என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல பாடகியின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகம் வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் முதல்- மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த வரிசையில் பிரபல கர்நாடக இசை பாடகி பெங்களூரு நாகரத்னம்மாளின் வாழ்க்கை சினிமா படமாகிறது. 

    சமந்தா

    இவர் திருவையாறு ஆராதனை விழாவில் பெண் இசைக்கலைஞர்களும் பங்கேற்க வழி செய்தவர். இவரது மூதாதையர்கள் மைசூரு அரசவையில் பாடகர்களாக இருந்தவர்கள். நாகரத்னம்மாளின் வாழ்க்கை கதை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்குகிறார். இவர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். படத்தில் நாகரத்னம்மாள் வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    டிராப்பான தனுஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்த படம் 'திருடன் போலீஸ்'. புதுப்பேட்டை படத்துக்கு பின், அதாவது 2006ம் ஆண்டு இப்படத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால்  இப்படம் கைவிட்டப்பட்டது.

    இப்படத்தை தனுஷின் சகோதரி விமல கீதா தயாரிப்பதாக இருந்தது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில், டிராப்பான திருடன் போலீஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அதேபோல் இப்படத்தை மீண்டும் எடுத்தால் தரமான சம்பவமாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெறுகிறார். இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஆடை’ படத்தில் நடித்த அமலாபாலுக்கு வழங்கப்படுகிறது.

    விஜய் சேதுபதி

    இந்த படத்தில் அவர் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து இருந்தார். சிறந்த மலையாள படத்துக்கான விருது மது சி.நாராயணன் இயக்கிய ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துக்கு கிடைத்துள்ளது. இதில் பகத் பாசில், ஷேன் நிகம் ஆகியோர் நடித்து இருந்தனர். சிறந்த மலையாள நடிகருக்கான விருது காலித் ரகுமான் இயக்கத்தில் ‘உண்டா’ படத்தில் நடித்த மம்முட்டிக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘உயரே’ படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பார்வதிக்கும் வழங்கப்படுகிறது. ‘வைரஸ்’ படத்தை இயக்கிய ஆஷிக் அபுவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.
    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் பஹிரா படத்தில் 5 நாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார்.  சைக்கோ திரில்லர் திரைப்படமாக இது உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.

    அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். கொரோனா பீதியால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பஹிரா பட போஸ்டர்


    இந்நிலையில், இப்படத்தில் மொத்தம் 5 நாயகிகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரியும், அனேகன் படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் 3 பேர் புதுமுக நாயகிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
    குழந்தைகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற சக்திமான் தொடர் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள மக்களின் பொழுதுபோக்குக்கு உதவியாக தூர்தர்ஷனில் 1980-களில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்ற ராமானந்த் சாகரின் ராமாயணம், பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் மற்றும் சக்திமான் தொடர்களை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதை ஏற்று கடந்த சனிக்கிழமை முதல் தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர், தினமும் காலை 9 மணிமுதல் 10 மணிவரை ஒரு எபிஷோடும், இரவு 9 மணிமுதல் 10 மணிவரை இன்னொரு எபிஷோடும் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த தொடரில் ராமராக அருண் கோவிலும், சீதையாக தீபிகா சிகாலியாவும், அனுமனாக தாரா சிங்கும் நடித்துள்ளனர். இந்த நிலையில், சக்திமான் தொடரையும் மீண்டும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும், சக்திமான் தொடரின் கதாநாயகன் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். சக்திமான் தொடர் தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் குழந்தைகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
    ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் கதாநாயகி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே துவக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

     இப்படத்தை அடுத்து  ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 39வது படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டுள்ளது.   

    இயக்குனர் ஹரி தற்போது நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் பிசியாக இருக்கிறார்.  இந்நிலையில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படங்களை இயக்கிய மோகன் ஜி, சிம்பு ரெடினா நானும் ரெடி என்று கூறியுள்ளார்.
    பழைய வண்ணாரப்பேட்டை படத்தை  இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம்  திரௌபதி. இதில்  ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 

    இப்படத்தை அடுத்து இயக்குனர் மோகன் ஜி- ரிச்சர்ட் ரிசி மீண்டும் புதிய படம் மூலம் இணையஇருக்கிறார்கள்.  மேலும் எனது அடுத்த படத்தின் தலைப்பும் ஒரு கடவுள் பெயர் தான் என்று மோகன் கூறியிருந்தார். 

     இந்நிலையில் ரசிகர் ஒருவர் "நீங்களும் சிம்புவும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும்" என்று கூற, அதற்கு பதிலளித்த அவர் "சிம்பு ரெடினா நானும் ரெடி. எனது அடுத்த படத்தை முடித்துவிட்டு சிம்புவுடன் பேசுவேன்" என்று கூறியுள்ளார்.
    தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே லண்டன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
    தென்னிந்திய மொழிகளிலும், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில், ரஜினியுடன், கபாலி, பிரகாஷ் ராஜுடன், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர், பெனடிக்ட் டெய்லர். 

    இந்நிலையில், சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ள தன் படத்தை, சமூக வலைதள பக்கத்தில் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். அதில், ‛தனக்கு கொரோனா இல்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ‛இடது விரலில் ஏற்பட்ட காயத்திற்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளேன்' என, பதிலளித்துள்ளார். 

    கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராதிகா ஆப்தே சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
    சினிமாவிற்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன் என்று தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்து வரும் பூர்ணா கூறியுள்ளார்.
    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா தோற்றத்தில் பூர்ணா நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘சவரக்கத்தி’, போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மலையாள நடிகையான இவர் தனது வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு ரகசியங்களைப் பற்றி மனந்திறக்கிறார்!

    எனது தந்தை காசிம், தாயார் ரம்லா பீவி. எனக்கு நான்கு சகோதரர்கள். சராசரி குடும்பத்தில் இருந்து திரை உலகிற்கு வந்த நான் இந்த அளவுக்கு உயர என்னைவிட அதிக பிரச்சினைகளை சந்தித்தது என் அம்மாதான். நான் சிறந்த நடிகையாகவேண்டும், புகழ்பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

    நான் நடனம் கற்றுவிட்டு கோவில்களிலும் மற்ற வழிபாட்டு தலங்களிலும் ஆடினேன். அதனால் விமர்சனத்திற்குள்ளானேன். சினிமாவிற்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் சார்ந்திருக்கும் மதத்தில் அதிக நம்பிக்கை கொண்டவள். நினைவு தெரிந்த நாளில் இருந்து எல்லா புண்ணிய நாட்களிலும் நோன்பிருக்கிறேன். இது தெரியாமல் என்னை விமர்சிக்கிறவர்களுக்கு நான் பதில்சொல்ல விரும்பவில்லை.

    என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் அதைவிட ஒரு குழந்தையை கூடுதலாக பெற்று, ஆறு பேருக்கு அம்மாவாக விரும்புகிறேன். ஏனெனில் கர்ப்பம், பிரசவம் போன்றவைகளை நான் ரசித்து அனுபவிக்க விரும்புகிறேன்.

    அம்மா, எனது சகோதரர்கள் நால்வரையும் சவுகரியமிக்க வசதியான மருத்துவமனைகளில் பிரசவித்திருக்கிறார். நான் மட்டும் ஆரம்ப சுகாதார மையத்தில் பிறந்திருக்கிறேன். கிராமங்களில் அப்போது பிரசவத்திற்காகவே ஒரு அறையைகட்டி வைத்திருப்பார்கள். நான் பிறந்த அந்த அறை, இப்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கிறது. அந்த பகுதிவழியாக செல்லும்போது அம்மா அதை சுட்டிக்காட்டி, ‘பெரிய நடிகையான பூர்ணா, இந்த பைவ் ஸ்டார் அறையில்தான் பிறந்தார்’ என்று சிரித்தபடி சொல்வார்.

    எனக்கும் ஒரு காதல் இருந்தது. ஆனால் இருவருமே ஒருவருக்கொருவர் வலியை தராமல் பிரிந்துவிட்டோம். அந்த காதலை பற்றி என் குடும்பத்தினருக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் தெரியும். வீட்டில் எல்லோரது சம்மதத்துடனும் என் திருமணம் நடக்கவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால் அந்த காதலில் அது நடக்காது என்பதை எங்களால் உணர முடிந்தது. என்றார்.
    இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடிகர்-நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு, தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள். கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவியும் அளிக்கின்றனர். 

    ஆனால் இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார். இவர் கடந்த மாதம் திரைக்கு வந்த ‘காஞ்ச்லி லைப் இன் எ ஸ்லாஷ்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக வந்தார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவும் பணிகளில் தொண்டு நிறுவனத்தினர் இணைய வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலராக ‘நர்சு’ பணியில் சேர்ந்துள்ளார். 

    இவர் நர்சிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கதாநாயகி ஆனதால் நர்சு வேலை பார்க்காமல் இருந்தார். இப்போது அந்த பணியை ஏற்றுள்ளார். ஆஸ்பத்திரியில் நர்சு சீருடை அணிந்து வேலைபார்க்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மோசமான தருணத்தில் மக்களுக்கு நர்சாக சேவையாற்ற முடிவு செய்துள்ளேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அரசுக்கு உதவுங்கள்” என்று கூறியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி தனது மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார்.
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன். தமிழ் சினிமா இயக்குனர். இவர் விண்ணுக்கும், மண்ணுக்கும் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். காதல்கோட்டை, சூரியவம்சம் உள்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் நடிகைகளில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி. 

    இவரும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். 

    அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு பகுதியில் ராஜகுமாரனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் தேவயானி நடித்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    நடிகை தேவயானியும் தன்னுடைய குடும்பத்தினருடன் சந்தியபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் முடங்கி உள்ளார். இந்த நிலையில் அரசின் விதிமுறைகளை மதித்து அவர் தனது மகள்களுடன் பண்ணை வீட்டில் சிலம்பம் கற்று வருகிறார்.
    கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை, பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.
    கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு பொதுமக்களை வெளியே செல்லாமல் வீட்டில் இருங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இதையும் மீறி பலர் வெளியில் சுற்றுவதாக பிரபலங்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். 

    காய்கறி கடைகளில் விதிமுறையை மீறி கூட்டம் சேருகிறது. டெல்லியில் பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கொரோனா சமூக பரவலாக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

    பிரகாஷ்ராஜ்

    இந்த செயலை சாடி, நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “‘கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். நான் எனது மகனோடு வீட்டில் நேரத்தை கழிக்கிறேன்”. இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
    ×