என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் என்ற படம் சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
    நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை தயாரிக்கிறார். இந்த நிலையில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் என்ற இன்னொரு படத்தையும் நயன்தாரா தயாரித்துள்ளார். 

    இதுகுறித்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் நாளாக இறுதிகட்ட பணிகளில் இருந்த கூழாங்கல் எனும் திரைப்படத்தை பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் தலைப்பை போல் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. 

    கூழாங்கல் பட போஸ்டர், நயன்தாரா, விக்னேஷ் சிவன்

    இத்திரைப்படத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இத்திரைப்படத்தின் முழு தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளோம்” என்று கூறியுள்ளனர். 

    இந்நிலையில், கூழாங்கல் படம் நெதர்லாந்தில் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில், போட்டி பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதேபோல் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி படமும் திரையிட தேர்வாகி உள்ளது.
    கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
    ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிச.25) வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. 

    காட்டேரி படக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு

    இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத் தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பல்வேறு கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ஆம் தேதி வெளிவர இருக்கும் "காட்டேரி" திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மலையாள சினிமா பட இயக்குனர் ஷாநவாஸ் கோவை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு வயது 37.
    மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ் (வயது 37). இவரது சொந்த ஊர் நரணிபுலா. கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது.

    இதையடுத்து பிரபல நடிகர் ஜெயசூர்யாவை கதாநாயகனாக வைத்து "சூபியும் சுஜாதாவும்" என்ற பெயரில் ஒரு மலையாள படத்தை இவர் இயக்கினார். இந்த சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது.

    ஷாநவாஸ்

    இதன்பின், இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஷாநவாஸின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.
    டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

    பாலசந்தரிடம் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கோவி.மணிசேகரன் கூறுகிறார்:

    "விஜயதசமி அன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். `அரங்கேற்றம்' படம்தான் எனக்கும் ஆரம்ப அரங்கேற்றம்.

    அவரது சிந்தனை நான்கு திசைகளிலும் சிறகடிக்கும். சிந்தனை அளவுக்கு அவரிடம் சினமும் குடிபுகுந்திருந்தது. ஆயினும் முரட்டுக்கோபம் அல்ல; முன்கோபம்.

    எவருக்கும் `அது இது' என்று எடுத்துச் சொல்லமாட்டார். புத்தி உள்ளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் அந்த குருகுலத்து ஏணிப்படிகளை எண்ணலானேன். நானே யோசிப்பேன்; நானே ஆய்வேன்; நானே புரிந்து கொள்வேன்.

    அரங்கேற்றம் டைட்டிலில் ஒரு குடுகுடுப்பைக்காரன் `நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது' என்று குடுகுடுப்பையைக் குலுக்குவான். அவன் உருவத்தின் மீது என் பெயர் வரும். துணை டைரக்ஷன் - கோவி.மணிசேகரன் என்று! ஆம்; தனி டைட்டில் கார்டுதான்!

    இப்படி தனி டைட்டில் போட்டது குறித்து எங்கள் குழுவில் பிரச்சினை எழுந்தது. குரு கே.பாலசந்தர் சொன்னார்: "அவர் இலக்கிய சாம்ராட் விருது பெற்றவர். நான் அவரை இறக்கி மதித்தால், அவருடைய வாசகர்கள் என்னை இறக்கி மதிப்பிடுவார்கள். எனவே இதுதான் அறம்.''

    அவரது பதில், பலருக்கு இரும்பைக் காய்ச்சி இறக்கியது போலிருந்தது. அன்று முதலே, என் மீது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

    இந்திப்படம் செய்கிற போதுகூட, பாலசந்தர் என்னை இறக்கிப் பார்த்ததில்லை. அவருக்கு எழும் இலக்கிய ஐயங்களை நான் அண்ணாந்து வழங்கியதில்லை; அடிபணிந்து வழங்கியிருக்கிறேன்.

    இருமுறை அவர் என்னை கோபித்துக் கொண்டிருக்கிறார்.

    ஒன்று: வசனத்தாளில் திருத்தப்பட்ட வசனங்களை வரிசையாக எழுதத் தவறியது.

