என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளான இன்று தலைவி படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். 

    சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளான இன்று வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ள தலைவி படக்குழு, அதோடு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனாவும் ரொமாண்டிக் போஸ் கொடுத்தபடி இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ள நிலையில், அதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியாகி உள்ள படம் மாஸ்டர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன.

    மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமத்தை எண்டமால் ஷைன் இந்தியா நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது. 

    ஹிரித்திக் ரோஷன்

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    திருப்பூரில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் மாஸ்டர் படம் பார்த்த லோகேஷ் கனகராஜ், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். பொங்கலை ஒட்டி ரிலீசான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. 

    துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில் என நடிகர் விஜய் நடித்த ஏழு படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள மாஸ்டர் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. 

    இந்நிலையில், மாஸ்டர் படத்தை திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் நேரில் வந்து பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

    லோகேஷ் கனகராஜ், விஜய்

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள முயற்சி செய்வேன். மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருப்பதால் தான் திரையரங்கிற்கு கூட்டமாக வருகின்றனர். 

    விமர்சனம் என்பது பாசிட்டிவாகத் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை, நெகட்டிவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு பெரிய ஹீரோவைக் காட்ட வேண்டும் என்பதாலேயே மாஸ்டர் படம் நீளமாக உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

    "மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

    "அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

    படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவில்லை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

    ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

    இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

    அவர்கள் எண்ணியது போலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

    பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

    பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

    பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

    படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

    கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

    அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

    இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

    பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

    "மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

    இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

    "மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

    "மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

    வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

    வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

    "ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

    அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

    கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

    சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

    இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். 

    விஜய்

    தமிழக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் படத்துக்கு தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் முதல் 3 நாளில் மாஸ்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    இனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
    தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்துகொண்டார்.

    வனிதா

    திருமணத்திற்கு முன்பே பீட்டர் பால் பெயரை வனிதாவும், வனிதாவின் பெயரை பீட்டர் பாலும் கைகளில் டாட்டூ குத்திக் கொண்டனர். சில நாட்களில் பீட்டர் பாலை பிரிந்துவிட்டதா நடிகை வனிதா பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது வனிதா தனது கையில் இருந்து பீட்டர் பாலின் டாட்டூவை மாற்றி புதிய டாட்டூ குத்தியுள்ளார். இதில் அவர் குத்தியுள்ள புதிய டாட்டூ ஒரு சைனீஸ் சிம்பல் எனவும், அந்த டாட்டூவுக்கு அர்த்தம் டபுள் ஹபினஸ் எனவும் வனிதா தெரிவித்துள்ளார்.

    வனிதா

    இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் வனிதா. அதில், வனிதாவின் மகள் இனிமேல் டாட்டூ குத்துவியா கேட்க அதற்கு வனிதா, டாட்டூ குத்துவேன் ஆனால், மாற்றாத அளவிற்கு தெளிவாக குத்துவேன். இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று இந்த டாட்டூவை குத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.
    மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார்.

    இந்த படம் கடந்த வருடம் வெளியாக இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடம் வெளியானது. இந்நிலையில் நீண்ட தாமதத்தால் தயாரிப்பாளர் லலித் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காக அடுத்த படத்தை நடித்துக் கொடுக்க விஜய் முடிவு செய்து இருக்கிறாராம்.

    வினோத் - சிவா

    இந்த படத்தை இயக்க சிவா மற்றும் ஹெச் வினோத் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரையில் இருக்கிறதாம். இதில் யார் விஜய் படத்தை இயக்குவார்கள் என்று விரைவில் தெரிய வரும் என்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.
    நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. டி 43 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். 

    இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று தமன்னா என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தனுஷ் - தமன்னா

    ஏற்கனவே நடிகை தமன்னா தனுஷுடன் படிக்காதவன், வேங்கை படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். நானே வருவேன் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷுடன் இணைகிறார் தமன்னா. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வி.இசட்.துரை இயக்கத்தில் அமீர் நடிப்பில் உருவாகி வரும் நாற்காலி படத்தின் முன்னோட்டம்.
    யோகி', 'வடசென்னை' திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'. 'மூன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    'முகவரி', 'காதல் சடு குடு', 'தொட்டி ஜெயா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை 'இருட்டு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக இந்த 'நாற்காலி'யை இயக்கியுள்ளார்.

    இதில் அமீருடன், '555' திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

    இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா - க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே செல்வா ஆகியோர் செய்துள்ளனர்.

     இப்படத்தை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
    சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
    சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இப்படத்தை அடுத்து மாநாடு, பத்து தல ஆகிய படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதையடுத்து சுதாகொங்கரா இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    சுதா கொங்கரா

    சுதாகொங்கரா இதற்கு முன் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். புத்தகம் புது காலை, பாவ கதைகள் ஆகியவற்றில் ஒரு கதையையும் இயக்கி இருக்கிறார்.
    நடிகையும் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்தின் திடீர் மாற்றம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

    இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் இடம் பிடித்தார்.

    யாஷிகா ஆனந்த்

    மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த், பொங்கல் சிறப்பு போட்டோ சூட்டாக புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
    பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் மீது கதை மீறியதாக புகார் எழுந்துள்ளது.
    ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிர்த்து போராடிய ஜான்சிராணி லட்சுமிபாயின் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இப்படத்தை கிரிஷ் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

    இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார். இரண்டாவது பாகத்துக்கு 'மணிகார்னிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் திட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கங்கனாவே முதல் பாகத்தைத் தயாரித்த கமல் ஜெயினுடன் இணைந்து தயாரிக்கிறார்.

    கங்கனா ரனாவத்

    இதையடுத்து இந்த படத்தின் மீது எழுத்தாளர் ஒருவர் புகார் எழுப்பியுள்ளார். 'திட்டா-காஷ்மீரி கி யோதா ராணி' என்கிற புத்தகத்தின் ஆசிரியர் ஆஷிஷ் கவுல் என்பவர் கதை உரிமையை கங்கனா மீறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
    ×