என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி, சுதந்திர தினத்தில் புதிய ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்.
    2012-ல் வெளிவந்த ‘ஹிப்ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த ஆதி, மீசையை முறுக்கு படம் மூலம் நடிகரானார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    நான் ஒரு ஏலியன் போஸ்டர்

    இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) என்ற ஆல்பத்தை வெளியிட இருக்கிறார். முதல் பாடல் ஆகஸ்ட் 6ம் தேதியும், முழு ஆல்பம் ஆகஸ்ட் 15ம் தேதியும் வெளியாக இருக்கிறது. இதற்கான போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை தனி விமானம் மூலம் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார்.
    தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் சோனு சூட். படத்தில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோ என்று ஊரடங்கு நேரத்தில் நிரூபித்திருக்கிறார் சோனு சூட். 

    இவர் முதலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார். பின்னர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து உதவினார். சமீபத்தில் குழந்தைகளின் படிப்புக்கு பசுமாட்டை விற்று செல்போன் வாங்கிய விவசாயிக்கு சோனு சூட் உதவி செய்தார். 

    மருத்துவ மாணவர்கள்

    இந்நிலையில், வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை, தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உதவி செய்துள்ளார் நடிகர் சோனு சூட். இதற்கு மாணவர்கள் பலரும் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்ததாக கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா. இவரிடம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், வர்த்தக படங்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

    “நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும். வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறுமாதிரி இருக்கும் என்றெல்லாம் பிரித்து பார்த்து நான் கணக்கு போட்டது இல்லை. எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். அதிர்ஷ்டம் கூட சேர்ந்ததால் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கினேன். 

    சமந்தா

    என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன். எதிர்பாராமல் இந்த தொழிலுக்கு வந்தாலும் இப்போது சினிமாதான் எனது வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு மீது காதலை வளர்த்துக்கொண்டேன். அதனால்தான் அந்தமாதிரி படம் இந்த மாதிரி படம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்காமல் எல்லாவிதமான கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”

    இவ்வாறு சமந்தா கூறினார்.
    பிரபல காமெடி நடிகரின் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 75-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
    மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது. 

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்பட 829 இடங்களுக்கு  சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல்  நடைபெற்றது. இதன் முடிவுகளை யு.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டது.

    குடும்பத்தினருடன் சின்னி ஜெயந்த்

    இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில், தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சின்னி ஜெயந்த்தின் மகனும் தேர்ச்சி பெற்றுள்ளார். சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 75-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே அவர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், ஒரு முறையாவது இந்த இயக்குனருடன் ஒர்க் பண்ணனும் என தெரிவித்துள்ளார்.
    தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

    நேற்று மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து கூறி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    மாளவிகா மோகனனின் டுவிட்டர் பதிவு

    அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் மாளவிகா மோகனன். இதில் ரசிகர் ஒருவர், “ஒரு முறையாவது நீங்கள் பணியாற்ற விரும்பும் கோலிவுட் இயக்குனர் யார்?” என கேள்வி எழுப்பினார். இதற்கு வெற்றிமாறன் என பதிலளித்த மாளவிகா மோகனன், அவரின் ரசிகை என்றும், அவரது படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறினார். 
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் விட்டு விட்டு வந்தது, அதேபோல் சளியும் இருந்ததால், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என வந்தது. இருப்பினும் அது பயப்படும் படியாக இல்லை, டாக்டர்கள் என்னை வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். 

    ஆனால் நான் தான் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி இங்கு வந்தேன். மருத்துவர்கள் என்னை நல்ல முறையில் கவனிக்கிறார்கள். சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன். எனக்கு யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம். நான் ஓய்வில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பதில்லை. என கூறியுள்ளார்.