    மற்றொன்று: மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, கன்னடத்தில் அதிகமாகப் பேசப்பட்ட கலை நுணுக்கங்கள் நிறைந்த படம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். துணைக்கு வர யாரும் இல்லை. ஒரு துணை நடிகையும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.

    இயக்குனருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைத்து படத்துக்குப்போனோமë. திரும்பி வரும்போதுதான் தெரிந்தது, கருகருவென ஆசான் காத்திருந்தது!

    நடிகையோ ஓடி ஒளிந்து கொண்டாள். நான் அகப்பட்டுக்கொண்டேன். கே.பி.யின் கண்களில் கோபம். என்னை ஏசிவிட்டு, பிறகு ஒரு குழந்தைக்குக் கூறுவது போல் சொன்னார்:

    "கோவி! நீங்கள் பிரபல எழுத்தாளர். அவளோ நடிகை. நாளை இது பத்திரிகைகளில் வந்தால் எவருடைய பெயர் எப்படிக் கெடும் யோசித்தீர்களா?''

    இவ்வாறு பாலசந்தர் கூறியதும், நான் தலை குனிந்தேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டேன்.

    பாலசந்தரிடம் 2ஷி ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்தது. கண்ணீருடன் விடைபெற்றேன். அவர் கண்களும் கலங்கின.''

    இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

    "பாலசந்தரிடம் இருந்து ஏன் விலகினீர்கள்?'' என்று கேட்டதற்கு மணிசேகரன் சொன்னார்:

    "சினிமா துணை டைரக்டராக பணியாற்றியபோது, எனக்கு கிடைத்த வருமானம் குறைவு. அதற்குமுன் புத்தகம் எழுதுவதன் மூலம்தான் வாழ்க்கை நடந்தது. சினிமாவில் பணியாற்றியபோது, மனைவியின் நகைகளை விற்று குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    "திரைத்தொழில் கற்று என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?'' என்று என் அன்பு மனையாள் கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

    தவிரவும், பாலசந்தரின் முக்கிய உதவியாளராக விளங்கிய அனந்துடன் எனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.

    இத்தகைய காரணங்களால், நான் பிரிய நேர்ந்தது'' என்று கூறிய மணிசேகரன், தொடர்ந்து சொன்னார்:

    இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

    நான் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், புத்தகமாக வெளிவந்தது. அதைப் பாராட்டி, "இந்து'' நாளிதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.

    பெங்களூரைச் சேர்ந்த பாபாதேசாய் என்ற படத்தயாரிப்பாளர், அந்த விமர்சனத்தைப்  படித்துவிட்டு, அதைப் படமாக்க விரும்பி, என்னைத் தேடி வந்தார்.

    "இந்து பத்திரிகையில் விமர்சனம் படித்தேன். கதை முழுவதையும் சொல்லுங்கள்'' என்று கூறினார். எனக்கே புரியாத எதிர்பாராத அதிர்ச்சி.

    நான் கதையை ஆங்கிலத்தில் சொன்னேன். பாலசந்தர் பட்டறையில் இருந்ததால், சினிமாவுக்கு ஏற்றபடி கதை சொல்லப் பழகியிருந்தேன். பட அதிபரை கவரும் விதத்தில் கதையைச் சொல்லி கலக்கினேன்.

    கதையைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் மல்கியது. "இக்கதையை கன்னடத்தில் படமாக எடுக்கிறேன். கதைக்கு என்ன விலை?'' என்று கேட்டார்.

    வெறும் கதையை விற்பதற்கா 2ஷி ஆண்டுகள் திரைத்தவம் செய்தேன்!

    "தமிழில் எடுப்பதானால், கதையைத் தருகிறேன். அதுவும் வசனத்தை நானே எழுதி, டைரக்ட் செய்ய வேண்டும்'' என்று கூறி, பாலசந்தரிடம் பணியாற்றியது பற்றி விவரித்தேன்.

    பாலசந்தர் பெயரைச் சொன்னதும், பாபாதேசாய் மகிழ்ந்து போனார். "தமிழிலும், கன்னடத்திலும் எடுப்போம். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் எடுக்க உங்களால் முடியுமா?'' என்று கேட்டார்.

