என் மலர்
சினிமா செய்திகள்
பாலிவுட் திரைத்துறைக்கு எதிராக பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட்டதாக ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் மீது திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சுஷாந்த்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரியா சக்ரபோர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார். சுஷாந்த் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் அது தொடர்பான செய்திகளை ஆங்கில ஊடகங்கள் மிகவும் தீவிரமாக வெளியிட்டு வந்தன. மேலும், பாலிவுட் உலகின் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டதாகவும் ஆங்கில ஊடகங்கள் குற்றச்சாட்டி வந்தன. இதில் ஷாரூக்கான், சல்மான்கான் என பாலிவுட்டின் முன்னனி நடிகர்களும் ஆங்கில ஊடகங்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.
குறிப்பாக, சுஷாந்த் தற்கொலை மற்றும் பாலிவுட்டை குறிவைத்து பிரபல ஆங்கில ஊடகங்களான ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் ஆகிய செய்தி நிறுவனங்களும், அவற்றின் ஊடகவியலாளர்களான அருணாப் கோஷ்வாமி, ராகுல் ஷிவ்சங்கர், நாவிக்கா குமார் போன்றோர் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், பாலிவுட் திரைத்துறையை போதைப்பொருள் கும்பலுடன் ஒப்பிட்டு கருத்துக்களையும் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், பாலிவுட்டுக்கு எதிராக பொறுப்பற்ற, இழிவான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக ஆங்கில ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் ஊடகவியலாளர்களான அருணாப் கோஷ்வாமி, ராகுல் ஷிவ்சங்கர், நாவிக்கா குமார், பிரதீப் உள்ளிடோர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், அமீர்கான், அஜேய் தேவ்கன் உள்பட பல்வேறு நடிகர்களை உள்ளடக்கிய 34 பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நிறுவனங்கள் மற்றும் 4 பாலிவுட் அசோசியேசன்கள் இணைந்து ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நடிகர் சூரி நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியது.
சில தினங்களுக்கு முன்பு, அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து கூறினார்கள்.
தற்போது நடிகர் சூரி, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறி இருக்கிறார்.
பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வரும் இளையராஜா தற்போது தேசிய தலைவர் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் இணைந்து பயணித்தவருமான லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணன் இந்தப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணை வகித்துள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகன் ஜெ.எம்.பஷீர் பேசும்போது, “இந்த படத்திற்காக எனக்கு பசும்பொன் தேவர் மேக்கப் போட்டபோது என்னாலேயே நம்ப முடியவில்லை.. அதன்பிறகுதான் தேவர் அய்யாவை பற்றிய புத்தகங்களை தேடித்தேடி படித்தேன். அதன்பிறகு தேவரின் பாதையை பின்பற்றவும் ஆரம்பித்தேன். இந்த படத்தில் நடிப்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தேன். இந்த படத்தில் என்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் அப்படியே பசும்பொன் தேவர் ஐயா போலவே இருக்கிறீர்கள் என பாராட்டினார்கள்.. என் வாழ்க்கையில் நான் இந்த ஒரு படத்தில் மட்டும் நடித்தால் மட்டும் போதும் என்கிற அளவுக்கு இதை மிகப்பெரிய படமாக உருவாக்குவோம்.
இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகியபோது,, என்னை பார்த்ததும் நீங்கள் தேவர் போலவே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.. தேவர் பற்றிய உண்மையான நிகழ்வுகளை படமாக்குவீர்களா என்று கேட்டார். அவரிடம் நாங்கள் உறுதி அளித்தோம். மேலும் தனது முதல் படமாக நினைத்து இதற்கு அற்புதமாக இசையமைத்து தருவதாகவும் இசைஞானி இளையராஜா வாக்களித்தார்” என்று பேசினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், உண்மையான காதல்... ரொம்ப மிஸ் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். இவரது நடிப்பில் இந்த வருடம் பட்டாஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது அக்ஷய் குமார் நடித்து வரும் அத்ராங்கி ரே என்னும் படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அத்ராங்கி ரே படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், கேமராவை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து, உண்மையான லவ், உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் என்று பதிவு செய்திருக்கிறார்.
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் முன்னோட்டம்.
ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுவயது முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு நகைச்சுவை நடிகர் சதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி ஆலோசனை கூட்டத்தின்போது கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுதொடர்பாக நகைச்சுவை நடிகர் சதீஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்” என பதிவிட்டுள்ளார்.
அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
நடிகை அனுஷ்கா, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் படமோ எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் அனுஷ்கா.
பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக புராண கதையில் நடிக்க அனுஷ்கா திட்டமிட்டுள்ளாராம். சகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இந்த படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமான குணசேகர் இயக்குகிறார்.

