என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் குமார் இயக்கி நடிக்கும் ஜிகிரி தோஸ்து படத்தின் முன்னோட்டம்.
    நடிகரும், குறும் பட இயக்குனருமான விக்னேஷ் குமார் 5 விருதுகளை வென்ற குறும் படங்களை டைரக்டு செய்ததன் மூலம் பிரபலமாக வெளிச்சம் பெற்றார். திறந்த புத்தகம், யாத்ரிகன், நீங்க நல்லவரா, கெட்டவரா? உள்பட 9 குறும் படங்களில் இவர் நடித்து இருக்கிறார். ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் அவரிடம் உதவியாளராக பணிபுரிந்து இருக்கிறார். சைமா விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளார்.

    `ஜிகிரி தோஸ்து' படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். பிக்பாஸ் ஷாரிக், ஆர்.என்.ஆர்.மனோகர், துரை சுதாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விக்னேஷ் குமார் படத்தை இயக்கி நடிப்பதுடன், ஆர்ஜுன், ஹக்கா ஆகியோருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். நட்பின் பெருமை சொல்லும் படமாக இது தயாராகிறது.
    தனக்கு கொரோனா இருப்பதாக டுவிட் போட்ட இயக்குனர் ராம் கோபால் வர்மாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
    தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர். 

    அந்தவகையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று, தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் கூறியுள்ளார் என ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த டுவிட்டை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.


    பின்னர் அடுத்த பதிவில், எனக்கு கொரோனா தொற்று இல்லை, எனது டாக்டர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார் என்னை April Fool ஆக்கிவிட்டார், இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்". ராம் கோபால் வர்மாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் பலர் அவரை திட்டித் தீர்த்தனர். அவரை கிண்டலடித்து மீம்ஸ் போட்டனர். பின்னர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டார். 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இதை செய்தால் உலகில் மாற்றம் வரும் என கூறியுள்ளார்.
    ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலாபால், சமீபத்தில் இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை பவ்னிந்தர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு சிறிது நேரத்தில் நீக்கி விட்டார். இந்த திருமணம் குறித்து சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, “‘உங்களுடைய பஞ்சாப் கணவர், உங்களை நன்றாக பார்த்துக்கொள்வார். பஞ்சாபியரை நம்பலாம்” என்று வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். 

    அமலாபால்

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து அமலாபால் கூறியிருப்பதாவது:- “கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு உதவியாக இருங்கள். பால்காரர், வாட்ச் மேன், டிரைவர்களுக்கு உதவி செய்யுங்கள். முன்னாள் பணியாளர்கள் நன்றாக இருக்கிறார்களா? என்று விசாரியுங்கள். எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். இதன் மூலம் உலகில் மாற்றம் வரும்” இவ்வாறு கூறியுள்ளார்.
    மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். 

    அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த இரவு பகலாக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினரை பாராட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    அதில் அவர் கூறியுள்ளதாவது: "இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற தன்மைக்கும் நன்றி தெரிவிப்பதற்கே இந்த பதிவு. இந்த மிக மோசமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மனநிறைவை தருகிறது.

    நம்மைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். நமது வேறுபாடுகளை மறந்து உலகை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதற்கான நேரம் இது. மனிதநேயம் மற்றும் ஆன்மீகத்தின் அழகை செயலில்  கொண்டுவருவதற்கான நேரம் இது. அருகில் இருப்பவர்கள், மூத்த குடிமக்கள், புலம்பெயரும்  தொழிலாளர்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு உதவுங்கள். 


    கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார். மிக புனிதமான ஆலயம் அதுதான்.  மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல. அரசாங்கத்தின் ஆலோசனையைக் கேளுங்கள். சில வாரங்களுக்கு சுய தனிமையை கடைபிடித்தால்,  இன்னும் பல ஆண்டுகள் நிம்மதியாக வாழலாம். 

    வைரஸை பரப்பி சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். பொய்யான வதந்திகளை பரப்புவதற்கும், பீதியை ஏற்படுத்துவதற்கும் இது நேரம் அல்ல. தயவுசெய்து சிந்தனையுடன் செயல்படுங்கள், பலரது வாழ்க்கை நம் கையில் உள்ளது. " இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கொரோனாவில் இருந்து மீண்ட சீனர்கள் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார்.
    சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் ழுழுவதும் பரவி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரசால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். உகானில் உள்ள சந்தையில் உணவுக்காக பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் உணவுக்காக விற்கப்படுகின்றன.

    இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கில் இருந்துதான் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாக கூறப்படுகிறது. கிருமியால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சந்தையில் வேலை பார்த்தவர்கள்தான். தற்போது சீனாவில் வைரஸ் தொற்று குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், அங்குள்ள சந்தைகளில் மீண்டும் இதே விலங்குகளை விற்கவும், வாங்கவும் தொடங்கி உள்ளனர்.

    ஸ்ரத்தா தாஸ்

    இதை கேள்விப்பட்ட இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ் சீனர்களை கடுமையாக சாடி உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “‘கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகும் இப்படி வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம் திண்கிறீர்களே? உங்களுக்கு புத்தி இல்லையா?” என்று கண்டித்துள்ளார். இறைச்சி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவாக மேலும் ஏராளமானோர் சீனர்களை திட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
    மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். 

    இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டு, மீதி படத்தை விஷாலே இயக்க உள்ளார்.