    "ஏன் முடியாது?'' என்று திருப்பிக் கேட்டேன்.

    "அப்படியென்றால் ஆகட்டும். திரைக்கதை எழுதத் தொடங்கலாம்'' என்று கூறிவிட்டு, முறைப்படி ஒப்பந்தம் போட்டு, அட்வான்சும் வழங்கினார்.'' 
    டிசி சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் வெளியாகியிருக்கும் வொண்டர் உமன் 1984 படத்தின் விமர்சனம்.
    நாயகி கிறிஸ் பைன் மியூசியத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆங்காங்கே நடக்கும் தவறுகளை சண்டைபோட்டு சரி செய்து வருகிறார். இந்நிலையில் எஸ்பிஐ, ஒரு கல்லை பற்றி தகவல் கொடுக்கிறார்கள். மேலும் இந்த கல்லை அபகரிக்க ஒரு கூட்டம் செயல் படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    கல்லை பற்றி ஆராய்ச்சி செய்யும் போது விவரம் இல்லாத ஒரு பெண்ணும் வேலைக்கு சேர்கிறார். ஆராய்ச்சியில் இந்த கல்லை வைத்துக் கொண்டு மனதில் நினைத்தால் அது நிஜத்தில் நடக்கும் என்பதை அறிகிறார்கள்.

    விமர்சனம்

    இந்நிலையில், ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விவரம் இல்லாத பெண், கிறிஸ் பைன் போல் சக்தி வாய்ந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கிறிஸ் பைன் இடம் உள்ள சக்தி எல்லாம் விவரம் இல்லாத பெண்ணுக்கு செல்கிறது.

    இதே சமயம் வில்லனும் கல்லை அபகரித்து விடுகிறார். இறுதியில் கிறிஸ் பைன், இழந்த சக்தியை பெற்றாரா? வில்லனிடம் இருந்து சக்தி வாய்ந்த கல்லை மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    டிசி சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் வொண்டர் உமன் 1984 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு பின்னணியில் நடக்கும் கதையை உருவாக்கி இருக்கிறார்கள். டிசி படங்களில் எப்போதும் முதல் பாதி மெதுவாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் இருக்கும். அதேபோல் இந்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏற்றவாறு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் திரைப்படம் நகர்கிறது.

    கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசையும், ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் 'வொண்டர் உமன் 1984' வொண்டர்ஃபுள்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, தனது சிறு வயது ஆசையை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.
    கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கார்த்திக் ராஜு இயக்கிய சூர்ப்பனகை என்ற படத்தில் நடித்து வருகிறார். ரெஜினா எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக பராமரித்துவருபவர். அதனால் சுறுசுறுப்பாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவார்.

    ரெஜினா

    குறிப்பாக சர்பிங்க் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் ரெஜினா படகு சவாரி செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. “என்னைப் போலவே, நீங்கள் சென்னையில் வாழ்ந்தால் சேத்துப்பட்டு எக்கோ பார்க்கின் நடுவில் உள்ள இந்த சிறிய அழகான தீவு உங்களை கவர்ந்திருக்கும். நான் சிறியவளாக இருந்த போதே இங்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவேன். தற்போது அந்த ஆசை நிறைவேறியது மட்டுமல்லாமல் நான் உடற்பயிற்சி செய்யவும் உதவிகரமாக உள்ளது. என்னால் முடிந்தவரை இங்கு பயிற்சி பெறப் போகிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் புதிய படத்திற்காக 10 இயக்குனர்கள் ஒன்று சேர இருக்கிறார்கள்.
    சிலம்பரசன் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து, தன்னுடைய வழக்கமான நடைமுறைகளையும் மாற்றிவிட்டார். சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் சிலம்பரசன்.

    இதனை தொடர்ந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பாக நடிக்க ஒப்பந்தமான மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு. கன்னட ரீமேக் படமாக இப்படத்தில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். மூன்று வருடமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மப்டி படத்தின் வேலைகள் அதிரடியாக துவங்கியுள்ளது.

