என் மலர்
சினிமா செய்திகள்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர்.
மேலும் கதைப்படி பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் பிரபு மற்றும் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. தற்போது அவர்கள் இருவருக்கும் வேறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நிழல்கள் ரவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அசுரன், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண்18/9 போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் கதைப்படி பார்த்தால், பாலாஜி சக்திவேலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பார் எனத் தெரிகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில் போதை பொருள் தாராளமாக புழங்குவதாக நடிகை கங்கனா பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. எடுத்து விசாரிக்க தொடங்கியதில் இருந்து தினமும் பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் செல்போன் வாட்ஸ் அப்பில் இருந்து அழிக்கப்பட்ட ஒரு குறுந்தகவல் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டரில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: “இந்தி திரையுலகில் கொக்கைன் போதை பொருள் தாராளமாக புழங்குகிறது. இந்த போதை பொருள் அதிக விலை கொண்டது. ஆனால் முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளுக்கு சென்றால் அதை இலவசமாகவே வழங்குவார்கள். எம்.டி.எம்.ஏ படிகங்களை தண்ணீரில் கலந்து உங்களுக்கு தெரியாமலேயே தரவும் செய்வார்கள்.

இதுசம்பந்தமாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். போதை பொருள் தடுப்பு போலீசார் இந்தி பட உலகுக்குள் நுழைந்தால் பிரபலங்கள் பலர் சிறைக்கு செல்வார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனைகள் செய்தால் அதிர்ச்சியான உண்மைகள் வெளிவரும்.
நான் மைனர் பெண்ணாக இருந்தபோது ஒருவர் எனக்கு குளிர்பானத்தில் போதை பொருளை கலந்து கொடுத்தார். பிரபலமானபிறகு பெரிய படங்களின் பார்ட்டிகளுக்கு செல்லும்போது அங்கு போதை பொருள் மாபியா உலகம் இயங்குவதை பார்த்து அதிர்ந்தேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சீதாயணம் என்ற படம் மூலம் நடிகர் சசிகுமாரின் மகன் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த எவர்கிரீன் மாஸ் ஹிட் படம் பாட்ஷா. இதில் ரஜினிக்கு தம்பியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். கன்னடத்தில் பிரபல நடிகரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரது மகன் அக்ஷித்தும் தந்தையை போலவே ‘சீதாயணம்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தை பிரபாகர் ஆரிபாக இயக்கியுள்ளார்.

கலர் கிளவுட்ஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் லலிதா ராஜ்யலக்ஷ்மி தயாரித்துள்ள மும்மொழிப் படத்தை ரோஹன் பரத்வாஜ் வழங்குகிறார்.
இப்படத்தில் அக்ஷித்துக்கு ஜோடியாக அனாஹிதா பூஷண் நடிக்க, முக்கிய வேடங்களில் வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா, அஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.

தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் 4 தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
முன்னணி காமெடி நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.


கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மதிய உணவு வழங்கினர். மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப்பட்டன.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுக்கு ஜோடி யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமாருக்கு பதிலாக நிழல்கள் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் பிரபுவே நடிப்பார் என்றும் சரத்குமாருக்கு வேறு ஒரு முக்கிய கேரக்டர் இந்த படத்தில் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கதையின்படி பெரிய பழுவேட்டரையரின் காதலியாக நந்தினி என்ற கேரக்டர் இருக்கும். அப்படியானால் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய், பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? என்ற தகவல் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவரது மகன் கூறியிருக்கிறார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் நுரையிரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைத்தார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார் என்று கூறினார்.

இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிபி விரைவில் குணமடைவார் என்று கூறியுள்ளார்.
மாயி படத்தில் மின்னல் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகை தீபா எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சமீப காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரபலங்களின் திருமணங்கள் எளிமையாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூட சமூக வலைதளங்களின் மூலமே வாழ்த்து தெரிவிக்கும் நிலையுள்ளது.

இந்நிலையில் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கும் நகைச்சுவைக் காட்சியில் நடித்த தீபாவுக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மாயி படத்தில் நடித்ததை அடுத்து திரைத்துறையினரால் மின்னல் தீபா என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் நடிகை மின்னல் தீபா தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் முன்னோட்டம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி நகைச்சுவை படமாக தயாராகும் இதற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.நிர்மல் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் 65-வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை தமன்னா, விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சுறா படத்தில் விஜய்க்கு நடித்திருந்த தமன்னா, தற்போது தளபதி 65 மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்க உள்ள பிரபாஸ், அதற்காக வீட்டிலேயே வில்வித்தை பயிற்சி எடுக்க திட்டமிட்டு உள்ளாராம்.
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது.

ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். ராமர் வில்வித்தையில் சிறந்தவர் என்பதால், படத்தில் அதை கச்சிதமாக செய்ய வேண்டும் என்பதற்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சி மேற்கொள்ள இருக்கிறாராம். தற்போது கொரானோ அச்சுறுத்தல் இருப்பதால் வீட்டிலேயே வில்வித்தை பயிற்சி எடுக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக வீட்டிலேயே தனி பயிற்சிக்கூடம் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறதாம். அவை முடிந்ததும் பிரபாஸ் வில்வித்தை பயிற்சிகளை ஆரம்பிக்க இருக்கிறாராம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரவ்வுக்கும், கவுதம் மேனன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ராஹிக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆரவ்வுக்கும், இளம் நடிகை ராஹிக்கும் திருமணம் நிச்சயமாகி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஆரவ்வும் ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இவர்கள் திருமணம் வரும் செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை ராஹி, கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.






