என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், 6-வது முறையாக பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.
பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர் அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தினர்.

கொரோனா நோயாளிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும். கனிகாவுக்கு 5 முறை பரிசோதனை செய்தும் கொரோனா தொற்று இருப்பதையே உறுதிப்படுத்தியது. தற்போது 6-வது முறையாக பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை முடிவுகள் வெளிப்படுத்தின. இதையடுத்து அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கனிகா கபூருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
தமிழில் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள தமன்னா, இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால் கொரோனா மேலும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் நடிகர்-நடிகைகள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “நம்மால் கோவிட்-19 வைரசை எளிதாக ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான். நாம் அனைவரும் இந்த நேரத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும்.

இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு. கொரோனா வைரசிடம் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கையில்தான் இருக்கிறது. எனவே அரசாங்கம் சொல்வதை கேளுங்கள். சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். விலகி நின்று ஒன்றிணைவோம். கொரோனா வைரசை ஒழிப்போம்”. இவ்வாறு தமன்னா கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் தமிழில் பேசி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் என நடிகை காஜல் அகர்வால் யோசனை கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து மீள ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: கொரோனா ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை உள்நாட்டில் களிக்கலாம்.

உள்ளூர் உணவகங்களில் சாப்பிடலாம். நம் நாட்டில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கலாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆடை மற்றும் காலணிகளை வாங்கி அணியலாம். இது நம் நாட்டு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவினால் நாடு மென்மேலும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ள நடிகை மீனா, மக்கள் வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது என தெரிவித்துள்ளார்.
நடிகை மீனா கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்து இருக்கிறது. ஆனாலும் நிறைய பேர் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக வெளியே சுற்றுவதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
இதுபோன்று, அரசாங்கம் சொன்னதை கேட்காததால்தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்களை இந்த வைரஸ் தாக்குகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் தினம்தினம் செத்து போகிறார்கள். அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை நமக்கு வேண்டுமா? இந்த நிலைமை நமக்கு வராமல் இருப்பதற்கு நாம் அரசு சொல்கிறபடி கேட்க வேண்டும். எவ்வளவு நேரம் வீட்டில் உட்காருவது, எவ்வளவு நேரம் டி.வி பார்ப்பது? என்று சொல்லாதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களோடு விளையாடுங்கள், குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுங்கள்.
வீட்டு வேலை பாருங்கள், சமையல் அறையில் உதவி செய்யுங்கள். யோகா, தியானம் என்று செய்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து உலகையே காப்பாற்றும் அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது. நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே வீட்டில் இருங்கள்.
இவ்வாறு மீனா கூறியுள்ளார்.
விஜய் சேதுபதிக்காக கதையை தயார் செய்து வைத்துள்ள சேரன், அது செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு புதிய படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்துள்ளார். இந்த கதையை முன்னணி நடிகர்களிடம் சொல்ல நேரம் கேட்டும் அவர்கள் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் இதன் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. தற்போது தவமாய் தவமிருந்து படத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு பாராட்டியவருக்கு சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ள சேரன், “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை.

ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும், தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழிவிடுமா காலம்” என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இது தவமாய் தவமிருந்து படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பணம் போட்டு உதவியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. இந்தி நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுவதாக சல்மான்கான் கூறி இருக்கிறார்” என்றார்.

அதன்படி முதல் கட்டமாக தான் நடித்து வந்த ‘ராதே’ படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி வழங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இதில் திஷா பதானி நாயகியாக வருகிறார். ஷாக்கி ஷெராப், பரத் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய லைட்பாய், அரங்கு அமைத்தவர்கள், கேமராமேன், உதவியாளர்கள், டிரைவர்கள், சமையல் தொழிலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் சல்மான்கான் பணம் போட்டுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் முன்னோட்டம்.
எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் கொம்புவச்ச சிங்கம்டா. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, டான் பாஸ்கோ படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, ராஜீ சுந்தரம் நடனத்தில், மைக்கேல்ராஜ் கலையில் இப்படம் உருவாகி வருகிறது.
காசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது என பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதனால் திரைப்படங்களின் படப்பிடிப்பகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது: “நான் சின்ன குழந்தையாக, சிறுவனாக இருந்தபோது அப்பா (நடிகர் சிவகுமார்) ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அப்பாவை நிறைய ‘மிஸ்’ பண்ணியிருக்கிறேன். அந்த குறை, என் மகளுக்கு வரக்கூடாது என்பதற்காக, இந்த ஓய்வு நாட்களை பயன்படுத்திக் கொள்கிறேன். என் மகளுடன் நிறைய நேரத்தை செலவிடுகிறேன்.

