என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோயினாக வலம்வரும் பிரியா பவானி சங்கர் அடுத்ததாக விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ‘மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம்.

    மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார். இவ்வாறு பிஸியான ஹீரோயினாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    கார்த்திக் தங்கவேலு, விஷால், பிரியா பவானி சங்கர்

    பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அடங்கமறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் நாளை ரிலீஸ் செய்ய உள்ளனர். 

    இந்நிலையில், இப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி டுவிட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: "அரியாத வயதில் காமத்தை சுமந்து, வெளியில் சொல்ல முடியா வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குனரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த "பொன்மகள் வந்தாள்" கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும். " என குறிப்பிட்டுள்ளார்.
    சூர்யா பட நடிகை ஒருவர் லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் தமிழ் பேச கற்று வருகிறாராம்.
    தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக சுந்தர் சி-யின் அரண்மனை 3, சூர்யாவுக்கு ஜோடியாக அருவா, ஜீவாவுக்கு ஜோடியாக மேதாவி என கைவசம் 3 தமிழ் படங்களை வைத்துள்ளார். 

    ராசி கண்ணா

    லாக்டவுன் முடிந்ததும் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. அடுத்தடுத்து தமிழ்ப்பட வாய்ப்புகள் வருவதால், நடிகை ராசி கண்ணா இந்த லாக்டவுன் சமயத்தில் தமிழ் பேச கற்று வருகிறார். ஆன்லைனில் இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதன்முலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற உணர்வு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை ராசி கண்ணாவின் இந்த முயற்சிக்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் அஜித் பட நடிகை ஒருவர் அகதியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா. 

    சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, டப்பிங்கும் கொடுத்து வந்தார். 

    கனிகா

    சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் குரல் கொடுத்தது கனிகா தான். 2006 ஆம் ஆண்டில் வெளியான வரலாறு தான் தமிழில் கனிகா நடித்த கடைசி படமாகும். தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தில் தான் அகதியாக நடித்துள்ளதாக நடிகை கனிகா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். எனக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. டப்பிங்கில் இலங்கைத்தமிழ் பேச ஆவலோடு காத்திருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
    சிவகார்த்திகேயனின் டாக்டர் பட அப்டேட் லாக்டவுன் முடிந்ததும் வெளியாகும் என கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் ஷுட்டிங் தடைபட்டது. ஊரடங்கு முடிந்த பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த உள்ளனர். 

    இந்நிலையில், ரசிகர்கள் டாக்டர் படத்தின் அப்டேட் கேட்டு வருவதால், அதற்கு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அப்டேட் கேக்குறது ஈஸி... கொடுக்குறதுதான் கஷ்டம்! லாக்டவுன் முடிந்தால் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க முடியும். லாக்டவுன் முடிஞ்சதும் அப்டேட் அள்ளும் பாருங்க" என குறிப்பிட்டுள்ளனர்.  

    22 வயதே ஆன இளம் நடிகை ஒருவர் சொந்த ஊர் செல்லும்போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கர்நாடக மாநிலம் மடிக்கேரி பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கேல். அவருக்கு வயது 22. மாடலாக கலையுலகில் அறிமுகமான இவர் கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானார். கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பெங்களூருவில் வசித்து வந்தார். 

    இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து நடிகை மெபினா தனது தோழிகளுடன் சொந்த ஊரான மடிக்கேரிக்கு காரில் சென்றுள்ளார். தேவிஹள்ளி பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    மெபினா மைக்கேல்

    இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் மெபினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தோழிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரின் பேரில் போக்கிரி பட ஒளிப்பதிவாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

    நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம் ஷியாம் கே நாயுடு. ஆனால்  வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    ஷியாம் கே நாயுடு, சாய் சுதா

    இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஷியாம் கே நாயுடுவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாலியல் தொல்லை கொடுத்ததால் படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று முடிவு செய்ததாக நடிகை கல்யாணி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    பிரபுதேவாவுடன் ‘அள்ளித்தந்த வானம்‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. ஜெயம்ரவியின் ஜெயம் படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக வந்தார். இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 

    கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘’சிறிய வயதிலேயே பிரபுதேவா படத்தில் நடித்தது அதிர்ஷ்டம். சின்னத்திரையிலும் நடித்தேன். இப்போது கணவருடன் பெங்களூருவில் வசிக்கிறேன். நான் கதாநாயகியாக உயர்ந்த பிறகும் பெரிய படங்கள் அமையாதது வருத்தம். மீ டூ சம்பவம் எனக்கும் நடந்துள்ளது. 

    கல்யாணி

    கதாநாயகியாக நடிக்கும்போது எங்கள் அம்மாவுக்கு போன் அழைப்பு வரும், பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் படம். உங்கள் பெண்தான் கதாநாயகி, ஆனால் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அம்மா வேண்டாம் என்று போனை துண்டித்து விடுவார். அதற்கு பிறகுதான் அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு தெரிய வந்தது. 

    படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று நான் முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கியபோது உயர் பொறுப்பில் இருந்தவர் என்னை இரவில் ‘பப்பு’க்கு அழைத்தார். நான் மாலையில் ‘காப்பி ஷாப்’பில் சந்திக்கலாம் என்றேன். பிறகு அந்த தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவே இல்லை. இது மிகவும் மோசம். திறமைக்கு இடம் இல்லை.” என்று கல்யாணி கூறினார்.
    தமிழில் மிகவும் பிரபலமான எமி ஜாக்சன் குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
    தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. 

     ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பது குழந்தை பெற்றுக் கொண்டார். அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர்.

     சமீப காலமாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார் எமி ஜாக்சன். தற்போது கணவருடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி இருக்கிறார் குஷ்பு.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது 58வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி பலர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, பிறந்தநாள் வாழ்த்து கூறி உங்கள் மீது நிறைய காதல் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். 

    ரவி சாஸ்திரி - குஷ்பு

    80 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரவி சாஸ்திரி, 6,938 ரன்களையும் 280 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வரும் பிரேம்ஜி அவெஞ்சர்ஸ் தானோஸாக மாறி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

    பிரேம்ஜி அவெஞ்சர்ஸ்


    உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படத்தில் தானோஸ் என்னும் வில்லன் கதாபாத்திரத்தின் தோற்றத்தில் பிரேம்ஜி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் 5000 ஏழை குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்கி உதவி செய்திருக்கிறார்.
    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கொரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கி வருகிறார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 5000 ஏழை குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அளித்துள்ளார்.

    சல்மான் கான்


    ரம்ஜான் பண்டிகைக்காகச் செய்யப்படும் ஷீர் குருமாவுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அடங்கிய பையை 5000 ஏழைக் குடும்பங்களுக்கு அவர் வழங்கியுள்ளார். பீயிங் ஹேங்ரி என்கிற திட்டத்தின் மூலமாக இந்த உதவிகளை செய்துள்ளார்.

    மேலும் மும்பை நகரில் யார் யாருக்கெல்லாம் உணவுப் பொருள்கள் தேவைப்படுகிறதோ அனைவருக்கும் வழங்க வேண்டும் என உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிரக்கின் ஓட்டுநர்களுக்கு சல்மான் அறிவுறித்தியுள்ளார்.  
    ×