விசுவாமித்ர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலா, துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் துருவாச முனிவர் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற்று சகுந்தலை காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு துஷ்யந்தனுடன் எப்படி இணைகிறார் என்பதே கதை.
இதில் சகுந்தலை வேடத்தில் நடிக்க அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். ஏற்கனவே சகுந்தலை வாழ்க்கையை மையமாக வைத்து சில புராண படங்கள் வந்துள்ளன. மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் 1940-ல் சகுந்தலை படம் வெளிவந்துள்ளது. 1961-ல் அசாம் மொழியிலும் 1965-ல் மலையாளத்திலும் சகுந்தலை கதை படமாகி வெளியானது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தி பட உலகில் போதை புழக்கம் உள்ளதாகவும் முன்னணி நடிகர்கள் இதை பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார் சொல்லி வரும் நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.
தனது டுவிட்டர் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள்தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கின்றனர். இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள்” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

கர்நாடகத்தை சேர்ந்த வக்கீல் ரமேஷ் நாயக் தும்கூரு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவசாயிகளை புண்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து தெரிவித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிமன்றம் கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கியாதசந்திரா போலீஸ் நிலையத்தில் கங்கனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் தொடர்ந்திருந்தார்.
அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஜய்தேவர கொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது: “நமது அரசியல் அமைப்பு சரியாக இல்லை. எல்லோருக்கும் ஓட்டுரிமை அளிப்பதும் சரியல்ல. விமானத்தில் மும்பைக்கு செல்வதாக இருந்தால் அந்த விமானத்தை யார் ஓட்டுவது என்று விமானத்தில் பயணம் செய்யும் 300 பயணிகள் ஓட்டுபோட்டு தேர்வு செய்வது இல்லை. தகுதியான விமானியை விமான நிறுவனமே அனுப்புகிறது.
ஆனால் அரசியலில் யார் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை மக்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டுகளை பணம் கொடுத்தும், சாராயம் கொடுத்தும் வாங்கி விடுகின்றனர். பணம் இருப்பவர்களுக்கு ஓட்டுரிமை தேவை இல்லை. நடுத்தர மக்களுக்கு, படித்தவர்களுக்கு பணத்துக்கு விலை போகாதவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்க வேண்டும். நிறைய பேர் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது தெரியாமலே போடுகிறார்கள்.

எனவே எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது. நமது சமூகத்தில் மாற்றம் வரவேண்டுமானால் சர்வாதிகார ஆட்சி இருக்க வேண்டும். அந்த சர்வாதிகாரி நல்லவராக இருக்க வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தேவரகொண்டாவுக்கு எதிராக வலைத்தளத்தில் பலரும் கண்டன பதிவுகள் வெளியிடுகின்றனர்.
எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ், மிருதுல்லா முரளி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்தா படத்தின் முன்னோட்டம்.
மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். மெட்ரோ படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் பிஸ்தா. இந்த படத்தில் சிரிஷ் ஜோடியாக மிருதுல்லா முரளி, சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கிராமப் பின்னணியில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். செந்தில், சதீஷ், யோகி பாபு, சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமாகும். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களில் இனி நடிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாக நடிகை சாம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஆபாச வசனங்கள், காட்சிகள் அதிகமாக உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாம்ஸ் இனி அதுபோன்ற படங்களில் நடிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன். இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாகத்தான் வருகிறதே அந்த வயது இளைஞர்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்.

'A' படம் என்று தணிக்கைச் சான்றிதழுடன் வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன? என்று தான் இந்தப் படத்தில் நடித்தேன். ஆனால், இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தைக் காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி ‘இரண்டாம் குத்து’ போன்ற நேரடி அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து”. இவ்வாறு சாம்ஸ் தெரிவித்துள்ளார்.