தினமும் மூன்று வேளையும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். இப்போதைய சூழ்நிலையில், பெரும்பாலானவர்களுக்கு கையில் காசு இருக்கும். ஆனால் வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், வீட்டிலேயே இருப்போம்... பாதுகாப்பாக இருப்போம்”. இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே கீர்த்தியின் தந்தை சுரேஷ்குமார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் தான் கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது எப்படித் தான் துவங்கியது என்று தெரியவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எனக்கு இல்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஹரீஷ் கல்யாண், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க தனக்கு ஆசை என தெரிவித்துள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியாலும், அதன் பின் நடித்த பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', தாராள பிரபு போன்ற படங்கள் மூலம் பிரபலம் ஆனவர் ஹரீஷ் கல்யாண். வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டில் ஓய்வெடுக்கும் ஹரீஷ் கல்யாண், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் "உங்களுக்கு எந்த இயக்குனருடன் பணியாற்ற ஆசை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஹரீஷ் கல்யாண், எனக்கு நிறைய இயக்குனர்கள் பிடிக்கும். அவர்களில் எனக்கு பிடித்தது வெற்றிமாறன். அவர் சிறந்த அறிவாளி, படைப்பாளி. அவர் இயக்கிய அனைத்து படங்களும் பிடிக்கும். அவருடன் பணியாற்ற ஆசை. அவருக்கு அடுத்தபடியாக கவுதம் மேனன் எனக்கு பிடிக்கும். அவரது படங்கள் என்றாலே ஸ்பெஷல் தான். என கூறினார்.
கல்லூரியில் படித்த காலத்தில் பஸ் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அஜித் பட நடிகை பகிர்ந்துள்ளார்
அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்று வெளியிடை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் பரவிய பிறகு 2 தடவை உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டதால் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கல்லூரியில் படித்த காலத்தில் பஸ் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:- “நான் நிர்பயா வழக்கு தொடர்பான ஒரு தொடரை இணையதளத்தில் பார்த்து அதிர்ந்து போனேன். பஸ் பயணத்தில் கூட்டத்துக்குள் சிக்கும் பெண்கள் பல கொடுமைகளை தினமும் அனுபவிக்கின்றனர். அதுபோன்ற கொடுமை எனக்கும் நடந்துள்ளது. நான் கல்லூரியில் படித்த காலத்தில் கூட்டமான பஸ்சில் பயணம் செய்தேன்.

ஒவ்வொரு நாளும் யுத்தத்துக்கு செல்வதுபோலவே இருக்கும். யாராவது சில்மிஷம் செய்வார்களோ என்ற பயமும் இருக்கும். நிர்பயாவைப்போல் நானும் கூட்டம் இருக்கும் பஸ்சை தவிர்க்க தனியார் பஸ்சில் பயணித்து இருக்கிறேன். அந்த தொடரை பார்த்தபோது எனக்கு பழைய சம்பவங்களை நினைத்து பயம் ஏற்பட்டது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார்.
‘கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.
இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது: “மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல், ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்து இருக்கிறது. இந்த ஓய்வில், வீட்டு வேலைகளில் மனைவிக்கு எப்படியெல்லாம் உதவ முடியுமோ, அப்படியெல்லாம் உதவுகிறேன். குழந்தைகளை குளிப்பாட்டி விடுகிறேன். சாப்பிட வைக்கிறேன். ஊரில் இருக்கும் உறவினர்களிடம் போன் மூலம் பேசி, நலம் விசாரிக்கிறேன்.

பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள்... அன்னியர்களை வீட்டுக்குள் விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் நடத்தி வரும் ஓட்டல்களில், மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுத்து விட்டேன். அவர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன்.
இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் வந்தது போல் ஒரு அச்சத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.






