என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பலர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் பேசி இருப்பதாவது:- “இது அனைவருக்குமே கஷ்டமான காலம் என்பது எனக்கு தெரியும். எல்லோரும் கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஆபத்தானது. இந்த நேரத்தில் அனைவரும் வீட்டில் இருந்து கொரோனாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும்.
Stay Safe! Stay Strong! 💪💪💪 pic.twitter.com/zty6eyVJhN
— Jackie Chan (@EyeOfJackieChan) April 3, 2020
நீங்கள் வெளியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். அது உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாக்கும். அடிக்கடி கைகளை கழுவுங்கள். பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நமக்கு காத்து இருக்கிறது. ஜெய் ஹோ”. இவ்வாறு ஜாக்கிசான் பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பீதியால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் வெளியே நடைபயிற்சி செய்த நடிகையை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளார்கள். உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யும்படி அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கில் வெளியே நடைபயிற்சி செய்த நடிகையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
அந்த நடிகையின் பெயர் ஆஞ்சல் குரானா. இவர் ஏராளமான இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். டெல்லியில் வசிக்கிறார். ஊரடங்கில் ஆஞ்சல் குரானா, தனது நாய் குட்டியுடன் வெறிச்சோடி கிடந்த சாலையில் நடைபயிற்சி செய்தார். சிறிது தூரம் சென்றதும் மூன்று தெருநாய்கள் அவரை சுற்றி வளைத்து குரைத்தன. திடீரென்று அந்த நாய்கள் அவர் மீது பாய்ந்து இடது பக்க இடுப்பு, வலது கால் முட்டியில் கடித்து குதறின.

இதனால் அவர் அலறினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டது. இதுகுறித்து ஆஞ்சல் குரானா கூறும்போது, “நான் நடைபயிற்சி செய்த போது ஊரடங்கால் சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் சுற்றி வளைத்து என்னை கடித்து விட்டன” என்றார்.
கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க என்று டேனியல் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தனக்கே உரிய பாணியில் பல படங்களில் நடித்து பல ரசிகர்களை தன் வசமாக்கியுள்ளார்.
தற்போது கவுதம் மேனன், கமல் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்று ஒரு பேட்டியில் டேனியல் பாலாஜி கேட்கப்பட்டது.
இதற்கு அவர், முதல் பாகத்தில் என்னை கொன்று விட்டார்கள். அதனால் இரண்டாம் பாகத்தில் எனக்கு வேலை இருக்காது என்று நினைக்கிறேன். இப்போ கவுதம் மேனனுக்கு நிறைய பெரிய நடிகர்கள் தெரியும். அவரே நடிக்கவும் செய்கிறார். அதனால் எனக்கு வாய்ப்பு குறைவுதான்.
கவுதம் மேனனுக்கு ஒன்னு சொல்லணும் ஆசைப்படுகிறேன், 'என்னை அறிந்தால் படத்தில் நான் ரெண்டு சீன்ல நடித்தேன். அதில் ஒரு சீனை எடுத்து விட்டு ஒன்றுதான் வைத்தார்கள். அப்போது கவுதம்மேனன் அருண்விஜய்யிடம் என்னுடைய உடல் மொழி, மேனரிசம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும், அவன் எப்படி பார்க்கிறான், எப்படி திரும்புகிறான் என்பதை கவனிக்க சொன்னார். அது தவறு, இதுபோல் அவர் செய்ய கூடாது. ஒரு கேரக்டரை வேற மாதிரி கிரியேட் பண்ணுனுமே தவிர அதே மாதிரி உருவாக்க கூடாது' என்றார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள்.
நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறாராம். ஊரடங்கு தள்ளிப் போனாலும் அதுவரை வழங்குவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றுங்கள் வேண்டுகோளுக்கு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றுங்கள் வேண்டுகோளுக்கு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "5 ஏப்ரல் அன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு, நமது பிரதமரின் அழைப்புக்கு மரியாதை கொடுத்து, கொரோனாவின் இருட்டையும், சோகத்தையும், நாம் விளக்குகள் ஏற்றி விரட்டுவோம். நமது நாட்டுக்காக இணைந்து நிற்போம். ஒருவர் மற்றொருவருக்காகத்தான் நிற்கிறோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்" இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கி உள்ளார்.
கொரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே அவர்களுக்கு பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி, பலர் உதவி செய்து வருகிறார்கள்.
தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தற்போது ஓய்வு நேரத்தில் இருக்கும் சோனியா அகர்வால் படத்திற்கு திரைக்கதை எழுதும் பணியில் இறங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஓய்வு பொழுதை எப்படி போக்குகிறார் என்ற கேள்விக்கு நடிகை சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார்.
