என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல நடிகையாக இருக்கும் ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி.ஆர்.பிக்காக தற்கொலை சித்ரவதை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்குச் சென்றாலும் பெருங்கூட்டம் கூடியது. ஆனால், அவரோ அந்த பிரபலத்தைத் திரையுலகில் பெரிதாக உபயோகிக்கவில்லை. 

    இதனிடையே, எப்போதாவது தான் தனது சமூக வலைதள பக்கத்துக்கு வருவார் ஓவியா. சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். நேற்றிரவு திடீரென்று "பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஓவியா. 

    ஓவியா டுவிட்

    இந்த ட்வீட் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அப்போது அந்தப் பதிவுக்கு ஒருவர் "ஆம். தடை செய்ய வேண்டும்" என்று பதிலளித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஓவியா "அவர்கள் போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
    பிரபல தெலுங்கு நடிகர் நிதின் தனது காதலி ஷாலினியை ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார்.
    கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக வழக்கமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன.

    பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளும் அவ்வாறு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபல தெலுங்கு ஹீரோ நிதினின் திருமண நிச்சயதார்த்தம் மிக எளிமையாக சில தினங்களுக்கும் முன்பு நடைபெற்றது.

    நிதின் - ஷாலினி

    இந்நிலையில், நிதின் அவரது காதலி ஷாலினியின் திருமணம் ஐதராபாத்தில் உள்ள தாஸ் பலாக்நுமா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துக் கொண்டனர். நிதினின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகூறி வருகின்றனர்.
    பருத்தி வீரன் படத்தில் நடித்த கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் வறுமையில் தவித்து வருவதாக கூறியிருக்கிறார்.
    சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ வைத்த பல நடிகைகள் தற்போது வறுமையில் வாடி வருகின்றனர். இதுபோல் கிராமிய பாடகி ஒருவர் வருமானத்திற்கு வழியின்றி வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இவர் வேறு யாருமல்ல... நடிகர் கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் “ஊரோரம் புளியமரம்....“ என்ற கிராமிய பாடலை பாடிய லட்சுமி அம்மாள் தான். 

    இவருக்கு தற்போது 70 வயதாகிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

    இவர் மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்பட 5-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கிராமப்புற பாடல்கள் பாடி ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் ஊருக்கு வந்த அவர், தற்போது வருமானம் இல்லாமல் உணவுக்கும், மருந்துவம் பார்க்கவும் வழியின்றி தவித்து வருகிறார்.

    லட்சுமி அம்மாள்

    இதுகுறித்து லட்சுமி அம்மாள் கூறியதாவது:-

    கும்மிபாட்டு, தாலாட்டு பாட்டு, தெம்மாங்கு பாட்டு, பக்தி பாடல்களை 50 ஆண்டுகளாக கச்சேரியில் பாடி வந்தேன். இதற்கு வரவேற்பு கிடைத்ததால் பரவை முனியம்மாளுடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு சினிமாவிலும் சம்பாதித்தேன். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ செலவுக்கே சம்பாதித்த பணம் செலவாகி விட்டது. குடியிருந்து வரும் வீடும் மழை காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளது. தற்போது வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் சாப்பாட்டிற்கே மிகவும் க‌‌ஷ்டமான நிலையில் இருந்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பினார்.
    மும்பை :

    பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

    மருத்துவமனையில் இருந்து ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்

    ஆனால் அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான  ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

    இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    இதனால், இருவரும் அமிதாப் மற்றும் அபிஷேக் சிகிச்சை பெற்றுவந்த நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகி்ச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும், இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் அமிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும், தனக்கும், தந்தை அமிதாப் பச்சனும் இன்னும் கொரோனாவில் இருந்து குணமடையாததால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே
    சிகிச்சை பெற்றுவருவதாகவும், குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்துவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அபிஷேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யா மருத்துவமனையில் இருந்து கார் மூலம் வீடு திரும்பினர்.  