    துப்பறிவாளன் 2 படக்குழு

    இந்நிலையில், துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் நடித்துள்ள பிரசன்னாவிடம், மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரசன்னா, ''துரதிர்ஷ்டவசமாக மிஷ்கின் இந்த படத்தில் இல்லை. அதற்காக நான் வருந்துகிறேன். அதே நேரம் விஷால் சிறப்பானதை கொடுப்பார் என நம்புகிறேன். அவரிடம் நிரூபிக்கபட வேண்டியவை நிறையவுள்ளது'' என தெரிவித்துள்ளார். 
    கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொத்து கொத்தாக கொன்று வருகிறது. பிரபல நடிகர்-நடிகைகளையும் இது விட்டு வைக்கவில்லை. ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜேக் கொரோனாவுக்கு தற்போது பலியாகி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. 

    ஆண்ட்ரூ ஜேக் உலக ரசிகர்களை கவர்ந்த ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் 7 மற்றும் 8-ம் பாகங்களில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் படங்களில் நடிப்பு பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம், திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக வலம் வந்த ஜோ டிப்பி ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

    ஆண்ட்ரூ ஜேக்

    ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகைகள் ஓல்கா குரிலென்கோ, இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள் தாமாக முன்வந்து நிதி வழங்குமாறு பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரே‌‌ஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். 

    எனவே அவர்களுக்கு பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும். எங்கள் வேண்டுகோளை ஏற்று நல்ல இதயம் கொண்டவர்கள் இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சத்து 64 ஆயிரமும், அரிசி மூட்டைகளும் வழங்கி இருக்கிறார்கள். 

    ஆர்.கே.செல்வமணி

    இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை. தமிழ் திரைப்பட துறையில் நல்ல நிலைமையில் இருக்கிற நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் அனைத்து பிரிவினரும் திரைப்பட தொழிலாளர்களை காப்பாற்ற நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
    அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், விமான பயணத்தால் தனிமைப்படுத்த பட்டிருக்கிறார்.
    நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தின் மூலம் சென்னை வந்துள்ளார். மீண்டும் சென்னையிலிருந்து பெங்களுருக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதனால், சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் படி மார்ச் 16ந் தேதியில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இதை இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து ரசிகர்களுடன் உரையாடிய ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், மனக்கவலையினால் என்னையும் என் அம்மாவையும் நினைக்க மறந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

    அமலாபால் நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல திரைப்படம் உருவாகி உள்ளது. கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    சமீபத்தில் நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்க்கீஸ் கடந்த ஜனவரி மாதம் காலமானார். இந்நிலையில் தற்போது அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார்.

    அதில், ''பெற்றோர்களை இழப்பது என்பது வார்த்தைகளால் விளக்க முடியாதது. எனது அப்பாவை இழந்த பிறகு வாழ்க்கையின் புதிய பரிணாமத்தை பார்க்கிறேன். நாம் வளர வளர நம்மிடம் இருக்கும் குழந்தைத்தன்மையை பாக்ஸில் வைத்து மூடிவிடுகிறோம். நம்மை நாமே நேசிக்க மறந்துவிடுகிறோம்.

    எப்பொழுது நாம் நம்மை முழுவதுமாக நேசிக்க கற்கப்போகிறோம் ? நம் அம்மாக்கள் அவர்களை நேசிக்க மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் முழுவாழ்வையும் தங்கள் கணவருக்காக குடும்பத்தினருக்காக செலவிடுகின்றனர்.

    நான் மனக்கவலையினால் என்னையும் என் அம்மாவையும் நினைக்க மறந்துவிட்டேன். ஆனால் இப்பொழுது அன்பின் வழியே எங்களை நாங்கள் பீனிக்ஸ் போல மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.

    தமிழில் காதல் கண் கட்டுதே படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதுல்யா தம்பியுடன் சண்டை போட்டுள்ளார்.
    அதுல்யா 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர். அதை தொடர்ந்து ஏமாலி (2018) , நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

     தற்போது படப்பிடிப்புகள் இல்லாததால் மேலும் தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதுல்யா தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். வீட்டில் சும்மா இருக்க முடியாத அதுல்யா தன்னுடைய தம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளார். இதை அதுல்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    மனைவி கஜோல் மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு என்று வெளியான செய்திக்கு நடிகர் அஜய் தேவ்கான் விளக்கம் அளித்துள்ளார்.
    இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் அஜய்தேவ்கான். இவருக்கும் நடிகை கஜோலுக்கும் 1999-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கஜோல் தமிழில் பிரபுதேவா ஜோடியாக ‘மின்சார கனவு’ படத்தில் நடித்து இருந்தார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

    இந்த தம்பதியின் 16 வயது மகளான நைசா, சிங்கப்பூரில் உள்ள பள்ளியொன்றில் படித்து வருகிறார். சமீபத்தில் கஜோல் சிங்கப்பூருக்கு சென்று இருந்தார், கொரோனா பரவல் காரணமாக அங்கு பள்ளிகள் மூடப்பட்டதால் மகளை மும்பைக்கு அழைத்து வந்துவிட்டார். இந்த நிலையில் மகளை அழைத்துக்கொண்டு கஜோல் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். இதனால் இணையதளம் ஒன்றில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானது. இது இந்தி திரையுலகினர் மத்தியில் பீதியை கிளப்பியது. 

    இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவும் ஆரம்பித்தது. இதனை அஜய்தேவ்கான் டுவிட்டரில் மறுத்துள்ளார். “மனைவியும், மகளும் நலமாக உள்ளனர். எந்த பாதிப்பும் இல்லை. அவர்களை பற்றி பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
    ×