என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய்யை பார்ப்பதற்காக சேர்த்து வைத்த பணத்தை சிறுவன் ஒருவன் கொரோனா நிதி கொடுத்து அசத்தி இருக்கிறான்.
    திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் - ஜோதிமணி தம்பதி. இவர்களுடைய மகன் உபநிசாந்த் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட உபநிசாந்த், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசு பெற்றிருக்கிறார். 

    இந்த நிலையில், முதல்பரிசாக கடந்த மூன்று ஆண்டுகளாக பெற்ற பரிசுத்தொகை 3,000 ரூபாயை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்து சிறுவன் உபநிசாந்த் கொடுத்திருக்கிறான். 

    இது குறித்து அவரது தந்தை கூறும் போது, எனது பையன் நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன். `எப்படியாவது விஜய்யைப் பார்க்கணும்ப்பா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். நீ ஏதாவது சாதனை செஞ்சா, அவரைப் பார்க்க உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கேன். அப்படி அவரைப் பார்க்கப் போகணும்னா காசு வேணும்னு சொல்லி, நீச்சல் போட்டியில கிடைச்ச பரிசுப் பணத்தை பத்திரமா சேர்த்து வச்சிருந்தான். அந்தப் பணத்தை முதலமைச்சர் நிதி உதவிக்காக எடுத்துக்கொடுத்தான்' என்றார்.
    தமிழில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி புதிய சாதனை படைத்துள்ளது.
    டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man Vs Wild நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் எப்போதும் அதிகளவில் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

    Man Vs Wild நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் என்ற சாகச வீரருடன் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி கர்நாடகாவில் உள்ள பாந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த் பங்கு பெற்ற முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சி கடந்த 23 மார்ச் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. 12 டிஸ்கவரி நெட்வொர்க் சேனல்களில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. 

     இந்நிகழ்ச்சி இதுவரை 124 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அவ்வகையில் சமீப காலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்ற பெருமை கிடைத்துள்ளது.  இந்த சாதனையை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
    பிரபல சினிமா பத்திரிகையாளர் நெல்லை பாரதியின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
    சினிமா பத்திரிக்கையாளர்களில் பிரபலமானவர் நெல்லை பாரதி. இவர் எழுத்தாளரும், பாடலாசிரியாகவும் இருந்திருக்கிறார். இவர் இன்று காலை அவரது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

     இவரது மறைவிற்கு  பத்திரிகையாளர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆழ்ந்த  இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் பலரும் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. 

      இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, நெல்லை பாரதியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
    தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுனைனா பிரபல நடிகரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, சமர், யாதுமாகி, சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

    தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் வந்தார். தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

     இந்த நிலையில், சுனைனாவுக்கும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. ‘வன்மம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். கிருஷ்ணா பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி ஆவார். இவர் கற்றது களவு, வல்லினம், யாமிருக்க பயமே, யட்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணா, ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்துவிட்டார்.

     கிருஷ்ணா, சுனைனா ஜோடியாக சுற்றி காதலை தீவிரமாக்கி இருப்பதாகவும், 2 மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் திரைப்படம் இறுதி கட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
    ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘நெற்றிக்கண்.’ இந்தப் படத்தின் தலைப்பை நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு பெயராக சூட்டியிருக்கிறார்கள். இதில், நயன்தாரா போலீஸ் அதிகாரியாகவும், கண் பார்வையற்றவராகவும் நடிக்கிறார். 

    குற்றப் பின்னணியிலான திகில் படம் இது. பார்வையற்றவரான அவர் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதே ‘நெற்றிக்கண்’ படத்தின் கதை. இதில், நயன்தாராவுடன் வில்லனாக அஜ்மல் நடிக்கிறார். இவர்களுடன் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது. 

    இந்தப் படத்தை மிலிந்த் ராவ் டைரக்டு செய்கிறார். இவர், ‘அவள்’ என்ற திகில் படத்தை இயக்கியவர். நயன்தாராவின் காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    கொரோனா பிரச்சினை தீர்ந்ததும் சென்னையிலேயே படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    இயக்குனர் பாரதிராஜா, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு உதவி செய்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் டாக்டர்கள், நர்சுகள், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனத்தினர் முக கவசங்களை வழங்குகிறார்கள். இந்த நிலையில், டைரக்டர் பாரதிராஜாவும் உதவியுள்ளார். 