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துவரும் நடிகை பிரியாமணி, தனக்கு அந்தமாதிரி வேடங்களில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.
    நடிகை பிரியாமணி 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    கொரோனா ஊரடங்கில் நடிகை பிரியாமணி அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் விராட பருவம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறேன். ஊரடங்கில் கதைகள் கேட்கிறேன். சினிமா துறையில் ஒரு காலத்தில் கதாநாயகனுக்கு ஒரு மரியாதை கதாநாயகிக்கு ஒரு மரியாதை என்ற வித்தியாசம் இருந்தது. அது இப்போது மாறுகிறது. காஜல் அகர்வால், தமன்னா, நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் மார்க்கெட்டை பொறுத்து சம்பளம் வாங்குகிறார்கள். இதை பார்த்து சந்தோஷப்படுகிறேன். 

    பிரியாமணி

    எனக்கு பணத்தின் மீது ஆர்வம் இல்லை. இப்போது எனக்கு கொடுக்கும் சம்பளத்தில் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு நல்ல கணவர். குடும்பம் கிடைத்து உள்ளதால் சந்தோஷமாக இருக்கிறேன். திருமணமாகி 3-வது நாளே படப்பிடிப்புக்கு போனேன். கணவர் குடும்பத்தில் எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதனால் சினிமாவில் நீடிக்க விரும்புகிறேன். 

    எனது கால்ஷீட் விஷயங்களை கணவர்தான் கவனித்து கொள்கிறார். ரம்யாகிருஷ்ணன் நடித்த நீலாம்பரி மாதிரி ஒரு வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு ஆசையாக உள்ளது. ஒரு முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது. படப்பிடிப்புகளை இப்போது ஆரம்பிப்பதுபோல் தெரியவில்லை. இதனால் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.” இவ்வாறு பிரியாமணி கூறினார்.
    நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜபீமா படத்தின் முன்னோட்டம்.
    ஆரவ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ராஜபீமா”. சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.  ஆரவ்வுக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார். மேலும் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஓவியா, யாஷிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இத்திரைப்படம் அனைவரும் எதிர்பார்க்கும் அமசங்களை தாண்டி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் படமாக கமர்ஷியல் கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.
    அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    விண்வெளி, அறிவியல், நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகளை படைத்தவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார். இன்று அவரது 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், பலரும் அப்துல் கலாம் குறித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள நடிகர் விவேக், அவரது நினைவு நாளை முன்னிட்டு டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

    விவேக்கின் டுவிட்டர் பதிவு

    அவர் பதிவிட்டுள்ளதாவது: "நீ கவிதைகள் எழுதி வைத்தது தாளில். ஆனால், கனவுகள் இறக்கி வைத்தது எங்கள் தோளில். அவ்வப்போது இடறுகின்றது; ஆயினும் பயணம் தொடர்கின்றது. உங்கள் கனவில் நாங்கள்... எங்கள் நினைவில் நீங்கள்" என விவேக் குறிப்பிட்டுள்ளார்.
    சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது வென்ற பிறகு பாலிவுட்டில் தன்னை ஒதுக்கியதாக ரசூல் பூக்குட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறி உள்ளது. ரகுமானுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, தன்னையும் பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கியதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

    இதுகுறித்து அவர் பாலிவுட் இயக்குனர் சேகர் கபூரை டேக் செய்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தி பட உலகம் என்னை விலக்கி வைத்தது. யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை.

    இதனால் நிலைகுலைந்து விட்டேன். சில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்துக்கு நேராகவே, நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என கூறினர். இருந்தும் நான் கலையுலகை விரும்புகிறேன். அதுதான் எனக்கு கனவு காண கற்றுத்தந்தது. என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்.

    எளிதாக என்னால் ஹாலிவுட்டுக்கு சென்றிருக்க முடியும். ஆனால் நான் செல்லவில்லை. போகவும் மாட்டேன். இந்தியாவில் பணியாற்றிதான் ஆஸ்கர் வென்றேன். அமெரிக்காவில் உள்ள மோஷன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் விருதுக்கு 6 முறை பரிந்துரைக்கப்பட்டு வென்றிருக்கிறேன். மற்றவர்களை விட எனது மக்கள் மீது, எனக்கு நம்பிக்கை உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

    பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள சந்திரமுகி 2 படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தினார். பின்னர் சிம்ரன் சந்திரமுகியாக நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. அவரும் இதனை திட்டவட்டமாக மறுத்தார்.

