என் மலர்
சினிமா செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த படக்குழு, அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்ததால், அப்பாடல் வெளியீடை தள்ளிவைத்தனர்.

யுவன் சங்கர் ராஜாவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட மாநாடு படத்தின் பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். மிக விரைவில் அப்பாடல் வெளியிடப்படும் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மாநாடு படத்தின் முதல் பாடல் ஓரிரு வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கல்யாணராமன்’ உள்பட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இது தவிர ‘முத்து எங்கள் சொத்து’, ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, ‘மனக்கணக்கு’, ‘பல்லவி மீண்டும் பல்லவி’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

ஜி.என்.ஆர்.குமரவேலன், ஜி.என்.ரங்கராஜன்
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90. ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள எமோஜி
இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்திற்காக டுவிட்டரில் சிறப்பு எமோஜி வெளியிடப்பட்டு உள்ளது. தனுஷ் படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதன்முறை. ஜகமே தந்திரம் படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள எமோஜி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல், பிகில், சூர்யாவின் என்.ஜி.கே போன்ற படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி வெளியே சுற்றிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் இந்திக்கு போனார்.
தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அண்மையில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். நடிகை திஷா பதானி, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை காதலித்து வருகிறார்.

திஷா பதானி, டைகர் ஷெராப்
இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக இவர்கள் இருவர் மீதும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் இருவரும் காரில் சுற்றியதாகவும், போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது சரியான காரணத்தை தெரிவிக்காததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் மணிரத்னம் தனது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரது மனைவியும் நடிகையுமான சுஹாசினி விளக்கம் அளித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். ரசிகர்களுடன் கலந்துரையாடுவதற்காகவும், தங்களது படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிடுவதற்காகவும் அவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே சினிமா பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் மணிரத்னம், அதனை முன்னிட்டு டுவிட்டரில் இணைவதாக குறிப்பிட்டு போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. இதனைப் பலரும் உண்மை என நம்பி அந்த போலி டுவிட்டர் கணக்கை பின்தொடரத் தொடங்கினார்கள்.

சுஹாசினி
பின்னர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி, தனது டுவிட்டர் பதிவு வாயிலாக அதனை போலியான டுவிட்டர் கணக்கு என்பதை உறுதிப்படுத்தினார். இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டோலிவுட்டில் மவுசு அதிகரித்து வருவதால், பிரபல தமிழ் இயக்குனர்களின் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் தமிழ் படங்களுக்கு இணையாக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், பிரபல தமிழ் இயக்குனர்களின் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.
இயக்குனர் ஷங்கர் முன்னணி தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-ம் பாகத்தை முடிக்காமல், தெலுங்கு படத்தை அவர் இயக்க கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார் ஷங்கர்.

ராம்போதினேனி, ராம்சரண்
அதேபோல் இயக்குனர் லிங்குசாமியும் தெலுங்கு படமொன்றை இயக்கி வருகிறார். இதில் ராம்போதினேனி கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாசும் தெலுங்கு படம் இயக்க தயாராகிறார். அவர் இயக்கும் தெலுங்கு படத்தில் கதாநாயாகனாக ராம் போதினேனி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இயக்குனர் முருகதாஸ் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் எனும் தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். இவர்கள் தவிர மேலும் சில இயக்குனர்களும் தெலுங்கு படங்கள் இயக்க பேச்சுவார்த்தையில் உள்ளனர்.
சமூக வலைதளத்தில், பிடிக்காதவர்களை கிண்டல் செய்வதும், அவதூறு பரப்புவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவர் இயக்கத்தில் தற்போது லிகர் என்கிற படம் உருவாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சமூக வலைதள பக்கத்திலும் ஏதாவது ஒரு முக்கிய விஷயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது, ஒவ்வொருவருடைய சமூக வலைதள கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென அவர் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்
இது குறித்து பூரி ஜெகன்நாத் தெரிவித்துள்ளதாவது: “நாளுக்கு நாள் சமூக வலைதளத்தில், பிடிக்காதவர்களை கிண்டல் செய்வதும், அவர்கள் மீது அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு 1000 லைக்குகள் தான் வந்திருந்தன, ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக அந்த புகைப்படத்தை 10,000 பேர் டிஸ்லைக் செய்திருந்தனர்.