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது இந்த கொடிய வைரசின் பரவலை திறம்பட கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. 

    நன்றியுணர்வில் ஒரு சிறிய அடையாளமாக காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முககவசம், கையுறைகள் மற்றும் கைகழுவும் திரவம் ஆகியவற்றை வழங்கியுள்ளேன்”. இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.
    பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் ஆன்லைனில் இலவசமாக நடன பயிற்சி அளிக்க தயாராகி உள்ளார்.
    கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல் என்று பலரும் நேரத்தை கழிக்கிறார்கள். இவர்களுக்காக தூர்தர்ஷன் ‘ராமாயணம்’ தொடரை மறு ஒளிபரப்பு செய்கிறது. ‘சக்திமான்’ தொடரையும் ஒளிபரப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது.

    இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச நடனம் சொல்லி கொடுக்க தயாராகி உள்ளார். இதற்காக பிரத்யேகமான இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் 2 இலவச நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் மாதம் முழுவதும் இலவச நடன பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    மாதுரி தீட்சித்

    மேலும் அவர் கூறும்போது, “இப்போது அனைவரும் கஷ்டமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஊரடங்கு தவிர்க்க முடியாதது. இந்த நேரத்தில் எனது குழுவினர் மூலம் நடன பயிற்சி அளிக்கிறேன். ஏப்ரல் 30-ந்தேதி வரை இந்த பயிற்சி அளிக்கப்படும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்றார்.
    நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் முன்னோட்டம்.
    நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    அவருடன் ஊர்வசி, மவுலி, இந்துஜா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 
    அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை பிரதமர் விளக்கை ஏற்ற சொல்வது சற்று பயமாக இருப்பதாக மாஸ்டர் பட பிரபலம் டுவிட் செய்துள்ளார்.
    கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

    ரத்னகுமார்

    இந்த நிலையில் ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவரும், விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் பணிபுரிந்தவருமான இயக்குனர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: "வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ரத்னகுமாரின் இந்த டுவிட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
    ராம் - ஜானு போல் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு 96 பட நடிகை மீம் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த கொடிய நோய்க்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத சூழலில், இந்த நோய் பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 96 படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ வேடத்தில் நடித்திருந்த கவுரி கிஷான் சமூக இடைவெளி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ராம் - ஜானுவை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இருவரும் மாஸ்க் அணிந்திருப்பது போலவும் எடிட் செய்யப்பட்டுள்ளது. அவரின் இந்த மீம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
    போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில்  நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் அறிவுரை கூறியுள்ளார். 

    அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: இந்த 21 நாட்களில் ஒரு நல்ல விஷயத்தை முயற்சி செய்தால் அது நம் இயல்பாகவே மாறிவிடும். ஒரு கெட்ட விஷயத்தை விட்டுவிட்டால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும். உதாரணத்துக்கு, குடிப்பழக்கத்தை 21 நாட்கள் கைவிட்டுவிட்டால், அதன்பின் இந்த பழக்கம் இல்லாமல் போய்விடும். போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் தியானம் செய்யலாம். நம் உள்மனம் நோக்கிய ஒரு பயணம் தான் தியானம். 

    பார்த்திபன்

    மிஷின் போல் நமக்காக உழைக்கும் நமது உடலுக்காக தினமும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளை இந்த 21 நாட்கள் முயற்சி செய்தால் அது நம் இயல்பாகவே மாறிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களை பரப்புவதும் மிக முக்கியம். அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். மக்களாகிய நம் ஒத்துழைப்போடு, விரைவில் இந்தியா இந்த நோயில் இருந்து மட்டுமல்லாமல் எந்த போர் வந்தாலும் அதில் வென்று மிளிர்வது, ஒளிர்வது நிச்சயம். என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் எனும் மலையாள படம் தெலுங்கிலும் ரீமேக் ஆக உள்ளது.
    கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’ சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. 

    படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். 

    ராணா டகுபதி, பாலகிருஷ்ணா

    இவர் ‘ஜெர்சி’, ‘அலா வைகுண்டபுரம்லு’ ஆகிய படங்களை தயாரித்தவர். இந்தப் படத்தில் மலையாளத்தில் பீஜூமேனன் நடித்த பாத்திரத்திற்கு பாலகிருஷ்ணாவையும், பிருத்விராஜ் நடித்த பாத்திரத்திற்கு ராணா டகுபதியையும் நடிக்க வைக்க நாகவம்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.
    ×