    கியாரா அத்வானி

    இந்நிலையில், சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கியாரா அத்வானி ஏற்கனவே லாரன்ஸ் இயக்கிய லக்ஷ்மி பாம் எனும் பாலிவுட் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காஞ்சனா படத்தின் ரீமேக்காகும். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
    பாலிவுட்டில் தனக்கு வரும் பட வாய்ப்புகளை தடுக்க சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கார் விருது பெறுவதற்கு முன்புவரை 11 வருடங்களில் 33 இந்தி படங்களுக்கு இசையமைத்து வட இந்தியாவில் ஏ.ஆர்.ரகுமான் கொடி கட்டி பறந்தார். 

    ஆனால் ஆஸ்கார் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்தன. பாலிவுட்டில் அவரது பட வாய்ப்புகளை தடுக்க சதி நடந்திருப்பது இப்போது அம்பலமாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அன்பு ரகுமான் அஞ்சற்க. வட இந்திய கலையுலகம் தமிழ் நாட்டு பெண்மான்களை பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான் நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
    கொரோனா நோயாளிகளின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அமிதாப்பச்சன் அவருக்கே உரித்தான விதத்தில் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    ஒட்டு மொத்த இந்தியாவே அதிர்ந்துபோனது. வயதானவர்களுக்குத்தானே கொரோனா அதிகமாக பாதிக்கிறது என்பதால், அமிதாப்புக்கு கொரோனா என்றதும் அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர்.

    ஆனால் அமிதாப்பச்சன் வயது 77 என்றாலும் அதை வெறும் எண்ணாக பார்ப்பவர். அதனால்தான் தைரியமாக அவரால் கொரோனாவை இன்று வரை எதிர்கொள்ள முடிகிறது. அவரும் சரி, அவரது மகன் அபிஷேக் பச்சனும் சரி, கொரோனா உறுதியான நிலையில் கடந்த 11-ந் தேதி மும்பை நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராயும், பேத்தி ஆரத்யாவும் கொரோனா பாதித்து அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    கடந்த வியாழக்கிழமை, அமிதாப்பச்சன் குணம் அடைந்து விட்டார், தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்துவிட்டது என தகவல்கள் வெளியாகின. ஆனால் அது ஒரு தவறான பொய் என அமிதாப் நிராகரித்தார்.

    கொரோனா நோயாளிகளின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அமிதாப்பச்சன் அவருக்கே உரித்தான விதத்தில் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என்கிறீர்களா? இதோ உங்கள் பார்வைக்கு-

    “இரவின் இருளிலும், சில்லென்ற குளிரின் நடுக்கத்திலும் எனக்குள்ளே நான் பாடுகிறேன்... தூக்கத்துக்கான முயற்சியில் என் கண்கள் மூடிக்கொள்கின்றன. என்னைச்சுற்றிலும் திரும்பிப்பார்த்தால் யாரும் இல்லை.

    நோயாளியின் வாழ்க்கையில், தொற்று பாதிப்புக்கு பின்னர் மருத்துவ நிபுணரின் நேர்த்தியான சிகிச்சைதான் மீட்பை தீர்மானிக்கும் மிகவும் மதிப்புமிக்க தருணங்கள் ஆகும்.

    நாட்கள் கடந்து செல்லும்போது, மென்மேலும் புதிய கண்டுபிடிப்புகளின் துணிச்சல்மிக்க அலைகளில் ஆராய்ச்சி நம் மீது துள்ளிக்குதிக்கிறது. டிஸ்சார்ஜ் ஆகி சென்ற பின்னரும் இன்னும் சில அடிப்படை நடத்தைகளால் ஒருவர் வியப்புக்குள்ளாக முடியும்.

