என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், மலையாளம் மொழிகளில் பிரபலமாக இருக்கும் மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று அவரது மகன் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
    மலையாளத்தில் உச்ச நடிகராக இருப்பவர் மம்முட்டி. இவருக்கு தமிழிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய மகன் நடிகர் துல்கர் சல்மானும் தமிழ், மலையாள மொழிகளில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    நடிகர் துல்கர் சல்மான், மாணவர்களுடன் சமீபத்தில் பேசிய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால் இருக்க முடியும் என்பதை பார்க்க விரும்புவதாகவும், தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மம்முட்டி - துல்கர் சல்மான்

    மேலும் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக செல்ல அழைத்த போது அவர் ஆர்வம் காட்டவில்லை. அவரைப் போல் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்றும், சலிப்பாக இருப்பதாகவும், வெளியே செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் துல்கர் கூறியுள்ளார்.
    நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இக்னோர் நெகடிவிட்டி என்று பதிவு செய்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடிகர் விஜய் தனது நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ் உள்ளிட்ட பலரிடம் வீடியோ காலில் பேசினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் சொல்லும் ''Ignore Negativity'' என்ற கருத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார். 

    சஞ்சீவ் பதிவு

    இதற்கு ரசிகர்கள் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா அவர்களின் குடும்பத்தினரை பற்றி தரக்குறை பேசிய மீரா மிதுனுக்காகத்தான் இந்த பதிவு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
    பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி, ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
    தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

    கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். தற்போது பார்வதி சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நீண்டநாள் ஆசையான மூக்குத்தி குத்திக்கொள்ளும் வைபவத்தை தனது வீட்டிலேயே அரங்கேற்றி இருப்பதாக பார்வதி பதிவு செய்துள்ளார்.

    பார்வதி அவரது தாய்

    இதுபற்றி கூறியுள்ள பார்வதி, “உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் மூக்குத்தி குத்திக்கொண்டேன். மூக்குத்தி அணிந்த பின்னர் நானும் எனது தாயைப்போலவே இருப்பதை உணர்ந்தேன். அம்மா குட்டியைப்போல ஒரு அம்மிணிக்குட்டி” என்று கூறியதுடன் தனது தாயின் மூக்குத்தி அணிந்த புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார்.
    இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர்.
    இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கமல், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றார்.

    ஷங்கர் - கமல் - ஆர்.கே.செல்வமணி

    இந்த நிலையில் இன்று இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர். உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், படுகாயமடைந்த ராமராஜனுக்கு 90 லட்சம், சிறு காயமடைந்தவருக்கு 10 லட்சம் என மொத்தம் 4 கோடி ரூபாயை லைகா நிறுவனம் ரூ.2 கோடி, கமல் மற்றும் இயக்குனர் சங்கர் தலா ரூ.1 கோடியும் வழங்கினர்.

    உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார்.
    தமிழில் கிடாரி, நிமிழ், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
    ராஜ தந்திரம், மோ, தொடரி ஆகிய படங்களில் நடித்தவர் தர்புகா சிவா. இவர் அதிகாரம் 79, பலே வெள்ளையத்தேவா, கிடாரி, நிமிர், எனை நோக்கி பாயும் தோட்டா, ராக்கி ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நடிகர், இசையமைப்பாளரான இவர், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

    தர்புகா சிவா

    முதல் நீ, முடிவும் நீ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் இருக்கிறார். பள்ளி பருவ காதலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    எஸ்.பி. பாலசுப்ரமணியம், வைரமுத்து

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து,  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:   “ஒன்றா? இரண்டா? என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில் பாடும் நிலா பாலு. விரைவில் அவர் மீளவும் காற்றை அவர் குரல் ஆளவும் காத்திருக்கிறேன். பால்மழைக்குக் காத்திருக்கும் பூமியைப் போல்... பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியைப் போல்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    பி.எம்.தயா நந்தன் இயக்கத்தில் பிரஜின், ரியாமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
    பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’. நாயகியாக ரியாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ஜானகி, முக்கிய தோற்றத்தில் ‌ஷகிலா, கே.பாக்யராஜ், கானா பாலா ஆகியோர் நடிக்கிறார்கள். மார்வின் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை பி.எம்.தயா நந்தன் இயக்கி உள்ளார்.  வேல்முருகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சங்கர்ராம் இசையமைத்துள்ளார். 

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:  “ஜாலியான ஒரு இளைஞனுக்கு சமூகத்தில் இருந்து ஒரு பிரச்சினை வருகிறது. அதை தவிர்க்க முயற்சி செய்யும் போது தொடர்ந்து பல சிக்கல்கள் வருகின்றன. அதில் இருந்து அவன் எப்படி மீண்டு காதலியை கைப்பிடித்தான் என்பது கதை.

    பிரஜின், ரியாமிகா

    குன்றத்தூர் பகுதியில் நடைபெறும் கதை. முருகனின் அறுபடை வீடுகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் நாயகன் பிரஜினை இயக்குனர் சீனுராமசாமி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். இமான் அண்ணாச்சியை ஒரு பாடலுக்குத் தான் அழைத்தோம். அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் படம் முழுவதும் கலகலப்பாக வருகிறார். இது அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
    தனுஷின் கர்ணன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ரெஜிஷா விஜயன், அடுத்ததாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.

    முரளிதரன், ரெஜிஷா விஜயன், விஜய் சேதுபதி

    இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

    இந்நிலையில், ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் வெங்கட் பிரபுவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அதில்  “அரசியல் கூட்டங்களை வைத்து மாநாடு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய காட்சிகளுக்கு கூட்டம் தேவைப்படும். படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு விலக்கினாலும் 70 முதல் 80 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டால் மாநாடு போன்ற ஒரு படத்தின் ஷூட்டிங்கை எப்படி நடத்த முடியும்? அதே படக்குழுவினருடன் இணைந்து வேறொன்றைப் படமாக்க ஆலோசித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார். அந்தச் செய்திக்கு மாநாடு கைவிடப்பட்டதா? என்று தலைப்பிட்டிருந்தனர்.

    சுரேஷ் காமாட்சியின் டுவிட்டர் பதிவு

    இந்தச் செய்தியை குறிப்பிட்டு மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:   “மீண்டும் இதுபோல் செய்திகள் வந்தால், நான் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிறுவனத்தை சும்மா விடமாட்டேன். எப்போதும் எனக்கு ஊடகத்துறையினர் மீது மரியாதை உள்ளது. மாநாடு படம் கைவிடப்பட்டதாக நான் எந்த விஷயமும் சொல்லவில்லை. தயாரிப்பாளரின் கருத்தை கேட்காமல், எப்படி இதுபோன்ற உண்மையில்லாத செய்திகளை வெளியிடலாம்? மாநாடு ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது” என கடுமையாக பதிவிட்டுள்ளார். 
    நடிகர் ராணாவின் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 8-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

    ராணா, மிஹீகா பஜாஜ்	

    இந்த நிலையில் ராணாவின் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த திருமணத்தில் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், வருண் தேஜ், ராம்சரண் உள்பட பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என கே.ஜி.எப். நடிகை பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
    இந்தி சினிமாவில் கதாநாயகியாக இருந்தவர் ரவீனா டாண்டன். தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது.

    இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:  “90-களில் பாலிவுட்டுக்கு என்று எழுதப்படாத விதிகள் சில இருந்தது. அவற்றை பின்பற்ற மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன். பலரும் என்னை திமிர் பிடித்தவர் என நினைத்தனர். மீடியாவில் என்னைப் பற்றி தவறாக பல்வேறு கட்டுரைகள் வந்தன. ஹீரோக்கள் சொல்வதை கேட்காததால் இதுபோன்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.

    ரவீனா டாண்டன்


    ஹீரோவுடன் ஈகோ பிரச்சனை அல்லது அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள மறுத்தால், படத்தில் இருந்து நீக்கி விடுவார்கள். என்னுடைய சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டு வர பலர் முயற்சித்தார்கள். அதில் இருந்து தப்புவது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது.  என்னை எந்த ஹீரோவும் சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஏனென்றால், நான் பட வாய்ப்புக்காக எந்த ஹீரோவுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்வதில்லை”. என ரவீனா டாண்டன் கூறியுள்ளார்.
    ஓ மை கடவுளே, லாக்கப் படத்தில் நடித்த வாணி போஜன், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்படம் வெற்றி பெறவே அடுத்தடுத்து வாணி போஜனுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. 

    தற்போது இவரது நடிப்பில் லாக்கப் திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு, வைபவ் நடித்துள்ள லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருக்கிறார்.

    வாணி போஜன் - விக்ரம் பிரபு

    தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. 
    ×