என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மோசடி வழக்கில் பிரபல நடிகை சன்னி லியோனை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்பின் தலைவர் ஆர்.ஷியாஸ் என்பவர், நடிகை சன்னிலியோன் மீது கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் அளித்த சன்னிலியோன் தன்னிடம் ரூ.29 லட்சம் வாங்கியதாகவும் ஆனால் ஒப்புக்கொண்டபடி அந்த நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை என்றும் தன்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தர மறுக்கிறார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

    இதுகுறித்து சன்னி லியோனிடம் கேரள போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது சொன்ன தேதியில் ஷியாஸ் நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் ஐந்து முறை தேதியை மாற்றி கொடுத்தும் குறிப்பிட்ட தேதியில் நிகழ்ச்சியை நடத்தாததால் எனது கால்ஷீட் வீணாகிவிட்டது என்றும் தெரிவித்தார். மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்தினால் கலந்து கொள்ளத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சன்னி லியோன்

    இது குறித்து நீதிமன்றத்தில் ஷியாஸ் தரப்பு, சன்னி லியோன் கூறுவது உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் சன்னி லியோன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகை சன்னி லியோனை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசாருக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
    நடிகர் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
    நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் பருத்திவீரன் பட வாய்ப்பு கிடைத்ததும் நடிகரானார். பின்னர் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் நடித்து வருகிறார்.

    கார்த்தி

    இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் அவர் “சென்னை மக்களின் நம்பகமான நண்பன் பல்லவன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் தான் செலவழித்திருக்கிறேன்” என்று நினைவுகளை பகிர்ந்துள்ளார். கார்த்தியின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 
    நடிகை நயன்தாராவின் காதலரும், சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவன், காதலர் தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளாராம்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    காத்துவாக்குல ரெண்டு காதல் பட போஸ்டர்

    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அநேகமாக அது படத்தின் சிங்கிள் டிராக் அல்லது பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.  
    நடிகை லாஸ்லியா, சமீபத்திய பேட்டியில் பிக்பாஸ் கவின் குறித்தும் தர்ஷன் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட கவினும், லாஸ்லியாவும், ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றதற்கு கவின் - லாஸ்லியாவின் காதலும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். 

    ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாஸ்லியா பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார்.

    லாஸ்லியா, கவின்

    இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் லாஸ்லியா. அவர் கூறியதாவது: எனக்கும் கவினுக்கும் இருப்பது பெர்சனல் விஷயம். அது பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட்டுவிட்டு என் படத்தை பற்றி கேளுங்கள் என கூறியுள்ளார்.

    மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, தர்ஷனை அண்ணன் என்று சொல்லிவிட்டு, தற்போது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து பேசியுள்ள லாஸ்லியா, அது பெர்சனல் லைப், இது சினிமா. படத்தில் இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டு அதன் பின்னர் அதிலிருந்து வெளியில் வரப்போகிறோம் அவ்வளவு தான் என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், போயஸ் கார்டனில் தான் புதிதாக கட்ட உள்ள வீட்டிற்கு பூமி பூஜை போட்டுள்ளார்.
    நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். இவர் சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்ட உள்ளார். இதற்கு இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது. அதில் தனுஷ், ஐஸ்வர்யா, ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்தின் இல்லமும் போயஸ் கார்டனில் தான் அமைந்துள்ளது.  

    தனுஷ் வீட்டுக்கு பூமி பூஜை போடப்பட்டபோது எடுத்த புகைப்படம்

    கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், ஜகமே தந்திரம், கர்ணன், அந்த்ரங்கி ரே, டி43 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. இத்திரைப்படம் மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. 

    2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் போட்டியிட்டது.

    இந்நிலையில், அந்தப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு படம் இடம்பெறவில்லை. இப்படம் ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்பட்டியலில் கூட இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

    ஆஸ்கர் விருது

    கடந்த வருடம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘கல்லி பாய்’ என்ற இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் இறுதிப்பட்டியல் வரை செல்லவில்லை. அதே நிலை தான் தற்போது ஜல்லிக்கட்டு படத்துக்கும் வந்துள்ளது. ஆஸ்கர் விருது விழா வருகிற ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    தனுஷ்