    கொரோனா நோயாளி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் மற்றொரு மனிதரை தொடர்ந்து பல வாரங்களுக்கு பார்க்க முடியாது என்பது எதார்த்தம்

    நர்சுகளும், டாக்டர்களும் வருவார்கள். மருத்துவ கவனிப்பை செய்வார்கள். ஆனால் அவர்கள் எப்போதுமே சுய பாதுகாப்பு கவச உடைகளையும், கருவிகளையும் அணிந்திருப்பார்கள். அவர்கள் யார், அவர்களின் அம்சங்கள் என்ன, வெளிப்பாடுகள் என்ன... ம்கூம்... நீங்கள் ஒருபோதும் தெரிந்து கொண்டு விட முடியாது. ஏனென்றால், அவர்கள் பாதுகாப்புக்காக எப்போதும் மூடப்பட்டிருப்பார்கள். எல்லாமே வெள்ளைதான். அதுவும் கிட்டத்தட்ட ரோபோ போன்றே இயங்குவார்கள். அவர்கள் பரிந்துரைக்கப்பட்டதை தந்து விட்டு வெளியேறி விடுவார்கள். காரணம், நீண்ட நேரம் அங்கே இருந்தால் தொற்று ஒட்டிக்கொண்டு விடுமோ என்ற பயம்.

    எந்த டாக்டரின் வழிகாட்டுதலில் நீங்கள் கவனிக்கப்படுகிறீர்களோ, யார் உங்களைப்பற்றிய மருத்துவ அறிக்கையை நிர்வகிக்கிறார்களோ அவர்கள் நம்பிக்கையான வார்த்தைகளை சொல்வதற்கு ஒருபோதும் உங்கள் அருகில் வருவதே இல்லை.

    சிகிச்சையின் தனிப்பட்ட விவரங்களை சொல்வதும், ஒரு உத்தரவாதம் தருவதும் தகவல் தொடர்பில் முக்கிய வாகனமாக இருக்கும். சூழ்நிலைகளில் இது மிகச்சிறந்ததாக இருக்கும். ஆனால் அதை இன்னும் பார்க்க முடியவில்லை. இது உடல் ரீதியாக சாத்தியப்படாது.

    நாங்கள் எட்ட இருந்தே சிகிச்சை பெறுகிறோம். இது உளவியல் ரீதியாக, மன ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தாதா? ஏற்படுத்தும் என்றுதான் உளவியலாளர்கள் சொல்வார்கள்.

    ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய பிறகு, அவர்கள் வித்தியாசமாக நடத்தப்படுவார்கள் என்ற பயத்துக்காக பொதுவெளியில் போகவே பயப்படுவார்கள். நோயை சுமந்தவர்களாகவே அவர்கள் பார்க்கப்படுகிவார்கள். இது ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்களை ஆழ்ந்த மனச்சோர்வுக்கு தள்ளி விடும்.

    நோய் அவர்களை விட்டு வெளியேறி இருந்தாலும், குறைந்தளவிலான காய்ச்சல் 3, 4 வாரங்களுக்கு தொடரும் என்பது ஒரு போதும் நிராகரிக்கப்படவில்லை.

    நீண்டதாய், சுருக்கமாய் சொன்னால் அது இதுதான். இந்த நோய் குறித்த திட்டவட்டமான அம்சங்களை இந்த உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஒவ்வொரு விஷயமும் வித்தியாசமானது. ஒவ்வொருநாளும் ஒரு அறிகுறி உற்றுநோக்குவதற்கும், ஆராய்ச்சிக்கும் உரியதாகவே இருக்கிறது.

    இதற்கு முன்னர் மருத்துவ உலகம் இவ்வளவு ஊனமுற்றதாய் இருந்தது இல்லை. ஒன்றல்லது இரண்டு பிராந்தியங்களில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் இதுதான் கதி.

    சோதனையும், பிழையும் இப்போதுபோல எப்போதும் இருந்தது இல்லை”.

    இப்படி பதிவு செய்து இருக்கிறார், அமிதாப்.

    இப்படி ஒரு அனுபவம் வாய்க்காமல் இருக்கவும், கொரோனா உங்களை வசப்படுத்தாமல் இருக்கவும், முக கவசம், தனி மனித இடைவெளி, கைச்சுத்தம் ஆகியவற்றை வசப்படுத்துங்கள்.
    ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். 

     இந்த நிலையில் அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    விஜயலட்சுமி

     கண் விழித்த பின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை போலீசார் விசாரிக்க இருக்கிறார்கள். தற்கொலை முயற்சி செய்யும் முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ×