச்.வினோத் இதை இயக்கி வருகிறார். அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின.

    இப்போது இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார். இந்தியில் கேங்ஸ் ஆப் வாஸிபுர், டி டே, ஹைவே, ஜாலி எல்.எல்.பி, விக்டரி ஹவுஸ் உட்பட பல படங்களில் நடித்தவர். படத்தில் ஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக நடிகை ஹூமா, புல்லட் ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார். சென்னையின் சில பகுதிகளில், ஹெல்மெட் அணிந்தபடி, அவர் புல்லட்டில் ரவுண்ட் அடித்துள்ளார்.

    ஹூமா குரேஷி

    வலிமை படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. கொரோனாவுக்காக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வலிமை படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
    சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக் கொண்ட நடிகையிடம் தனுஷுடன் டேட்டிங்... விஜய்யுடன் திருமணம் என்று கூறியிருக்கிறார்.
    இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஜிப்ஸி. இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை நடாஷா சிங்கிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது.

    அதாவது நீங்கள் யாரை கில் பண்ண நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் ஜீவாவை தான் என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் யாருடன் டேட்டிங் செல்ல ஆசைப் படுகிறீர்கள். அதற்கு உடனே அவர் நடிகர் தனுசுடன் என்று பதிலளித்துள்ளார்.

    நடாஷா சிங்

    அதுமட்டு மின்றி நீங்கள் யாரை திருமணம் செய்ய ஆசைப் படுகிறீர்கள் என்பதற்கு அவர் தளபதி விஜய் தான் என்று கூறியுள்ளார்.
    இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது என்று மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பாதித்து வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மால்கள், திரையரங்குகள், பொது இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.



    இந்நிலையில், மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன், ‘இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது’ என்று பதிவு செய்திருக்கிறார். மேலும் ‘காரில் சென்றேன். அப்போது டிரைவர் 48 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த முதல் சவாரி நீங்கள்தான் என்று கூறினார். தினமும் பணத்தை நம்பி வாழும் மக்கள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், அவருக்கு பயண பணத்தை விட அதிகமாக 500 ரூபாய் அதிகமாக கொடுத்தேன். தயவு செய்து இல்லாதவனுக்கு கொடுத்து உதவுங்கள்’ என்றார்.
    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க நடிகை திரிஷா அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு திரையுலகமும் தப்பவில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்களை கொரோனா தாக்கி உள்ளது. நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், நடிகை திரிஷா கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

    “கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19. இது நம்மை பாதிக்காமல் தடுத்துக்கொள்ள முடியும். அதற்கு, நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல் வந்தாலோ, தும்மல் வந்தாலோ உடனே கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.



    பயன்படுத்திய டிஸ்யூ பேப்பரை குப்பை தொட்டியில் போட்டு மூட வேண்டும். உங்கள் கண், மூக்கு, வாயை தேவை இல்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி இருபது வினாடிகளாவது சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும். கூட்டமாக இருக்கும் இடத்துக்கு போவதை தவிர்க்க வேண்டும்.

    உங்களுக்கு இருமல், காய்ச்சல் வந்தாலோ, மூச்சு விட கஷ்டமாக இருந்தாலோ மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் பக்கத்தில் இருக்கிற சுகாதார மையம் அல்லது டாக்டரை பார்க்க வேண்டும். அந்த சமயத்தில் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் அல்லது துணியாலாவது மூடிக்கொள்ள வேண்டும்

    இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.
    ×