“தினமும் காலை என் குடும்பத்தினருடன் யோகா செய்கிறேன். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இப்போது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதுதான் ஒரே வழி. சினிமாவுக்காக திரைக்கதை தயார் செய்து வருகிறேன். அதை செய்ய போதுமான நேரம் இருக்கிறது.
பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க இதுவே அற்புதமான தருணம். வீட்டுக்குள் இருங்கள். அரசாங்கத்தின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றுங்கள் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஹாலிவுட் பிரபலங்கள் அர்னால்டு, டிகாப்ரியோ ஆகியோர் ரூ.98 கோடி கொரோனாவுக்கு நிதி கொடுத்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இதற்கு 5 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்கவும், வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் அங்கு பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.
‘டைட்டானிக்’ உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான லியானர்டோ டிகாப்ரியோ, தனது அறைக்கட்டளை மூலம் கொரோனா நிதியாக இந்திய மதிப்பில் ரூ.91 கோடி திரட்டி உள்ளார். இந்த தொகையை ஏழைகளுக்கு உணவு வழங்கவும், ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் வழங்குகிறார்.
இது போல் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி நிதி வழங்கி உள்ளார். ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த நன்கொடையை வழங்கி இருக்கிறார். “கொரோனாவை எதிர்த்து மருத்துமனைகளில் போராடும் உண்மையான கதாநாயகர்களை பாதுகாக்க இந்த நிதியை வழங்கியதில் பெருமைப்படுகிறேன். தற்போதைய மோசமான சூழ்நிலையில் வீட்டில் இருந்து குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று அர்னால்டு கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய பிரசன்னா, பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார்.
கதாநாயகனாக நடித்து வந்த பிரசன்னா இப்போது பல படங்களில் வில்லன் வேடங்களில் வருகிறார். சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:-
எனக்கு அஜித்குமாரை மிகவும் பிடிக்கும், அவருக்கு வில்லனாக நடிக்க ஆசை உள்ளது. விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். விஷால் எனது நல்ல நண்பர், இயக்குனராக மாறி உள்ள அவருக்கு வாழ்த்துகள். சமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறேன். இந்த மாற்றமானது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
கதாநாயகனாக நடிக்க இப்போது மூன்று படங்களை தேர்வு செய்து இருக்கிறேன். எந்த படம் முதலில் தொடங்கும் என்று தெரியவில்லை. கொரோனாவால் பட வேலைகள் பாதித்துள்ளன. ஓரங்கட்டப்படுவது சோர்வை ஏற்படுத்துகிறது. முன்னால் நிற்க விரும்புகிறேன். அந்த இடத்தை அடைவேன். புதிய இயக்குனர்கள் படங்களில் கதையை பொறுத்து நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ஊரடங்கை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறேன். ஓவியம் வரைகிறேன். குழந்தைகளுடன் சேர்ந்து பொம்மைகள் வைத்து விளையாடுகிறேன். இவ்வாறு பிரசன்னா கூறினார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய உள்ளதாக நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.
மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் (பி.பி.இ. கிட்ஸ்) வழங்கப்படும். மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். 2 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும். மேலும் மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் மர்ம கும்பல் ஒன்று வதந்தி பரப்பி இருக்கிறார்கள். இவர்கள் யார் என கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. அதில், கொரோனா பாதிப்பால் நடிகர் மோகன்லால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏப்ரல் பூல் செய்வதற்காக இந்த வதந்தியை பரப்பியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார்.
விஜய்யை பார்ப்பதற்காக சேர்த்து வைத்த பணத்தை சிறுவன் ஒருவன் கொரோனா நிதி கொடுத்து அசத்தி இருக்கிறான்.
திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் - ஜோதிமணி தம்பதி. இவர்களுடைய மகன் உபநிசாந்த் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட உபநிசாந்த், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசு பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், முதல்பரிசாக கடந்த மூன்று ஆண்டுகளாக பெற்ற பரிசுத்தொகை 3,000 ரூபாயை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்து சிறுவன் உபநிசாந்த் கொடுத்திருக்கிறான்.
இது குறித்து அவரது தந்தை கூறும் போது, எனது பையன் நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன். `எப்படியாவது விஜய்யைப் பார்க்கணும்ப்பா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். நீ ஏதாவது சாதனை செஞ்சா, அவரைப் பார்க்க உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கேன். அப்படி அவரைப் பார்க்கப் போகணும்னா காசு வேணும்னு சொல்லி, நீச்சல் போட்டியில கிடைச்ச பரிசுப் பணத்தை பத்திரமா சேர்த்து வச்சிருந்தான். அந்தப் பணத்தை முதலமைச்சர் நிதி உதவிக்காக எடுத்துக்கொடுத்தான்' என்றார்.






