என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் சிம்பு மற்றும் தனுஷுடன் ஜோடியாக நடித்த நடிகை, சமூக வலைத்தள பக்கத்தில் மீண்டும் அழைக்காதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை ரிச்சா கங்கோபத்தியா தெலுங்கில் ‘லீடர்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் இவரது வலிமையான கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதையடுத்து சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். ரிச்சா கடைசியாக 2013-ம் ஆண்டு ‘பாய்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதையடுத்து தற்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் தான் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு கேட்பவர்களுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ளார்.
’எனது ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 8 வருடங்களுக்கு முன்பு நடிப்பை விட்டு விலகிய ஒருவரிடம் தொடர்ந்து ஒரு கற்பனை உலகில் வாழ சொல்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் உண்மையான அக்கறை இல்லாமல் என்னுடைய படத்தைப் பற்றிப் பேசுவது, என்னுடைய புகைப்படங்களைப் பகிர்வது போன்றவற்றைச் செய்து வருகிறார்கள். ஆனால் உங்கள் பொழுதுபோக்கு தேவைகளுக்காக என்னை பயன்படுத்த நீங்கள் ஆர்வமாக இருந்தால், என் எண்ணங்கள், மதிப்புகள் அல்லது எனது 5 வருட திரைப்பட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நபராக நான் யார் என்பதைப் பற்றி உண்மையில் நீங்கள் தெரிந்திருக்கவில்லை என்றால், உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். 34 வயதான பெண்ணிடம் மரியாதையுடன் ஈடுபடுகிறவர்களை நான் பாராட்டுகிறேன், அவளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சில ஞானத்தைப் பெற்றவள் மற்றும் பல முறை வாழ்க்கையை மாற்றியமைத்தவள், அவளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான தேடலில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்கு 34 ஆண்டுகளில் கிடைக்காதது வெறும் 5 வருடத்தில் மட்டும் கிடைத்த சினிமாவைக் கொண்டு வரையறுக்க முடியாது.
தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், என் வாழ்க்கை பயணத்தால் ஈர்க்கப்பட்டவர்களுக்கும் நன்றி. அவர்கள் தேவைகளுக்காக என்னை நாடுவோர்களை விட எனக்கென்று சில கருத்துக்கள் உள்ளன, எனக்கு மதிப்புகள் உள்ளன, அதுவே எனக்கு முக்கியம். ஆகவே, ஒரு சாதாரண நபராக நீங்கள் என்னை மதித்தால் மட்டுமே உங்களால் எனக்கு மகிழ்ச்சி” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதியின் 800 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.
இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள். இதில் முத்தையா முரளிதரன் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இறுதியில் வருகிறது. இது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

800 படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறார்களாம். இலங்கை, இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இளம் நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
விஷால் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. கொரோனா பரவலுக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. விடுபட்ட சில காட்சிகளை தற்போது படமாக்கி உள்ளனர். இதற்காக 6 நாட்கள் படப்பிடிப்பை விஷால் செலவை குறைத்து சிக்கனமாக நடத்தி முடித்துள்ளார்.
இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்க இருக்கிறார். விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது. விரைவில் இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், அதை நம்பாதீங்க... தவறான தகவல் என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு பலரும் மாறி வருகிறார்கள். அந்தவகையில் நடிகை குஷ்பு, சுகன்யா, கருணாஸ், விஷால் உள்ளிட்டோர் பா.ஜ.க.,வில் இணைய போவதாக செய்தி பரவியது. இதை சிலர் மறுத்தனர். குஷ்பு மட்டும் காங்கிரசிலிருந்து விலகி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜக.வில் இணையபோவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவியது.

இதையறிந்த எஸ்.ஏ.சந்திரசேகர், ''நான் பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக வெளியான செய்தி தவறானது. எங்கிருந்து இது போன்று செய்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை'' என்றார்.
கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் தள்ளிப்போகாதே படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிப்போகாதே. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடித்துள்ளார்கள். எம்.கே.ஆர்.பி. நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனங்களை எழுதி உள்ளார். மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றியுள்ளார்.
சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது,
விஜயகாந்த் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் இருந்து மோகன் ராஜா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோகன் ராஜாவுக்கு பதிலாக ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கவுள்ளதாகத் கூறப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை அவர் இயக்கிய விதம் தியாகராஜனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தையும் அவரை இயக்கச் சொல்லிக் கேட்டுள்ளாராம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலின் திருமணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த திருமணத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பதிலாக காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்களாம்.
விமான விபத்தில் பலியான நடிகையின் பயோபிக்கில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகைகளின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பது தற்போது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் நடிகை சாவித்திரி வாழ்க்கை சினிமா படமாக வெளிவந்தது. அதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், விமான விபத்தில் இறந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் கார்த்திக் ஜோடியாக பொன்னுமணி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து ரஜினிகாந்துடன் அருணாசலம், படையப்பா, சத்யராஜின் சேனாதிபதி, கமல்ஹாசனுடன் காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்தும் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அவரது வாழ்க்கையை படமாக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த படத்தில் சவுந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டிக்காக விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்களாம்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இன்று வெளியிடுகிறார்கள். இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டிக்கு முன் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார்கள். இதனை காண விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

800 படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறார்களாம். இலங்கை, இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட உள்ளனர்.
பிக்பாஸ் அறிமுகம் செய்த ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ என்றால் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை ஒரு வாரம் முடிந்துள்ளது. முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்பட வில்லை. இரண்டாம் வாரம் முதல் வெளியேற்றும் படலம் தொடங்குகிறது.
அதற்காக எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களின் சுரேஷ் கேப்டன் என்பதால் அவரை தவிர்த்து சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரியல்லா, ஆஜித் உள்ளிட்ட ஏழு பேர் உள்ளனர். வழக்கமாக மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

ஆனால் இந்த முறை பிக்பாஸ் அதில் ஒரு புதிய டுவிஸ்ட் கொடுத்துள்ளார். ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதாவது மக்களின் வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி தான் இந்த ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’. இது இந்த சீசன் முழுவதும் செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரியல்லா, ஆஜித் ஆகியோரில் ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ பெறப்போவது யார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரபல நடிகையாக இருக்கும் சினேகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கணவர் பிரசன்னா சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் சினேகா. கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் இந்த வருடம் பட்டாஸ்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினேகா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமூக வலைத்தளத்தில் இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னா வீட்டை அலங்கரித்து, பிரமாதமான கேக்கையும் தயார் செய்து, சினேகாவிற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். குடும்பத்துடன் இவர்கள் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






