என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா வைரசால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் மகனுக்கு தானே முடிவெட்டி அழகு பார்த்திருக்கிறார்.
    கொரோனா  வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக  நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது.  இதனால் மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர். 

    நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் வீட்டில் இருந்து என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியும் உற்சாகப்படுத்தியும் வருகின்றனர். இ

    இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு,  இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கௌரவ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விடும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  மேலும் இயக்குநருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்களை தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல் வழங்கியுள்ளார்.
    ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு  மாதத்திற்கான ரேஷன் பொருட்களை  இலவசமாக வழங்கினார். 

    கொரோனா  வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக  நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் பலர் வேலை இழந்து  வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர்.  இந்த இக்கட்டான   சூழ்நிலையில்  பாதிக்கப்பட்டு உள்ளவர்களை ஆதரிப்பதற்காக சமூக அமைப்புகள் முன்வந்து உதவி வருகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை  நகரில் தியாகி அண்ணாமலை நகர்,  கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், சின்னக்கடை தெரு கட்டிட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி, கள் நகர்,  வேங்கிக்கால், மற்றும் திருவண்ணாமலை அருகில் உள்ள  பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களை  ஆர் எஸ் எஸ் எஸ் இந்நிறுவனத்தின்  திரைப்படதயாரிப்பாளரும்  தொழிலதிபருமான எஸ் தணிகைவேல் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்க முன்வந்துள்ளார்.  

    வீடு வீடாக இந்த இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு உதவியாக நீர்த்துளி இயக்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 1500 குடும்பங்களுக்கு இந்த இலவச ரேஷன் பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் தொழிலதிபர் எஸ் தணிகைவேல் சார்பில் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
    கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும்  உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் ஸ்தம்பித்துள்ளது. இதில் மீளும் நடவடிக்கைக்காக நிதி உதவி வழங்கும்படி பிரதமர் மோடியும், தமிழகம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    ஹிந்தியில் அக்ஷய் குமார் ரூ.25 கோடி, தெலுங்கில் பிரபாஸ் ரூ.4 கோடி, மகேஷ்பாபு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி என நிதி உதவி அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் தாங்கள் சார்ந்த சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் சிலர் நிதி உதவி அளித்தனர். பிரதமருக்கோ, முதல்வரின் நிவாரண நிதிக்கோ இதுவரை நிதி வழங்கவில்லை. 

    இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கும் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் சூரி செய்த பிரியாணியை அவரது மனைவி கலாய்துள்ளார்.
    தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் இன்று வரை சமூக வலைதளங்களில் அது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். 

    அந்த வகையில் இன்று தன்னுடைய வீட்டில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  தன்னுடைய குடும்பத்திற்காக சூரி பிரியாணி சமைத்துள்ளார். 

    மனைவியிடம் டேஸ்ட் பார்க்குமாறு  கூற அவர் லைட்டாக சாப்பிட்டு விட்டு தூவென துப்புகிறார். சூரி என்னாச்சு என கேட்க, வாயில உப்பு என அவர் கூறுகிறார். வாயில உப்பு எதற்கு எடுத்து போட்ட கறிய சாப்பிட வேண்டியதுதானே சூரி கிண்டலடிக்கிறார். 
    தன்னுடைய குழந்தை பிறந்தநாளில் 100 எளியவர்களுக்கு அரிசி மூட்டை வழங்கி இருக்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ்.
    கொரோனா வைரஸ் உலகை முடக்கிப்போட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே திண்டாடி வருகின்றன. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது. எளியவர்கள் பலருக்கு வெளியில் நடமாட முடியாத சூழல் இருப்பதால்,  எந்த ஒரு பணியும்  இல்லை, கையில் பணமும் இல்லை. இதனால்  நம்  நாட்டிலும் பெருமளவு ஏழைகள் உணவிற்கே திண்டாடும் நிலையும் உருவாகி வருகிறது. 

    இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம்  நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள்  100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார். பிரபல நடிகை  Dr. ஜெயசித்ரா   அவர்களின் புதல்வனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரீஷ் வழக்காமாகவே தனது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நல்ல நாட்களை  முதியோர் மற்றும்  ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

    இந்த நிலையில் இன்று (31.03.2020)  மார்ச் 31 தனது  பெண்குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை,வெகு வித்தியாசமான வகையில் கொண்டடியுள்ளார் அம்ரீஷ். கொரொனா வைரஸ் தனிமைப்படுத்தல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் தனிமைப்பட்டிருப்பதால தன் குழந்தையின் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று கொண்டாட  முடியாத காரணத்தால் எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை அரிசி வழங்கி கொண்டாடியிருக்கிறார். இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் பிரபுதேவா நடிகர் லாரன்ஸ் முதலாக பல பிரபலங்களும் இவரது செயலை பாராட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். 
    பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது என்று இயக்குனர் விஜய் மில்டன் கூறியுள்ளார்.
    கொரோனா  வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக  நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது.  இதனால் மக்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.  

    இந்நிலையில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூக பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்ப பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது. மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும் சொந்த ஊர்களுக்கு திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம் ஏற்கனவே கயிறு கட்டியவன் கட்டாதவன் ம..புடுங்கியவன் பிடுங்காதவன் என வட்டம்போட்டுக்கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக்கொண்டிருக்கிறோம்.

    சகமனிதர்களை -ஏன் -நண்பர்களை கூட அவ நம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டு விட்டது. நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது. இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச்செல்வதுதான் social responsibility என அவர்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, அமலா பால் இருவரும் கேரளாவில் விருது பெற இருக்கிறார்கள்.
    கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது.  ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெறுகிறார். இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஆடை’ படத்தில் நடித்த அமலாபாலுக்கு வழங்கப்படுகிறது. 

    இந்த படத்தில் அவர் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து இருந்தார். சிறந்த மலையாள படத்துக்கான விருது மது சி.நாராயணன் இயக்கிய ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துக்கு கிடைத்துள்ளது. இதில் பகத் பாசில், ஷேன் நிகம் ஆகியோர் நடித்து இருந்தனர். சிறந்த மலையாள நடிகருக்கான விருது காலித் ரகுமான் இயக்கத்தில் ‘உண்டா’ படத்தில் நடித்த மம்முட்டிக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘உயரே’ படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பார்வதிக்கும் வழங்கப்படுகிறது. ‘வைரஸ்’ படத்தை இயக்கிய ஆஷிக் அபுவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.
    கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான் கான் உதவி செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி அமைப்புக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, உதயநிதி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நிதி வழங்கி உள்ளனர். 
     
    தெலுங்கில் சிரஞ்சீவி இதற்காக ஒரு அமைப்பையே தொடங்கி நிதி திரட்டி வருகிறார். இதுவரை ரூ.3.8 கோடி சேர்த்துள்ளார். இந்த நிலையில் இந்தி நடிகர்களும், சினிமா தொழிலாளர்களுக்கு உதவ பணத்தை வாரி வழங்குகிறார்கள். நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார். 

    இதுகுறித்து இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுதாக சல்மான்கான் உறுதி அளித்துள்ளார்” என்றார்.
    புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். 

    ராஜவம்சம்  படக்குழு

    மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகிறது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், மீண்டும் பிரபல இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    விஷால் தற்போது ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆரம்பித்தபோது மிஷ்கின் இயக்கினார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மோதலால் மிஷ்கினை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, விஷாலே தற்போது இயக்கி வருகிறார். இத்துடன் எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் ‘சக்ரா’ படத்திலும் விஷால் நடிக்கிறார். இதில் ராணுவ அதிகாரியாக வருகிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா காஸண்ட்ரா ஆகிய இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். இந்த படத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விஷால், சுந்தர்.சி

    ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ‘மதகஜராஜா’, ‘ஆம்பள’, ‘ஆக்‌ஷன்’ ஆகிய மூன்று படங்கள் உருவாயின. இதில் ‘மதகஜராஜா’ படம் பண பிரச்சினையால் வெளியாகவில்லை. மற்ற படங்கள் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன. இப்போது நான்காவது முறையாக புதிய படத்தில் இணைகிறார்கள். அதிரடி படமாக தயாராவதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி தற்போது ‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் விஷாலை வைத்து இயக்கும் படவேலைகளை தொடங்குகிறார். அத்துடன் முத்தையா இயக்கும் படத்திலும் விஷால் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
    பிரபல அமெரிக்க பாடகர் ஜோ டிப்பிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜோ டிப்பி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61. இது இசையுலக ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் ஜோ டிப்பி புகழ்பெற்ற பாடகராக இருந்தார். 1990-களில் பல இசை ஆல்பங்களை வெளியிட்டு உள்ளார்.   

    இவரது 18 பாடல்கள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இசை உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் ‘கிராமி’ விருதையும் பெற்று இருக்கிறார். இவருக்கு தெரசா கிரம்ப் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஏற்கனவே பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.

    ஜோ டிப்பி

    பிரபல ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கும கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோ ஆகியோர் கொரோனா பாதிப்பில் சிக்கி சிகிச்சை மூலம் குணமடைந்து இருக்கிறார்கள்.
    இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
    கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ‘பார்த்த முதல் நாளே பாடல்’ வரவேற்பை பெற்றது. கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படம் நல்ல வசூல் பார்த்தது. 

    தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் கமல்ஹாசனை இயக்குனர் கவுதம் மேனன் சந்தித்து பேசினார். இதுதொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக கவுதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசன். கவுதம் மேனன்

    மேலும் வேட்டையாடு விளையாடு படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற கமலின் அறிமுக காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இரண்டாம் பாகத்திலும் ஒரு மாஸான காட்சி அமைக்க எதிர்பார்த்து காத்திருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதன்முலம் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் உருவாவது உறுதியாகியுள்ளது. 
    ×