    கர்ணன் படத்திற்காக தனுஷ் டப்பிங் செய்த புகைப்படத்தை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது. இந்நிலையில், கர்ணன் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் கர்ணன் குரலை கேட்பீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா, இந்த உலகிலேயே தன்னை விட சிறந்த நடிகை யாரும் இல்லை என கூறியுள்ளார்.
    தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜெயலலிதா வேடத்தில் அவர் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் தலைவி படத்தின் புகைப்படங்கள் சிலவற்றையும், இந்தியில் நடித்து வரும் தக்கட் படத்தின் புகைப்படத்தியும் பதிவிட்டுள்ள கங்கனா, “உருமாற்றத்திற்கான எச்சரிக்கை... இந்த உலகில் இப்போதைக்கு என்னைத் தவிர வேறு எந்த நடிகையும் இந்த அளவிற்கு மாற்றத்தை காண்பித்ததில்லை. விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மெரில் ஸ்ட்ரிப் போலவும், ஆக்‌ஷன் மற்றும் கவர்ச்சியில் கேல் கடாட் போலவும் என்னால் நடிக்க முடியும். 

    கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் பதிவு

    நான் வெளிப்படையாக சவால் விடுக்கிறேன், இந்தப் பிரபஞ்சத்தில் என்னை விட கலைத் திறமை கொண்ட நடிகையை யாரேனும் காட்டினால், அப்போது நான் என்னுடைய ஆணவத்தை கைவிடுகிறேன். அதுவரை அந்தப் பெருமையின் மதிப்பு எனக்கு தான்” என கூறியுள்ளார். 
    தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ், தற்போது அந்நிகழ்ச்சியின் புது சீசன் வருகிற பிப்.14-ந் தேதி தொடங்க உள்ளது.
    தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதுவரை தமிழ், தெலுங்கில் 4 சீசன்கள் முடிந்து உள்ளன. இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 13 சீசன்கள் முடிந்து தற்போது 14-வது சீசன் நடந்து வருகிறது . இதனை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். 

    அதேபோல் மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. 

    மோகன்லால்

    இந்நிலையில், 3-வது சீசன் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 சீசன்களை தொகுத்து வழங்கிய மோகன்லால் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வருகிற பிப்.14-ந் தேதி காதலர் தினத்தன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், சிறு வயதில் இருந்தே தனக்கு அந்த பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா, தெலுங்கில் ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

    இந்நிலையில் தனக்கு ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பதாக காஜல் அவர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “ஐந்து வயதாக இருக்கும்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதனால் அப்போதே உணவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சனை சரியாகவில்லை. 

    காஜல் அகர்வால்

    குளிர்காலம் வரும்போது ஆஸ்துமா அதிகமானது. தூசு, புகையை எதிர்கொள்ளும்போதும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டேன். இதில் இருந்து விடுபட இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். உடனே வித்தியாசம் தெரிந்தது. நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. அவர்கள் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த தயங்குகின்றனர். அந்த தயக்கத்தை நீக்க வேண்டும்'' என்றார்.
    காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''
    1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வெளியான "புன்னகை மன்னன்'' படத்தில், கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

    கமலஹாசனும், ரேகாவும் காதலர்கள். காதல் நிறைவேறாததால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். காட்டுப்பகுதியில் நடந்து செல்வார்கள். அழகிய நீர்வீழ்ச்சியையும், இயற்கை எழிலையும் கடைசி முறையாக ரசித்துவிட்டு மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். இதில், ரேகா மலைப்பாறையில் விழுந்து இறந்து போவார். கமலஹாசன், மரக்கிளையில் மாட்டிக் கொண்டு, உயிர் தப்புவார்.

    படத்தின் தொடக்கக் காட்சியே பிரமாதமாக அமைந்திருந்தது. தற்கொலை செய்யும் காதல் ஜோடி, கடைசி நிமிடத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தத்ரூபமாக -நெஞ்சைத் தொடும் விதத்தில் காட்டியிருந்தார், பாலசந்தர்.

    படத்தில் ரேவதியும் சிறப்பாக நடித்திருந்தார். படம் எல்லா அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு மனதில் உறுதிவேண்டும் (1987), உன்னால் முடியும் தம்பி (1988), புதுப்புது அர்த்தங்கள் (1989) ஆகிய படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    "மனதில் உறுதி வேண்டும்'' படத்தில் விவாகரத்து பிரச்சினையை அலசியிருந்தார். கதாநாயகியாக சுகாசினி நன்கு நடித்திருந்தார்.

