என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் எனும் மலையாள படம் தெலுங்கிலும் ரீமேக் ஆக உள்ளது.
    கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’ சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. 

    படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். 

    ராணா டகுபதி, பாலகிருஷ்ணா

    இவர் ‘ஜெர்சி’, ‘அலா வைகுண்டபுரம்லு’ ஆகிய படங்களை தயாரித்தவர். இந்தப் படத்தில் மலையாளத்தில் பீஜூமேனன் நடித்த பாத்திரத்திற்கு பாலகிருஷ்ணாவையும், பிருத்விராஜ் நடித்த பாத்திரத்திற்கு ராணா டகுபதியையும் நடிக்க வைக்க நாகவம்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.
    உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர், அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து போனாராம்.
    சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தன. 

    இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு பழங்கள் வழங்கினார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன. குரங்குகளுக்கு பழம் வழங்கியதை சந்தன்குமார் படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம். 


    நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்?. மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட 500 குரங்குகளுக்கு உணவளிப்பது எளிதானது’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
    கொரோனா வைரஸை சிலர் சமூக பிரச்சனையாக மாற்றுவதாகவும், அவர்கள் வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “இந்த சூழலில் மிகவும் பயமுறுத்தும் வி‌ஷயம் என்னவென்றால் சிலர் கொரோனா வைரஸை ஒரு சமூகப்பிரச்சினையாக மாற்றுகிறார்கள். இந்த வைரசுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக்கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருக்கவும். 

    குஷ்பு

    எல்லா மதக்கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கொரோனா வைரசுக்கு மதம் கிடையாது. அது ஜமாத்தோ, உ.பி.யோ, கேரளாவோ எதுவாக இருக்கட்டும், எல்லாமே தவறுதான். இது போன்ற ஆபத்தான கட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காதது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.” இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
    கொரோனாவால் அரசு பிறப்பித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு முடிந்த பின்னரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என நடிகர் ஹிருத்திக் ரோஷன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. ஊரடங்கு வெற்றிகரமாக முடிந்தால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனாலும் ஊரடங்கை மீறி பலர் வெளியே சுற்றுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களால் வைரஸ் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது. 

    நடிகர்-நடிகைகள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வற்புறுத்தி வருகிறார்கள். 21 நாட்கள் ஊரடங்கு முடிந்ததும் நாடு சகஜ நிலைக்கு திரும்புமா? அல்லது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்த உண்ணம் உள்ளன. இதுகுறித்து கடைசி நாளில் மத்திய அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹிருத்திக் ரோஷன்

    இந்த நிலையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ஊரடங்கு முடிந்த 22-வது நாள் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். ஊரடங்கின் முடிவை வெற்றியாக அர்த்தம் கொள்ளக்கூடாது. கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும்வரை, நாம் சமூக விலகலை தொடர வேண்டும். இதற்கு பல மாதங்கள் வரை ஆகலாம். தயவு செய்து இதனை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்”. இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை சார்மி, புதிய அவதாரம் எடுக்க உள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை சார்மி. இவர் தனது காதலரான இயக்குனர் புரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

    இதற்கிடையே அவருக்கு படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் ஆசை வந்திருக்கிறது. அடுத்து தான் தயாரிக்க உள்ள படத்துக்கு தானே கதை எழுத சார்மி விரும்புகிறார். இது பற்றி தனது காதலர் புரி ஜெகன்னாத்திடம் கூற, அவர், ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தை படிக்க சார்மியிடம் கொடுத்துள்ளார். 

    இந்த புத்தகத்தை தான் கடந்த சில நாட்களாக படித்து வருவதாக சார்மி கூறியுள்ளார். சீக்கிரமே ஸ்கிரிப்ட் ரைட்டராக மாற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
    தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்த அத்தி ராவ் ரசிகர் ஒருவருக்கு கூலாக பதிலளித்துள்ளார்.
    தமிழில் காற்று வெளியிடை , செக்க சிவந்த வானம்,  சைக்கோ படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. பாலிவுட் நடிகையான இவர் தமிழ் , தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

    டிவிட்டரில் ரசிகர் ஒருவர், உங்களை பார்த்தால் ஏலியன் போல இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கான முகம் உங்களுக்கு இல்லை என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த  அதிதி, ' அடடா , எப்படி இதை ஊகித்தீர்கள் ? என கேட்டிருக்கிறார். உலகம் முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். யாரும் அதைப் போல தோன்றவில்லை.  உங்களை பார்த்தால் அப்படி தோன்றியது ' என மீண்டும் அந்த நபர் டிவிட் செய்ய, ' நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இல்லை. நீங்கள் சொல்வது போல் கூட இருக்கலாம் ' என கூலாக பதில் சொல்லி இருக்கிறார் அதிதி. 

    வழக்கமாக ரசிகர்கள் இதுபோல் கிண்டல் செய்யும்போது, அதற்கு நடிகைகள் பதிலடி கொடுப்பார்கள். கோபம் அடைவார்கள். ஆனால் அதிதியின் கூல் ரியாக்ஷன் பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.
    தனது குழந்தைகளின் முதல் பிறந்தநாளை பிரஜன், சான்ட்ரா தம்பதினர் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள்.
    தனியார் டிவி சேனலில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் பிரஜன். அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவரும் நடிகை சான்ட்ராவும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.

     இந்த தம்பதினருக்கு கடந்த வருடம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்களுக்கு மித்ரா, ருத்ரா என்று பெயர்வைத்தார்கள். குழந்தைகளின் முதல் பிறந்தநாளை நேற்று கொண்டாடி இருக்கிறார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவினால், அனைவரும் வீட்டில் இருப்பதாலும் மிகவும் எளிமையாக பிறந்த நாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள். 

    குழந்தைகள்

    ஆனால், சமூக வலைத்தளத்தில் குழந்தைகளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

    இந்த நிலையில் கீர்த்தியின் அப்பாவான சுரேஷ்குமார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் தான் கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

    ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இது குறித்து எந்தவித விளக்கமும் வரவில்லை.
    தற்போது பல படங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர், தனது மகளுடன் இணைந்து விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
    உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருவதால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவன ஊழியர்கள் மட்டும்  வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். பலர் டிவி, இன்டர்நெட்டில் நேரத்தை போக்கி வருகிறார்கள். 

    பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் மக்களை மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு  மகளுடன் ஆடியிருக்கும் வீடியோவை ரோபோ சங்கர் வெளியிட்டிருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 
    வெளிநாட்டில் இருந்து வந்த பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை என்று சாருஹாசன் கவலை தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் மணிரத்னம் - சுகாசினியின் மகன் நந்தன் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியதால் முன்னெச்சரிக்கையாகத் தன்னைத் தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார்.  இன்றுடன் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு 11 நாட்கள் ஆகின்றன.  

    தனிமையில் இருக்கும் மகனுடன் சுகாசினி பேசும் வீடியோ பதிவு பரபரப்பானது. தனது பேரன் தனிமைப்படுத்திக் கொண்டது தொடர்பாக நடிகர் சாருஹாசன் கூறியிருப்பதாவது, "என் பேரன் நந்தன் லண்டனிலிருந்து வந்தால், தாத்தா என்று என்னைப் பார்க்கத்தான் வருவான். இப்போது அவன் வந்து 10 நாளாச்சு. முகத்தைக் கூட பார்க்கவில்லை. கஷ்டம்தான். ஆனால், கொரோனாவை விரட்டியடிக்க இது தேவைதான்” என்று தெரிவித்துள்ளார். 

    சாருஹாசன் பேசியுள்ள வீடியோவையும், நந்தன் தனிமைப்படுத்திக் கொண்ட வீடியோ பதிவையும் இணைத்து, தமிழக அரசு கரோனா விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சுகாசினி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
    ஊரடங்கை மீறி நடப்பவர்களை போலீசார் அடிப்பது தவறு அல்ல என்று பிரபல தமிழ், மலையாள நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதையும் மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், லத்தியால் அடுத்து விரட்டியும், தோப்புக்கரணம் போட வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

     இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. போலீசார் அடிப்பதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. இதுகுறித்து தமிழில் தீனா, சமுத்திரம், ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்து கூறியதாவது:- “

    ஊரடங்கை மீறி நடப்பவர்களை முக்கியமான உறுப்புகள் பாதிக்காத வகையில் போலீசார் அடிப்பது தவறு அல்ல. சிலரை அடித்துத்தான் திருத்த முடியும். இதற்காக போலீசார் மீது புகார் சொல்ல கூடாது. அவர்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது. போலீசார் மக்களுக்காக வேலை செய்கிறார்கள். அவர்களின் சேவையை பாராட்ட வேண்டும். 

    நிலைமை எல்லை மீறி போனால் ராணுவத்தைதான் அழைக்க வேண்டும். அவர்களுக்கு தமிழன், மலையாளி, வேறு மொழி பேசுபவர்கள் என்று வித்தியாசமெல்லாம் கிடையாது. இதனை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளுங்கள். போலீசார் செயலை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்”. இவ்வாறு சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
    படக்குழுவினர் 58 பேருடன் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ் தங்களை இந்தியாவுக்கு மீட்டுச் செல்லுமாறு உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார்.
    ‘ஆடுஜீவிதம்‘ என்ற நாவலை அடிப்படையாக வைத்து பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் உள்ள வாடிரம் பாலைவனப் பகுதியில் நடந்து வந்தது. கொரோனா அச்சத்தால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தது படக்குழு. அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருந்ததால் ஏப்ரல் 10 வரை படப்பிடிப்பைத் தொடர முடிவெடுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், ஜோர்டான் வந்திறங்கும் அனைத்து வெளிநாட்டினரையும் 14 நாட்கள் தனிமையில் வைக்க அந்த அரசு முடிவு செய்ததால், அதில் சில முக்கிய நடிகர்களும் அடங்குவர். தற்போது படப்பிடிப்பு ரத்தானதால் இயக்குநர் ப்ளெஸ்ஸி, கேரள திரைப்படச் சங்கத்துக்கு, தங்களது 58 பேர் கொண்ட குழுவை மீட்டுச் செல்லுமாறு உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார். 

    பிருத்விராஜ்

    இதுகுறித்து விரிவாகப் பதிவிட்டுள்ள நடிகர் பிருத்விராஜ், “எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒரு முறை அவர் எங்கள் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கிறார். மேலும், ஜோர்டான் அரசாங்கம் நியமித்துள்ள மருத்துவரும் அவ்வப்போது எங்களைப் பரிசோதிக்கிறார். 

    தற்போது உலகில் இருக்கும் நிலையில் எங்கள் குழுவில் இருக்கும் 58 பேரை மீட்பது என்பது இந்திய அதிகாரிகளின் பிரதான கவலையாக இருக்காது என்பதை என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடிகிறது. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எப்போது சரியான நேரமும், வாய்ப்பும் வருகிறதோ அப்போது நாங்களும் இந்தியா திரும்புவோம் என நம்புகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
    ×