    சிம்பு

    இந்நிலையில், மப்டி படத்தின் டிசம்பர் 24ஆம் தேதி மப்டி ரீமேக் படத்தின் தமிழ் டைட்டில் மற்றும் இயக்குனர் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்தனர். தற்போது இந்த டைட்டில் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவில் இருக்கும் 10 இயக்குனர் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த செல்வராகவன், 8வது முறையாக பிரபல இசையமைப்பாளருடன் இணைந்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் செல்வராகவன். இவருடைய இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்.ஜி.கே படத்தில் இணைந்தனர்.

    அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அன்பே பேரன்பே’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. தற்போது 8-வது முறையாக செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.

    செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா

    இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் செல்வராகவன், “8-வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் டேனி, கன்னிராசி திரைப்படங்கள் வெளியானது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே ‘காட்டேரி’ படத்தை இயக்கியுள்ளார். இதில் வரலட்சுமியுடன் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ஆத்மிகா, சோனம் பஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

    வரலட்சுமி - இயக்குனர் டீகே

    இப்படம் குறித்து வரலட்சுமி மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, காட்டேரி திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. தியேட்டரில் எல்லோரும் ரசிக்கும் விதமாக டீகே இயக்கி இருக்கிறார். நான் இந்த படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது. இயக்குனர் டீகே, கதை சொன்ன விதமும், எடுத்த விதமும் எனக்கு பிடித்தது. டீகே இயக்கும் அடுத்த படத்திலும் நான் நடிப்பேன் என்று கலகலப்பாக கூறினார்.
    கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு மட்டுமே கொரோனா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அண்ணாத்த. அடுத்த மாதம் ரஜினி தனி கட்சி தொடங்க இருப்பதால் படப்பிடிப்பை விரைவாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

    இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம்

    இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 4 பேருக்கு மட்டுமே கொரோனா, ரஜினி மற்றும் இதர படக்குழுவினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள்.
    எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான அபர்ணதி, தேன் இன்று தித்திக்கிறது என்று கூறியிருக்கிறார்.
    சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது தேன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகும் முன்பே பல விருதுகளில் கலந்துக் கொண்டு பரிசுகளை வென்றுள்ளது. தற்போது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

    தான் நடித்த படம் விருதுகளை குவித்து வருவது குறித்து அபர்ணதி கூறும்போது, ‘எனது நடிப்பில் வெளியாகவிருக்கும் 'தேன்' திரைப்படத்திற்குத் தாங்கள் அனைவரும் அளித்துவரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'தேன்' திரைப்படம் குறித்து தங்களின் நேர்மறை விமர்சனங்களும், செய்திகளும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.

    இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், 'தேன்' திரைப்படம் 51-வது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் (2020) திரையிடப்படுவதற்காகத் தேர்வாகியுள்ளது. இதற்காக, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் விநாயக், ஏபி புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் அம்பலவானன்.பி, பிரேமா.பி மற்றும் ஹீரோ தருண் குமார், குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீ, துணை நடிகர்கள் பவா லக்‌ஷ்மணா, அருள் தாஸ், கயல் தேவராஜ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அபர்ணதி

    ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், வசனகர்த்தா ராசி தங்கதுரை, கலை இயக்குநர் மாயபாண்டி ஆகியோருக்கும் நன்றி கூறுகிறேன். படத்தை உருவாக்குவதில் அவர்களின் சிறந்த பங்களிப்பையும், ஆதரவையும் நினைவு கூர்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பால் தான் 'தேன்' இன்று தித்திக்கிறது.

    இதேபோல், வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் எனது அடுத்தத்தத் திரைப்படமான 'ஜெயில்' படத்திற்கும் தங்களின் ஒத்துழைப்பு தொடர வேண்டுகிறேன்’ என்றார்.
    படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நடிகர் ரஜினி கொரோனா சோதனை செய்து தனிப்படுத்திக் கொண்டார்.
    நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.

    இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னைப் படுத்திக் கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் ரஜினி சென்னை திரும்ப இருக்கிறார்.
    ×