    "உன்னால் முடியும் தம்பி'' படத்தில், ஜெமினிகணேசன் அப்பாவாகவும், கமலஹாசன் மகனாகவும் நடித்தனர். ஜெமினிகணேசன், ஒரு இசை மேதை. கமலஹாசனும் இசைக் கலைஞனாக வேண்டும் என்று ஜெமினி விரும்புவார். ஆனால் கமல் அதை ஏற்கமாட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் நன்கு சித்தரிக்கப்பட்ட போதிலும், படம் பெரிதாக ஓடவில்லை.

    ரகுமானும், சித்தாராவும் ஜோடியாக நடித்த படம் "புதுப்புது அர்த்தங்கள்'' (1989).

    1990-ல் "ரெயில் சிநேகம்'', "ஒரு வீடு இரு வாசல்'' ஆகிய படங்கள் பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்தன.

    பேசும் படங்கள் வெளிவந்த தொடக்க காலத்தில், ஒரே படத்தில் இரண்டு மூன்று கதைகள் இடம் பெற்றது உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த "நவீன விக்ரமாதித்தன்'' படத்தில், "புத்திமான் பலவான்'' என்ற இன்னொரு கதையும் இணைந்திருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சௌ-சௌ'' என்ற படத்தில் 3 கதைகள் இடம் பெற்றன.

    அதுபோல், பாலசந்தரின் "ஒரு வீடு இரு வாசல்'' படத்தில் இரு கதைகள் இடம் பெற்றிருந்தன. படத்தின் முடிவில், இரண்டு கதைகளுக்கும் ஒரு இணைப்பு கொடுத்திருந்தார், டைரக்டர்.

    1991-ல் கோவை செழியன் தயாரித்த "அழகன்'' படத்தை டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    ஓட்டல் நடத்தும் மம்முட்டியை 3 பெண்கள் (பானுபிரியா, கீதா, மதுபாலா) காதலிப்பதுதான் கதையின் மையம்.

    கதாபாத்திரங்களை நன்கு வடிவமைத்து, படத்தை மிகப்பிரமாதமாக உருவாக்கியிருந்தார், பாலசந்தர். குறிப்பாக, மம்முட்டியும், பானுபிரியாவும் விடிய விடிய டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட, புதுவிதமாக காட்சியை எடுத்திருந்தார்.

    ஒரே ஒரு டெலிவிஷன் சேனல் ("தூர்தர்ஷன்'') மட்டும் இயங்கி வந்த காலக்கட்டம் அது. இரவு 10 மணியுடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்து விடும். அப்போது மம்முட்டியும், பானுபிரியாவும் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில் "சங்கீத ஸ்வரங்கள்'' என்ற அருமையான பாட்டு ஒலிக்கும்.

    காலை 6 மணிக்கு தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். அதுவரை இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள்! அப்போது இருவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக பானுபிரியாவின் முகபாவங்களும், விதம் விதமான சிரிப்புகளும்.... அவர் நடிப்பின் சிகரத்துக்கே சென்றுவிட்டார் என்று சொல்லலாம்.

    பாலசந்தரின் சிறந்த படங்களில் ஒன்று "அழகன்.''
    ரவி தேஜா ஸ்ருதிஹாசன் சமுத்திரகனி வரலட்சுமி நடிப்பில் வெளியாகியிருக்கும் க்ராக் படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ரவி தேஜா நாயகி ஸ்ருதிஹாசனை காதலித்து திருமணம் செய்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்துவருகிறார். இதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கிறார் சமுத்திரகனி. இவர் தனது ஒரே மகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் தனது மகளை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காதலிப்பதை அறிந்த சமுத்திரக்கனி அவரை கொலை செய்து விடுகிறார். போலீசை கொலை செய்த சமுத்திரக்கனிக்கு எதிராக களம் இறங்குகிறார் ரவி தேஜா.

    விமர்சனம்

    இறுதியில் சமுத்திரக்கனிக்கு ரவிதேஜா தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரவிதேஜா, போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆக்ஷன் ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். இவருக்கான திருப்பம் ரசிக்கும்படி உள்ளது.

    தாதாவாக வரும் சமுத்திரகனி தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு வலது கையாக வரும் வரலட்சுமி சரத்குமார் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

    விமர்சனம்

    தாதா - போலீஸ் இடையேயான ஆக்சனை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிசந்த் மலினேனி. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. கிளைக்கதைகள் திருப்பங்கள் என திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

    ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. 

    மொத்தத்தில் 'க்ராக்' ஆக்ஷன் விருந்து.
    ×