பூரி ஜெகன்நாத்
யார் இவர்கள்? எந்த மாதிரி மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் பக்கத்தில் நிற்பதற்கே தகுதி இல்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் எதை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
இது போன்றவர்களின் சமூக வலைதள கணக்குகளை, ஆதார் எண்ணுடன் இணைக்கும்போது தான், அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்கிற விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா.
தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.
"அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.
இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.
தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:
"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.
அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).
எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.
1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)
அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.
அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.
பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.
எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.
நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.
பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.
இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.
அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.
என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.
இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.
அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்த கிங்காங்கின் மகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்திருப்பவர் கிங் காங். இவரது உண்மையான பெயர் ‘சங்கர்’. ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றிப்பெற்ற ‘அதிசய பிறவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் கிங் காங். கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.


மகனுடன் கிங்காங்
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கிங் காங், தனது மகனுக்கு இன்று பிறந்தநாள் என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் விஜய் பட நடிகை 100 குடும்பங்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.
கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டேவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.

இதற்காக ஒரு மாதத்திற்கு தேவையான ரேசன் பொருட்களை கஷ்டப்படும் 100 குடும்பத்தினருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூவலைதளத்தில் வெளியாகி உள்ளது.

பூஜா ஹெக்டே - விஜய்
நடிகை பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள பிரியாமணி பிரபல நடிகர் படம் என்பதால் ரிஸ்க் எடுத்து இருக்கிறேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள பிரியாமணி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் நடிக்கிறார். அதோடு, தி பேமிலிமேன் 2 வெப்சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛செகண்ட் இன்னிங்சில் வலுவான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். முக்கியமாக தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் நாரப்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் எப்போதுமே வெங்கடேசுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவேன். இவருடன் நடிப்பதற்கு முன்பு மூன்று முறை வாய்ப்பு வந்தபோது கால்சீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது.

பிரியாமணி - வெங்கடேஷ்
அதன்காரணமாகவே நாரப்பா பட வாய்ப்பு வந்தபோது பல படங்கள் கைவசம் இருந்தபோதும் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்களை வாங்கி இந்த படத்திற்கு கொடுத்து நடித்தேன். வெங்கடேஷ் படம் என்பதால் மட்டுமே இந்த ரிஸ்க்கை எடுத்தேன்'' என தெரிவித்துள்ளார்.
நாரப்பா திரைப்படம் தமிழ் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசியால் மட்டுமே நாம் இந்த கொடிய காலத்தை கடந்து செல்ல முடியும் என்று பின்னணி பாடகர், நடிகர், இசையமைப்பாளர் கிரிஷ் கூறி இருக்கிறார்.
நடிகர், இசையமைப்பாளர் கிரிஷ், தன் பன்முக திறமையினால், தமிழ் சினிமாவில், புகழ் மிக்க படைப்பாளியாக, கவனம் குவித்து வருகிறார். சமீபத்தில் முருக கடவுள் குறித்து, ஆன்மிக பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றியை குவித்த, அந்த ஆல்பம் பல முனைகளில் இருந்தும் பாராட்டுக்களையும் குவித்தது. இந்த நிலையில் தற்போது நம் சமூகத்திற்கு அவசியமான, கோவிட் தடுப்பூசி குறித்த, விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஒரு அற்புதமான பாடலை உருவாக்கியுள்ளார். SP Dr. சிவக்குமார் IPS, இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

பாடல் குறித்து இசையமைப்பாளர் கிரிஷ் கூறியதாவது,
மதிப்புமிக்க, அற்புதமான இந்த விழிப்புணர்வு பாடலில், பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதும், மாஸ்க் அணிவதும், இந்தப்போரில் நமது தலையாய கடமையாகும். ஆனால் இந்தப்போரில் வெல்ல, இவையனைத்தையும் விட முக்கியமானது, ஒவ்வொருவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்வதே ஆகும். தடுப்பூசியால் மட்டுமே நாம் இந்த கொடிய காலத்தை கடந்து செல்ல முடியும். இப்பாடல் இந்த சமூக கருத்தை வலியுறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை எழுதிய SP Dr. சிவக்குமார் IPS அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

சிவக்குமார் IPS, கிரிஷ்
இந்த தடுப்பூசி விழிப்புணர்வு பாடலை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், மாஸ்க் மற்றும் சானிடைஸர் ஆகியவற்றை 800க்கும் மேற்பட்ட முன்கள காவல் துறை பணியாளர்களுக்கு கிரிஷ் வழங்கியுள்ளார்.






